பெண் எனும் விரிவு, கன்னியாகுமரி- கடிதம்

கன்யாகுமரி வாங்க

கன்யாகுமரி மின்னூல் வாங்க

மனம் விரும்பும்போது புத்தகம் வாங்குவதெல்லாம் வழக்கமானதுதான். ஆனால் ஆச்சரியமாக அதை ஒரே இரவில் வாசித்தும் முடித்திருந்தேன். அதுதான் அதிசயம். பல வருடங்களாகிவிட்டது அப்படி வாசித்து.

சம்பவமே இல்லாமல் எண்ணங்களாலும் அதுசார்ந்த உரையாடல்களாலும் கதை வளர்ந்துகொண்டே போகிறதே என மனம் புத்தகத்திலிருந்து விலக்கமடைய எண்ணுவதற்குச் சரியாக ஒருநொடி முன்னால் கதையின் மையச் சம்பவம் வாசகனுக்குக் கூறப்பட்டுவிட்டது. அதன்பிறகு முடித்துவிட்டுத்தான் கீழே வைக்க முடிந்தது.

காடு நாவல் வாசித்தபோது, ’என்ன இது! வாசிக்கும்போது மனதில் மரியாதை தோன்றும்படி ஒரு பெண் பாத்திரம்கூட கதையில் இல்லையே’ என மனம் வருந்தியது. ஆனால் அதற்கு இரண்டாண்டுகள் முன்பே எழுதப்பட்டிருக்கும் கன்னியாகுமரி நாவல் பெண்களை அவ்வளவு கௌரவமாய்க் காட்சிப்படுத்தியிருக்கிறது.

எந்தச் சூழலிலும் தன்னிலை இழக்காத பெண்களாய் இருக்கிறார்கள் அதில் வருகிறவர்கள். தர்க்கபூர்வமாய் சிந்திக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், தன் மனதை வெளிப்படையாய் வைக்கிறார்கள், தனது துறைசார்ந்த லட்சியங்கள் கொண்டிருக்கிறார்கள், அதனை அடைய வேண்டுமென்றால் எதனைத் துறக்க வேண்டும்/கடக்க வேண்டும் எனத் தெரிந்திருக்கிறார்கள், முன்னோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். Awesome!

கதையின் கரு என எடுத்துக்கொண்டால், ஜெயகாந்தனின் புகழ்பெற்ற ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையோடு ஒப்பிடலாம்.

ஆனால் கதை நாயகன் ரவியின் பாத்திரப்படைப்பைப் பார்க்கையில், நிஜமாகவே ஒரு ஆண் இப்படி இருப்பானா என ஆச்சரியமும் பரிதாபமும் எழுந்தது. ஆண்கள் அவ்வளவு மோசமானவர்களா என்ன! ஆனால் பெண்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் இடங்களில் ஆண்கள் தடுமாறித்தான் போகிறார்கள். அதையும் மறுக்க முடியாது.

ஆண் பெண் பாத்திரப்படைப்புகளைத் தாண்டி, கலை என்பது என்ன, ஒரு கதை எவ்விதம் உருவாகிறது, வெறும் ஒரு காட்சியிலிருந்து அதைக் கதையாகச் சமைக்கிற காலத்தில் நிகழும் படிநிலைகள் என மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் விவாதிக்கப்பட்டிருப்பதும் மிகப்பிடித்தது. தர்க்கபூர்வமான உரையாடல்களைத் திறன்படச் சமைப்பதில் எப்போதுமே வல்லவர்தானே ஜெயமோகன். கலை சார்ந்த புரிதல்களுக்காகவும், அத்துறையில் இருப்பவர்கள் இப்படைப்பை அவசியம் வாசிக்கலாம்.

விமலாவை உடையச் செய்ய ரவி எடுக்கும் கடைசி முயற்சியை அவ்வளவு அழகாக (கௌரவமாக, கருணையுடன், மேன்மையுடன்) எதிர்கொள்கிறாள் அவள்.

எல்.சுபத்ரா

முந்தைய கட்டுரைஒரு தொடக்கம்
அடுத்த கட்டுரைகூ கே கிம்