“திருமதுரம் இல்லை, திரிமதுரம்னாக்கும்” என்று சங்கரன் ஆசாரி சொன்னார்.
“ஆனா திருமதுரம்னுல்லா சொல்லுகானுக?” என்றார் ராமச்சார்.
“அது அறிவுகெட்டவனுக சொல்லுதது” என்று ஆசாரி சொல்லி களிப்பாக்கை வாயிலிட்டார்.
“அது கோயிலிலே மட்டும் உள்ள பிரசாதம்… அதாக்கும் திருமதுரம்னு சொல்லுதது” என்று ராமச்சார் மீண்டும் சொன்னார்.
சங்கரன் ஆசாரிக்கு கோபம் வந்தது. “கோயிலிலே இல்ல. கிருஷ்ணன் கோயிலில மட்டும். வேற கோயிலிலே திரிமதுரம் நைவேத்தியம் செய்யக்கூடாது. வீட்டிலே செய்யலாம், வீட்டிலே கிருஷ்ணபூஜை செய்யறதானா செஞ்சு நைவேத்தியம் பண்ணலாம்… நம்ம வடக்குப்பாட்டு கிருஷ்ணையரு செய்யுதது உண்டு.”
பாக்கு வாய்க்குள் குழைந்து சுவை கூடவே அவருக்கு பேச்சு கிளம்பியது. சுண்ணாம்பு தொட்ட சுட்டுவிரலை நீட்டி, கீழுதட்டை கோளாம்பி விளிம்பு போல நீட்டி, மோவாயை சற்று தூக்கி உரக்கச் சொன்னார். “திரிமதுரம்னாக்கா மூணு இனிப்பு… அதிலே ஒண்ணு வாழப்பழம், இன்னொண்ணு தேனு, மூணாவது நெய்யி. மூணும் தனித்தனி ருசியாக்கும். மூணும் கலந்தா அது ஒரு புதிய ருசி…”
ஒருமுறை தொண்டையை காறி வெற்றிலைச்சாறை மீண்டும் வாயில் தேக்கிவிட்டு ஆசாரி சொன்னார். “தேனும் நெய்யும் சாமானியமா ஒண்ணுசேராது. நல்ல வாழப்பழம் ரெண்டுக்கும் நடுவிலே பஞ்சாயத்து பேசி ஒண்ணாக்கி வைச்சா ஒரு புதிய ருசி வந்திரும். வேய், அதொரு தெய்வம் கெளம்பி வந்து நிக்கிறது மாதிரியாக்கும்…”
“ஆனா, நல்ல பழம் வேணும். இப்பம்லாம் கண்டவன் கண்ட பழத்தை கொண்டுவந்து குடுக்க போத்திமாரு அதைவைச்சு திரிமதுரம் செய்யுதானுக.நல்ல ஒரிஜினல் தேன்கதலி வாழைப்பழம் வேணும். இல்லேன்னா மட்டிப்பழம். அது ரெண்டும் துண்டுதுண்டா கிடக்காது. கொஞ்சம் குழைஞ்ச மாதிரி ஆயிரும். ரெண்டுக்கும் நல்ல மணம் உண்டு. தேனு சாதாத் தேனில்லை, நல்ல மலைத்தேன் வேணும். மலைத்தேனிலேயே கறுப்பா இருக்கிற தேனு உத்தமம். நெய்யின்னா பசுநெய். அதுவும் புத்துருக்கு நெய்யி. கடைஞ்சு எடுத்த வெண்ணையை அப்டியே உருக்கி அந்தச் சூடோட கலக்கணும்… மூணும் கலந்தா அதொரு சம்பவமாக்கும்…”
ஆசாரி தொடர்ந்தார். “கிருஷ்ணன் சின்னப் பிள்ளைல்லா? பாயாசம், சுண்டல்னு குடுத்தா வயிறு என்னத்துக்காகும்? அதனாலே திரிமதுரம் நைவேத்தியம் செய்யுதாவ.”
ராமச்சார் என்னை பார்த்து “இந்தப்பய இங்க என்னத்துக்கு வாயப்பாத்துட்டு இருக்கான்? வேய், வீட்டுக்குப் போலே. போயி படிலே.”
நான் “அப்பா வீட்டிலே இருக்காரு” என்றேன்.
“அதனாலே?” என்றார் ராமச்சார்.
“அது நியாயம்… கரடி இருக்கிற குகையிலே வேறே ஜீவிகள் இருக்க முடியாது” என்று சொன்ன சங்கரன் ஆசாரி வெற்றிலைச் சாற்றை நீட்டி துப்பி “வேய் ராமச்சார், உனக்கு தெரியாது. நீ இப்ப வந்தவன். இங்க முன்னாடி முரளின்னு ஒரு போத்தி இருந்தாரு…இங்க வாறப்ப சின்ன வயசு… போறப்பயும் சின்ன வயசுதான்னு வையி…” என்றார்.
“எங்க போனாரு?”
“மேலே… எல்லாரும் போற எடத்துக்கு” என்றார் ஆசாரி. “அவரு திரிமதுரம் எக்ஸ்பர்ட்டாக்கும்… இங்க நம்ம உண்ணிக்கிருஷ்ணன் கோயிலிலே அவருதான் சாந்திக்காரரு. அரவணைப்பாயசம், பால் பாயசம், நெய்யரிசிப் பாயசம் எல்லாம் அருமையாட்டு வைப்பாரு. ஆனா அவருக்க ஸ்பெஷல் திரிமதுரம்… வேற என்ன நைவேத்தியம் இருந்தாலும் காலம்பற கிருஷ்ணனுக்கு திரிமதுரம் தப்பாது. நான் வாறப்பல்லாம் கேட்டு வாங்கி திம்பேன். என்னை மாதிரி அவருக்க திரிமதுரத்துக்கு வேறே ஒரு ஆராதகன் இருந்தான்… அவனுக்கும் எனக்குமாக்கும் போட்டி. அவனுக்கு முதல்ல குடுப்பாரு… பிறவுதான் மத்தவனுகளுக்கு. அது அறைக்கல் வலிய எஜமானா இருந்தாலும் செரி… முதல்ல அவனுக்குத்தான்.”
“அப்டி யாரு, எஜமானுக்க குடும்ப கோயிலிலே அவரக்காட்டிலும் பெரிய ஆளு?” என்றார் ராமச்சார்.
“பேரு வலிய கேசவன்… நல்ல கறுப்பு நெறம்… சாந்தமான கொணம். ஆரையும் வகைவைக்க மாட்டான். அப்டி ஒரு தலையெடுப்புள்ள நடை. அவன் தெருவிலே நடந்து போனா எதிரிலே ஆரு வந்தாலும் தலைக்கெட்டை எடுத்தாகணும். இல்லேன்னா ஒரு தட்டுதான். சின்னதா ஒரு தட்டு. எலும்பு ஒடிஞ்சு போயிரும்லா?”
நான் ஊகித்துவிட்டேன். ஆனால் ராமச்சார் “ஆராக்கும் அந்த வீரசூரன்?” என ஆர்வத்துடன் கேட்டார்.
“வேய், அறைக்கல் வீட்டு ஆனையாக்கும் அது… அந்தக்காலத்திலே அங்க பதினெட்டு ஆனையுண்டு. இவன் அதிலே ராசாவாக்கும். தலையெடுப்புன்னா அப்டி ஒரு ஐஸரியம். கொம்பு ரெண்டும் ஒரே மாதிரி வளைஞ்சு நல்ல தோணி மாதிரி… நெத்திப்பூ பூத்த கொன்றை மாதிரி… தும்பிக்கை தரைதொட்டு வளைஞ்சு கிடக்கும்…. பகலிலே வந்த ராத்திரி மாதிரி இருப்பான். ஆனா நம்ம செறையோலி ஓடைக்குமேலே பாலமாட்டு ஒரு தேக்குமரம் கிடந்தது. அதிலே ஏறி அந்தப்பக்கம் போவான்… வேய், ஒரு தோணியிலே அவன் நின்னா தோணி அசையாம தண்ணியிலே போகும் பாத்துக்க… அப்டி ஒரு கஜலச்சணமுள்ள ஆனை.”
“அவனுக்கு இந்த திரிமதுரத்திலே அப்டி ஒரு ஆசை” என்று ஆசாரி தொடர்ந்தார். “ஒருநாளைக்கு நாநூறு தென்னையோலை திங்கிறவன். அதுபோக இருபது தேங்கா. வெல்லமும் சோறும் வேறே… பின்ன போற எடத்திலே எந்த வீட்டைக் கண்டாலும் நின்னுடுவான். வாழைக்கொலையோ கருப்பட்டியோ குடுக்காம மேலே போறதில்லை. கடைகளிலேயெ தும்பிக்கையை விட்டு வாழைக்கொலை எடுத்து திங்கிறதுண்டு. ஆளு ஒரு பெருந்தீனிக்காரன். உடம்பும் அந்தக்கணக்குதான்னு வையி.”
“திருமதுரம் அரைக்கிலோ திம்பானா?”
“திரிமதுரம்? அரைக்கிலோ? வேய் நீ ஆளு மொண்ணையனா இருக்கியே. திரிமதுரம்னா அது இம்பிடுபோலத்தான் இருக்கணும். முரளிப் போத்தி செய்யுததே இந்த உள்ளங்கை சைசிலே ஒரு சம்புடத்திலேயாக்கும்… மொத்தம் இருநூறு கிராம் தேறாது. அதிலே ஆனைக்கு குடுக்குதது ஒரு ஒரு அம்பதுகிராம்னு வை… அம்பது கிராம்னா நாம இந்த உள்ளங்கையிலே வைச்சுக்கிடுத அளவுக்கு… அம்பிடுதான்.”
“அதெப்பிடி காணும்? ஆனைக்க தும்பிக்கையிலே படக்காணாதே?”
“முரளிப்போத்தி அதை ஆனைக்க வாயிலே வைப்பாரு… அப்டியே நாக்காலே நுணைச்சு உள்ள இளுத்துக்கிடுவான். நல்லா ரெசிச்சு நக்கிட்டு ஒரு நிமிசம் நிப்பான். திரும்பி போயிருவான்… அவனுக்கு பூசை முடியுற மணிச்சத்தம் தெரியும். அதைக் கேட்டதும் வந்து நிப்பான்… அப்ப கிருஷ்ணன் கோயிலுக்கு சுத்துமதில் கெடையாதுல்லா? ரொம்பச் சின்ன கோயிலாக்கும். கர்ப்பகிருகம் மட்டும்தான்…வெளையாட்டுச்செப்பு மாதிரி இருக்கும். அவன் வந்து வாசலை மறிச்சு நின்னுருவான். அவன் தின்னுட்டு போன பிறவுதான் கோயிலே தெரியும்…”
நான் ஒரு மாபெரும் யானை உள்ளங்கையளவு திரிமதுரம் தின்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எனக்கு ஒரு சித்திரம் உருவாகவே இல்லை.
”ருசியறிஞ்சு பசிநெறைஞ்சு திங்கணுமானா ஆனையாப் பிறக்கணும்னு ஒரு சொல்லு உண்டு” என்றார் சங்கரன் ஆசாரி. “ஆனை திங்கிறப்ப பாரு. ருசி அதுக்க செவியிலேயும் தும்பிக்கையிலேயும் எல்லாம் தெரியும். உடம்பு முழுக்க ருசி ததும்பிட்டிருக்கும்… ஆனைக்க உடம்பே ஒரு நாக்கா மாறி ருசிக்கிற மாதிரி இருக்கும்” என்று ஆசாரி சொன்னார்.
“அம்பது கருப்பட்டிய அந்த வாக்கிலே திங்குத வாய்க்கு இம்பிடு திருமதுரம் எந்த மூலைக்கு?” என்றார் ராமாச்சார்.
“ருசி இருக்கப்பட்டது மனசிலேல்லா? அந்த கறுத்த உடம்புக்குள்ள எங்கியோ இருந்திருக்கு அந்த ருசி… மழைமேகம் நிறைஞ்ச அம்மாசை ராத்திரியிலே கறுத்த ஆகாசத்திலே எங்கியோ ஒத்த சீனிப்பரல் மாதிரி ஒரு நச்சத்திரம் மின்னுதுல்லா, அப்டி”
நான் அந்தக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்தேன்.
“திருமதுரம் திங்குத ஆனை” என்று சொல்லி ராமாச்சார் வானை நோக்கி புன்னகைத்தார். பிறகு என்னைப் பார்த்து அவரே அதை கண்டறிந்தது போன்ற பாவனையில் கண் சிமிட்டினார்.
“வலிய கேசவன் திரிமதுரம் திங்க வாற கோலம் கண்ணிலே நிக்குது. அவனை பொதுவா சங்கிலிபோட்டு தளைக்குதது இல்லை. சும்மா அப்டியே நிப்பாட்டுறதுதான். செவிகளை வீசிக்கிட்டு, உடம்ப ஆட்டிக்கிட்டு, ஓலை தின்னுட்டிருக்கும். எப்பமும் தீனிதான். வாயிலே தீனி இல்லேன்னா சங்கு விளிக்கிற மாதிரி கத்தி கூப்பாடு போட்டு ஊரையே எளுப்பிப்போடுவான்… அவன் ஒண்ணுமே அறியாம நிக்கிற மாதிரித்தான் இருக்கும். முகத்திலே ஒண்ணும் தெரியாதுல்லா? ஆனா கோயிலிலே போத்தி பூசை முடிஞ்சு கைமணியை அடிச்சு வைச்சதும் கையிலே இருக்குத ஓலையை அப்டியே போட்டுட்டு கெளம்பிடுவான்…”
“போத்தி நல்ல நெறம்… நல்ல குளுந்த சிரிப்பு. கையிலே திரிமதுரத்தோடே நின்னுட்டிருப்பாரு. ஆனையப் பாத்ததும் ‘வரணும் தம்புரானே’ன்னு விளிப்பாரு. வந்து நின்னதும் திரிமதுரத்தை ஊட்டிவிடுவாரு. அது ஆகும் ஒரு பத்து மினிட்டு. அப்ப யாரு எப்பேற்பட்ட ராசா வந்து நின்னாலும் கவனிக்க மாட்டாரு. எவ்ளவு திருவிளாக் கூட்டமானாலும் வகைவைக்க மாட்டாரு… அவரும் ஆனையும் மட்டுமாட்டு ஒரு தனி லோகத்திலே நின்னுட்டிருப்பாங்க. ஆனையுடம்பு அலைஞ்சாடும். அவரோட உடம்புலேயும் அந்த ஆட்டம் வாற மாதிரி இருக்கும்… ஆனை போன பிறகு திரும்பி வாறப்ப முகத்திலே ஒரு சின்ன புன்னகை இருக்கும்… எண்ணைபூசின தாளிலே வெளிச்சம் வரும்லா, அந்த மாதிரி ஒரு சின்ன பிரகாசம், அம்பிடுதான்…”
“முரளிப் போத்தி ஒரு மாதிரியான ஆளாக்கும்” என்று ஆசாரி தொடர்ந்தார். “அவரு வேற எங்கயும் சிரிச்சு நான் பாத்ததில்லை. பேச்சும் குறைவு. ஒத்த வார்த்தை ரெண்டு வார்த்தை. நல்ல மரியாதையான ஆளு. ஆனால் எந்த ஆளையும் முகம் பாத்து பேசுறதில்லை. துளு பேசுத மாத்வபிராமணன்… அவனுக பொதுவா நல்ல நெறமும் நல்ல உயரமும் உள்ள அழகான ஆளுகளாக்குமே… இவருக்கு சொந்த ஊரு நட்டாலம். அங்க அப்பன் அம்மை குடும்பம் எல்லாம் உண்டுண்ணு பேச்சு. ஆனால் கெளம்பி இங்க வந்தபிறகு அவரு எங்கயும் போனதில்லை. குடும்பத்திலே இருந்து யாராவது தேடி வருவாக. கையிலே இருக்கிற பணத்தை குடுத்து அனுப்புவாரு. மத்தபடி ஆளு யாரு, என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியாது. அவரை அறிஞ்ச ஒரே சீவன் வலிய கேசவன் மட்டுமாக்கும்.”
“வலிய கேசவன் நல்ல அறிவுள்ள ஆனையாக்கும். ஆனைன்னா என்ன? அது இருட்டுல்லா? ஆகாசமா நிறைஞ்சிருக்கிற மகாவிஷ்ணுவுக்க நிறம் இருட்டாக்கும் கேட்டுக்கோ. வலிய கேசவன் அங்க திருவட்டாற்று கோயிலிலே கிரீடமும் கவசமும் அணிஞ்சு மலந்து கிடக்குத ஆதிகேசவனுக்க தனிரூபம்லா? செங்கோலு வைச்சு வஞ்சிநாட்டை ஆண்டருளுத திருவிதாங்கூர் மகாராஜா பொன்னுதம்புரானுக்க பிரதிரூபமாக்கும் ஆனை… வேய், ஆனை மனுச மனசை அறியும்னாக்கும் சொல்லு. மனுச மனசிலே உள்ள அம்பிடு இருட்டும் ஆனைக்கு தெரியும். இருட்டுக்குள்ள முங்கி, மறைஞ்சு, புகையும் பொடியும் மூடிக் கிடக்குத எல்லாத்தையும் ஆனை அறியும்…”
ஆசாரி சொன்னார் “பண்டு காலத்திலே இங்க ஒரு வளமொறை உண்டு. துக்கமெல்லாம் ஆனைக்கிட்ட போயி சொல்லுவாங்க. ஆனை தனியா நிக்கிறப்ப போயி ஆனைப்பாகன் கிட்ட பிரார்த்தனையாக்கும்னு சொன்னா அவன் அரையணாவ வாங்கிக்கிட்டு வெலகிப்போயிடுவான். தனியா நின்னு எல்லாத்தையும் சொல்லுவாங்க. ஆதிகேசவனா நினைச்சு சொல்லுவாங்க. மகாராஜா பொன்னுதம்புரானா நினைச்சு சொல்லுவாங்க. கைநீட்டி கண்ணீரு விட்டு யாசிக்கிறவங்கள கண்டிருக்கேன். காலிலே விளுந்து கதறுறவங்களை கண்டிருக்கேன்…”
“வலிய கேசவன் லேசுப்பட்டவன் இல்ல கேட்டுக்கோ. தண்டாத்தி கோமதிய அவளுக்க கெட்டினவன் குளித்துறையிலே இருந்து கெட்டிக்கிட்டு வந்து ஒரு மாசம் ஆகல்ல. அவ நல்லா கருங்கல்லிலே கொத்தியெடுத்த சிலை மாதிரி இருப்பா. அப்ப அறைக்கல் பப்பனாவன் தம்பி இங்க அடங்காம திரிஞ்சுகிட்டிருந்தாரு. பெண்ணுகெட்டல்ல. பாத்த பெண்ணெல்லாம் வேணும். தட்டிக்கேக்க ஆளில்லை. கேட்டா பிச்சாத்திய உருவிப்போடுவாரு… அவரு இவள பாத்துப்போட்டாரு. அவ ஓடிப்போயி காட்டிலே ஒளிச்சிருந்தா. மறுநாள் காலையிலே நேரா வந்து ஆனைகிட்ட அளுது சொல்லிப்போட்டா. வலிய கேசவன் பிளிறிக்கிட்டே நேரா அறைக்கல் வீட்டுக்கு போனான். அறப்புரை சாய்ப்பிலே பப்பனாவன் தம்பி உறங்கிட்டிருந்தாரு. வீட்ட உடைச்சு, சுவரை சரிச்சு, உள்ள போயி அவர அந்தால தூக்கி காலிலே போட்டு ஒரு சவிட்டு… குடலு முளுக்க வாய் வளியா வெளியே வந்து கிடக்கு… என் கண்ணாலே பாத்தேன்… அப்பேற்பட்ட எமனாக்கும் வலிய கேசவன். ஆனா ஒண்ணும்தெரியாத சின்னக்குளந்தை மாதிரி… சின்னப்பிள்ளைக ஏறி வெளையாடும். குளிப்பாட்டுறப்ப ஊரே கூடி உடம்ப தேச்சு விடும்… தேய்க்கிறதுக்கு ஏரியா கிடக்குல்லா மலைப்பாறை மாதிரி… என்ன நான் சொல்லுதது?”
ராமாச்சார் வாய் திறந்து கேட்டுக்கொண்டிருந்தார். ஆசாரி என்னை பார்த்தபோது அவர் என்னை பார்க்காதது போலிருந்தது. அவர் சொன்னார்.
“முரளிப் போத்தி திரிமதுரம் செய்வாருன்னு சொன்னேம்லா, அதிலே ஒரு ரெசமான விசயம் உண்டு. அவரு இனிப்பு திங்க மாடாரு. பாயசம் ஒரு துள்ளி வாயிலே வைக்க மாட்டாரு. திரிமதுரம் மோந்துகூட பாக்கமாட்டாரு. எல்லாம் மனக்கணக்கு கைக்கணக்கு…”
“ஆனா ஆனைக்கு குடுப்பாரு!” என்றார் ராமச்சார்.
“அது வந்து வாங்கி திங்குறதுல்லா?” என்றார் ஆசாரி. “அவருக்கும் அதுக்கும் உள்ள பந்தம் என்னான்னு நமக்கு தெரியாதுல்ல? நான் கண்ணாலே பாத்தேன். ஒரு நாள் ஒரு அந்தி இருட்டு… ஆனை தனியா நிக்குது. கீள என்னமோ கிடக்குது. நான் ஆரோ துணிய மறந்து விட்டுட்டு போயிட்டாங்கன்னாக்கும் நினைச்சேன். பக்கத்திலே போயிப் பாத்தா நம்ம முரளிப் போத்தி. ஆனைக்க முன்னங்காலடியிலே தலையை வைச்சு மண்ணிலே குப்புற கிடக்குதாரு. ஆனைக்க காலு அவரு தலைக்கு பக்கத்திலே பனைமர அடித்தூரு மாதிரி இருக்கு.”
“நான் ஆனை அவரை கொன்னுபோட்டுதுன்னாக்கும் நினைச்சேன். அய்யோன்னு நிலைவிளிச்சுட்டு ஓடிப்போய் பாத்தேன். அவரு எந்திரிச்சு ‘ஒண்ணுமில்லை ஆசாரியே ஒண்ணுமில்லை’ன்னு சொன்னாரு. ‘என்ன செய்யுதீக போத்தி? அது நெலைமறந்து காலை இம்பிடு நீக்கி வைச்சா தலை முட்டைமாதிரி பொட்டிப்போயிரும்லா’ன்னு நான் கேட்டேன். ‘அவன் என்னை கொல்லட்டும் ஆசாரியே. இந்த கொதிக்குத மண்டை உடைஞ்சு சீழும் ரத்தமுமா மூளை வெளிய வரட்டும். அதுமேலே நல்ல காத்து படட்டும்… இந்த மண்டைக்குள்ள அடைஞ்சு அது புளிச்சு கெட்டு நாறுது’ன்னு போத்தி சொன்னாரு. எனக்கு அவரு என்ன சொல்லுதாருன்னு புரியல்ல. வாய தெறந்து நின்னேன். எந்திரிச்சு போயிட்டாரு… மறுநாள் கோயிலிலே பாத்தப்ப அவரு ஒண்ணும் சொல்லல்ல, நானும் கேக்கல்ல. வலிய கேசவன் வந்தான். இவரு திரிமதுரம் குடுத்தாரு. அப்ப முகத்த பாத்தேன். முகத்திலே ஒரு வெளிச்சம்… சின்ன வெளிச்சம். விடியுற நேரத்திலே வானம் வெளுக்குறதுக்கு முன்னாடி குளத்து நீரிலே ஒரு வெளிச்சம் வருமே… அந்த மாதிரி”
ராமச்சார் பெருமூச்சு விட்டார். பிறகு “மனுச சென்மத்துக்கு என்னென்ன துக்கங்களாக்கும்” என்றார்.
“துக்கம் ரெண்டு வகையாக்கும். என்ன ஏதுன்னு நாமறிஞ்ச துக்கங்கள். நம்மாலே எப்பவுமே என்னதுன்னு தெரிஞ்சுகிட முடியாத துக்கங்கள்” என்றார் ஆசாரி. “அறிஞ்ச துக்கத்திலே இருந்து விடுதலை உண்டு. அறியாத துக்கம் நம்மோட சேந்து சிதையிலே எரியும்.”
சற்றுநேரம் அங்கே அமைதி உருவானது. ஆசாரி எழுந்து சென்று சீவுளியை எடுத்துக்கொண்டு தன் வேலையை மீண்டும் தொடங்கினார். அவர் சீவிய மரத்தின் சுருள்கள் எழுந்து எழுந்து உதிர்ந்துகொண்டிருந்தன. மரம் ஒரு பெரிய மலராக இதழ் விரித்துக்கொண்டே இருப்பது போலிருந்தது.
மேற்கொண்டு அவர்கள் ஏதும் பேசப்போவதில்லை என்று தெரிந்தது. ஆனால் அவர்களின் முகங்களில் பேசவிருக்கும் ஏதோ எஞ்சியிருந்தது.
“திரிமதுரம்னு வேறே ஒண்ணும் உண்டுன்னு சொல்லுவாக” என்றபடி ஆசாரி மரத்தை இழைத்தார். கொத்து முடி அவர் முகத்தில் விழுந்து அசைந்தது.
ராமச்சார் என்ன என்று கேட்கவில்லை. ஆசாரி அவரே தொடர்ந்தார். “ஸ்த்ரீ மதுரம்னும் சொல்லுவாக… மூணுவகை ஸ்த்ரீமதுரம். ஒண்ணு பெத்த அம்மைக்க முலைமதுரம். ரெண்டு, மனசுக்கு பிடிச்ச தோழிக்க கண்ணீருக்க மதுரம்… மூணு பெத்த மகளுக்க பிஞ்சு உதட்டிலே உள்ள மதுரம்…”
“அது என்னத்துக்கு கண்ணீருன்னு சொல்லுதான்?”
“அது அப்படியாக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே உள்ள பிரேமை மதுரமாட்டு ஆகிறது நல்ல சூடான கண்ணீரிலேயாக்கும்”
ராமச்சார் ஒன்றும் சொல்லாமல் வெறுமே பார்த்திருந்தார்.
“ரெண்டும் கண்ணீராக்கும். ஒண்ணாச் சேந்தாலும் கண்ணீரு. பிரிஞ்சாலும் கண்ணீரு. முதல் கண்ணீரு மதுரம். ரெண்டாம் கண்ணீரு அதி மதுரம்”
“பிரிஞ்சாலா?”
“அது உமக்கு எங்க தெரியும்?” என்றார் ஆசாரி. “அந்த கண்ணீரு மதுரமா ஆகணுமானா மனசிலே கலை வேணும். சங்கீதம் கவிதை எல்லாம் நூறு இரட்டி மதுரமா ஆகிற மாயமாக்கும் அது… ஒரு குயில்சத்தம் கேட்டா அது கண்ணனுக்க புல்லாங்குழலாயிரும். ஒரு வண்டு பறந்தா அது வீணையாயிரும்… அது தீரா மதுரம்… ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் கொஞ்சம் இனிப்பு அப்பவும் மிச்சமிருக்கும் கேட்டுக்கோ.”
பலாத்தடி பொன்னாலானதுபோல மஞ்சள் மின்னியது. ஆசாரி அதை கையால் நீவினார். அந்த மென்மை அவர் முகபாவத்தில் தெரிந்தது.
நான் “பவுன் மாதிரி இருக்கு” என்றேன்.
ஆசாரி முகம் மலர்ந்து என்னைப் பார்த்து “பின்ன பவுனாக்குமே? பலான்னாலே பவுனுதான். பலாச்சொளை சொக்கத்தங்கமாக்கும்….” என்றார்.
“அந்த முரளிப் போத்தி இங்கதானே செத்துட்டாரு?” என்றார் ராமச்சார்.
“ஆமா” என்று சங்கரன் ஆசாரி சொன்னார். “அது சித்திரை மாசம். இங்க கோயிலிலே உற்சவம். நட்டாலம் திரிலோசனன் நாயரு தெரியும்லா? ஸ்ரீ சித்திரா கதகளி யோகம். அவரு கதகளி ஆடுதாரு. உஷா பரிணயம். அதொரு நயம் கதகளியாக்கும். மொத்தமும் பிரேமையும் சிருங்காரமும் மட்டும்தான்… பாட்டு நேமம் பார்க்கவன் நாயரு. தேனாட்டு உருக்கி ஊத்துறாரு… மைதானம் நிறைஞ்சு தெருவெல்லாம் மதுரம் பெருகி ஓடிட்டிருக்கு. கதகளி முடியப்போகுது. அடுத்து எழுந்தருளலுக்கு ஆனைய ரெடி பண்ணணும். ஆனைப்பாகன் அச்சுதன் போயிப்பாத்தா ஆனைய காணல்ல… எங்க போச்சுதுன்னு அவன் பதறி தேடினான். ஒரு மணிநேரம் தேடினப்பவும் ஆனைய காணல்ல. பாத்தா கோயிலுக்கு முன்னால அரசமரத்தடியிலேத்தான் நின்னுட்டிருக்கு. அதுவளியா ரெண்டு தடவை அவனே போயிருக்கான். ஆனைய பாக்க முடியல்ல. ஆனை இருட்டிலே அப்டி அசையாம நின்னுட்டிருக்கு… அதுக்க கண்ணு ஒத்தை நட்சத்திரம் மாதிரி மின்னுததைக் கண்டபிறவுதான் இவனுக்கு ஆனைன்னு பிடிகிடைச்சிருக்கு.”
“ஓடி பக்கத்திலே போனா அங்க பக்கத்திலே மரத்தடி சுத்து மண்டபத் திண்ணையிலே முரளி போத்தி மல்லாந்து படுத்திருக்காரு… இவன் போயி போத்தி போத்தின்னு விளிச்சா விளி கேக்கல்லை. தொட்டுப்பாத்திருக்கான். உடம்பு குளுந்துபோயிருக்கு. அவன் நெலைவிளிச்சு ஆளைக்கூட்டினான். எல்லாரும் ஓடிப்போயி பாத்தோம். கண்ணு மூடி, அப்டியே கெடக்காரு. முகத்திலே அப்டியொரு மதுரபாவம்… ஒரு செம்பு தேனை இனிக்க இனிக்க குடிச்சது மாதிரி… பக்கத்திலே ஆனை நின்னுட்டிருக்கு. செவிகூட ஆட்டாம…”
மீண்டும் ஒரு மௌனம். ஆசாரி பலாமரக்கட்டையை மீண்டும் பொன்னிதழ்களாக சீவிச்சுருட்ட ஆரம்பித்தார்.
“பிறகு எந்த திரிமதுரத்திலயும் அந்த ருசிய நான் அறிஞ்சதில்ல… அந்த மதுரம் அப்டியே போச்சு” என்றார் ஆசாரி. முடியை அள்ளி பின்னாலிட்டு நிமிர்ந்து “வலிய கேசவன் முரளிப் போத்திய கொண்டு போறப்ப பேசாம பாத்துக்கிட்டு நின்னான். அதுக்குப் பிறவு அவனுக்கு யாரும் திரிமதுரம் குடுக்கவுமில்ல, அவன் கேக்கவுமில்லை.”
“ஆனை அறியும்லா?” என்றார் ராமச்சார்.
(ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2023)