அணி (புதிய சிறுகதை)
அன்புள்ள ஜெ
அணி சிறுகதையை வாசித்தேன். தமிழில் அபூர்வமான கதைக் களத்தில் நிகழும் கதை.
மழை வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்யச் செல்பவர்களின் மத்தியில் ஒருவன் மெய்யான நம்பிக்கையுடன் குடையுடன் செல்வானாயின் அவன் மேல் வீசப்படும் கேலிப்பார்வையை நினைவுபடுத்துகிறது. நம்பும் சித்தாந்தத்திலே எவ்வித சமரசமுமின்றி உறுதியோடிருப்பவர்கள்,அதைப் பின்பற்றும் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறார்கள். இங்கு இடம்,பொருளுக்கு ஏற்றவாறு நெளிவு,சுழிவுகளைக் கைகொள்ளாதவர்கள் அந்தச் சித்தாந்தங்களையே அழிக்க வந்தவர்கள் என்று வசைப்பாடப்படுவது அல்லது அவர்களையும் தங்கள் கூட்டத்தில் ஒருவனாக மாற்றிவிட முயல்வதுதான் எப்போதும் நிகழ்கிறது.
இக்கதையிலும் ஓரிடத்தில், பெரிய சன்னிதானம் “முத்து, நீ எடுத்தேன்னு சொல்லவேண்டாம்… நான் உனக்கொரு வைரம் வைச்ச பதக்கச் சங்கிலி தாறேன்…அதை நீ இங்க இத்தனைபேர் நடுவிலே களுத்திலே போட்டுக்கிடணும்… அதை எப்பவும் கழட்டப்பிடாது.சரின்னா சொல்லு. இப்பவே வாங்கிக்கோ” என்று வலை விரிக்கிறார். நடப்பவற்றில் முத்துவையும் ஒரு பங்குதாரராக மாற்றிவிட முயல்கிறார். ஆனால் முத்துக்குமார சுவாமி தம்பிரான் தனக்கான அணிகலன் எது என்பதினை அவரே தேர்ந்தெடுக்கிறார். நல்ல கதை.
அன்புடன்
மணிகண்டராஜா [உதவி இயக்குநர்]
*
அன்புள்ள ஜெ
கூழங்கை தம்புரான் பற்றிய கதை எனக்கு பொற்கைப் பாண்டியனை நினைவுறுத்தியது. ஒரு விழுமியத்துக்காகச் செய்த தியாகத் தழும்புதான் மிகச்சிறந்த அணி
ராஜசெல்வராஜ்