இனக்குழுப் பண்பில் இருந்து குடிமைப் பண்புக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு,

நலமாக உள்ளீர்கள் என நம்புகிறேன். சமீபத்தில் உங்களின் புகைப்படம் ஒன்றை நண்பர் காண்பித்தார். மாரெல்லாம் வெள்ளை முடி தெரிய நீங்கள் சிரித்து கொண்டிருந்த புகைப்படம். இப்படியான படங்கள் தான் உங்களுக்கு வயசாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாக நண்பர் குறிப்பிட்டார். ஆம். செயலில் நீங்கள் எல்லோரையும் விட இளையவர். ஒளவைக்கு அதியமான் தருகிற நெல்லிக்கனி உங்களுக்கு கிடைக்க மானசீகமாக எண்ணிக் கொண்டேன்.

கோவைக்கு வேலை தொடர்பாக சென்றிருந்த போது ஆர்.எஸ். புரத்தில் உள்ள நகர விடுதியில் தங்க சென்றேன். நகர விடுதிகள் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் இடம்பெயரும் நகரத்தார் வணிகர்களுக்காக அடைக்கலமாக இருந்தது. இன்றைக்கு மிச்சம் இருக்கும் அறக்கட்டளையின் சொத்துக்களின் பொருட்டு பெயருக்கு இயங்கி வருகின்றன.

பெரிய ஹால் இருக்கும். அங்கு தங்கி கொள்ளலாம், சொற்ப பணம் கொடுத்து விட்டு. நான் சென்ற வேளை அதிகாலை. பயணக் களைப்பு மிகுந்திருக்க அங்கேயே சரிந்து விழுந்தேன். அடுத்த சில நிமிடங்களில் பளீரிடும் ஒளியும் சத்தமும் கேட்டது. எழுந்து பார்த்தால் எனக்கு கொஞ்ச தூரத்தில் படுத்திருந்த பெரியவர் சத்தமாக அலைபேசியில் வீடியோ ஒன்றைப் பார்த்து கொண்டிருந்தார். இணையம் முழுவதும் நிரம்பி இருக்கும் Junk வீடியோக்களில் ஒன்று.

நாசூக்காக பயன்படுத்தத் தெரியவில்லை என்பது குற்றமில்லை. இன்னொருவருக்கு நெருடலை உண்டாக்குவது குறித்த எந்தவித பிரக்ஞையும் இல்லை. எரிச்சலாக இருந்தது. மூத்தோர்களை இவ்வளவு வெறுப்போடு அணுகுகிற முதல் தலைமுறை நாங்கள் தானா என்கிற சந்தேகமும் எழுந்தது.

இன்றைய குழந்தை வளர்ப்பு குறித்து நீங்கள் எழுதியிருந்தீர்கள். ஆனால் அதற்கு ஈடாகவே இந்த உள்ளீடற்ற மூத்த சமூகமும் இருப்பதாகவே படுகிறது. முந்தைய தலைமுறைகளுக்கும் இத்தகைய இருந்ததா. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சார்.

-பிரபாகரன் சண்முகநாதன்

காரைக்குடி

*

அன்புள்ள பிரபாகரன்,

ரயிலிலேயே நீங்கள் ஒன்றைப் பார்க்கலாம். முன்பதிவு செய்யாத பெட்டிகளில் கூட்டமே இல்லாமலிருந்தாலும் கூட ஒரு கணம் அமைதியாக இருக்க முடியாது. கூச்சல் குழப்பம். இடித்து மிதித்து வசைபாடி பயணம் ஓர் அவஸ்தையாக ஆகிவிடும். பதிவுசெய்யப்படும் படுக்கைப்பெட்டிகளில்கூட எப்போதும் சத்தம் போடுவார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறுபவர்கள் இரவில் எந்நேரமானாலும் எல்லா விளக்குகளையும் போடுவார்கள். காட்டுக்கூச்சலாக பேசி விடைபெறுவார்கள். ஒருவரை ஒருவர் கூவி அழைப்பார்கள். பயணம் முழுக்க சந்தடியாகவே இருக்கும். வேர்க்கடலைத் தோல், வாழைப்பழத்தோல், கோப்பைகள் உட்பட அனைத்தையும் அங்கேயே போட்டுவிடுவார்கள்.

அண்மையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் கூடியபின் அந்தக் கும்பலில் பெரும்பகுதி குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டிகளில் நுழைகிறது. இன்று அவற்றில் எவரும் தூங்கிவிட முடியாது. குளிர்சாதன இரண்டடுக்கு, முதல்வகுப்பில் மட்டுமே தூங்க முடியும். அதில் ஏறுபவர்கள் கூச்சலிடுவதில்லை. தேவையில்லாமல் விளக்குகளை போடுவதில்லை. செல்பேசி வெளிச்சத்தில் பெட்டிகளை வைப்பார்கள். குப்பைகளை குப்பைக்கூடையில் போடுவார்கள். ஆனால் அவர்கள் கூட குழந்தைகள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதை, கூச்சலிடுவதை, அடம்பிடிப்பதை ஒருவகையான செல்லமாக பார்க்கிறார்கள். அது உருவாக்கும் தொல்லைகளை கருத்தில் கொள்வதில்லை.

பொதுநாகரீகம், குடிமையுணர்வு ஆகியவற்றுக்கும் பொருள் சார்ந்த சமூகநிலைக்கும் தொடர்புண்டா? உண்டு. அதைச் சொன்னதுமே பொங்கி, கூச்சலிட்டு தங்களை ஏழைப்பங்காள மனிதநேயர்களாகக் காட்டிக்கொள்ளும் ஒரு மனச்சிக்கல் இங்கே சமூக ஊடகங்களிலுண்டு, அவர்களில் பெரும்பாலானவர்கள் இதே இரண்டடுக்கு குளிர்சாதனப்பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்பவர்கள். ஆனால் ஏழைகள் தெய்வங்கள் என கண்ணீர் கசிவார்கள். நான் சொல்வது கண்கூடான உண்மை. இது ஏன் என்பதைப் பற்றியே நாம் சிந்திக்கவேண்டும்.

நம் மக்களுக்கு நவீனக் குடிமையுணர்வு கற்பிக்கப்படவே இல்லை. சூழலின் அழுத்தத்தால் அவர்கள் கற்றுக்கொண்டால்தான் உண்டு. பெரும்பாலும் சில ஆண்டுகள் வெளிநாடுகளில் வாழ்ந்தவர்கள் குடிமைப் பண்புகளைக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பதைக் காணலாம். உள்ளூரில் நல்ல அலுவலகங்களில் வேலைசெய்பவர்கள் கொஞ்சம் குடிமையுணர்வுடையவர்கள். நல்ல நகர்ப்புறக் கல்விநிலையங்களில் கற்றவர்கள் ஒப்புநோக்கக் குடிமையுணர்வுடையவர்கள்.

(ஆனால் இந்தியாவில் படித்த இளைஞர்களும் இளம்பெண்களுமேகூட எந்த விதத்திலும் இன்னொருவரை பொருட்படுத்தாமலிருப்பதையும் கண்டிருக்கிறேன். அது அவர்களின் குடும்பச்சூழலில் இருந்து வருவது. இந்தியக்குடும்பங்களில் பிள்ளைகளை இளவரசர்கள், இளவரசிகள் என நம்பவைத்து வளர்க்கிறார்கள்)

இன்னொன்றையும் கவனிக்கலாம். உயர்நடுத்தரக் குடிகளிலேயே வயது முதிர்ந்தவர்களுக்கு குடிமையுணர்வு குறைவு. நான் பெரும்பாலும் கவனிப்பது ஒன்றுண்டு, நாகர்கோயில்- கோவை ரயிலில் ஐந்து ஐந்தரைக்கெல்லாம் கிழவர்கள் எழுந்து செல்பேசிகளில் உச்சத்தில் பக்திப்பாடல்களை போட்டுவிட்டு அமர்ந்திருப்பார்கள். சிலர் நாலரைக்கு ஈரோடு வந்ததுமே எழுந்து பாட்டு போடுவது உண்டு. அது தொந்தரவாக உள்ளது என்று சொன்னால் மனம் புண்பட்டு விடுவார்கள். அடம்பிடிப்பார்கள். சீற்றம் கொண்டு கத்துவார்கள்.

ரயிலில் சாப்பிட்டுவிட்டு அலுமினிய ஃபாயிலிலேயே  குடிநீரால் கைகழுவி அதை அப்படியே வைத்துவிட்டு அமர்ந்திருக்கும் கிழவர்களைக் கண்டிருக்கிறேன். மனைவிகளோ பிறரோ எடுத்துப்போடவேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க அவர்கள் ஏதேனும் விஷயத்தில் மற்றவர்களுடன் ஒத்துப்போகவேண்டும் என்றோ மற்றவர்களுக்கும் உரிமைகளும் விருப்புவெறுப்புகளும் உண்டு என்றோ தெரியாமலேயே வாழ்ந்து மடிபவர்கள். குடும்பங்களில் அவர்கள் சர்வாதிகாரிகள், பிற அனைவரும் அவர்களின் அடிமைகள்.

கன்யாகுமரி, ஊட்டி, மெரினா எங்கும் நாம் ஒன்றைப் பார்க்கலாம். அங்குள்ள சிறு வணிகர்கள் அந்த இடத்தை குப்பைமேடாக ஆக்குவார்கள். அத்தனை குப்பைகளையும் அங்கேயே போடுவார்கள். கழிவு நீரை தங்கள் உணவகம் முன்னாலேயே வீசும் உணவகக்காரர்கள் உண்டு. அந்த நாற்றத்தாலேயே அவர்களை அணுக முடியாது. தன் உணவுக்கடை அருகிலேயே சிறுநீர் கழிப்பவர்களை கண்டிருக்கிறேன்.  அவர்களின் வாழ்க்கையே அங்கேதான். அந்த இடத்தை அழிப்பது அவர்கள் தங்களையே அழிப்பது. ஆனால் அவர்களால் அதை உணரமுடியாது.

டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்களில் படிகளின் வளைவுகளிலெல்லாம் பல மாதங்களாக துப்பப்பட்ட பீடாச்சக்கை மலைபோல குவிந்து நாற்றமடிக்கும். பேசிக்கொண்டிருக்கையிலேயே நம் காலடியிலேயே துப்புவார்கள். வட இந்தியாவில் சாலைகள் முழுக்க எச்சில் பரவி ஒழுகிக்கிடக்கும். நான் உலகில் எங்குமே அப்படிக் கண்டதில்லை.

நான் இதை இப்படிப் புரிந்துகொள்கிறேன். குடிமையுணர்வு என நாம் இன்று சொல்வது ஐரோப்பாவில் உருவான ஒன்று. சமூகத்தின் எல்லா மனிதர்களும் ஒரேயிடத்தில் ஒன்றெனக்கூடும் அமைப்புகளும் வழக்கங்களும் அங்குதான் உருவாயின. அங்குதான் இந்த நவீனக் குடிமைப்பண்புகள் மெல்லமெல்ல உருவாகி வந்தன.நமக்கு அங்கிருந்து சென்ற  நூறாண்டுகளில் மெல்லமெல்ல மேலிருந்து கீழே அவை அறிமுகமாகின்றன.

அடிப்படையில் அவை நான்கு  நெறிகள்

அ. தனிநபரின் உரிமை, அந்தரங்கம் ஆகியவற்றை மதித்தல். எத்தனை நெருக்கமானவர் என்றாலும் இன்னொருவரின் உரிமையை பறிக்கும் செயலை செய்யாமலிருத்தல். அவரது அந்தரங்கத்தில் நுழையாமலிருத்தல்

ஆ. பிறருடைய வசதிகளை கணக்கில்கொண்டு தன் செயல்களை வகுத்துக்கொள்ளுதல். பிறருக்கு தொந்தரவில்லாத நடத்தைகளை மேற்கொள்ளுதல்.

இ. பொதுஇடம், பொதுச்சொத்து ஆகியவற்றை தன் இடம், தன் சொத்து ஆகியவற்றை விட ஒரு படி மேலாகவே பாதுகாத்தல்.

ஈ. பொது இடத்திற்கு வகுக்கப்பட்டுள்ள நெறிகள் அனைவரின் வசதிக்கானவை என உணர்ந்து அவற்றை தானாகவே கடைப்பிடித்தல்.

இவை நமக்கு பள்ளிகளில் இருந்தே கற்பிக்கப்பட்டு வரவேண்டும், அவ்வாறு வருவதில்லை. இங்கே ஆசிரியர்களிடமே அந்தப் பண்புகள் மிக அரிது. பள்ளிகள்தான் குப்பைமேடுகளாக உள்ளன. நாம் எங்கும் பிறர் அந்தரங்கத்தில் ஊடுருவுவோம். தனிநபர் உரிமைகளை கருதவே மாட்டோம். பிறர் வசதிகள் நமக்கொரு பொருட்டே அல்ல.  பொது இடங்களில் துப்புதல், குப்பை போடுதல் எல்லாம் நம் அன்றாடம். இந்தியாவில் சாலைகள் என்பவை ஒவ்வொருவரும் அவரவர் குப்பைகள், ஓட்டை உடைசல்களை கொண்டு குவிக்கும் இடங்கள். கோயில்களிலேயே கூட குப்பைகளை கொட்ட நாம் தயங்குவதில்லை.

இந்த மனநிலையால்தான் நாம் பொதுச்சொத்தை சூறையாடுகிறோம். நம் அந்த மனநிலையையே அரசியல்வாதிகள் பெரிய அளவில் செய்கிறார்கள். ஒரு பொருளை இந்தியாவின் எந்த ஊரிலும் சிலகாலம் பொதுவாக போட்டுவைத்தால் காணாமலாகிவிடும். எல்லாருமே பொதுச்சொத்தை திருடுவதற்கு முண்டியடிப்பார்கள். சாலைப்பணிக்காகப் சாலையில்  போட்டுவைக்கப்படும் சல்லிக்கற்களை அள்ளிக்கொண்டுசெல்லும் படித்த நடுத்தரவர்க்கத்தவரைக் கண்டிருக்கிறேன்.

இந்தியாவில் எங்குமே தண்டனை தவிர எதுவுமே பொதுநெறிகளை கடைப்பிடிக்கும்படிச் செய்வதில்லை. போக்குவரத்து விதிகள் உட்பட. அதில் உயிர்கள் போனால்கூட , அரை நிமிடத்துக்காக முண்டியடித்து எல்லா நெறிகளையும் மீறுவார்கள். போக்குவரத்து காவலர் வழியில் நின்றால் அவ்வழிச் செல்பவர்கள் மற்றவர்களை எச்சரித்து வேறு வழிகளில் செல்ல அறிவுறுத்துவார்கள்.

ஒரு நெறி என்றால் அதை ஏன் மீறக்கூடாது, எப்படி மீறுவதென்றே நம் மூளை யோசிக்கும். நாம் நிற்கும் எந்த வரிசையிலும் ஆட்கள் முண்டியடிப்பதை காணலாம். வரிசை கொஞ்சமேனும் பேணப்படுவது விமானநிலையங்களில். ஆனால் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் அல்லது இலங்கை செல்லும் விமானங்களில் தொழிலாளர்கள் வரிசைகளில் முண்டியடித்து காவலர்களால் கண்டிக்கப்படுவதை காணலாம். அத்தனை காவலர் இருந்தும்கூட நம்மால் வரிசைகளைப் பேண முடிவதில்லை.

இதிலும் கூட இன்னொரு பிரிவினை உண்டு. குடிமைப்பண்பு பெண்களிடம் உள்ள அளவு ஆண்களிடம் இல்லை. இந்திய ஆண்கள் தங்கள் குடும்பங்களில் எவரையும் எதன்பொருட்டும் பொருட்படுத்த தேவையற்றவர்களாகவே முழு வாழ்க்கையையும் வாழ்ந்து தீர்க்கிறார்கள். குறிப்பாக வட இந்திய ஆண்களை கவனிக்கிறேன். கொஞ்சம் வசதியான வட இந்திய ஆண்கள்  அவர்களுக்கு இணையானவர்கள் புழங்கும் விமானநிலையங்களில் கூட தங்களுக்காக உலகமே வழிவிடவேண்டும் என்னும் பாவனை கொண்டிருக்கிறார்கள். சிலநாட்களுக்கு முன்புகூட ஒரு ஆள் விமானநிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின்போது அருகே நின்ற ஒருவரிடம் ‘ஜாவ்’ என்று சொல்லி தள்ளிவிட்டு முன்னால் சென்றான். அவன் மூஞ்சியைப் பார்த்தேன். மெழுகுப்பொம்மை மாதிரி இருந்தது. அப்படி ஒரு மிதப்பு.

அப்படியென்றால் நம் பண்பற்றவர்களா? இல்லை., நமக்கு இருந்தது, இப்போதும் நீடிப்பது இன்னொரு வகை சமூகப்பண்பு. அதை குலக்குழுப் பண்பு என்று சொல்லலாம். மனிதர்கள் நெடுங்காலமாக சிறுசிறு கிராமங்களாக, இனக்குழுக்களாக, குடும்பங்களாக வாழ்ந்து உருவாக்கிக்கொண்டவை அந்நெறிகள். ஒரு முதியவர் வந்தால் நாம் எழுந்து இடம் கொடுப்போம். ஒரு நோயாளியை அக்கறையாகப் பார்த்துக் கொள்வோம். ஒரு ரயில் பெட்டி விரைவில் ஒரு சின்ன குடும்பமாக ஆகிவிடும். இன்னொருவரை பற்றி விரிவாக விசாரித்து தெரிந்துகொள்வோம். எப்படியாவது அவருடன் ஒரு தொடர்பை நாம் உருவாக்கிக் கொள்வோம்.

(தம்பிக்கு எங்க? நாகர்கோயிலா? நாகர்கோயிலில எங்க? வடசேரியா? வடசேரியிலே நாகராஜனை தெரியுமா? பேக்கரி வச்சிருக்கா? வாணியம்புள்ளைங்க… அவருக்கு நீங்க யாரு? செரியாப்போச்சு. அவருக்க மனைவிக்க மாமால்ல நம்ம சித்தப்பா… நெருங்கிட்டோமே. தம்பி என்ன ஆளுங்க? கல்யாணம் ஆயாச்சா? பிள்ளைங்க எவ்ளவு? மூத்தவன் என்ன செய்யுதான்? நம்ம பய பாலிடெக்னி படிக்கான்)

இப்படி பல குலக்குழுப் பண்புகள் நமக்குண்டு. சும்மா பயணம் போன இடத்தில் ஒரு வீட்டு வளவுக்குள் நுழைந்து மறுபக்கம் சென்று நின்று அஸ்தமனத்தையும் ஆற்றையும் பார்த்தோம். திரும்பும் வழியில் அந்த வீட்டார் எங்களுக்கு டீ, சப்பாத்தி எல்லாம் தயாரித்து தயாராக வைத்திருந்தனர். முன்பின் தெரியாத ஊரில், பாலைவனத்தில், டீ தந்து உபசரித்திருக்கின்றார்கள். உணவுக்கு பணம் வாங்காத மக்கள் இந்தியா முழுக்க இருக்கிறார்கள். அந்த பண்புகள் உயர்ந்தவை. அவற்றில் பல இன்னும் நீடிக்கவேண்டியவை.

ஆனால் குடிமைப் பண்புகள் நவீனச் சமூகத்திற்கு தேவையானவை. முன்பின் தெரியாதவர்கள் ஒரே இடத்தில் கூடும் நிலைமை என்பது நவீனயுகத்தின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. மக்கள் பொது இடங்களை இணைந்து பயன்படுத்துவது முன்பு நம் சமூகத்தில் இருந்ததில்லை. நம் சாலைகளே கூட அனைவருக்கும் உரியவையாக இருந்ததில்லை. அது நவீன யுகத்தின் விளைவு. இங்கே நாம் நவீனக் குடிமைப் பண்புகளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இன்று நம் சமூகத்தில் பொருளியல் – சமூகநிலைப் படிகளில் கீழே செல்லச்செல்ல இனக்குழுப் பண்பாடுகள் ஓங்கி குடிமைப் பண்பாடுகள் இல்லாமலிருப்பது நடைமுறை உண்மை. அங்கே தனிநபரின் உரிமை, அந்தரங்கம், வசதி எதற்கும் இடமில்லை. பொது இடங்களை பயன்படுத்த, பொதுநெறிகளைப் பேண எவருக்கும் தெரியாது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாலொழிய நாம் மாற முடியாது. இங்கே குடிமைப்பண்புகளைப் பற்றிப் பேசினால் உடனே இனக்குழுப் பண்புகளை தூக்கிக்கொண்டாடி நாம் பண்பட்டவர்கள் என புல்லரிக்கும் முதிராக்கூட்டம் மிகுதி. அதை கடந்தே இதைச் சிந்திக்கவேண்டும்.

குறைந்தது, இந்தியாவை விட்டு ஏதேனும் ஒரு நாட்டுக்குச் சென்று வந்தவர்களுக்கு தெரியும். நமது சாலைகள் போல, நமது பொது இடங்கள் போல குப்பை நிறைந்தவையும் ஒழுங்கற்றவையுமான இடங்கள் வேறெங்கும் இல்லை என. அந்த தன்னுணர்வை நாம் அடைந்தாலே நம்மால் நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும். எதிர்காலத்திலாவது.

ஜெ

முந்தைய கட்டுரைதி.வை.சதாசிவப் பண்டாரத்தார்
அடுத்த கட்டுரைபினாங்கு இலக்கிய விழா, யுவன் சந்திரசேகர்