யுவன் சந்திப்பு – சக்திவேல்

அன்புள்ள ஜெ

கடந்த 12 ஆகஸ்ட் சனிக்கிழமை யுவன் சாரை அவரது வீட்டில் சென்று சந்தித்து வந்தேன். இவ்வருடத்தின் இடையில் இருந்து யுவன் சாரின் நாவல்களில் சிலவற்றை ஓரிரு இடைவேளையில் வாசித்து வருகிறேன். நண்பர்கள் நடத்தும் யுவசுக்கிரி கலந்துரையாடலில் பங்கு கொண்டேன். பயணக்கதை நாவல் குறித்து எனது அனுபவத்தை முன்னிட்டு ஒரு அமர்வில் பேசினேன். எனது பேச்சு அத்தனை சிறப்பாக இல்லை. நாவலை இன்னொரு முறை வாசித்து மேலும் ஆழமாக செல்ல வேண்டும்.

ஆனால் நாவல்களை வாசித்த உத்வேகத்தில் யுவன் சாருக்கு கடிதம் எழுதினேன். அவரது நினைவுதிர் காலம் நாவல் குறித்து எழுதிய கடிதத்திற்கு மறுமொழியாக சென்னையில் இருப்பதால் முடிந்தால் வாருங்கள் நாம் ஒருநாள் வீட்டில் சந்திக்கலாம் என்றார். உடன் தனது தொலைபேசி எண்ணை தந்து பேசலாம் என்றார். நான் பனி உருகுவதில்லை விழாவில் அவரை பார்த்த நினைவை சொல்லி முறையாக அறிமுகப்படுத்தி கொண்டேன். பின்னர் மூன்று முறைகள் தொலைபேசியில் பேசியிருப்பேன். மும்முறையும் நான் சில இசகுபிசகான கருத்துகளுடன் செல்வதும் சார் அதனை திருத்துவதும் நடந்தது. அப்போதும் ஒருமுறை முடிந்தால் நாம் ஒருநாள் சந்திக்கலாம் என்றார்.

வீட்டில் கேட்டால் அப்பா கார் வாங்கி அடுத்த வருடம் கூட்டி செல்கிறேன் என்றார். இதற்கிடையில் இவ்வருட விஷ்ணுபுரம் விருது யுவன் சாருக்கு தான் என்ற செய்தி நண்பர்கள் வழியாக கிடைத்தது. அதன் பின்னும் தாமதிப்பது சரியல்ல என தோன்றியது. எனவே அப்பாவை போலவே என்னை பத்திரமாக அழைத்து சென்று வருபவர் குருஜீ தான். குருஜீயிடம் சற்று தயங்கிவாறு கேட்டேன். ஆனால் மிக மகிழ்வாக குருஜீ சரி என்று சொன்னார்.

யுவன் சாரிடம் நாள் கேட்டு கொண்டு சனிக்கிழமை கிளம்பி சென்றோம். நண்பர்களில் விக்கி(விக்னேஷ் ஹிரஹரன்) மட்டுமே வர முடிந்தது. மற்றவர்கள் ஆளுக்கொரு வேலையில் மாட்டி கொண்டார்கள். குருஜீ என்னை வீட்டில் அழைத்து கொண்டு அங்கே சென்று சேர வாகன நெரிசலை கடந்து சென்று சேர முற்பகல் பதினொன்றரை மணியாகி விட்டது. விக்கி வர ஒருமணி ஆகிவிட்டது.

யுவன் சாரின் வீடு சோழிங்கநல்லூர் புறநகரில் காசா கிரண்ட் குடியிருப்பு. நல்ல உயர்தரமான விசாலமான வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்தோம். பின்னணியில் சாரோட் இசை சென்று கொண்டிருந்தது.

சாருக்கு விருது பெற்றதற்கான வாழ்த்தை தெரிவித்தவுடன் இதுவரை படித்த அவரது நாவல்களில் எனக்கு பிடித்த நினைவுதிர் காலம் பற்றியும் ஊர்சுற்றி குறித்தும் சொன்னேன்.

நினைவுதிர் காலம் அதன் நேர்காணல் வடிவம் காரணமாகவே புதுமையாக இருந்தது. கருத்துகளை திறம்பட வெளிபடுத்துவதற்காக பயன்படும் வடிவத்தை மாபெரும் கதைச்சொல்லலுக்கும் உரியது என வாசகனை ஏற்க வைப்பது மேதைகளுக்கு உரிய திறனே. இந்நாவலில் இன்னொன்று அதன் சரளமான கதைச்சொல்லலின் வழியாக வயதான பெரியவர் ஒருவர் தன் அனுபவங்களை கூறுகிறார் என்ற தொனியை கொண்டிருக்கிறது. எனவே தங்கு தடையில்லாத சரளத்துடன் பிரவாகம் கொள்கிறது. ஆனால் நாவலை வாசித்து முடித்து மனதில் அசை போடுகையில் ஒரே சமயம் நினைவு கூர்தல் என்ற விஷயத்தில் உள்ள அடுக்குமுறையை ஆராய்வதாக, ஒருவர் வாழ்க்கையில் எதை வெற்றி என கருதுகிறார் என்பதாகவும் வாழ்க்கை என அவர் எவற்றையெல்லாம் தனக்குள் தொகுத்து கொள்கிறார் என்பதாக, இந்த பெருவினாக்களுக்கு அடியில் தந்தைக்கு நிகரான ஹரிசங்கர் தீட்சித்தின் அண்ணன் – தம்பி உறவின் ஆழம், நேர்காணல் எடுக்கும் ஆஷாவை மகளாக உணரக்கூடிய தருணத்தில் எத்தருணத்தில் குறிப்பிட்ட மனிதரை மிக அந்தரங்கரமாக உணர ஆரம்பிக்கிறோம் என்ற வினாவாக விரிந்தபடி செல்கிறது. ஆனால் எனது வியப்புகளில் முதன்மையானது இத்தனை வகையாக தன்னை பார்க்கும் சாத்தியத்தை வைத்திருக்கும் நாவல் எங்குமே பிற நவீன நாவல்களை போல வாசகனை இந்த புள்ளியை கவனி என்பது போன்ற ஒரு அழுத்தத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே வெறுமனே ஹரிசங்கர் தீட்சித்தின் கதையாக மட்டுமேயாக கூட நினைத்து விட்டு செல்லும் அளவுக்கு எளிமையை கொண்டுள்ளது.

அப்புறம் நாவலின் பின்புலமாக அமைந்துள்ள ஹிந்துஸ்தானி இசை. தொடக்க அத்தியாயத்தில் கடற்கரைக்கு அருகில் கடலலைகளின் ஒசை கேட்கும் படி இருக்கும் ஹரிசங்கர் தீட்சித்தின் வீட்டில் நேர்காணல் தொடங்கியதை ஆஷா வர்ணிப்பாள். அந்த கடல் ஹிந்துஸ்தானி இசை தான் என தோன்ற வைத்துவிடுகிறது. அந்த இசை சாகரத்தின் எதிரொலிப்புகளை ஹரிசங்கர் தீட்சித்தின் குரல் என உணர்வது அலாதியான அனுபவம்.

இதற்கு அடுத்தபடியாக அண்மையில் வாசித்த ஊர்சுற்றி நாவல் குறித்து சொல்ல தொடங்கினேன். சீதாபதி மிக பிடித்த குறும்புக்கார பாட்டாவாக மாறிவிட்டார் இப்போது. நினைவுதிர் காலத்தில் நினைவின் அடுக்குமுறை சார்ந்து கேள்வி எழுப்பி கொண்டால் இங்கே முதிய வயதில் நினைவுகள் ஒன்றுடனொன்று கலந்து மயங்கும் விதத்தை பிரதானப்படுத்தலாம். இன்னொரு வகையில் சீதாபதி சொல்லி செல்லும் பெண்கள் உடனான உறவில் கற்பனைக்கும் யதார்த்திற்குமான எல்லைக்கோடு அழிந்தபடியே உள்ளது. நமது நினைவுகள் எப்படி பாதிக்கு பாதி நடவாத கற்பனைகளால் இணைக்கப்பட்டுள்ளது என அறிவது மர்மமும் திகிலூட்டும் அனுபவமே. ஆனால் உண்மையும் கூட. அதே சமயம் ஒருவரை துறவறத்தில் இறங்காமல் தடுக்கும் குணக்கூறுகள் என்ன என்பதாகவும் சீதாபதியின் வாழ்க்கையை காணலாம் என்று விரித்து செல்லலாம்.

இந்த அனுபவங்களை கூறி கேட்ட பின் யுவன் சார் சொன்னார், உங்களுக்கு ஆழமான வாசிப்புள்ளது, அதைவிட அதனை தேர்ந்த சொற்களால் சொல்லவும் இயல்கிறது. இது ஒரு பிரமாதமான காரியம். அவன் (உங்களை தான் குறித்தார்) உருவாக்கியதில் மிக சிறந்த காரியங்களில் ஒன்று இது. எத்தனை பேர், ஒரு பட்டாளத்தை இப்படி செறிவாக வாசிக்கும் படி உருவாக்கி இருக்கிறான் என்றார்.

அடுத்து அண்மையில் வாசித்த பெயரற்ற யாத்ரீகன் தொகுப்பில் இருந்து வாசித்த கவிதை மேலான கேள்வி ஒன்றை கேட்க தொடங்கினேன். அதற்கு சிலநாள் முன்னர் ஒரு கவிதை குறித்த சந்தேகத்தை தொலைபேசியில் கேட்டு தெளிவடைந்திருந்தேன்.

நான் இக்யு ஸோஜனின் கீழ்க்காணும் கவிதையை எடுத்து சென்றேன்.

எட்டங்குல நீளமானது உறுதியானது அது

இரவில் தனித்திருக்கும்போது

தழுவிகொள்கிறேன் அதை

வெகுகாலமாயிற்று –

அழகான பெண்ணொருத்தி தொட்டு அதை

என்னுடைய கோவணத்துக்குள்

இருக்கிறது ஒரு

முழு பிரபஞ்சம்!

இந்த கவிதையில் இக்யு குறிப்பிடுவது ஆண் குறி என்பது வெளிப்படை. என் கவனம் முழு பிரபஞ்சம் என்ற வார்த்தையில் குவிந்தது. அதனால் காமத்தின் போது ஆணின் மனதில் விரியும் புற உலகிற்கு சமானமான உலகை நோக்கி சென்று வியப்பில் நின்றது. அச்சொல்லுடன் ஆனந்த் ஸ்வாமி என்னும் துறவி புனைவுக்களியாட்டின் போது உங்களுக்கு எழுதிய தன் பாலியல் உறவு சார்ந்த அனுபவமும் நினைவில் இணைந்து கொண்டது. இதனூடாக அண்மையில் அகழ் நேர்காணலில் யுவன் சார் கொடுத்திருந்த பதில் ஒன்று ஞாபகம் வந்தது.

அந்த பதிலில் நான் என்பது குறித்து சொல்கிறார். இங்கனைத்திலும் உறைந்திருக்கும் எல்லாவற்றிற்கும் மூலமான ஒரு நான். அந்த புராதான மூல நானை தொட்டு விடவே இலக்கியமும் தத்துவமும் அறிவியலும் தத்தமது வழிகளில் முயல்கின்றன என்று சொல்லி, அப்படியொரு தருணம் தனக்கு அனுபவமானதை குறித்து நெகிழும் அவர் அது மாஸ்டர்பேஷன் மாதிரி ரொம்ப அந்தரங்மானதுங்க என்கிறார். இந்த ஒப்புமை இருக்கிறதே இது யுவனை அறியாதவர்களுக்கு அதிர்ச்சி தரவல்லது. அவரது புனைவுலகில் தொடர் வாசிப்பில் உள்ளவர்களுக்கு யுவனை தனித்து காட்டும் கூறு இவையே என தெரியும். ஆனால் பொதுவாக நம் சமூகத்தில் மட்டகரமான அனுபவம் என்று சொல்லப்படும் ஒன்றை மிக சகஜ தன்மையுடன் ஒப்பு வைப்பது மேற்காணும் ஜென் கவிதையுணர்வில் இருந்து பெற்று கொண்டதா என கேட்க முனைந்தேன். முனைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் நான் இக்கவிதையின் சமூக எதிர்ப்பு அம்சத்தை கூறிய நொடியே அங்கே இடைவெட்டி யுவன் சார் பேச ஆரம்பித்தார்.

இங்கே கவிஞன் கூறுகையிலேயே வெகுகாலமாயிற்று என்று தானே சொல்கிறான். அவன் குறிப்பிடும் பிரபஞ்சம் கற்பனை பெருக்கால் உருவாவது என்பதை விட நினைவுகளின் சுமையால் உருவாக்கப்பட்ட பிரபஞ்சம் என்பது மேலும் பொருத்தமானது அல்லவா! அப்படி பார்க்கையில் உங்களுக்கு இக்கவிதை மேல் கொண்டிருந்த கவர்ச்சியான அம்சம் நீங்கி, இயல்பாக தோன்றிவிடுகிறது அல்லவா என்று கேட்டார். என் வாசிப்பை விட மேம்பட்ட இவ்வாசிப்பு புறவயமான கவர்ச்சியை தாண்டி அதன் மையத்தில் உள்ள புதிரை அணுக மேலும் உதவியாக இருந்தது.

இதனுடன் நான் இக்யு ஸோஜனின் நாடோடி வாழ்க்கை குறித்து கேட்டப்போது அத்தொகுப்பில் உள்ள எழுபது சதவீத கவிஞர்கள் நாடோடியாக ஜென் அமைப்பாவதை எதிர்ப்பவர்களாக வாழ்ந்தவர்கள் தான் என்பதை சொன்னார். அதிலும் தனக்கு மிக பிடித்தவர் கொபயாஷி இஸ்ஸா தான் என்றார். எனெனில் அவரது கவிதைகளில் தான் இயற்கை எந்தவித அக உணர்ச்சிகளின் ஏற்றமும் பெறாமல் அதன் உச்சபட்சமான இயல் தன்மையுடன் வெளிப்படுகிறது என்று.

இக்யு கவிதையின் பற்றி பேசி வருகையில் out of body experience  பற்றி ஓரிடத்தில் குறிப்பிட்டேன். எதற்காக என்றால் நான் படித்த அத்தகைய நூலில் உடலில் இருந்து வெளியேறுவதற்கு வெவ்வேறு வழிமுறைகளை பரிந்துரைக்கும் அவர், அக்கற்பனைகளை உண்மை அளவுக்கே நம்ப வேண்டும் என்பவர், ஆனால் காமம் சார்ந்து கற்பனை செய்ய வேண்டாம் அந்த எல்லா ஆண்களுக்கும் நிறைய உண்டு என கேலியாக சொல்லி செல்கிறார்.

இந்த உடல் கடந்த அனுபவத்தை சொல்லும் சொன்னார், நீங்கள் அதை மூளைக்குள் நடப்பதாக சொல்கிறீர்கள், ஆனால் அது நடக்கும் உண்மையாக தானே இருக்கிறது. அது இங்கு நாம் அமர்ந்திருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு பிறிதொரு வெளியில் நிகழ்கிறது. நம்மால் அது பொய்யென்றோ மூளைக்குள் நடப்பது என்றோ சொல்லவே முடியாது என்றார்.

இந்த உரையாடலின் தொடர்ச்சியாக அறிவார்ந்த பரவசம் குறித்து அவர் சொல்ல வருவது என்ன என்ற கேள்வியை கேட்டேன். இந்த கேள்வி எழுவதற்கான பின்புலத்தை சற்று உங்களுக்கு சொல்ல வேண்டும். இந்த முறை விருது அறிவித்தவுடன் யுவன் சாரின் வாங்காமல் இருந்த அத்தனை நூல்களையும் வாங்கினேன். சென்ற முறை சாருவின் நூல்களை முழுதாக வாங்குமளவுக்கு என்னிடம் தொகை இல்லை. ஆனால் ஷங்கர் பிரதாப் அண்ணன் அவர்கள் புத்தக வாங்க அனுப்பி கொடுத்த தொகை கையில் இருந்தபடியால் எளிதில் வாங்கிவிட்டேன்.  அவற்றில் தீராப்பகல் தொகுப்பும் ஒன்று. அத்தொகுப்பின் கவிதைகளை புரட்டி வாசித்து கொண்டிருந்ததில் பத்து கவிதைகளுக்கு மேலாகவே சட்டென்று என்னை ஈர்த்தன.

அன்றொரு ஆனந்த் அண்ணாவுடன் உரையாடி கொண்டிருந்த போது, யுவன் கவிதைகளை வாசித்துள்ளீர்களா என்று கேட்டேன். முழு தொகுப்பையும் வாசிக்கவிட்டாலும் வாசித்தவரை எனக்கு அவரது கவிதைகளில் பெரிய ஈர்ப்பில்லை. செய்யப்பட்டது போன்ற தன்மை தெரிகிறது என்றார். அதன் தொடர்ச்சியாக யுவன் தன் கவிதையின் பின்னுரையில் குறிப்பிடும் அறிவார்ந்த பரவசம் குறித்து கேட்டேன். அத்தகைய பரவசம் சார்ந்த ஐயத்தை சொன்னார். நானோ அறிவார்ந்த பரவசம் என ஒன்றுண்டு. ஆனால் கவிதை கச்சிதமாக அதை தொட முடியவில்லை என்றால் வெறும் செய்பொருளாக பாதாளத்தில் விழுந்துவிடும் என்றேன்.

உண்மையில் இப்படி ஒரு கருத்தை ஆனந்த் அண்ணாவிடம் சொல்லிய பிறகு எனக்கே சற்று ஐயமாகி விட்டது. எங்காவது நேரடியாக அறிவார்ந்த பரவசத்தை அடைந்துள்ளேனா ? எப்படி சொன்னேன் என்று. ஆனால் அடுத்த கடலூர் சீனு அண்ணா விஷ்ணுபுரம் நாவல் உரையில் பிரசேனர் குறித்து சொன்னவுடன் சட்டென்று உணர்ந்தேன். இங்கே சக்திவேலாக இவ்வாழ்க்கையில் இருந்து அல்ல, பிறிதொரு மெய்வெளியில் பிரசேனராக அவ்வனுபவத்தை சுவீகரித்துள்ளேன் என்று. இது இப்படி இருக்க யுவன் சாரின் கவிதைகள் குறித்து ஏதேனும் கட்டுரை இணையத்தில் உள்ளதா என தேடினேன். தீராப்பகல் முன்னுரையில் சுகுமாரன் அவர்கள் சொல்வது போல ஒரு கவிஞராக யுவன் சாரின் கவிதையுலகம் பற்றி ஏதும் எழுதப்படவில்லை. குறிப்பாக இணையவெளியில். இணையத்தில் ஜ்யோராம் சுந்தரின் வலைப்பக்கத்தில் இருபது வருடங்களுக்கு முன் சொல்புதிது இதழுக்காக நீங்கள் கண்ட நேர்காணல் கிடைத்தது. அது மட்டும் தான் இணையத்தில் இருக்கிறது.

அந்த நேர்காணலில் அறிவார்ந்த பரவசம் என்பது தத்துவத்தின் சோரபுத்திரி என்ற கருத்தாக்கம் உள்ளதை குறிப்பிட்டு கேள்வி எழுப்புகையில் கவிதை ஜனிக்கும் மனோவேகம் குறித்து யுவன் கூறுகிறார். ஆனால் அறிவார்ந்த பரவசம் என்பது அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய முடியவில்லை. எனவே நேரில் சந்திக்கையில் அது குறித்து கேட்டேன், ஏனெனில் அறிவார்ந்த பரவசம் என நான் உணர்ந்தது புனைவின் வழியாக அடைந்த உண்மை. அதுமட்டுமல்லாது தர்க்கத்திற்கு அப்பால் ஏற்படும் திறப்புகளை சார்ந்தது என்று புரிந்திருந்தேன். மேலும் தத்துவம் எப்படி அறிவார்ந்த பரவசம் என்பதை கையாள்கிறது என்பது குறித்து தெரியவில்லை. தத்துவத்தின் பார்வையை விளக்கி சொல்ல முடியுமா என அஜி அண்ணாவிடம் கேட்டிருந்தேன். இன்னும் பதில் வந்தபாடில்லை. யுவன் சார் தன் பார்வையை கூறினார்.

அறிவார்ந்த பரவசம் எனும் போது எங்கோ இருப்பதாக கற்பனை செய்ய வேண்டாம். நம் உறவுகள், சமூகம் எல்லாமே அறிவால் அமைக்கப்பட்ட கருத்துருவம் தானே. அம்மா – மகன் பாசம் போன்ற நாம் மிக உணர்ச்சிபூர்வமானது என சொல்வதில் கூட பெரும் பகுதி சமூகத்தால் உருவாக்கப்பட்ட அறிவு கட்டுமானத்தால் நிற்பது தானே. என்ன இவையெல்லாம் புழக்க தளத்தில் இருப்பதால் அறிவார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை என நம்பி கொள்கிறோம். இன்னொரு பக்கம் நியூட்டன் ஆப்பிள் தலையில் விழுந்ததன் ஈர்ப்பால் புவியீர்ப்பு விசையை கண்டு கொண்ட போது ஏற்பட்ட பரவசம் அறிவால் உண்டாவது தானே. நான் என் பங்கிற்கு ஐன்ஸ்டினி்ன் சார்பியல் கொள்கையான காலம் சார்புடையது என்பதை நினைவு கூர்ந்தேன்.

பின்னும் உரையாடல் நீண்டது. நாம் அறிவது அனைத்துமே மொழியால் கைமாறப்பட்டே நம்மிடம் வந்து சேர்கிறது. கவிதையில் சொல்லும் தூய அனுபவத்தை மொழியோ அல்லது நாமோ கூட மீளச்சென்று அதே நிலையில் அடைந்துவிட முடியாது. நல்ல கவிதை என நாம் குறிப்பிடுவது என்னவென்றால் எனக்கு ஒரு அனுபவம் நடந்துள்ளது. அதன் தூயநிலையில் கடத்த எத்தனப்படுகிறேன். அதற்கு மொழியை பயன்படுத்துகிறேன். என்னுடைய எத்தனை தூரம் அவ்வனுபவத்தை கடத்துவதற்கு உதவி செய்கிறதோ அதை பொறுத்து நல்ல கவிதை மதிப்பிடப்படுகிறது. நாம் அறிவதெல்லாம் cognitive experience  குறித்து தானே தவிர அந்த முதல்நிலை அனுபவத்தை அல்ல. அது மொழியாக மாற்றப்படவில்லையென்றால் அப்படி நடந்ததே கூட அம்மனிதருக்கு தெரியாது.  மொழியாக கட்டமைக்கப்பட்ட இப்பிரபஞ்சத்தை கடந்தோமானால் அளப்பரிக்க விடதலையை உணர்வோம் என்றார்.

இந்த இடத்தில் குருஜீ கட்டற்ற சுதந்திரம் ஒழுங்கின்மைக்கு கொண்டு சென்று விடாதா என வினவினார். அதற்கு ஒரு உதாரணத்துடன் ஆரம்பித்தார் யுவன் சார், இப்போது இந்திய சாலையில் இடப்பக்கம் செல்லவேண்டுமென்றும் அமெரிக்க சாலையில் வலப்பக்ககம் செல்ல வேண்டுமென்றும் விதி உள்ளது. இந்த விதிகளை எடுத்துவிட்டு யார் எப்படி வேண்டுமானாலும் போகலாம் என சொல்லிவிட்டால் ஒவ்வொருவரும் மிக கவனமாக செல்வார்கள். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரவர் உயிரின் ஆசையிருக்கிறதே.

அப்புறம் இப்போது என் கையில் ஒரு குண்டு பல்ப் இருக்கிறது. கீழே விடுகிறேன் உடைந்துவிடுகிறேன். என் கையில் இருந்த பல்ப் உடன் ஒப்பிடுகையில் தான் கையில் உள்ளது ஒழுங்கென்றும் கீழே உடைந்து சிதறியது ஒழுங்கின்மை என்றும் வகுக்கிறோம். ஆனால் கீழே விழுந்து சிதறிய பல்ப்களை மட்டுமே பார்த்தால் அதற்கென்று ஒரு ஒழுங்கிருப்பதை காணலாம். எல்லாவற்றிற்கும் மேலாக முழுமையான ஒழுங்கின்மையும் ஒழுங்கும் கற்பனையில் தான் சாத்தியம் என்றார்.

இதற்குள் மணி ஒன்றாகி இருந்தது. விக்கியும் வந்து சேர்ந்தான். அவர்கள் மூவரும் ஒரு தேநீர் அருந்தினார்கள். ஜென் கவிதையில் ஆரம்பித்து ஒரு தேநீருடன் முடிவது எப்போதுமே நல்ல காரியம் தான். என்னை இரண்டாம் முறை எலுமிச்சை பழரசம் அருந்துகிறாயா என கேட்டார்கள். அத்தனை வலு உடலில் இல்லாததால் வேண்டாமென்று சொல்லியாயிற்று.

இடைவேளைக்கு பின்னர் என்பது போல விக்கி வந்த பிறகு உரையாடல் பாரதியாரின் உரைநடை சார்ந்து திரும்பிற்று. பாரதியில் தனக்கு உரைநடையே மிக பிடித்தது என்று சொன்னார். அதன் எளிமையும் கூர்மையும் கொண்ட பகுதிகளை சொல்லி சென்றார். பின்னர் நம்முடைய தரப்புகள் என்று சொல்லும் போது பிற தரப்புகளை ஏற்றுகொள்வது குறித்தும் குறைந்தபட்சம் அவர்களுக்கு அங்கீகாரத்தை கொடுத்து வைப்பது குறித்து சொல்கையில் தி ஜா வை சராசரி எழுத்தாளர் என்ற தரப்பும் உள்ளது என ஆரம்பித்தார். அந்த வார்த்தையை கேட்டவுடன் நம் இளம்புயலின் முகத்தில் ஒரு புயல் தோற்றம் உருவாகி இலக்கிய சமூகத்தின் கூரிய விமர்சன மரபின் கருத்து என கூற தொடங்க யுவன் சாரோ இடைவெட்டி அப்படி எல்லாம் இதுதான் ஏற்கப்பட்டது மற்றவை முழுமையாக துளியின்றி மறுக்கப்படுகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் அப்படிப்பட்ட தரப்புகளை புரிந்து கொள்வதும் அவர்களின் இருப்பை மதிப்பதுமே சரியென நினைப்பதாக கூறினார்.

இத்தனை நாட்களுக்கு பின் இந்த உரையாடலை எழுதும் போது அன்றைக்கு கார் பயணத்தில் குருஜீயுடன் போகும் வழியில் பேசி சென்றது ஞாபகம். பக்தி கவிதைகளில் வெளிப்படும் பெரும்பித்து என்பது அறிவின் உச்ச விளிம்பில் இருந்து நிகழும் ஒரு தாவல் என்பதையே முந்தைய நாள் படித்த பெரியாழ்வார் பாடல்களில் இருந்து உணர முடிவதாக சொன்னேன். ஆம் என்று சொன்ன குருஜீ மேலும் தொடர்ந்தார். தீவிரமான தர்க்க அறிவை கொண்டிருப்பவர்கள் தங்கள் இயங்குதளத்தில் பித்து கொண்ட ஒருபகுதியை கொண்டிருக்கையிலேயே சமநிலையை பூரணத்தை அடைகிறார்கள். இது என்று அல்ல, நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் இப்படித்தான். உதாரணத்திற்கு எனக்கு சடங்கு சார்ந்த வழிபாட்டில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு இங்குள்ள பேரொழுக்கில் ஒரு இடம் உள்ளது என ஏற்று உடன்படுவதன் வழியாகவே மன சமநிலையை அடைகிறேன். அதை மறுப்பதற்காகவே என் மொத்த ஆற்றலையும் செலவிடுவேன். அது உள்ளத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி வைக்கும் என்றார். உடனே எனக்கு யுதிஷ்டிரனின் ராஜசுய வேள்விக்கு வரும் சார்வாகர் நினைவுக்கு வந்தார். சார்வாகர் வேதம் சொல்லும் மெய்மையை ஏற்பதில்லை. ஆனால் வேதத்திற்கும் ஒரு பங்குண்டு என்று கருதுவதாலேயே வேள்விக்கொடை பெற வருகிறான். அதேபோல தான் வேதம் சார்வாகத்தை மறுத்தாலும் அவர்களுக்கும் ஒரு ஆசனத்தை விட்டு வைக்கிறது. தான் ஏற்காத தரப்புகளின் இருப்பையும் மதித்தல் என்பது. யுவன் சார் சொல்லிய இலக்கியத்தில் தான் ஏற்காத தரப்பையும் புரிந்து கொள்ளுதல் என்பது அன்று காலை பேசிய கருத்துகளுடன் இணைந்து நினைவிலெழுவது ஒருவகையில் திடுக்கிடலை கொடுக்க தான் செய்கிறது. அவரது நாவல்களில் வருவது போல நாம் தற்செயல் என்று அறியும் வெளிக்கு கீழ் நாமறிய முடியாத ஒரு பேரொழுங்கு இருக்கிறதா ? மரபில் அதை தானே ஊழ் என்று அக்கிறோம்!

சரி அன்றைய நாளில் இருந்து சட்டென்று என் சிந்தனைக்குள் இறங்கிவிட்டேன். விக்கிக்கு விடை சொல்லப்பட்ட பின்னர், பேச்சு சற்று நேரம் சுணக்கம் கண்டது. அதாவது என்னிடம் கேள்விகள் தீர்ந்து விட்டன. யுவனிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என நான் சொன்னாலும் நீங்கள் நம்ப போவதில்லை. அப்புறம் இத்தனை பெரும் கதைச்சொல்லி பேச ஏதும் இல்லாமல் மௌனமாகி விட்டார் என்பதை விட அண்ட புளுகு இன்னொன்று இருக்க முடியாது. சின்னசாமி (எழுத்தாளர் பெயர் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன். சரியாக ஞாபகமில்லை) எழுத்துகளில் உள்ள சுவாரசியம் பற்றி சொன்னார். எனது ஆர்வங்கள் சார்ந்து கேட்டார். இலக்கியம் தவிர தத்துவத்திலும் உளவியலிலும் புராண இலக்கியத்திலும் ஆர்வம் உள்ளதை சொன்னேன். வரலாற்றை விட்டுவிட்டேன். ஆங்கில வாசிப்பு உண்டா என்றார். இல்லை என்றும் தமிழ் மீடியம் என்பதால் என இழுத்தேன். அதற்கென்ன தானும் கூட தமிழ் மீடியம் படித்தாலும் பழகி கொள்ளவில்லையா என்று சொல்லவிட்டு ஆங்கில வாசிப்பை பழகி கொள்ளுங்கள்,, அது பெரிய உலகம். கற்க அறிய ஏராளம் உள்ளது என்றார். உடன் படிக்க நினைப்பதை எல்லாம் முடியும்போதே செய்துவிடவும் என்றார்.

பின்னர் மேலும் கேட்பதற்கு ஏதேனும் இருக்கிறதா என தயங்க குருஜீயின் ஊக்கத்தால் வெண்முரசு சார்ந்து கேட்டேன். தான் வெண்முரசு படிக்கவில்லை என்றும் அத்தனை பெரிய படைப்புக்கு கொடுக்க வேண்டிய நீண்ட காலம் தொடர் கவனம் தன் இயல்புக்கு ஒத்துவருவதில்லை என்றும் கூறினார். மேலும் வெண்முரசு படித்து இன்புளுயன்ஸ் ஆக விரும்பவில்லை. எனக்கே மகாபாரதத்தை வைத்து நாவல் எழுத ஒரு கனவு உள்ளது என்றார். இந்த உரையாடலில் உப பாண்டவத்தில் குந்தியின் பாத்திரம் வழமைக்கு மாறாக வருவதை சொன்னார். உப பாண்டவத்தை இன்னும் வாசிக்கவில்லை. யுவன் சார் எடுத்துக்காட்டிய மாற்றம் நினைவிற்கு வரவில்லை. மறந்துவிட்டது போலும். இது கேட்டவுடன் மீண்டும் புருவங்கள் உயர்த்தி அது தர்க்கமாக பொருந்தவில்லையே என விக்கி வினவ, சாரோ அப்படியெல்லாம் மாற்ற கூடாது என சட்டமில்லை என தொடங்க நானோ சற்று முந்தி பௌத்த ஜாதக கதையில் இராமனும் சீதையும் உடன்பிறந்தார்களாக இடம் மாற்றம் கூட உள்ளது என சொல்ல யுவன் சமணத்தில் சீதை இராவணனின் மகள் என சொல்லும் கதையும் உண்டு என்று சொல்லிவிட்டு புராதான பிரதிகளை பொறுத்தவரை ஆசிரியரின் மாற்றத்திற்கு ஏராளமான மாற்றம் உண்டு.. நாம் பார்க்கவேண்டியது அந்த மாற்றம் சரியா என்று அல்ல, அது அப்படைப்புக்கு முழுமையை அளிக்கிறதா, அழகியல் நிறைவை கொடுக்கிறதா என்பதை மட்டும் தான் என்றார்.

இறுதியாக என் தூளியில் இசை சார்ந்து அறிமுகப்படுத்தி விழைவதாக சொல்லி இருந்த கேள்வியை சொன்னேன். தொலைபேசியில் பேசும் போது எனக்கு பிடித்த பாடல்களை எழுதி வரும்படி சொன்னார். எழுதி கொண்டும் போனேன். ஆனால் அங்கே சொன்னது, இன்னும் முக்கியமாக பட்டது. மரபிசை, ஹிந்துஸ்தானி இசைக்கு பழகுவது குறித்து சொல்கையில் தானும் இருபத்தைந்து வயது திரையிசையை விரும்பியதையும் சிறுவயதில் தன் தந்தையுடன் சென்று இசைக்கேட்ட தருணத்தையும் சுருக்கமாக பகிர்ந்து கொண்டார். முன்னமே அச்சம்பவத்தை பயணக்கதை நாவலில் விரிவாக புனைவு கலந்து வாசித்துமிருக்கிறேன் என்பதால் எளிதில் விளங்கியது. இன்று ஒரு சினிமா பாடலின் ராகத்தை மிக எளிதாக கூகுள் தேடலில் அறிய முடிகிறது. அதை இட்டு தேடினால் அது சார்ந்து கேட்க நிறைய இசைக்கோப்புகள் உள்ளன. இசை நமக்கு உள்ளூர இனிய மனநிலை ஒன்றை அளிக்கிறது. கேட்டால் சந்தோஷமாக இருக்கிறதா அது தான் நமக்கு முக்கியம். ராகம் தாளம் எல்லாம் இசை கலைஞர்களுக்கு தானே முக்கியமானவை. ஏனென்றால் அவர்கள் தான் அக்கலையின் சாரத்தை கண்டடைய செல்பவர்கள். அதனால் ஒரு பாடலின் இராகத்தை தேடி எடுத்து அதிலிருந்து பிடித்தவாறு கேளுங்கள். மெல்ல பழகி கொள்ளலாம் என்றார். அப்புறம் விக்கி தூரன் இசை நிகழ்வு குறித்து சொன்னான். அன்றைக்கு தான் வர முடியாது வேறொரு முக்கிய விஷயமாக சென்றுவிட்டதை சொன்ன பின்னர் இருவரும் தங்களுக்கு பிடித்த நாதஸ்வர கலைஞர்களை பற்றி கூறி கொண்டார்கள். யுவன் சார் தனக்கு காருக்குறிச்சி ராஜரத்தினம் தான் உச்சம் என்றார். நாங்கள் இருவரும் வாய் பார்த்து கொண்டிருந்தோம்.

இசை குறித்து யுவன் கூறி கேட்டவற்றை நான் இலக்கியத்தோடு ஒப்புவைத்து புரிந்து கொண்டேன். அதாவது தன் வாழ்க்கையில் இனிய கனவு நிறைந்த பகுதியை, விடையை மட்டும் உருவாக்கி கொள்ளும் வாசகனுக்கு அடிப்படையான வடிவ பிரக்ஞையும் வாசிப்பில் தோயும் மனமும் இருந்தால் போதும். ஆனால் இலக்கியத்தின் சாரத்தை கண்டடைய புறப்படும் எழுத்தாளனுக்கு தீவிரமான தெளிவான வடிவ பிரக்ஞை இருக்க வேண்டும். அந்த தெளிவின் வழியாகத்தான் அவன் மெல்ல மெல்ல அடிப்படை கட்டுமானங்களை சென்றடைகிறான். போத நிலையில் தெளிவான வடிவ புரிதல்களை அடையும் போது தான் அபோதமும் போதமும் கலந்து எழுத்து கிளம்புகையில் தன்னியல்பில் வடிவ ஒருமையை அடைகிறது. எழுத்தாளனுக்கு சாரம்சமானவற்றின் தரிசனம் கிடைக்கிறது என்று.

அப்புறம் வீட்டிற்கு வந்த பின்னர் என் பாடல் பட்டியலை பிரித்தேன். முதல் பாடல் நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் என்று ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்றது. என்ன ராகம் என்று பார்த்தேன். தர்பாரி கானடா என இருந்தது. எனக்கு பிடித்த இன்னும் பல பாடல்கள் இதே ராகத்தில் அமைந்தவை என கண்டுகொண்டேன். பின்னர் அப்படி யூடியூப்பில் தேடி சமீபமாக ஆஷிஷ் கானின் சாரோட் வாசிப்பில் தர்பாரி காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.

இதற்குள்ளாக மணி இரண்டிக்கவே சாப்பிடலாம் என முடிவெடுத்து என்னை பாத்ரூமிற்கு கூட்டி சென்று வந்த பின்னர் உணவு பரிமாறப்பட்டது. அதையும் நானாக சாப்பிட தோதுபடவில்லை. குருஜீயே அப்பா போல ஊட்டிவிட்டார். பின்னர் அவர்கள் சாப்பிட நான் உணவு மேசை உரையாடலுக்கு செவி சாய்த்தேன்.

முக்கியமாக மொழிபெயர்ப்புகள் சார்ந்தும் மொழி சுரணையின்மை சார்ந்தும் சொன்னார். தன்னுடைய கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் மொழிப்பெயர்ப்பு நூல் வெளியீட்டிற்கு வந்த தமிழறிஞர் மா.லெ. தங்கப்பா தான் அவ்வாண்டில் பார்த்த ஒரே ஒரு ஒற்றுப்பிழை இல்லாது நூல் அது எனவும் அதற்கு அவை கைத்தட்டியதையும் பின்னர் தனது ஏற்புரையில் தங்கப்பா சொன்னது நம் சூழலின் வருந்தத்தக்க நிலையை ஆனால் நாம் எல்லாரும் கைத்தட்டி கொண்டாடுகிறோம். நாளை ஒருவர் வந்து இது தான் இவ்வாண்டின் ஒரே தமிழ் நூல் என்பார். அப்போதும் நாம் கைத்தட்டுவோம் என்ற நினைவை சொல்லி மொழி சுரணையின்மை  சார்ந்த தன் ஆதங்கத்தை சொன்னார்.

தமிழ் மொழிப்பெயர்ப்புகள் குறித்து சொல்கையில் இன்றும் தனக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் மொழிப்பெயர்ப்பு செய்த முன்னோடிகளின் மொழிப்பெயர்ப்பே மனதிற்கு உகந்தது. அவற்றில் உள்ள சரளம் இன்றைக்கு வருவதில்லை. அதற்கு என்ன காரணம் ? அவர்கள் தமிழுக்கு விசுவாசமாக இருந்தார்கள். நாம் ஆங்கிலத்திற்கு விசுவாசமாக இருந்து கச்சிதத்தை கொண்டு வந்து விடுகிறோம், ஆனால் அவர்களின் மொழிப்பெயர்ப்பில் பயின்று வரும் சரளத்தையும் வாசிப்பின்பத்தையும் பெற முடியவில்லை. இந்த ஐம்பதாண்டுகளில் நவீன தமிழிலக்கியத்தின் பொது மொழி மேலும் மேலும் இறுக்கத்தை கண்டிருக்கிறது என்றார்.

ஆங்கில மொழியாக்கம் குறித்து சொல்கையில் கானல் நதி ஆங்கில மொழியாக்கத்தை முதலில் ஆங்கிலத்தில் நமக்கென்ன இருக்கிறது என நினைத்து விட்டுவிட்டதையும் அப்படியே பிறரும் மேலெழுந்த வாரியாக இருந்துவிட்டார்கள். சமீபத்தில் அதை பார்க்கையில் உணர்ந்த தரமின்மையை ஒரு உதாரண வரியுடன் விளக்கினார். புனைவுக்கென்று ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடை உள்ளது. மொழியாக்கம் என்பது மூலநூலின் நடையை மொழிபெயர்க்கப்படும் செய்யப்படும் மொழியின் புனைவு நடையுடன் இசைத்து உருவாக்குவதே தான். ஆனால் நம்மூரில் பெரும்பாலும் மொழியாக்கம் செய்பவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கிலத்துடன் நின்றுவிட்டவர்கள் என்றார்.

இதன் பின்னர் குருஜீ இளம் எழுத்தாளர்களை வாசிப்பதுண்டா ? அவர்கள் பற்றிய அபிப்பிராயம் என்ன என்று கேட்டார். எழுத்தாளர்களின் பெயர்களை சொல்லுங்கள். அபிப்பிராயம் சொல்லுமளவுக்கு எண்ணிக்கையில் அவர்களின் படைப்புகளை படித்திருந்தால் சொல்கிறேன் என்றார். ஒவ்வொருவராக சொல்கையில் யுவன் வாசித்திருந்தவர்களை குருஜீயும் வாசித்திருந்தவர்களையும் அவரும் வாசிக்காமல் புள்ளி நகர்ந்து கொண்டே இருந்தது. இதில் நானுமே சிலரை தான் வாசித்திருந்தேன். ஆனால் சொல்லப்படவர்களில் அநேகம் பேரை வாசித்த விக்கி மௌன சாட்சியாக மாறிவிட்டான்.

பேச்சு தொடங்கிய இரண்டு புள்ளிகளில் முதலாவது செந்தில் ஜெகன்னாதனின் அனாக நாதம் கதை. அக்கதை பற்றி மட்டுமே சொன்னார். அக்கதை தனக்கு உகக்கவில்லை என்பதை மட்டும் சொல்லி நிறுத்தி கொண்டார். அடுத்து, சுரேஷ் பிரதீப்பில் வண்டி நன்றாகவே ஓடியது. சுரேஷ் பிரதீப்பின் கதைகளை நானுமே கணிசமாக வாசித்திருந்தது கைக்கொடுத்தது. அவரது கதைகளில் மிக அதிகமான கசப்பு காணப்படுகிறது. அந்த கசப்பு நேரடியாக, அப்பட்டமாக வெறுமனே வெளிவருகையில் இறுக்கமான மொழியில் அமைவது வாசிப்பின்பத்தை குறைக்கிறது. இதேயளவு கசப்பை நாம் கோபி கிருஷ்ணனிலும் காணலாம். ஆனால் அதன் மேல் பூசப்படும் பகடி அதை வாசிக்க மிகுந்த சுவாரசியம் கொண்டதாக மாற்றி விடுகிறது. அப்புறம் பேஸ்புக் குறிப்பு முதற்கொண்டு எல்லா எழுத்திலும் அவரது அந்த கசப்பு உண்டு. எழுத்தாளனுக்கு கசப்பு இருக்கலாம். ஆனால் இத்தனை வேண்டியதில்லை என்ற தன் எண்ணத்தை சுரேஷிடமும் சொன்னதாக சொன்னார்.

திரும்பி வருகையில் குருஜீக்கும் எனக்குமே சுரேஷ் பிரதீப் குறித்து ஏறத்தாழ ஒரே போல யுவன் சொல்லும் கருத்தில் ஒற்றுமை உள்ளது என ஆமோதித்து கொண்டோம். சுரேஷ் பிரதீப்பின் எழுத்துகள் எனக்கு பாகற்காய் கூட்டை நினைவுப்படுத்துபவை. ஒருவேளை உணவில் ஒரத்தில் கொஞ்சம் வைத்து கொள்வது நன்று. ஆனால் மூவேளை உணவே பாகற்காய் குழம்பு என்றால் ஒவ்வாமை ஏற்படுகிறது. நாம் வாழ்வதே பாகற்காய் குழம்பு வாழ்க்கையில் தான். சற்று அசந்தால் அந்த கசப்பில் மூழ்க வேண்டியது தான்.  இலக்கியத்தில் அக்கசப்பை வாசிப்பது கூட கசப்பின் ஊற்றுக்களை அறிய தானேயொழிய பாகற்காயில் ஊறுகாய் தின்ன அல்ல என்பது என் ரசனையாக இருக்கிறது.

யுவன் சார் கோபிக்கிருஷ்ணனை குறிப்பிட்டு சொன்னார், நானோ கோபியை வாசிக்கவில்லை. பதிலுக்கு புதுமைப்பித்தன் நினைவுக்கு வந்தார். பித்தனில் கசப்பு உண்டு ஆனால் நகைப்பாக கைக்கு வருகிறது. அந்த நகைப்பின் கசப்பை கடந்து செல்லும் புள்ளிகள் உண்டு.

இந்த கருத்துகள் முடிவதற்குள் உணவு வேளை முடிந்து கூடினோம். நாங்கள் கிளம்ப வேண்டிய நேரமும் வந்ததால் 3 மணிக்கு விடைபெற்று கொண்டோம். விக்கியார் தன்னோடு மழை தேவனை கூட்டி வந்திருந்தார். அந்த மழையாளனின் கூரைக்கு கீழ் பயணம் தொடங்கிய இடத்திற்கே முடிவு கண்டது. வரும் வழியில் கேட்க நினைத்து விட்டுப்போன கேள்வியொன்று நினைவுக்கு வந்தது. அந்த கேள்வி கூட உங்கள் பதில் ஒன்றில் இருந்தே முளைத்தது. உங்களிடமும் யுவன் சாரிடமும் தனித்தனியாக தான் கேட்க வேண்டும். உங்களை நேரில் பார்த்து கேட்பதாக முடிவு. யுவன் சாருக்கு ஒரு கால் பண்ணி தயக்கம் உள்ளது. ஆனால் ஜெ, என் கேள்விக்கு அநேகமாக நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் உங்கள் நேரேதிரான ஒன்றை செய்து காட்டி உங்களை வாய் பிளக்க வைப்பது என் நெடுநாள் கனவு. இலக்கியம் என்ற தெய்வத்திடம் அந்த வரத்தை வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த பயணத்திற்கு பின்காரணிகளாக யுவன் சாரின் நாவல் வாசிப்பு, சுனீல் அண்ணாவின் நேர்காணல், விஷ்ணுபுரம் விருது ஆகியவை அமைந்தன. சிலரை ஒருமுறை பார்த்த பின் மீள மீள சந்திக்க வேண்டும் என்று தோன்றும் அல்லவா. அத்தகையவரில் ஒருவராகவே யுவன் சாரை உணர்ந்தேன். சுனீல் அண்ணாவிடம் கவிதை குறித்து யுவன் சாரை நேர்காணல் காண செல்கையில் சொல்லச்சொல்ல வேண்டும். அப்போதும் முடிந்தவரை சென்று பார்க்கவே ஆவல்.

இப்பயணம் சாத்தியப்பட்டதற்கு குருஜீயை நினைத்து கொள்கிறேன். அவருக்கு நன்றி என்பது சிறிய சொல். ஒரு சொல்லில் அந்த உதவியை அடக்கிவிட முடியாது. இதற்கெல்லாம் தகுதியானவனாக இருக்க வேண்டும் என உறுதி கொள்கிறேன்.

அன்புடன்

சக்திவேல்

பி.கு:

ஜெ வுக்கு

நாங்கள் எடுத்துக்கொண்ட படங்களை பின்னிணைப்பாக கொடுக்கிறேன். இந்த படத்தில் விக்கி மட்டும் இல்லை. அவன் தான் இந்த படங்களை எடுத்தான். அந்நேரத்தில் அவனை கூப்பிட்டு ஒரு செல்ஃபி எடுத்து கொள்ள வேண்டும் என தோன்றவேயில்லை. பின்னர் நினைத்து பார்க்கையில் வருத்தமாக இருந்தது. எனக்கு அக்கறை இல்லையோ என வருத்தமாக இருந்தது.

அப்புறம் விஷ்ணுபுரம் விருதுக்குரியவரை செப்டம்பரில் அறிவிப்பதால் வாசிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. அதே போல் விருந்தினர்களை நவம்பர் இரண்டாம்வாரத்தில் இருந்து அறிவித்தால் நன்றாக இருக்கும். சென்ற வருடம் கொஞ்சம் நேர நெருக்கடி இருந்தது.

இறுதியாக ஒரு எழுத்தாளரை நேரில் சந்திப்பது எப்போதுமே பெரிய அனுபவம் தான். அது அவரை மிக நெருக்கமாக உணர வழியமைக்கிறது என்ற உங்கள் சொற்களை தான் கிளம்புகையில் நினைத்து கொண்டேன். சென்று வந்து இத்தனை நாட்களுக்கு பிறகு இதை எழுதுவது அந்த இனிய நாளை சற்று அசைப்போடத்தான் என்று தோன்றுகிறது. இப்படி எழுத சொன்ன சுனீல் அண்ணாவுக்கு ஒரு நன்றி கூற வேண்டும். சென்ற வாரம் லேப்டாப் பழுதாகியதால் எழுத நேரமாகிவிட்டது. ஆனால் இப்படி நினைவு கூர்வதே யுவன் சாருக்கு நாம் செய்யும் நியாயமாக இருக்க முடியும்.

ஏனெனில் வாசித்தவரை யுவன் சாரின் நாவல்கள் அத்தனையுமே நினைவு கூரலே. அதற்கு பின்னால் இருப்பது அவரது வாழ்க்கை நோக்கு. வாழ்க்கை என நாமறிந்து தொகுத்து கொள்வது எல்லாமே நினைவுகளே. ஏனெனில் வாழ்க்கை என்பது நீர்க்கோலம் போல் தான்.

முந்தைய கட்டுரைசுருதி டிவி நிதியுதவி
அடுத்த கட்டுரைவேணுகோபால் -கடிதம்