சோர்பா – கடிதம்

சோர்பா எனும் கிரேக்கன் வாங்க

அன்புள்ள ஜெ,

நீகாஸ் கசந்த்சாகீஸ் எழுதிய சோர்பா என்ற கிரேக்கன் நாவலை சமீபத்தில்  வாசித்தேன். இந்த ஆண்டு பூன் முகாம் முன் தயாரிப்பிற்காக அனுப்பிய வீட்டுப் பாடங்களின் பட்டியல் ஒருபுறம் இருக்க, வெண்முரசு நாள் கூட்டத்தில் கசந்த்சாகீஸ் குறித்த கேள்விக்கு  நீங்கள் தந்த பதிலால் உந்தப்பட்டு சோர்பாவைப் படிக்க ஆரம்பித்தேன்.

அலெக்சிஸ் சோர்பா – இதுவே வாழ்க்கையின் கடைசி நிமிடம் என் நினைத்து ஒவ்வொரு நிமிடத்தையும் முழுதாக வாழ்பவன். அறுபது தாண்டிய வயதென்றாலும், எப்போதும் இளமையானவன். மரணத்தை வென்று எப்போதும் வாழ விரும்புபவன். உணவு, மது, உழைப்பு, பெண்கள் என அனைத்திலும் முழுதாகத் திளைப்பவன். நாடு, மதம், கடவுள் என எந்த சித்தாந்தத்திலும் நம்பிக்கை இல்லாதவன். கடும் உழைப்பாளி, தீராக்காதலன், நடனமாடுபவன், சந்தூரி இசைக்கலைஞன், முன்னாள் போர் வீரன், சாகசப்பயணி மற்றும் பல.

கதைசொல்லி – பெயர் இல்லாத இந்த கதைசொல்லி சோர்பாவிற்கு நேர் எதிர். இளைஞன். அறிவாளி. இந்த உலகை, வாழ்க்கையை அதில் வாழ்ந்து அறியாமல், புத்தகங்களின் மூலம் அறிந்துவிட முயல்பவன். விட்டு விடுதலையாக முயன்று கொண்டே இருப்பவன்.

கதைசொல்லி கிரேட் எனும் ஒரு கிரேக்கத் தீவிற்கு லிக்னைட் சுரங்கத் தொழில் தொடங்கச் செல்கிறான். அது வெறும் ஒரு சாக்கு தான். அதன் மூலம் அவனும் ஒரு ‘சாதாரண மனிதனாக’ மக்களோடு வாழ்ந்து, நேரடி வாழ்வனுபங்களைப் பெற விழைகிறான். கிரெட் தீவு செல்லும் பயணத்தின் போது, எங்கிருந்தோ வந்து, தானாகவே அறிமுகமாகி, பணியாளனாகும் சோர்பாவைத் தன் இணை பயணியாக, குருவாகவே அடையாளம் காண்கிறான் கதைசொல்லி. பாரதியை அறிந்திருந்தால் “எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

இங்கிவனை சேவகனாய் யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என்று நிச்சயம் பாடியிருப்பான்.

எதிரெதிர் குணநலன்கள் கொண்ட இந்த இரு பாத்திரங்களின் மூலம், அவர்களுக்கு இடையிலான உரையாடல்கள், அவர்கள் கிரேட் தீவில் சந்திக்கும் மனிதர்கள், அங்கு அவர்கள் பெரும் அனுபவங்கள்  வழியாக மனிதனின் இருப்பு, கடவுள், உண்மையான ஆன்மிக இலக்கு எனப்பல சித்தாத்தங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார் கசந்த்சாகீஸ்.

கதைசொல்லி உண்மையான மகிழ்ச்சியை இங்குள்ள எல்லாவற்றிலுமிருந்து விட்டு விடுதலையாவதன் மூலம் அடையமுடியுமென நம்புகிறான். புத்த நிர்வாணம் மேல் அவனுக்கிருக்கும் ஈடுபாடு அவனை அலைக்கழிக்கிறது. சோர்பாவோ இந்த உலக வாழ்வின் அனைத்து இன்பங்களிலும் முழுதாகத் திளைப்பவன். உணவின் சுவையை, நடனத்தை, இசையை, பெண்களை அவன் மூலம் கதை சொல்லி புதிதாய் அறிகிறான்.

கதைசொல்லி தன் நண்பன் ஸ்டாவ்ரந்தாகீஸ் எங்கோ தொலைதூரத்தில் கிரேக்க மக்களுக்காகப் போராடுவதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறான். சோர்பா இளமையில் ‘தன் நாடு’ என்னும் கொள்கைக்காக நேரடியாகப் போரில் ஈடுபட்டு துருக்கியர்களைக் கொன்றவன். ஆனால் போரின் அழிவை உணர்ந்து, அனைத்து பிரிவினைகளையும் துறந்து இன்று மனிதனை மனிதனாக மட்டுமே காண்பவன். கிரேக்கன் – துருக்கியன் , நல்லவன் – கெட்டவன்  என்ற எந்த பிரிவினையும் இன்று அவன் மனதில் இல்லாதிருப்பது “எது மேலான அறம்?” என நம்மை சிந்திக்கவைக்கிறது.

கட்டற்ற மத அதிகாரமும், தேங்கிப் போன நம்பிக்கைகளும் எவ்வாறு மக்களை முட்டாளாக்குமென நாவலில் வரும் மடாலயமும் அந்தப் பாதிரிமாரும் காட்டுகின்றனர்.  இதை விட மேலான ஆன்மிக இலக்கை இந்தக் கணத்தில் முழுமகிழ்வோடு வாழ்வதன் வழியாக சோர்பாவும், இங்கிருப்பதை விட்டு விலகுவதன் மூலம் கதை சொல்லியும் தத்தமது வழியில் தேட முயன்று கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இருவருமே தனிமையும், துயரும் கொண்டு சோர்வுறும் தருணங்களும் தொடர்ந்து வந்துகொண்டேதானிருக்கின்றன.

கசந்த்சாகீஸ் இந்த நாவலைக் கட்டமைத்த விதம், கிரேக்கக் கலையில் நெடுங்காலமாக இருந்து வரும் அப்போலானியன் Vs டையோனிசியன் சித்தாந்த வகையைச் சேர்ந்தது என்று பின்னர் படித்து தெரிந்துகொண்டேன். அப்போலோனியன் என்பது  உரத்து பேசாத,  பகுத்தறிவிற்குட்பட்ட, ஒரு கட்டமைக்கப்பட்ட கலை வடிவத்தைக் குறிக்கிறது. டையோனிசியன் என்பது ஆழ்ந்த உணர்ச்சிகரமான, களிப்பும் பரவசமும் மிகுந்த ஒன்றாகும். இந்த கிரேக்கத் தொன்மங்களின் தொடர்ச்சியாக கதை சொல்லியையும், சோர்பாவையும் உருவகித்துக்கொள்வது, இந்த நாவலை எக்காலத்துக்கும் உரியதாக்குகிறது.

சோர்பாவின் கட்டற்ற களிமனநிலையையும், கிரெட் கடற்தீவின் எழில் வர்ணனைகளையும், நாவலில் தொடர்ந்து வரும் நகைச்சுவைத் தருணங்களையும் வாசித்தபோது,  கசந்த்சாகீஸ் இதைத் தன் வாழ்வின் மிக மகிழ்ச்சியான காலமொன்றில் எழுதியிருக்கக்கூடுமென நினைத்துக்கொண்டேன். ஆனால் இதை அவர் அவர் எழுதிய நாட்களில்(1941), கிரேக்கம் நாஜிப்படைகளின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. கசந்த்சாகீஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவர் துணைவி எலெனி அந்த நாட்களைப் பற்றி இவ்வாறு சொல்கிறார், “நாட்கள் சுருங்கிக்கொண்டிருந்தன. எங்கள் உணவுக்கையிருப்பு வெகுவாகக் குறைந்திருந்தது. உடலில் மிச்சமிருந்த வலுவைத் தக்க வைப்பதற்காக படுக்கையிலேயே இருந்தோம்.பசியின் பிடியில் இருந்த அந்த இருண்ட நாட்களில்  நீகாஸ் அவரின் மிகமகிழ்ச்சியான படைப்பான சோர்பாவை எழுதினார்”.  கசந்த்சாகீஸிற்கு சோர்பா நிச்சயம் ஒரு விடுதலையளித்த படைப்பாகவே இருந்திருக்கும்.

சாரதி

முந்தைய கட்டுரையோகம், கடிதம்
அடுத்த கட்டுரைமானுட ஆழம் – கடிதம்