அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
மலேசிய நாட்டின் கிள்ளான் நகரிலிருந்து பொறியாளர் பெருமாள் ஐயாவும் அவர்களின் துணைவியார் திருவாட்டி சரசுவதி அவர்களும் இன்று (01.09.2023) மாலை புதுச்சேரியில் அமைந்துள்ள எமது இல்லத்திற்கு வருகைபுரிந்தனர். அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தலைமையில் இயங்கும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் என் முப்பானாண்டு தமிழ்ப்பணிகளைப் பாராட்டி, ஈரோட்டில் விழாவெடுத்துத் தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது வழங்கி மகிழ்ந்தமைக்கு வாழ்த்துரைப்பதற்குப் பல்லாயிரம் கல் தொலைவு கடந்து வருகைபுரிந்த அவர்களை அன்புடன் வரவேற்று உரையாடி மகிழ்ந்தோம்.
மலேசியத் தமிழ் மண்ணில் வாழ்ந்துவரும் தமிழன்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்நெறி வாழ்வியல் இயக்க அன்பர்களின் நலம் வினவி மகிழ்ந்தேன். விவேக சிந்தாமணி நூல் குறிப்பிடும் “வண்டோ கானத்து இடையிருந்தும் வந்தே கமல மதுவுண்ணும்” என்னும் ஆழமான வரிக்குரிய உண்மைப் பொருள் இன்று விளங்கிற்று. திருவாளர் பெருமாள் ஐயா, திருவாட்டி சரசுவதி அம்மா ஆகியோரின் தூய அன்புக்கு என்றும் நன்றியன்.
மு. இளங்கோவன்