The Traveller Jennifer Baird
அன்புள்ள ஜெ,
உங்கள் அளவுக்கு பயணக்கட்டுரைகள் எழுதிய வேறெந்த எழுத்தாளரும் தமிழில் இல்லை என்பதை அடியுரைத்துச் சொல்வேன். உங்களது பயணக்கட்டுரைகள் என்பது வரலாறு மற்றும் தொன்மப் புரிதலில் இருந்து நேர்கண்ட அனுபவத்தை விரிப்பது உங்கள் பயண எழுத்தின் முக்கியமான சாரம் எனக்கருதுகிறேன். நீங்கள் பயணிப்பதே அந்தத் தொன்மத்தின் வேரைத் தொட்டுணரவே. எனக்கும் பயணத்தின் மீது அதீத முனைப்புண்டு. கடந்த 7 ஆண்டுகளாக, எனக்கு வாய்க்கப்பெற்ற இடங்களுக்கெல்லாம் சுற்றித் திரிந்திருக்கிறேன். நோக்கம் ஏதுமின்றி ஒரு நிலப்பரப்பையும் அதன் அன்றாடத்தையும் அறிந்து கொள்வதாகவே என் பயணம் இருந்திருக்கிறது. என் பணிச்சூழலில் கிடைக்கிற சொற்ப விடுமுறை தினத்தில் முடிந்தளவு பயணம் செய்திருக்கிறேன்.
எனது முந்தைய பணியிலிருந்து வெளியேறி தற்போதைய பணிக்கு வரும் ஒரு மாத கால இடைவெளியில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில நகருக்கு பயணப்பட்டேன். இது வரையிலான என் வாழ்வில் அதிகபட்சமாக 21 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பயணம் அது. மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களையும், மொழி தெரியாத நண்பர்களையும் அப்பயணம் எனக்குக் கொடையாகக் கொடுத்தது. தனியாளாகத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.
எப்போதுமே தனியாகப் பயணிக்கிற என்னிடம் முன் வைக்கிற கேள்வி என்னவெனில் “தனியா போக போர் அடிக்காதா?” “மொழி தெரியாம எப்படி சமாளிக்க முடியும்” என்பதாகத்தான் இருக்கிறது. உண்மையில் பயணத்தில் நாம் தனிமையை உணர்வதில்லை… போக, மொழி என்கிற ஊடகம் பெரும் தடையாக நம் முன் நிற்காது. நமது தன் முனைப்பின் வீரியம் எதனையும் சமாளித்து முன் நகரும் என்பதைச் சொல்ல நினைத்தேன். அதற்காக எனது வடகிழக்கு பயண அனுபவத்தை ’Back பேக்’ என்கிற தலைப்பில் விகடன் வலைதளத்தில் தொடராக எழுதி அதே தலைப்பில் நூலாகவும் வெளியிட்டேன். தொடராக வந்த போதே ஒன்றிரண்டு பேர் இத்தொடர் தனியாக பயணம் செய்ய ஊக்கம் கொடுப்பதாய் இருக்கிறது என்று கருத்திட்டிருப்பதைக் கண்டேன்.
நூலாக வெளியிட்ட பிறகு எனக்குப் பரிச்சயமற்றவர்களிடமிருந்து வாட்சாப்பில் வாசிப்பனுபவம் வந்தது. ஒரே மூச்சில் படிக்கும்படியாக நடை இருக்கிறது, கூட அழைத்துச்சென்ற உணர்வையும் கொடுப்பதாகக் கூறியிருந்தனர். நான் அவர்களுக்கு நன்றி சொன்னேன். நான் எதற்காக இதனை நூலாகக் கொண்டு வரத்திட்டமிட்டேனோ அது ஓரளவு நடந்து விட்ட மகிழ்ச்சி எனக்குள் இப்போதும் இருக்கிறது.
நட்பு கொண்டிருக்கிற இலக்கிய வாசிப்பாளர்களில் சிலர் “இது வெறும் அனுபவமாக மட்டுமே இருக்கிறது… இதில் தகவல்கள் ஏதுமில்லை” என்றனர். “நான் என்ன ஜெயமோகனா” என அவர்களிடத்தில் சொல்வேன். வரலாறு மற்றும் தொன்மம் சார்ந்து எதையும் தெரிந்து கொள்ளாமல் வெறுமனே ஓர் பயணியாகச் சென்று நான் கண்ட அனுபவத்தை எவ்வித மிகைபடுத்தலும் இல்லாமல்தான் இந்நூலை எழுதியிருக்கிறேன்.
என் கேள்வி என்னவென்றால் வரலாறு மற்றும் தொன்மம் சார்ந்த பிரக்ஞையுடன்தான் பயணம் செய்ய வேண்டுமா? வரலாற்றுப் புரிதலுடனான பார்வை பயணக் கட்டுரைக்கு அத்தியாவசியமானதா? எந்த வித அறிதலுமின்றி ஓர் இடத்துக்குச் சென்று காண்கிற அனுபவத்தை எழுதுவது பயண எழுத்து என்கிற வகைமைக்குள் வராதா?
இக்கேள்விக்கு உங்களின் ஆழமான பதிலை எதிர்நோக்குகிறேன்!
இப்படிக்கு
எதிர்காலத்தில் பயண எழுத்தில் உங்களை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 ஆக முயலும்
கி.ச.திலீபன்
அன்புள்ள கி.ச.திலீபன்,
நான் பயணக்குறிப்புகளை எழுதுபவன் என்றே என்னை சொல்லிக்கொள்வேன். மிகச்சிறந்த பயணநூல்களின் வரிசையில் என் நூல்கள் வருமா என்னும் ஐயம் எனக்குண்டு. பயணநூல்கள் மிகுந்த தகவல்சேகரிப்புகளுடன், விரிவான சித்தரிப்புடன் எழுதப்படுபவை. என்னுடைய தொடக்ககால பயணக்குறிப்புகள் பயணத்தின்போதே அன்றன்று மாலை எழுதப்பட்டு மறுநாளே வெளியானவை. இப்போது ஒருசில நாட்கள் கழித்து வெளியாகின்றன. ஆனால் இவையும் குறிப்புகளே.
நான் பயணம் செய்வது என் புனைவுகளுக்காக. என் புனைவுலகம் மிகப்பெரியது. சாதாரணமான எழுத்தாளர்களை விட ஐம்பது மடங்கு பெரியது. உலகப் பேரிலக்கியவாதிகள் சிலருடன் மட்டுமே என்னை ஒப்பிட முடியும். இது ஏன் என்று எண்ணிப்பார்க்கிறேன். ஒன்று, என்னிடமுள்ளவை அடிப்படை தத்துவ வினாக்கள், அடிப்படை ஆன்மிக உசாவல்கள். அவற்றை வெவ்வேறு வாழ்க்கைக் களங்களில் வைத்து விவாதித்து விரித்தெடுத்துக்கொண்டே இருந்தாகவேண்டும். இரண்டு, எனக்கு வாசகர்களிடம், என் காலகட்டத்திடம், வரும் தலைமுறைகளிடம் பேசிக்கொண்டே இருந்தாகவேண்டும் என்று துடிப்பு உள்ளது. ஆகவே நிறைய எழுதுகிறேன்.
நிறைய எழுதுபவன் நிறைய அனுபவங்களை அடைந்தாகவேண்டும். நிறைய நிலங்களில் வெவ்வேறு வகையான வாழ்க்கைகளை மானசீகமாக வாழ்ந்து பார்ப்பதொன்றே அதற்கான வழி. இரண்டு, என் அகத்தை நான் படிமங்களால் நிறைத்தாகவேண்டும். தீரத்தீர நிரப்பியாகவேண்டும். அதற்காகவே பயணம் செய்கிறேன். அந்தப்பயணங்களைப் பற்றி எழுதுகிறேன்.
இந்த பயணங்களை எனக்குள் தொகுத்துக்கொள்ளவும், வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவும்தான் குறிப்புகள் எழுதுகிறேன். என் உள்ளம் சென்று தொடும் இடங்களை பதிவுசெய்கிறேன். அகத்தும் புறத்தும் நிகழ்வனவற்றை எழுதிவைக்கிறேன். இவை இரண்டு காரணங்களுக்காக முக்கியமானவை. ஒன்று, நான் புனைவெழுத்தாளன், ஆகவே என்ன எழுதினாலும் அதில் என் மொழியின் அழகும் படிமங்களும் இருக்கும். அவை வாசர்களுக்கு ஒரு சாதாரணப் பயணக்கட்டுரையில் இருப்பதை விட பலமடங்கு வீரியமான அனுபவத்தை அளிக்கும். இரண்டு, என் புனைவுலகை புரிந்துகொள்ள அவை மேலதிகமாக உதவும். வெண்முரசு படித்தவர்கள் அதில் என் பயணங்களை காணமுடியும். என் கதைகளிலெல்லாம் பயணச்சாயல்கள் உண்டு.
நல்ல பயணக்கட்டுரை எப்படி இருக்கவேண்டும்? நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று சொல்கிறேன்.
அ. தனிப்பட்ட அனுபவங்களும் உளப்பதிவுகளும் முதன்மையாக இருக்கவேண்டும். குற்றாலத்திற்கு எவரும் செல்லலாம். நீங்கள் சென்றால் அங்கே நீங்கள் கண்டவை, நீங்கள் எண்ணியவை வாசகனுக்கு முக்கியமானது. உங்களுக்கு அந்த அருவி ஒரு மாபெரும் கோழியிறகாகத் தோன்றியிருக்கலாம். குற்றாலத்தில் குரங்குகளின் வாழ்க்கை மேலும் முக்கியமானதாக இருந்திருக்கலாம். கைபார்த்து பலன் சொல்லும் ஒரு பெண்மணியை கவனித்தது முக்கியமானதாக இருந்திருக்கலாம். அதை நுணுக்கமாக பதிவுசெய்யவேண்டும். Personal account தான் இன்று பயண இலக்கியத்தில் முக்கியமானது. மற்றவை எல்லாமே தகவல்களாக கிடைப்பவை
தனிப்பட்ட மனப்பதிவுகள் பலவகையிலும் முக்கியமானவை. ஒரு நிலத்துக்கு, ஒரு பண்பாட்டுக்கு நாம் அன்னியர். ஓரிரு நாட்களில் அதைப் பார்க்கிறோம் . ஆகவே நம் பார்வை மேலோட்டமானது என்று சிலர் சொல்லலாம். உண்மை அது அல்ல. அன்னியனின் விரைந்த பார்வையில் அந்த நிலத்தில், அப்பண்பாட்டில் ஓங்கிநின்றிருக்கும் சில தென்படும். கூடவே அங்குள்ளோரின் அன்றாடத்தால் மறைக்கப்பட்ட நுண்ணிய விஷயங்களும் தென்படும். அன்னியனின் பார்வை என்றுமே முக்கியமானது.நம் வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார் என்றால் நாம் நம் வீட்டை ஒழுங்குபண்ணா ஆரம்பிக்கிறோம். ஏனென்றால் அப்போது நாம் நம் வீட்டை அந்த விருந்தினரின் பார்வையில் பார்க்கிறோம். அதுவரை நாம் கவனிக்காத ஒழுங்கின்மை எல்லாம் பட ஆரம்பிக்கிறது.
நிலத்தையும் பண்பாட்டையும் மறைப்பது இரு விஷயங்கள்.ஒன்று முன்முடிவு. இரண்டு பழகிப்போன பார்வை. இந்தியாவை ‘மாட்டுச்சாணத்தின் நாடு’ என எண்ணி வரும் வெள்ளையர் இங்கே அதையன்றி எதையும் பார்க்க மாட்டார். இந்தியாவிலேயே உழலும் ஒருவர் மாட்டுச்சாணம் தெருவெல்லாம் குவிந்து நாறுவதை பார்க்க மாட்டார். பயணி எப்போதுமே முன்முடிவுகளில்லாமல், குழந்தைக்குரிய உற்சாகமான ஆர்வத்துடன் இருக்கவேண்டும். பயணியின் மனநிலை என்பது உற்சாகம்தான். சலிப்பு, சோர்வு, எதிர் எண்ணங்கள் ஆகியவை பயணிக்குரிய மனநிலைகள் அல்ல.
ஆ. நுண்செய்திகள் முக்கியம். நுணுக்கமான தகவல்கள், அரிய தகவல்கள். ஒரு சுற்றுலாக்குறிப்பில் அவை இருக்காது. இலக்கியமென்பதே நுண்செய்திகளாலானதுதான். கட்டுரை என்பது இலக்கியமாவது அந்த நுண்மையால்தான். ராஜஸ்தானின் பப்பட் என்பது நம்மூர் அப்பளத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்று, ஆந்திராவில் தயிர்சாதத்தில் வாழைப்பழம் பிசைந்து சாப்பிடுவார்கள் என்று, வடகிழக்கு மக்களின் வீடுகளில் மலர்ச்செடிகள் இல்லாமலிருப்பது மிக அபூர்வம் என்று, காஷ்மீரில் கூலிவேலை செய்யும் பிகாரிகள் குளிர்காலத்திலும்கூட பாலங்களுக்கு அடியில் தங்குகிறார்கள் என்று, மும்பையில் பல உணவகங்களில் பிறருக்கு இலவச உணவு அளிக்கும்பொருட்டு முன்பணம் கொடுத்துச்செல்லும் வழக்கம் சமணர்களிடம் உண்டு என்றெல்லாம் சொல்லும்போதுதான் பயணக் கட்டுரை இலக்கியமாகிறது.
இ. காட்சிகளை விவரிக்கவும், வாசகனின் கண்களில் அவை விரியச்செய்யவும் முயலவேண்டும். ஒரு சாலை. ஒரு நீர்நிலை எப்படி இருந்தது என்று சொல்வது எளிதல்ல. வழக்கமான தேய்வழக்குகளையே அள்ளி வைக்க நேரிடும். புதிய உவமைகள், புதிய வர்ணனைகளே பயணக்கட்டுரையை இலக்கியமாக்குகின்றன. நியூயார்க்கில் கண்ணாடிச்சன்னல்களால் ஆன ஒரு மாபெரும் கட்டிடம் செங்குத்தான நீர்நிலை போலிருந்தது என்றோ, லடாக்கின் பனிமூடிய மலைச்சிகரங்கள் வெண்ணிற மலரிதழ் அடுக்குகள் போலிருந்தன என்று சொல்லும்போதோதான் வாசகன் பயண அனுபவத்தை அடைகிறான். காட்சிகளை கண்ணுக்குமுன் பார்க்கிறான். வெறுமே சுருக்கிச் சொல்லிச் செல்வது இலக்கியமாகாது.
ஈ. இதற்குமேல் வரலாறு, அறிவியல், மானுடவியல், சமூகவியல், அரசியல் தகவல்களைச் சொல்லலாம், அது அந்த பயணியின் ஆர்வம், தேர்ச்சி ஆகியவை சார்ந்தது. எனக்கு ஆர்வமுள்ள வரலாறு, தொல்லியல், கலையிலக்கியம் சார்ந்த தகவல்களைச் சொல்கிறேன். கூடவே என் கணிப்புகளையும் கற்பனைகளையும் சேர்க்கிறேன். அது கண்டிப்பாக வேண்டும் என்பதில்லை. அது கட்டுரைகளை கூடுதல் கனமாக்குகிறது. ஒரு பயணி வேறெதையுமே கவனிக்கவோ எழுதவோ இல்லை, ஆனால் மக்களின் ஆடைகளை மட்டும் நுட்பமாக கவனித்து எழுதுகிறார் என்று கொள்வோம். அது வாசகனுக்கு மிகுந்த ஆர்வத்தை அளிக்கும் வாசிப்பனுபவம்தானே? அது இலக்கியம்தானே?
நம்பர் ஒன் ஆக வாழ்த்துக்கள்
ஜெ