கற்காலக் கனவுகள்-2

ருத்விஜ்

கற்காலக் கனவுகள்-1

மழைக்காலத்தில் தக்காணத்தில் பயணம் செய்வதில் சில நல்ல அம்சங்களுண்டு. அரிதான சில இடங்களில் தவிர எங்குமே சுற்றுலாப்பயணிகள் இருப்பதில்லை. ஆகவே மிக நல்ல விடுதிகளில், மிகக்குறைவான செலவில் தங்க முடியும். தக்காண பீடபூமியின் கொதிக்கும் வெயிலை தவிர்க்கலாம். பொதுவாக காய்ந்து காவியேறிக்கிடக்கும் நிலம் அப்போது கண்ணை நிறைக்கும் பசுமை கொண்டிருக்கும்,

28 மாலையில் பச்சால் என்னும் ஊரில் ஒரு விடுதியில் அறைபோட்டோம். அரங்கசாமி எனக்காக நல்ல காபித்தூளும் காபிமேக்கர் ஒன்றும் கொண்டுவந்திருந்தார். அதில் நல்ல காபி போட்டு- அதாவது பாலும் சீனியும் இல்லாத காபி- நானும் அவரும் மட்டும் குடித்தோம். அன்றிரவு படுத்ததுமே தூங்கிவிட்டேன். சக்தி கிருஷ்ணன் மட்டும் விழித்திருந்தார் என நினைக்கிறேன்.

மறுநாள் பார்ஸு (Barsu) பாறைச்செதுக்கோவியங்களைக் காண்பதற்காகச் சென்றோம். மகாராஷ்ட்ரத்தில், ரத்னபுரியை தலைமையாகக் கொண்டு, இந்த பாறைச்செதுக்குகளை தேடிக் கண்டடையவும், பராமரிக்கவும் ஒரு ஆய்வாளர் குழு இயங்குகிறது. இவர்களுக்கு புனா சாவித்ரிபாய் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி ஆகியவற்றின் நிதியாதரவு உள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்தவரான ருத்விஜ் எங்களை வழியில் எதிர்கொண்டு வண்டியில் ஏறிக்கொண்டார். இந்த பறைச்செதுக்குகள் பற்றிய செய்திகளை பகிர்ந்துகொண்டார். 1980 முதல்தான் இந்தச் செதுக்குகள் பரவலாக கண்டடையப்படலாயின. இவற்றின் முக்கியத்துவம் சென்ற பத்தாண்டுகளாகவே உணரப்படுகிறது. சென்ற பத்தாண்டுகளில்தான் பெரும்பாலான பாறைச்செதுக்குகள் கண்டடையப்படுகின்றன.

எப்படி இவற்றை கண்டடைகிறோம் என ருத்விஜ் விளக்கினார். பெரும்பாலும் பள்ளிகளுக்குச் சென்று இவற்றைப் பற்றி விளக்கி, இம்மாதிரியான ஓவியங்களைப் பார்த்தால் சொல்லும்படி கோருகிறார்கள். சிறுவர்கள் தங்கள் கிராமங்களின் நிலங்களை நன்றாக அறிந்தவர்கள். கண்ணும் காதும் திறந்திருக்கும், விந்தைகளை தேடிக்கொண்டே இருக்கும் பருவம். ஆகவே அவர்கள் உடனே தாங்கள் பார்த்தவற்றை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

இந்த கற்செதுக்குகள் இருக்குமிடமெல்லாம் மிகப்பெரும்பாலும் தனியாநிலங்கள். அந்த நிலத்தின் உரிமையாளர்களைச் சென்று பார்த்து அவற்றை பேணுவதனால் பல தலைமுறைக்காலம் அவர்களுக்கு வருமானம் வரும் என்று சொல்லிப் புரியவைக்கிறார்கள். பெரும்பாலும் அனைவருமே ஆர்வம் காட்டுகிறார்கள். பலர் முதலீடு கூட செய்கிறார்கள். சுற்றுலா வருமானத்தில் மூன்றிலொன்று அவர்களுக்கு. மூன்றிலொன்று உள்ளூர் பஞ்சாயத்துக்கு. மூன்றிலொன்று அரசுக்கு.  இது வேலைசெய்கிறது

இந்நிலத்தை அரசு ஏற்றுக்கொண்டால் இவை பாதுகாப்பற்ற பொதுச்சொத்தாக ஆகிவிடும். இத்தனை தனித்த மலைப்பகுதிகளில், விரிந்துகிடக்கும் இந்நிலத்தை பாதுகாக்க அரசால் இயலாது. இவை அழியநேரிடலாம். ஆகவே இந்த முறையே சிறந்தது என மாவட்ட ஆட்சியர்களும் எண்ணுகிறார்கள். இவர்களுடன் ஒத்துழைக்கிறார்கள்.

இந்நிலம் விவசாயத்துக்கு ஒவ்வாதது. ஆனால் தக்காணப்பீடபூமியின் தட்பவெப்பம் பழங்களுக்கு மிக உகந்தது. மாம்பழம் இங்கே முக்கியமான விளைபொருள் .ஆகவே இங்கே இந்தப் பாறைமேட்டிலேயே வட்டமாக இடையளவு உயரத்தில் தொட்டிமாதிரி கல்லடுக்கி உள்ளே மண் கொண்டுவந்து கொட்டி மாமரம் வளர்க்கிறார்கள். அதற்காக நிறைய கற்செதுக்குகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

பார்ஸுவில் 62 பாறைச்செதுக்குகள் உள்ளன. கொங்கண் பகுதியின் மிகப்பெரிய பாறைச்செதுக்குப் பகுதி இது என்று சொல்லப்படுகிறது. குகை ஓவியங்கள், பாறைச்செதுக்குகளை விரிவாக ஆவணப்படுத்தி, ஆராய்வது ஒரு வழி. ஆய்வாளரின் வழி. நான் செல்வது என் கனவுகளுக்குப் படிமங்களை திரட்டிக்கொள்ள. ஆகவே இவற்றின் அருகே உள்ளத்தை கண்களுக்கு அளித்து சிந்தையில்லாமல் நின்றிருப்பதே என் வழி.

இந்த ஓவியங்களைப் பார்க்கும் அனுபவம் இதுதான். மலைப்பாறைகளைப் பார்க்கையில் அவற்றை அர்த்தப்படுத்திக்கொள்ள நாம் முயன்றபடியே இருக்கிறோம். ஆனால் அவை அந்த அர்த்தங்களை உடைத்து மீறிக்கொண்டும் இருக்கின்றன. அது ஒருவகை தவிப்பு. அதற்கிணையானது இவற்றை பார்க்கும் மனநிலை. கற்காலத்து மழை 6

இந்த ஓவியங்களில் உடனே நாம் அடையாளம் கண்டுகொள்வது நீண்ட மனிதன் ஒருவனின் உடல். அவனுக்கு இருபக்கமும் இரு விலங்குகள். அவை ஏறத்தாழ புலி போல் உள்ளன. அவனை நோக்கி அவை பாய்கின்றனவா என தெரியவில்லை. அவனைச் சுற்றி பலவகைச் சிறுவிலங்குகள். மான்கள், பன்றிகள், முயல்கள். மற்றும் ஏராளமான மீன்கள்.

விலங்குகளின் அரசன் ( Master Of Animals) எனப்படும் ஓர் உருவம் உலகமெங்கும் கற்காலச் சித்திரங்களிலுண்டு. இரு கைகளிலும் இரு விலங்குகளை ஏந்திய மனிதன். அவனை அதிர்ஷ்டக்கார வேட்டைக்காரன் (Lucky Hunter)  என்றும் சொல்லப்படுவதுண்டு. உணவுடன் வரும் தந்தை. பரிசுகளை கொண்டுவந்து தரும் கடவுள். விலங்குகளை ஆளும் காட்டுத்தெய்வம். எதுவோ ஒன்று. ஆனால்  சிவன் வரை பெரும்பாலான உலகத் தந்தைதெய்வங்களில் அந்த உருவகத்தின் செல்வாக்கு உண்டு. (இந்து என உணர்தல்)

பெரிய மனித உருவம், தலைக்குமேல் ஏதோ வைத்திருக்கிறது. அது ஒரு மீன் என்றும் சுற்றிலும் மீன்கள் அதை நோக்கி நீந்தி வருகின்றன என்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (இங்கே பல கிலோமீட்டர் தொலைவில் கடல் உள்ளது. முன்பு கடல் மிக அருகே இருந்தது). ஆனால் அது மேற்குமலைப் பழங்குடிகளின்  ‘தெய்வம்கெட்டு’ பூசாரிகள் அல்லது குடித்தலைவர்கள் அணியும் கொந்தை என்னும் பெரிய மரக்கிரீடம் என எனக்குப் பட்டது. கமுகுப்பாளையாலும் அதைச் செய்வதுண்டு.

மீன்களின் வரைவுகள் மிக நேர்த்தியானவை. கூட்டம் கூட்டமாக மீன்கள். மிகப்பெரிய மீன்கள். திரச்சி அல்லது தெரண்டி எனப்படும் ஆலிலை வடிவ மீன் (நீண்ட சவுக்குபோன்ற வாலுடன்) இங்கு காணப்படுகிறது. அது ஓர் அன்னைமீன். ரித்விஜ் மீன் வளத்தின் குறியீடாக உலகமெங்கும் பாறைச்செதுக்குகளில் காணப்படுகிறது என்றார். ஏனென்றால் மீன் ஏராளமான குஞ்சுகளை விரியவைப்பது. ஆகவே ஒரு பேரன்னை அது. பிறப்பு புனிதமானதாக, தெய்வச்செயலாக கருதப்பட்டிருக்கலாம்.

திரச்சி மீனின் உடலுக்குள் ஏராளமான மீன்கள் செதுக்கப்பட்டுள்ளன. அந்த மீனே ஒரு கடல் என்பதுபோல. அந்த மீனின் குஞ்சுகளாக இருக்கலாம். அல்லது மூழ்கிப்பார்க்கையில் அந்த மீனைச்சூழ்ந்து நீந்திய பிற மீன்களின் காட்சியாக இருக்கலாம். அது இருபதாயிரமாண்டுத் தொன்மையான கனவு. அதை நாம் தொட்டறிய நமக்கிருக்கும் ஒரே வழி நமது கனவு மட்டுமே.

இந்த வடிவங்களை சாதாரணமாக புகைப்படங்களில் பதிவுசெய்ய முடியாது. ஏனென்றால் பல ஓவியங்கள் இருபதடி வரை அகலமானவை. டிரோன் மூலம்தான் சரியாகப் பதிவுசெய்ய முடியும். ஆனால் நேரில் பார்த்தால் துலங்காத சிறிய சித்திரங்கள் செல்பேசி காமிராவில் துலங்கி வந்தன.

இங்கே என்னவென்றே தெரியாத வெவ்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்ட கோலங்கள் உள்ளன.பெரும்பாலானவை ஜியோமிதி வடிவங்கள். அவற்றில் கோடுகள் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் பின்னியிருக்கின்றன. மிகுந்த கவனத்துடன் வரையப்பட்டவை போலிருக்கின்றன. சில படங்களை எரிக் வேன் டேனிகன் பார்த்தால் அவை பறக்கும் தட்டுகள் என சொல்லிவிடுவார்.

அவை ஏதேனும் குறியீடுகளா, அல்லது வெறும் வடிவங்களா என்பது குழப்பமான கேள்வி. இங்கே வழிபாடுகள் நிகழ்ந்திருக்கலாம். இவை வழிபாடுகள் நிகழ்த்தப்படவேண்டிய களங்களாக இருக்கலாம். இங்குள்ள குறைப்பட்ட மனித உடல்கள் (தலை இல்லாத மனித உடல் உட்பட) பலிகொடுக்கப்பட்ட மனிதர்களாக இருக்கலாம். விலங்குகள்கூட பலிகொடுக்கப்பட்டவையாக இருக்கலாம். எல்லாமே ஊகங்கள்தான்.

இந்த மனித உருவங்கள் உண்மையில் என்ன என்பது போலவே எப்படி வாழ்ந்தார்கள் என்பதும் ஒரு கேள்வி. ஒருவர் சாயும் வெயிலில் நின்று அந்த நிழலின் வெளிவட்டத்தை செதுக்கியிருக்கலாம் என்று ஒரு பேச்சு உண்டு. ஆனால் இங்கே வரைந்தவர்கள் அனைவருமே அன்றைக் கணக்குக்கு கலைஞர்களாகவே இருந்திருக்க வாய்ப்பு. ஓவியங்களில் உள்ள நுட்பங்கள் மிகக் கவனமாகவே அமைக்கப்பட்டுள்ளன. மான்கள் நினைவிலிருந்துதான் வரையப்பட்டிருக்கவேண்டும். எல்லாமே பக்கவாட்டுச் சித்திரங்கள். மனிதன் மட்டுமே நேர்கோணச் சித்திரமாக இருக்கிறான்.

ருத்விஜ் உட்பட மூன்று வெவ்வேறு ஆய்வாளர்களுடன் பேசினோம். ஆச்சரியமாக ஒன்றைக் கண்டோம். அவர்கள் இதை மிகைப்படுத்தவில்லை. தங்கள் ஊகங்களை திணிக்கவில்லை. மாறாக எங்கள் ஊகங்களென்ன என்று கேட்டு தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால் எவருக்கு வேண்டுமென்றாலும் ஒரு புதியகோணம் புலப்படக்கூடும். அனைவரும் ஒரே திசையில் யோசிப்பது நல்லதல்ல.

இத்தகைய தொல்சின்னங்கள் கண்டடையப்பட்டால் உடனடியாக நிகழும் இரண்டு அபத்தங்கள் உண்டு – தமிழில் அவை மட்டுமே வெளியே தெரியும் குரல்களாகவும் இருக்கும். ஒன்று, அவற்றை தங்கள் மதம், இனம், மொழியின் தொன்மைக்கான சான்றுகளாகக் கண்டு கொந்தளித்து கொப்பளிப்பது. இரண்டு, தங்கள் அதீதக் கற்பனைகளைக் கொண்டு சென்று இவற்றின்மேல் கொட்டுவது.

ருத்விஜ் உட்பட அனைவருமே இன்றைய மதம், மொழி, இனம் ஆகியவற்றுக்கு அப்பால், அறியப்படாததும் முழுக்க அறிந்துவிட முடியாததுமான ஒரு தொல்காலத்தின் பதிவுகள் இவை என்றே சொன்னார்கள். திரும்பத் திரும்ப இன்றைய மதம், பண்பாடு சார்ந்த தொடர்புபடுத்தல்களை ரத்துசெய்தார்கள்.

இன்றைய மதமும் பண்பாடும் இவற்றிலிருந்து ஒரு தொடர்ச்சியை கொண்டிருக்கலாம். ஏனென்றால் ஆழ்படிமங்கள் அவ்வாறுதான் உருவாகும். ஆனால் இந்த தொல்கால சித்திரங்களை இன்றைய எந்தப் பண்பாடும் முழுமையாகச் சொந்தம்கொண்டாட முடியாதென்றே சொன்னார்கள்.

எவ்வகையிலும் மராட்டியப் பெருமிதம் சார்ந்த ஒன்றாக இவற்றை அவர்கள் கட்டமைக்கவே இல்லை என்பதை கொஞ்சம் திகைப்புடனேயே பார்த்தேன். ஏனென்றால் இன்னும் அரசியல்வாதிகள் இதற்குள் நுழையவில்லை.

தேவாச்சி கொதானே (Devache Gothane) என்னுமிடத்துக்கு சென்றோம்.அங்கே ஒரு தொல்பாறைச்சித்திரம் இருக்கும் நிலத்தின் உரிமையாளரின் இல்லத்தில் மதிய உணவு. வாழையிலையில்தான். ஆனால் வாழையிலையை செங்குத்தாக, விரிந்த பகுதி நம்மைநோக்கி இருக்கும்படி போட்டுச் சாப்பிடுவது அவர்களின் வழக்கம். பழமையான வீடு. ஆனால் புதுப்பித்திருந்தனர்.

கி.ராஜநாராயணன் ஓர் ஊருக்குச் சென்றால் அங்கே ஒரு வீட்டில் சாப்பிட்டாகவேண்டும், அப்போதுதான் அந்த ஊர் நம்முடையதாகும் என்பார். ஒரு வீடு நமக்கு உணவளித்தால் அது நம்முடைய வீடு என்பார். அதை பாண்டிச்சேரியில் ஓர் உரையிலும் சொன்னார். மராட்டிய உணவை, மராட்டிய இல்லத்தில் அமர்ந்து உண்டதுமே அந்நிலம் நெருக்கமாக ஆகிவிட்டது

தேவாச்சி கொத்தானேயில் மலையேறிச்சென்று ஒரு பாறைப்பரப்பில் செதுக்கோவியங்களைக் கண்டோம்.  இங்கும் விலங்குருவங்களே மிகுதியாக இருந்தன. மான்கள் துல்லியமானவை. மீன்கள். பன்றிகள்.

ஒரு மனித உருவம் இங்கே குறிப்பிடத்தக்கது. பெரிய தலையணியுடன் கூடிய எட்டடி நீள வரைவு. அதன் மேல் வெவ்வேறு இடங்களில் காந்த திசைகாட்டிகளை வைத்தார் ரித்விஜ். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை வடக்கென்க் காட்டின. அலைபாய்ந்து கொண்டே இருந்தன. இவற்றை ஆவணப்படுத்தும் பொருட்டு திசையை கணக்கிட்டபோது இந்த விந்தையை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இப்பாறையில் உள்ள இரும்புத்தாது காரணமாக இதில் காந்தம் இருக்கலாம் என்பதே விளக்கம். தற்காலிகமாக மின்னலால் காந்தமூட்டப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் அது நீண்டநாட்கள் நீடிக்காது. அடையாளம் காணப்பட்டபின் நான்காண்டுகளாக இந்த காந்தப்புலம் நீடிக்கிறது. இந்தக் காந்தப்புலத்தை கண்டடைந்தபின் இதைச் செதுக்கினார்களா அல்லது பின்னர் இக்காந்தப்புலம் உருவானதா என்பது ஊகிக்கக்கூடுவதாக இல்லை.

இந்த நீள்மனிதர்களைப் பார்க்கையில் உருவாகும் விதவிதமான எண்ணங்கள்தான் நான் தேடி வந்தது. படுத்துக்கிடந்த பெருமாள், புத்தர், நின்றநெடியோனாகிய அருகர்,படுத்தவுருவில் மண்ணில் செய்யப்படும் நம்மூர் தொல்தெய்வ உருவங்கள், அன்னத்தில் மானுட உடலை செய்து படையலிடும் நம் நாட்டார் வழிபாட்டு மரபு, புருஷமேத யாகத்தில் பலியிடப்படும் மனிதன், புருஷசூக்தம்….ஏன் விஷ்ணுபுரம் நாவலே கூட!

இந்த உருவங்களை அர்த்தப்படுத்தவில்லை. எனக்கொரு தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறேன். இந்த பேருடலர் தலைமேல் தாங்கியிருப்பது என்ன? அப்பல்லோவின் உலக உருளையா? வானமா? அன்றுமின்றும் அரசை, குடும்பத்தை சுமந்திருக்கும் தந்தையெனும் பேருருவா இது? எத்தனை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது மானுட உள்ளம். எங்கே அதை நாமென்றும் அவரென்று பிரித்தாட தொடங்கினோம்?

மாலையில் கஷேலி (Kasheli)என்னும் கடற்கரைக்குச் சென்றோம். மலை நேரடியாக கடலுக்குள் சென்று மூக்கைநீட்டி நிற்பதை மேற்குக் கடற்கரையில், விந்தியமலையடுக்குகளில்தான் காணமுடியும். கஷேலி அப்படிப்பட்ட இடம். மலையில் இருந்து படி இறங்கி சென்று கடற்கரையை அடையவேண்டும். கடலுக்குள் நீட்டி நின்றிருக்கும் முனம்பில் ஒரு பார்வைமாடம் கட்டியிருக்கிறார்கள். அதைச்சுற்றி பாறைகளில் கடல் அலைநுரைத்து அறைந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது.

மேலும் ஆழத்தில் கடல்விளிம்பு. கடல் நேரடியாக மலையை அறைந்து உருவாக்கிய மாபெரும் குகைக்குடைவு. அதையொட்டி மாமிசம்போல பாளம் பாளமாக பாறை. அது கடல் அலைகளின் துமி வியர்வையாக மாறி வழிய குளிர்ந்து பரவியிருந்தது. அங்கே அமர்ந்துகொண்டு மாலைச்சூரியன் அணைவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

இருட்டியபின் திரும்பி எங்கள் விடுதியறையை அடைந்தோம். மழை நடுநடுவே கொஞ்சம் பெய்தது. பத்துநாட்களுக்கு முன்னரே பருவமழை நின்றுவிட்டிருந்தது. பளிச்சிடும் வெயிலும் மழையிருட்டும் சிறு தூறலுமாக இருந்தது. அன்று நான் மாலையில் அறைக்கு வந்ததும் ஒரு காபி சாப்பிட்டேன். அவ்வளவுதான் இரவு இரண்டு மணி வரை தூக்கம் இல்லை. அது வரை அந்த பாறை ஓவியங்களை இணையத்தில் தேடிப்பார்த்துக் கொண்டே இருந்தேன்.

(மேலும்)

கற்காலக் கனவுகள்-3

முந்தைய கட்டுரைகீதா மதிவாணன்
அடுத்த கட்டுரைவலிமார் புகழிசை