கற்காலக் கனவுகள்-3

கற்காலக் கனவுகள்-2

மகாராஷ்டிரத்தின் இப்பகுதியில் பெரிய ஆலயங்கள் அனேகமாக இல்லை. பெருமபாலானவை இடிக்கப்பட்டு மறைந்துவிட்டன. திரும்ப பேஷ்வாக்கள் கோயில்களைக் கட்டும்போது நடுவே இருநூறாண்டுக்கால இடைவெளி. ஆகவே கட்டிடக்கலைஞர்கள் அழிந்துவிட்டனர்.

பேஷ்வாக்களுக்கு வேறுவழியில்லை. அவர்கள் அன்று இருந்த கட்டிடக்கலைஞர்களைக் கொண்டு அன்று சாத்தியமான கட்டிடங்களை கட்டி கோயிலாக்கினார்கள். அவை இஸ்லாமியக் கட்டிடக்கலை சார்ந்தவை. இஸ்லாமியக் கட்டிடக்கலை என சரியாகச் சொல்லமுடியாது. செங்கல் , அல்லது சொறிக்கல் கட்டுமானங்களில் கும்மட்டம் (டோம்) மட்டுமே சாத்தியம். மரத்தாலான முகமண்டபங்களில் இந்து மரபான கட்டிடக்கலை. இஸ்லாமிய மசூதிபோல இருந்தன கோயில்கள். ஆனால் உருவங்கள் எல்லா இடங்களிலும் இருந்தன.

மறுநாள் தேவி ஹசோல் (Devi Hasol) என்னும் இடத்திற்குச் சென்றோம். இங்கே காலத்தால் பிற்பட்ட பாறைச்செதுக்கு ஒன்று உள்ளது. பள்ளமாக பாறையை வெட்டி அதற்குள் புடைப்பாக ஓவியமொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இது பதினைந்தாயிரமாண்டுகள் தொன்மையானது என ஊகிக்கப்படுகிறது.

இதன் தொன்மை மற்றும் மர்மம் காரணமாக இது ஒரு வழிபாட்டிடமாக உள்ளது. சுற்றிலும் வேலிகட்டப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இதனருகே ஓர் அம்மன்கோயிலும் உள்ளது. இது அம்மனின் களம் என அழைக்கப்படுகிறது. நல்லவேளையாக தமிழகம்போல அதன் மேலேயே கோயிலைக் கட்டிவிடவில்லை.

திருவிழா நாட்களில் பல்லாயிரம் பக்தர்கள் வந்து இந்தச் செதுக்கோவியம் மீது மலரிட்டு வழிபடுகிறார்கள். இந்த மர்மமான வடிவம் மீதான கதைகள் நாட்டாரியலிலும் புராணத்திலும் பல இருக்கக்கூடும். அவை இன்னும் முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை.

இந்த மாபெரும் களம் எட்டரை மீட்டர் அகலமும் எட்டரை மீட்டர் நீளமும் கொண்ட சமசதுர வடிவமானது.உள்ளே மேலும் மேலும் சதுரவடிவங்கள் சிக்கலாகிக்கொண்டே செல்கின்றன. சுற்றிலும் வளைவாக, கிட்டத்தட்ட பாம்பின் உடல்போன்ற நெளிவுக்கோடு. உள்ளிருக்கும் வடிவம் புதிர்ப்பாதையோ என உடனே தோன்றும். புதிர்ப்பாதை அல்ல. இதன் மையத்தில் ஆரியதுர்க்கா ஆலயத்துப் பூசைக்காக கொடிமரமோ ஏதோ நடும்பொருட்டு பள்ளம் உருவாக்கியுள்ளனர்.

இந்த வடிவத்துக்கு நாம் இன்று இந்து, பௌத்த, சமண மதங்களிலுள்ள எந்த ‘மண்டல’ என்னும் அமைப்புடனும் தொடர்பில்லை. இந்த வடிவங்களை நாம் இந்தியாவில் அல்லது உலகிலுள்ள வேறெந்த மதமரபிலும் தேடமுடிவதில்லை. குகையோவியங்களிலும் இவை இல்லை. இங்கே பாறைச்செதுக்கோவியங்களில் மட்டும்தான் இவற்றின் தொடக்கநிலை வடிவங்கள் உள்ளன.

ஆனால் இந்த கட்டங்கள் மனம்போன போக்கில் வரையப்பட்டவையும் அல்ல. மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டவை. அளவுகள் மிகக்கச்சிதமாக உள்ளன. இதன் ஒரு கூர்முனை சரியாக வடக்கு, இன்னொன்று தெற்கு. மற்ற இரண்டும் கிழக்கு மேற்குகள். சதுரங்களுக்குள் சதுரங்கள். கோடுகள் வெட்டி வெட்டி செல்கின்றன. மிகச் சிக்கலான கணிதவடிவம் இது

ஜெல்லி மீன்?

அப்படியென்றால் இது உண்மையில் என்ன? இதன் நோக்கமென்ன? இவற்றை வரைந்தவர்கள் விலங்குகளைக்கூட பழக்கத் தெரியாதவர்கள், கல்லாயுதங்கள் கொண்டவர்கள், வேளாண்மை செய்யத் தொடங்காதவர்கள், சிறுசிறு வேட்டைச்சமூகங்களாக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு எதற்கு இந்த வடிவம்?

அதைவிட இதை வரைவதற்கான அளவுகளை எடுக்கும் கருவிகள் அவர்களிடமிருந்தனவா? நூல்களை அறைந்து நேர்கோடு எடுக்கத் தெரிந்திருக்கின்றனர். கணித அளவுகள் பற்றிய ஞானமில்லாமல் வரைந்திருக்கவே முடியாது. மனிதனின் பண்பாட்டு வளர்ச்சி ஓர் அற்புதம்.

Kevin Standage

ருண்டே தாலி (Rundhe Tali) என்னுமிடத்தில் இருந்த பாறைச்செய்துக்குக: 2016ல் தான் கண்டடையப்பட்டன. ராஜாப்பூர் அருகே உள்ளது. இங்குள்ள பாறைச்செதுக்குகள் இன்று மெல்ல உலகளாவப் புகழ்பெற்றுள்ளன. கெவின் ஸ்டேண்டேஜ் 2019 ல் எழுதிய குறிப்பில் இந்த பாறைச்செதுக்குகளை திகைக்கவைப்பவை என்று மட்டுமே சொல்லமுடியும் என்று கூறுகிறார். (Kevin Standage article)

இங்குள்ள மைய எதுக்கோவியம் ஒரு சதுரவடிவ களம். உள்ளே சிக்கலான பலவகை கோட்டு வடிவங்கள். ஒரு மனிதன் இரு கைகளிலும் கழிகளுடன் நின்றிருப்பதுபோல் இவை உள்ளன என்கிறார்கள். Master of Animals என்றும் ஒரு பேச்சு உண்டு.

பெண்ணின் கால்கள்

இடைக்குக்கீழுள்ள பகுதிகள் மட்டுமே உள்ள மனித உருவங்கள் உள்ளன. அவை தாய்த்தெய்வ உருவகங்களாக இருக்கலாம். அவற்றின் தொலைதூரத் தொடர்ச்சி லஜ்ஜா கௌரி என்னும் தெய்வம். அது பிரசவத்தின், வளத்தின் தெய்வம். தமிழகத்துச் சிற்பங்களில்கூட அத்தகைய சில செதுக்குகள் சில தூண்களில் உண்டு.

ஆனால் அந்த தெய்வத்துக்கு இந்து புராணத்தொகையில் இடமேதுமில்லை. அது தொன்மையான நாட்டார் வழிபாட்டிலிருந்து மதத்திற்குள் புகுந்துகொண்ட ஒன்று. உலகமெங்கும் வெவ்வேறு வகையில் இச்சிற்பம் காணப்படுகிறது. அதன் வேர் இந்த வரைவில் உள்ளதா என்ன? பிரசவம் ஒரு விந்தையாக, அச்சமூட்டும் நிகழ்வாக, தெய்வீகமான குறியீடாக கருதப்பட்டிருக்கலாம்.

புலி

இங்குள்ள செதுக்குகளில் திகைக்கச் செய்வது புலி. பாறையில் உருவாக்கப்பட்ட பள்ளத்திற்குள் புலி பக்கவாட்டுப்பிம்பமாக செய்துக்கப்பட்டுள்ளது. வால் நீண்டிருப்பது, முகம் நீட்டப்பட்டிருப்பதிலிருந்து அது தாக்கப் போவது தெரிகிறது. புலியின் உடலிலுள்ள வரிகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. ’கலைஞன்!’ என நம்மை வியக்கச் செய்யும் செதுக்கு இது.

மான்கள், முயல் ஆகியவை ஒன்றுடனொன்று இணைந்து செதுக்கப்பட்டுள்ளன. மீன்களில் ஆர்வமூட்டும் ஒரு சித்திரம் எதிர் எதிர் திசைகளில் செதுக்கப்பட்டுள்ள இணை மீன்கள். பாண்டியர்களின் கொடி எதிர் இணைமீன்கள் என ஓர் ஊகம் இங்கே உண்டு. சில ஆலயங்களில் அவ்வடிவம் காணக்கிடைக்கிறது. ஜெல்லி மீன் என அடையாளம் காணப்பட்ட ஓரு செதுக்கு உள்ளது.

மீண்டும் இந்த மாபெரும் களங்கள் தீராக்கேள்விகளின் திகைப்பையே உருவாக்குகின்றன. இவற்றின் நோக்கமென்ன? முட்டி முட்டி மண்டை களைக்கிறது. ஒரு கனவுக்குள் புகுந்து அதை பிரித்துச் சீராக அடுக்க முயல்வதுபோல. வெவ்வேறு ஆய்வாளர்கள் இவற்றை தங்கள் கோணத்தில் பதிவுசெய்துள்ளனர். எனக்கு இவை கலையின் தொடக்க ஊற்று என்று மட்டுமே பொருள்பட்டுக்கொண்டிருந்தன. என் தொல்மூதாதையை கண்ணுக்குக் கண்ணாக காணும் பெருந்தருணம்.

கொலம்பே என்னுமிடத்திலுள்ள பாறைச்செதுக்குகளை அதன்பின் சென்று கண்டோம். பாறைச்செதுக்குகளை காணச்செல்வது ஒரு நல்ல நடை. பசுமைபொலிந்த பாறைநிலம் ஒரு மாபெரும் புல்வெளி. அதில் மிகச்சிறிய மலர்களின் வண்ணப்பெருக்கு. இரண்டு மலர்கள் குறிப்பிடத்தக்கவை. அண்மைக்காட்சியில் மிக்கி மௌஸ் போல தெரியும் ஒரு மலர் மிக்கி என்றெ அழைக்கப்படுகிறது. இன்னொரு மலர் நீலத்துளி. அதற்கு உள்ளூர் பெயர் சீதையின் கண்ணீர்

கோடைகாலத்தில் செல்வதே இங்கே பாறைச்செதுக்குகளைச் சரியாகப்பார்க்கவும் ஆராயவும் உகந்த காலம். ஆனால் மழைக்காலத்தில்தான் ஓவியங்களை கலையுணர்வுடன் பார்க்கும் உணர்வு அமையும். ஏனென்றால் இவற்றை மழைக்காலத்தில்தான் செதுக்கியிருக்கிறார்கள். கொலம்பே செதுக்கோவியங்கள் சாலையோரமாகவே உள்ளன. ஒரு காலத்தில் அவற்றின்மேல் வண்டிகள் ஓடியிருக்கின்றன. ஆயினும் அழியாமலுள்ளன,

கஷேலியிலுள்ள பாறைச்செதுக்கு ஒரு பெரும் அற்புதமாக தொல்லியலாளர் நடுவே சொல்லப்படுகிறது. உடல்குவித்து அமர்ந்திருக்கும் ஒரு பெரிய யானை. பதினெட்டு மீட்டர் நீளமும் 13 மீட்டர் அகலமும் கொண்டது. இதற்கிணையான ஒன்று உலகிலெங்கும் இதுவரை காணக்கிடைக்கவில்லை. இந்த யானையின் உடல்குறுகல், ஒரு வளைவாக அது குவிந்திருக்கும் விதம் வெறும் உடற்சித்தரிப்பு இதை வரைந்தவனின் நோக்கம் அல்ல என்று காட்டுகிறது

யானையின் காதுகள் மேலே உள்ளன. துதிக்கை கீழே உள்ளது. அதைச்சுற்றி மான்கள், மாடுகள், பன்றிகள் போன்ற விலங்குகள். அதன் உடலுக்குள் ஏராளமான சிறு விலங்குகள். யானையின் உடலுக்குள்ளாகவே மீன்கள். ஆச்சரியமாக அதிலொன்று சுறா.

இந்த யானையை மீளமீள ஆராய்ந்துள்ளனர். அது வெறும் யானை அல்ல. பேருருவ யானை. எனக்கு அது இருண்ட வானின் சித்தரிப்பு என்று தோன்றியது.  பெரும்பாலும் எல்லா பழங்குடிகளுக்கும் பிரபஞ்ச உற்பத்தி பற்றிய ஒரு சொந்தமான கொள்கை, ஒரு புராணம் இருக்கும். பெரும்பாலும் ஏதாவது விலங்கின் வயிற்றிலிருந்து தோன்றியதாகச் சொல்வார்கள்.

இந்த பாறைச்சித்திரங்களில் உள்ள பேருருவ விலங்குகள் ஒருவகை உலகப்பிறப்புக் கொள்கைகள் (Genesis) என்னும் எண்ணம் வந்தது. யானை, திரச்சிமீன் போன்றவற்றின் உள்ளிருந்து உலகம் தோன்றுவதை இவை காட்டுகின்றன போலும். திரச்சிமீன் கடல். யானை வானம். தொட்டுத்தொட்டு கரியுரித்தபெருமான் வரை நம் கற்பனை வந்துசேர முடியும்.

இங்குள்ள உருவங்களில் இன்னொரு முக்கியமனா வடிவம் பன்றி. உண்மையான வடிவுக்கு பல மடங்கு பெரிது. அல்லது அன்று மெய்யாகவே பன்றிகள் இப்படிப் பெரிதாக இருந்தனவா? உலோக ஆயுதங்கள் இல்லாத அக்காலகட்டத்தில் யானை, பன்றி போன்ற பெரிய விலங்குகளை அவர்கள் வேட்டையாடியிருக்க முடியாது. அஞ்சியிருக்கலாம். அவை அவர்களின் உள்ளத்தில் பேருருக்கொண்டிருக்கலாம்.

அருகிலேயே அதே அன்னைப்பேரானையின் சிறிய வடிவம் இருந்தது. ஆங்காங்கே கண் திரும்புமிடமெல்லாம் மீன்கள், மான்கள், சிற்றுயிர்கள். வெறும் வடிவச்சிக்கல் மட்டுமேயான சிறிய களங்கள். இந்த விலங்குகளை அவர்கள் பலிகொடுத்தார்களா? அல்லது அவற்றையும் இணைத்துக்கொண்ட ஒரு கனவுலகை இங்கே உருவாக்கியிருந்தார்களா?

கஷாலியை ஆய்வுநோக்கில் பார்க்க முழுநாள் தேவைப்படும். அந்த ஓவியங்களில் திரும்பத் திரும்ப வரும் ஒரே வடிவம் ஏதுமில்லை என்பது ஒரு வியப்பு. இவை வழிபாட்டு வடிவங்கள் என்றால் ஒரே போல மீண்டும் வந்தாகவேண்டுமே? இவற்றை எப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொள்வது?

கஷாலியில் ஒரு கடலோர தங்குமிடத்தைப் பார்த்திருந்தோம். பின்பக்கம் கடல்.  மாலையிலேயே கடற்கரைக்குச் சென்று அமர்ந்திருந்தோம். அங்கே ஒரு பேருருவ கிரேட் டேன் வகை நாய். ஆனல ஒரு வயதான குழந்தை. வாயில் யாளி போல ஒரு பந்துடன் அலைந்து எங்களிடம் கொண்டுவந்து காட்டிக்கொண்டிருந்தது. கேட்டால் தரமாட்டேன், என்னோடது என விலகி ஓடி மீண்டும் பந்து வச்சிருக்கேனே என திரும்ப வந்தது. இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் கொஞ்சம் முதிர்ந்த சலிப்புடன். வழக்கொழிந்த விலங்குகளின் சித்திரங்களுக்கு மேல் புத்தம் புதிய விலங்குகள்.

அன்று நீலநிலா நாள். பிரம்மாண்டமான நிலவெழுவதை கடற்கரையில் அமர்ந்து பார்த்தோம். அன்று, அக்குடைவோவியங்கள் வரையப்படும்போதும் இதேபோல ஒரு பெருநிலவு எழுந்து அவர்கள் மேல் நின்றிருக்கும். பித்தின் ஒளிவட்டம்.

(மேலும்)

Geoglyphs of Konkan Region of India

The Konkan Petroglyphs – Introduction

12,000-Year-Old Petroglyphs in India Depict Sacred Symbols of Global Importance

முந்தைய கட்டுரைஏ.கே.வேலன்
அடுத்த கட்டுரைநவீன ஓவியக்கலையை ரசிக்கும் பயிற்சி.