ஒரு பேரிலக்கியத்தின் தமிழாக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா, உங்களுக்கு கடிதம் எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டது, இந்த வருடம் கண்டிப்பாக  விஷ்ணுபுரம் இலக்கிய விழாவுக்கு  வரவேண்டும் என நினைத்திருக்கிறேன்.

சமீபத்தில் ‘The Great Gatsby’ என்ற ஆங்கில நாவலை தமிழில் மொழி பெயர்த்து அமேசானில் வெளியிட்டேன்,

தி கிரேட் கேட்ஸ்பி (Tamil Edition) Kindle Edition

எழுதிப் பழக்கம் இல்லாததால் முதலில் மொழிபெயர்ப்பில் இருந்து தொடங்கலாம் என்று இணையத்தில் புகழ் பெற்ற ஆங்கில நாவல்களை தேடினேன், அவற்றில் புகழ் பெற்ற பல நாவல்கள் ஏற்கனவே தமிழில் வந்துவிட்டது . எனவே பப்ளிக் டொமைனுக்கு வந்தும், இதுவரை தமிழில் வராத பழைய நாவல்களை எடுத்து எழுத தொடங்கலாம் என தேடி இந்த நாவலை எடுத்தேன்.

ஆங்கிலத்தில் படிக்கும் பொழுது, இந்த நாவல் ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதப் பட்டதால் பழமையான பல சொற்களும், அன்றைய அமேரிக்க வாழ்கை முறையை விவரிக்கும் விவரனைகளும்  கொஞ்சம் திடுக்கடைய வைத்தது, இதனை எப்படி தமிழில் எழுதப் போகிறோம் என்ற கேள்வி எழுந்தது, முதல் முப்பது பக்கங்களை ஒரு வேகத்தில் எழுதிவிட்டேன், அதன் பிறகு எழுத சற்று காலம் பிடித்தது, பலமுறை இணையத்தை ஆராய்ந்து ஆசிரியர் என்ன கூற வருகிறார் என புரிந்து கொண்டு பின் அதனை தமிழில் யோசித்து,தட்டச்சு செய்வது என்று, பக்கங்களை கடக்க பெரும் சிரமமாக இருந்தது

வேலை நேரம் போக கிடைத்த நேரத்தில் எழுதியதால் பல நாட்கள் சில பக்கங்களை கடக்கவே சிரமப் பட்டேன். ஒரு வழியாக முடித்து அமேசானில் சென்ற வாரம் பதிப்பித்தேன், அவர்கள் பல காரணங்கள் கூறி பல முறை நிராகரித்தார்கள், இந்த நாவலை பதிப்பிக்க எனக்கு உரிமை இல்லை என்றும், இருந்தால் அந்த கடிதத்தை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அவர்களுக்கு பல இணைய பக்கங்களை சுட்டிக் காட்டி இது பப்ளிக் டொமைன் நாவல் என்று புரிய வைத்தேன், கடைசியாக ஒத்துக் கொண்டார்கள், ஆனால் நாமே எழுதிய புத்தகத்திற்கு எழுபது சதவீதம் ராயல்டி என்றும், இந்த மாதிரி பப்ளிக் டொமைன் புத்தகத்திற்கு முப்பதைந்து சதவீதம் தான் ராயல்டி என்றும் கூறிவிட்டார்கள். சரி ஒரு பயிற்சிக்காக தானே எழுதினோம் என்று பதிப்பித்து விட்டேன்.

உங்களுக்கு நேரம் கிடைத்தால் வாசித்துப் பார்த்து உங்களது மதிப்பீட்டை கூற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவில் (மற்ற இந்திய மொழிகளில் இருந்து) வெளிவந்த ஆங்கில நாவல்களை மொழி பெயர்த்து  தமிழில் புத்தகமாக வெளியிட விருப்பம், குறிப்பாக டி.பி. ராஜீவனின் பாலேரி மாணிக்கம் மற்றும் கே.டி.என்.குன்னூர்- எழுத்தும் ஜீவிதமும் , ஆகிய இரண்டு நாவல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை( யாரும் இதுவரை தமிழில் மொழி பெயர்க்க வில்லை என்று நினைக்கிறேன்).

என்றும் அன்புடன்,

சந்திரமௌலி.

அன்புள்ள சந்திரமௌலி,

பொதுவாக ஆங்கிலத்திலேயே எழுதப்படும் நாவல்களை தமிழாக்கம் செய்வது கடினம். அதுவும் கொஞ்சம் பழைய நூல் என்றால் மிக கடினம். சொலவடைகள், மொழிநடைச்சிக்கல்கள். ஆனால் அவற்றைக் கடந்தே மொழியாக்கம் செய்தாகவேண்டும். ஏனென்றால் இன்று இத்தகைய பழைய பேரிலக்கியங்களை மூலமொழியில் வாசிப்பது கடினமான உழைப்பைக் கோருவது. தமிழில் எளிதாக வாசிக்கமுடியுமென்றால் அது ஒரு நல் வாய்ப்பு.

நீங்கள் குறையில்லாமல் மொழியாக்கம் செய்துள்ளீர்கள். முழுக்க வாசிக்கவில்லை. வாசித்தவரை எனக்கு நிறைவளிக்கிறது. வாழ்த்துக்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைபரணி (அமீரகத் தமிழ்க்கலை இலக்கிய விழா)
அடுத்த கட்டுரைபழைய ரத்தம், கடிதம்