மெக்கன்னாவின் தங்கம் – ஆர்வி
அன்புள்ள ஆர்வி,
மெக்கன்னாவின் தங்கம் திரைப்படத்தை நான் என் பள்ளிநாட்களில் நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்கில், வடசேரி சந்தைக்கு ஊரில் யாருக்கோ திருமணக் காய்கறி வாங்க வந்தபோது முதலில் பார்த்தேன். அதன்பின் பலமுறை. உண்மையில் வீட்டில் டிவி வாங்கி, விசிடியும் வாடகைக்குக் கிடைக்க ஆரம்பித்தபின், 2001ல் தான் அதை புரிந்துகொண்டு மீண்டும் பார்த்தேன். வசன எழுத்துக்களுடன். அப்போது என் மகனும் உடன் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
என்னைப்போலவே இப்படத்தின் பரமரசிகர்களில் ஒருவர் எம்.எஸ். அவர் சொல்லி இப்படத்தை மீண்டும் பார்த்தேன் (எம்.எஸ்.அலையும் நினைவுகள்). அவருடன் அமர்ந்தும் பார்த்துள்ளேன். மீண்டும் பார்க்கக்கூடும். வயதாகும்போது கடந்தகால ஏக்கம் என்பது அரிய சுவைகொண்ட ஒன்றாக ஆகிவிடுகிறது.
1969 ல் வெளிவந்த இந்தப்படம் மேற்கே தோல்வி அடைந்தது. காரணம், அன்று கௌபாய் படங்கள் ஏராளமாக வந்து சலித்துவிட்டிருந்தன. கௌபாய் படங்களின் உள்ளடக்கத்தையே கொஞ்சம் அங்கிங்கு மாற்றி முற்றிலும் வேறு சூழலில் அறிவியல்புனைகதைகளை படமாக எடுக்க ஆரம்பித்திருந்தனர். உலகப்போருக்குப் பின் போர்ப்படங்கள் ஏராளமாக வெளிவந்து ரசனை அப்படியும் திரும்பிவிட்டிருந்தது. அத்துடன் அது அமெரிக்க ரஷ்ய பனிப்பூசல் காலகட்டம். அது நாவல்கள், சினிமாக்களின் பேசுபொருளாக ஆரம்பித்திருந்தது.
ஆனால் நமக்கு அப்போதும் கௌபாய் மோகம் விடவில்லை. இங்கே தேவர் ஃபிலிம்ஸும், கர்ணனும் கௌபாய் படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். ஜெய்சங்கர் நடித்த எங்க பாட்டன் சொத்து போன்ற பல கௌபாய் படங்கள் இங்கே பெரிய வெற்றி பெற்றவை. மெக்கன்னாவை தழுவியே இங்கே பல படங்கள் வந்துவிட்டிருந்தன. கடைசியாக வெளிவந்து வெற்றிபெற்ற கௌபாய் படம் ரஜினிகாந்த் தேவர் ஃபிலிம்ஸுக்காக நடித்த தாய் மீது சத்தியம் என நினைக்கிறேன்.
மெக்கென்னாவின் தங்கம் ஹென்றி வில்சன் ஆலன் ஹெக் ஆலன் என்னும் பெயரில் 1963ல் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது. ஏற்கனவே பலமுறை எழுதப்பட்ட ஒரு தொன்மத்தின் மறு ஆக்கம் அது என்கிறார்கள். The Lost Adams Diggings என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு அறியாத தங்கக்குவியல் மெக்ஸிகோ- அமெரிக்க எல்லையில் இருப்பதாகச் சொல்லப்பட்டுவந்தது. பயணியான ஃப்ராங்க் டோபி அதைப்பற்றி எழுதி ஒரு பேசுபொருளாக ஆக்கினார். அந்த புதையலைப் பற்றி பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளன
.
அமெரிக்காவில் அறுபதுகளில், குறிப்பாக உலகப்போருக்குப் பின், புதையல்கள் பற்றிய ஆர்வங்களும் கொஞ்சம் மட்டுப்பட்டன என்றுதான் சொல்லவேண்டும். கௌபாய் படங்கள் மறைந்தன. ஆனால் அவை அமெரிக்க உள்ளத்தில் (உலகம் ஒரு தங்கச்சுரங்கம், தாங்கள் அதன் இயல்பான உரிமையாளர்கள் என்னும் அவர்களின் நம்பிக்கை) ஆழமான வேரூன்றியவை. 1985ல் வெளிவந்த King Solomon’s Mines அப்படியே மெக்கன்னாஸ் கோல்டின் இன்னொரு வடிவம்தான். புதையல் காக்கும் பழங்குடிகளை அப்படியே சிம்பன்ஸிகளாக ஆக்கினால் அதுதான் 1995 ல் வெளிவந்த காங்கோ. ஆனால் நாம் புதையல் படங்கள், கௌபாய் படங்களிலிருந்து விலகிவிட்டோம். அப்படியொரு சினிமா வந்து நீண்டகாலமாகிறது.
மெக்கன்னாவின் தங்கம் நமக்கு பிடித்தமைக்கு நீங்கள் சொல்லும் காரணங்கள்தான் மெய். அதன் நிலப்பரப்பு. அந்த தங்கநிற மலைகள். (அவற்றுக்கிணையானவை இந்தியாவிலேயே ஓரளவு உண்டு. ஆனால் அன்று இந்திய சினிமா அவற்றைக் கண்டடையவில்லை. அவற்றை படமாக்கும் ஹெலிகாப்டர் காட்சிகளும் இங்கே எடுக்கப்பட முடியாது) அந்த நிலம் அளித்த கனவுக்காகவே அந்தப் படம் வென்றது.
அத்துடன் புதையல் தேடிச்சென்றவர்கள் அதை எடுக்கவில்லை என்பதும் நமக்கு ஒரு நிறைவை அளித்திருக்கலாம். நாம் நம்மை அப்பாச்சே பழங்குடிகளுடன் இணைத்துக்கொள்வோம். நம்மிடம் செல்வச்சுரங்கம் உள்ளது என்பது நமது நம்பிக்கை. மொழி, பண்பாடு, வரலாறு, கனிமவளம் எல்லாவற்றிலும் நம்மிடமிருக்கும் ‘புதையல்’ பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அது ‘அன்னியர்களால்’ கொள்ளையடிக்கப் படுகிறது என்னும் பதற்றமும் கொண்டிருக்கிறோம்
Ol Turkey Buzzard, Ol Turkey Buzzard
Flyin, Flyin high,
He’s just waiting
Buzzard just a-waiting
Waiting for something down below the dive
Old Buzzard knows that he can wait
Cause every mother’s son has got a date,
A date with Fate.. With fate
He sees men come, he sees men go,
Crawling like ants on the rocks below
The men will steal, the men will dream
And die for gold onthe rocks below
Gold, Gold, Gold, they just gotta have that gold
Gold, Gold, Gold, they’ll do anything for gold
(music interlude)
Old Buzzard knows that he can wait
Cause every mother’s son has got a date,
A date with Fate.. With fate
For men come and will men go,
Crawling like ants on the rocks below
But they can’t win, they’re gonna lose their skin
If all they want is that golden ore
Gold, Gold, Gold, just forget about that gold
Gold, Gold, Gold, you can live without that gold
Forget that gold …. hey … hey …
You can live without that gold … ah.. ah..