ஹம்பி, ஒரு கடிதம்

ஆலயக்கலை பயிற்சி வகுப்பிலேயே பயணத்திற்கான விதையை ஆழ உழுது தூவி விட்டிருந்தார் ஜே.கே. ஆலய விஜயம் என்பது உறுதியாகியிருந்தது ஆனால் பல்லவ தேசமா? சோழ தேசமா? அல்லது விஜயநகரமா என்பதை மட்டும் மூச்சுவிடவில்லை.

பின்னொருநாள் கவிஞர் சாம்ராஜ் அண்ணன் அழைத்து “ஏன் இன்னும் குரூப்ல  பதிவு பண்ணாம இருக்கீங்க” என்று அவர் கதை போலவே பீடிகை போட்டார். பிறகு விவரத்தை சொல்ல, ஒரு தண்டனைக் கைதியின் விடுதலைக் கொண்டாட்டம்.

என் ஹம்பி பயணம் அன்றே துவங்கிவிட்டது. என்ன ஆர்வக்கோளாறாக இருந்தாலும், இணையத்தில் ஹம்பி குறித்த எந்த புகைப்படத்தையும், காணொளியையும் பார்த்துவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். ஜே.கே சொன்ன தரவுகளும் அங்கொன்றும், இங்கொன்றுமாக படித்தவையும், எட்டாம் வகுப்பு வரலாற்று ஆசிரியை கற்பகம் டீச்சரும், கரும்பலகையும் சேர்ந்து அவ்வப்போது விஜயநகரத்தை அகத்திரையில் காட்சிப் படுத்திக் கொண்டிருக்கையில், உறுதியான முடிவிற்கு அரிதாய் கிடைக்கும் வெற்றியாய் இருமுறை சொப்பனத்திலும் வந்து பரவசமூட்டியது ஹம்பி.

உடனே மேலதிக தகவலுக்காக வாட்ஸ்அப்பைத் திறந்தால், சந்திராயனை வடதுருவத்தில் இறக்கலாமா, தென் துருவத்தில் இறக்கலாமா என்கிற அளவில் பயண திட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. நானும், ரதீஷும் “சிகர ஹஸ்தத்தை” காட்டிவிட்டு, இரு நபர் பொதுக்குழுவைக் கூட்டி கோவையிலிருந்து பெங்களூரு. பெங்களூரிலிருந்து ஹோஸ்பெட் இரயிலில் செல்வதென தீர்மானம் நிறைவேற்றினோம்.

“ஹம்பி ஆகஸ்ட் ட்ரிப்” என்ற குரூப் உருவாக்கப்பட்டு, 3D சினிமா பார்ப்பவர்களுக்கு வழங்கப்படும் மாயக்கண்ணாடி போல ஆசிரியர் ஜே.கே, விஜயநகரம் குறித்த புத்தகங்களை பகிர்ந்த வண்ணம் இருந்தார். எப்படியும் இந்த புத்தகப்புழு ரதீஷ் படித்து விடுவார், அவரிடம் கதை கேட்டு சமாளித்துவிடலாம் என்ற என் நம்பிக்கையை இரயிலேறிய பத்தாவது நிமிடத்தில் உடைத்து நொறுக்கி வெளியே வீசினார் ரதீஷ். பரீட்சைக்கு முன்னிரவு புத்தகத்தை தேடும் வம்சாவழியினர் தானே? இரயில் பயணத்திலேயே அரையும் குறையுமாக வாசித்தோம்.

அதிகாலை செங்கமங்கலாய் விடிந்திருந்தது. ஆங்காங்கே வாசிப்பை ஒத்த நிலப்பரப்புகளைப் பார்த்தவாறே ஹோசபேட் வந்து சேர்ந்தோம். சந்தன மாலையும், ஆரத்தியும் மட்டும்தான் இல்லை, மற்றபடி வரவேற்பும், வாகனமும், நேர மேலாண்மையுமென ஜே.கே வின் அனுபவமும், நேர்த்தியும் பளிச்சிட்டது.

ஹோசபெட் ஜங்ஷனலிருந்து ரெசார்ட்டுக்கு போகிற 25 கிலோமீட்டர் பயணம் நுனி இருக்கைக்கு கொண்டு வந்தது. அந்த நிலப்பரப்பு ஏதோ வேற்றுகிரகமாக உணர வைத்தது. நொய்யலாற்று சாயக்கழிவு நுரையில் உண்டான நீர்க்குமிழ் போல சிறியதும் பெரியதுமாகவும், தனித்தும் கூட்டமாகவும், ஒன்றன் மீது ஒன்றாகவும் பின்னிப்பிணைந்தும், திரும்பிய திசையெல்லாம் பாறை குவியல்கள் இரைந்து கிடந்தது. இது எப்படி உருவாகியிருக்கும், என ஆளுக்கொரு ஆய்வறிக்கையை பகிர்ந்தவாறே ரெசார்ட்டை வந்தடைந்தோம். ஆலயக்கலை நண்பர்களைப் பார்த்ததும் பாறைக்குவியல்களை பார்த்த பரவசம் இரட்டிப்பானது.

முதல் நாள் விருப்பாக்ஷனர் திருக்கோவில், ஒன்பது நிலைகொண்ட பிரம்மாண்டமான இராஜகோபுரம் விஜயநகர சாம்ராஜ்ய பேராற்றலின் உருவமாய் ஓங்கி உயர்ந்து நின்று வரவேற்றது. ஆங்காங்கே விரிசல் விட்டு தொல்லியல் துறை தயவால் கோபுரத்தோடு சிற்பிகளின் கலைத்திறனையும் தாங்கி நிற்கிறது, சாஸ்திர உத்தமமான உபபீடமும், அதிஷ்டானமும். முதல் நிலை மட்டுமே படிமங்கள் ஏனைய நிலைகள் யாவும் கர்ண கூடுகளும், எடுப்பான மையசாலைகளும், ஸ்தம்பங்களும் மட்டுமே கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு மகா பிராசாதத்திற்கே உண்டான இலட்சணமான கோபுரம்.

கோபுர நிழலில் நின்று வரலாற்றை விவரிக்க தொடங்கினார் ஜே.கே.கோபுரத்தை குறுக்கும் நெடுக்குமாக அளக்கத் தொடங்கியிருந்தேன். உள்ளமும்,   கண்களும், கோபுரமும் ஒரே நேர்கோட்டில். அந்த ஜனத்திரள் முழுவதும் சிற்பிகளின் கூட்டமாக தெரிந்தது. பல ஸ்ருதிகளில் உளியோசையாக கேட்கத் தொடங்கியிருந்தது.  குதிரைகளும், யானைகளும் பிளிறிக் கொண்டிருந்தன. ஒரு டஜனுக்கும் மேலான கொல்லம்பட்டறை துருத்திகளின் சக்கரங்கள் ஓய்வை மறந்திருந்தன. சிற்பிகளுக்கும், கொல்லர்களுக்கும் முடிவில்லா ஜுகல் பந்தி நடந்துகொண்டிருந்தது. பனைமர உருளைகள் மீது கிடத்தப்பட்ட நெடிய கற்பாலங்களை சங்கிலியால் பூட்டி இழுக்க நான்கு யானைகளுக்கும் உருது மொழியில் கட்டளை இட்டுக் கொண்டிருந்தனர் பாகன்கள். வெல்லமும் நெல்லுச்சோறும் அவியும் மணத்தை நுகர்ந்தவாறே உற்சாகமாக அடியளந்து முன்னேறிக்கொண்டிருந்தன யானைகள். யானை வரும் வழியெங்கும் கற்சில்லுகளை கவனமாக அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர் உதவி பாகன்கள்.  கீற்றுகள் வேயப்பட்ட அறுவை கொட்டகையினுள் ஒரு ரஜ்ஜு நீளமும், (88 அடி) ஒரு தண்ட அகலமும் (11 அடி) குதிரை மூழ்குமளவு ஆழத்தில் நான்கு குழிகள் வெட்டி தரை மட்டத்தில் குறுக்காக மரச்சட்டங்கள் அரை தண்ட இடைவெளியில் பரப்பப்பட்டிருந்தன. அதன்மேல் மூன்று யானைகளைக் கொண்டு இழுத்து வரப்பட்ட, அடி பெருத்து நுனி சிறுத்த ஆண் தேவதாரு மரம் கிடத்தப்பட்டிருந்தது. மரத்தின் மேல் நால்வரும் குழிக்குள் நால்வருமாக நின்று அறுத்து பாலமாக்கிக் கொண்டிருந்தனர். தேவதாரு மணம் துங்கபத்திரையைத் தாண்டி வீசியது. தச்சர்களின் இழைப்புளியிலிருந்து ஒவ்வொரு முறையும் தேவதாரு கொடிக்கருக்காக வெளிவந்து கொண்டிருந்தது. அடுத்த கொட்டகையில் திருக்கோபுர திருவாயில் கதவுகளில் பொருத்துவதற்கான அச்சாணியை நான்கு மூத்த கொல்லர்கள் பிடிக்க, நால்வர் தாளம் தவறாமல் சம்மட்டியால் துவைத்துக்கொண்டிருந்தனர். பக்கத்து உலையில் கதவங்கங்களை, யானைகள் கொண்டு எதிரிகள் தகர்ப்பதை தடுக்க கதவுக்கு முப்பத்திரெண்டென, அறுபத்துநான்கு  குமிழாணிகளை உருக்கால் வார்த்து அரம் கொண்டு கூராக்கிக் கொண்டிருந்த மூத்த கொல்லனின் சுருக்கம் விழுந்த வியர்த்த உடல், உலையின் நெருப்பொளியில் மின்னிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே குடுவைகளில் காவிச்சாயமும், அவற்றில் சரடுகள் ஊறவைக்கப்பட்டிருந்தன. துங்கபத்திரை நீரை தோல் குடங்களில் சுமந்த கழுதைகளின் அணிவகுப்பால் போக்குவரத்து நெரிசலே ஆகிவிட்டது. சாதிவாரியாக பிரிக்கப்பட்ட கற்கள் நெடுச்சாண் கிடையாக, இல்லாத மூலவரை வணங்கிய வண்ணம் கிடந்தன. கற்பலகைகளில் ஸுத்திரதாரிகள் இட்ட காவிக்கோடுகளை உளிகள் பதம் பார்த்துக்கொண்டிருந்தன. அந்த காலை வெயில் சிற்பிகளின் பூணூலை நனைத்திருந்தது. ரப்பர் மரப்பாலாக வியர்வை திருநீறை குழைத்து வடிந்து கொண்டிருந்தது. மூத்த ஸ்தபதிகள் தாழ்த்துமானம் செய்துமுடிக்கப்பட்ட சிற்பங்களைத் திருத்திக்கொண்டிருந்தனர். அர்த்தமண்டபம் வரை கல்ஹாரப்பணி நிறைவடைந்திருந்தது. மஹாமண்டபமும், திருச்சுற்று மாளிகையும், திருமதிலும் ஸ்தம்பம் நிறுத்தும் பணி உச்சத்திலிருந்தது. பெருவீதியின் இருபுறமும் பர்லாங்கு நீளத்திற்கு,  சந்தைக்கான கற்கூடம் மூன்றில் இருபங்கு முடிந்திருந்தது. மொத்த கட்டுமானத்தின் ஸ்தூலமாக  கிருஷ்ணதேவராயரின் நேரடி மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டு பிரத்யேக கவனத்துடன், தேர்ந்தெடுத்த சுதைச்சிற்பிகளை கொண்டு திருக்கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த திருவாயிலின் இடது நிலைக்காலில் , கொடிப்பெண் இடையில் குரங்குசெறி செதுக்கிக்கொண்டிருந்தான் இளஞ்சிற்பி ஒருவன். வலது நிலைகாலின் கொடிப்பெண் கொங்கைகளில் முலைக்காம்பிற்கு உயிரூட்டிக்கொண்டிருந்தார் தாம்பூலம் தரித்த கிழட்டுச் சிற்பி. திருவாயிலின் இடதுபுற உபபீடத்தில் காலசம்ஹாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தார் மற்றொரு சிற்பி. உபபீட ஜெகதியில் பொறிக்க வேண்டிய மெய்கீர்த்தியையும், நாளைய வரலாற்றை இறுதி செய்யும் பொறுப்பேற்றிருந்த தெனாலிராமனிடம் குடுமியை அள்ளி முடிந்தவாறே ஆலோசித்துக்கொண்டிருந்தார் தலைமை பெருந்தச்சன். விஜயதசமிக்குள் முடிக்க வேண்டுமாய் கண்டிப்புடன் தன் ஸ்தபதிகளுக்கு கட்டளையும் இட்டுக்கொண்டிருந்தார். ஒன்பது நிலைகளில் ஆறு மற்றும் ஏழாவது நிலைகளில் நான்கு திசைகளிலும் சுதைக்கரண்டியும் சுண்ணாம்புச் சாந்தையும் கொண்டு அடைகட்டும் தேனீக்களாய் மொய்த்துக்கொண்டிருந்தனர் சிற்பிகள். ஏழாவது நிலையின் தென்கிழக்கு கர்ணக்கூட்டின் களத்திகளின் அளவு கோளாறுகளை நான்கைந்து முறை சுட்டிக்காட்டியும் ஒழுங்காகாத நிலையில் பொறுமையிழந்து பிரஜாபத்திய முழக்கோலுடன் சாரக்கழியை பிடித்து மேலெழும்புகையில் சட்டென பிடித்திழுத்தார் ரதீஷ், “அண்ணா ஜே.கே கிருஷ்ணர் கோவில் போய் விட்டார். வண்டி கிளம்பப் போகுது, வாங்க எல்லாரும் போய்ட்டாங்க” என்று முடிப்பதற்குள் டெம்போ டிராவலர் ஹாரன் அடிக்கத் தொடங்கியது.

வாசிப்புக்கும் எனக்கும் வெகுதூரம் ,2006 ல் சிங்கப்பூரில் சிறுகதை பயிற்சிப் பட்டறையில் ஜெயமோகன் சாரின் பேச்சின் “சிறுகதை ஒரு சமையல் குறிப்பு”  என்ற லிங்கை ரதீஷ் பகிர்ந்திருந்தார். அதில் ” சிறுகதையை வாசிக்கும் போது வாசகன் வெறும் கதைப்படிப்பவனாக இல்லாமல் கதையை பலவாறாக புனைந்தபடியே செல்கிறான். இப்போது கதையில் வாசகன் பங்கேற்க ஆரம்பித்துவிடுகிறான். அவனும் அக்கதையை தனக்குள் எழுதுகிறான். ஆகவே இங்கே வாசகன் வெறுமனே வாசகனாக இல்லாமல் இணை ஆசிரியனாக செயல்படுகிறான்” என்கிறார்.

உண்மையில் விருப்பாக்ஷனர் கோவிலின் அமைப்பும் கட்டுமானமும் என்னை ஒரு இணைச் சிற்பியாகவே இழுத்துச் சென்றது. அதன் சிதிலங்களும் முற்றுப்பெறாத பாகங்களும் எனக்கான “வாசக இடைவெளியை” உண்டாக்கின. முற்றுப்பெறாத பாகங்களை நான் என் பாணியில் புனரமைக்கும் அனுபவத்தைக் கொடுத்தது.

பதினைந்தாம் நூற்றாண்டிற்கு என்னோடு பயணித்த ஆலயக்கலை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மரணப்படுக்கையிலும் மறக்காத பயணமாக மாற்றிய ஆசிரியர் ஜே.கே மற்றும் ஜெயமோகன்கு நன்றியும் வணக்கங்களும்.

பா.கா.முருகேசன்

கோயமுத்தூர்.

முந்தைய கட்டுரைமயூ பதிப்பகம். தொடக்கவிழா
அடுத்த கட்டுரைஇரவு வாசிப்புகள்