விரிதழல் – ஒரு வாசிப்புப் பயிற்சியின் தேவை.

அன்புள்ள ஜெ,

ஒரு கடுங்குளிர் மாலை வேளையில், ஊட்டி குருகுலக் கூடத்தினுள் அடர் பழுப்பு நிற ஸ்வெட்டரும்  ஏறக் குறைய அதே நிறக் கம்பளித் தொப்பியும், ஒளிரும் கண்களுமாக குரு நித்யா தன்னுடைய மென்காவி வண்ண மேலுரையிட்ட அகன்ற நாற்காலியில் அமர்ந்திருந்தார்.  சகல புலன்களாலும் உணரக்கூடிய பருப்பொருள் போல அசைவற்ற மௌனம் கூடம் முழுவதும் நிரம்பியிருந்தது.

தங்கமணி என்று பெயரிட்ட பூனைக்குட்டி அவரின் வலது தோளில் அமர்ந்திருந்தது. பூனைச் சிலையோ என்று ஐயப்படுமளவு அது அவரது காதோரத்தில் அசைவின்றி ஒடுங்கியிருந்தது.   வழக்கமான பிரார்த்தனை மந்திரத்தை அவருக்கெதிரில் அமர்ந்திருந்த நண்பர்கள் எல்லோரும் கூடி உச்சரித்தபின் சில கண மௌனத்திற்குப் பின் அவர் தன் பேச்சைத் துவங்கப் போனார்.

சற்றே கீழிறங்கியிருந்த தன்னுடைய கம்பளிக் கையுறையை மணிக் கட்டிற்கு மேலே இழுத்துவிட குரு எத்தனிக்கையில் தங்கமணி சட்டென எம்பிக் குதித்தது. அச்சமயம் குருவின் கைகளிலிருந்த ஒரு தடிமனான புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது.  ஒரு சிறு பதற்றத்துடன் கீழே குனிந்து புத்தகத்தை எடுத்தவுடன் அதை முத்தமிட்டு சில நொடிகள் நெஞ்சோடு அழுத்திக் கொண்டார். பின் புன்னகைத்தார்.

கூடத்திலும் ஒரு மெல்லிய சிரிப்பலை தோன்றி மறைந்தபின் குருவிற்கு மிக அருகில் அமர்ந்திருந்த ஒரு நண்பர் புன்னகையுடன் கேட்டார்.

“இப்படி புத்தகத்தின் மீது காதலாகி உருகுகிறீர்களே குரு, ஒருவேளை உங்கள் மறைவிற்குப் பின் நீங்கள் இன்னும் வாசித்திராத உங்கள் குழந்தைகள் போன்று நூலகத்தில் கிடக்கும் புத்தகங்களின் கதி என்னவாகும்.. அனாதைகளாகிவிடாதா அவைகள்?”

உடனே குரு, “ஆம் அதைக் குறித்து நான் சிந்தித்ததுண்டு, பேசியதுமுண்டு நீங்கள் கேட்டிருக்கவில்லையா!?  என் சமாதிக்கும், நூலகத்திற்கும் ஒரு குட்டிச் சுரங்கம் அமைத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறேன் நான் அன்றாடம் வந்து வாசித்துப் போக ஏதுவாக இருக்கும் அல்லவா” என்றார்.  இதைச் சொல்லும்போது குருவின் முகம் சிறிய முறைப்புடன் ஒரு வித சம நிலையில் உறைந்திருந்தது.  ஓரிரு நுண்நொடிகள் அதை அவர் தீவிரமாக சொல்கிறாரா அல்லது விளையாடுகிறாரா என்று ஒருவருக்கும் புரியவில்லை.

பின் “ஆம்.. அது முடிவற்றது” என்று மெல்லிய கரகரத்த குரலில் கூறி புன்னகைத்து விட்டு தனது அன்றைய உரையைத் துவங்கினார்.

ஆத்ம ஞானம் பெற்றவர்களின் வாசிப்பு அல்லது கற்றல் ஒரு கட்டத்தில் முடிவுற்று வேறு ஏதோ ஒரு அனுபவத் தளத்திற்கு மேலேறி விடும் எனும் என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை அதோடு தவிடு பொடியாகியது.

அதற்குப் பின் உற்றுக் கவனித்ததில் ஓஷோவும், கிருஷ்ணமூர்த்தியும், ஏன் ரமண மகரிஷியும் கூட கடைசி வரை வாசித்துக் கொண்டிருந்ததாகவே அறிந்தேன்.  ஆனால் மேலே கூறியதைப் போன்ற நம்பிக்கைகளால் சிதைவுண்டு போயிருந்த நானும் என்னைப் போன்ற நண்பர்களும் இடையே சுமார் பத்து ஆண்டுகள் தீவிர வாசிப்புத் தளத்திலிருந்து விலகியிருந்தோம்.  ஒருநாள் குரு இவ்வாறு சொல்வதைக் கேட்டதும் சிறு திடுக்கீடு தோன்றி அதன் பின் மீண்டும் வாசிப்பை நோக்கிக் காலடி எடுத்து வைத்துப் பார்த்தபோது எங்கள் முன்னிருந்த படைப்புக்கள் அசாத்தியமாக பரிணமித்து எளிதில் பிடிக்க இயலாவண்ணம் எங்கோ சென்றிருந்தன.

மூச்சிரைக்க ஓடிச் சென்றே அவைகளை அவ்வப்போது தொடத்தான் முடிந்தது. பின் சில காலங்கள் சென்ற பின் எப்படியோ மீண்டும் வாசிப்பைப் பிடித்துக் கொள்ள முடிந்தது.

ஆனால் இந்தக் கால கட்டத்தில் (நடப்புக் காலம் வரை) முற்றிலும் புதியதான ஒரு சிக்கலை நாங்கள் எதிர்கொண்டோம்.

அது மிகைமைகளின் சிக்கல் (Hurdle of Abundance).  இன்னும் அதைக் கூர்மையாகச் சொல்லப் போனால் மிகைமைகளின் புதிர் (Paradox of Abundance) என்றே குறிப்பிட வேண்டும்.

மெல்ல மெல்ல நாலாபுறமும் தோன்றிய பல வித புத்தகங்கள் பெரு மழை போல் பொழிந்து எங்களை மூச்சிரைக்க வைத்தது. எந்த நூல் இந்தக் கணம் நமக்கானது.. எதை மிகக் கவனமாக தேர்ந்து வாசிப்பது என்கின்ற குழப்பங்கள் எங்களை பல சமயம் திகைப்புக்குள்ளாக்கியது.   மிகத் தீவிரப் படிப்பாளிகளுக்கு இது ஒரு பெருஞ்சிக்கல் இல்லாமல் இருக்கலாம். எங்களைப் போன்று அளவாகத் தேர்ந்து படிக்கும் வாசிப்பாளர்களுக்கு இந்தச் சூழல் ஒரு புதிர்க் குகைக்குள் (Labrynth) சிக்கிக் கொண்ட அனுபவத்தைத் தந்தது.

சில சமயங்கள் இம்மனநிலை ஒரு ஆவேசத்தைச் தருவதுமுண்டு.

நான் ஊட்டியில் படிக்கும்போது மதியப் பசி நேரத்தில் வீட்டிலிருந்து கொணர்ந்த உணவின் மீது ஆர்வமற்ற என் நண்பன் ஒருவன் அருகிலிருக்கும் ஒரு பேக்கரியைக் காட்டி, “அந்தக் கண்ணாடிப் பேழைகளை உடைத்து நொறுக்கி, கைகளில் கிடைப்பதையெல்லாம் வெறிகொண்டு தின்று தீர்த்துவிட வேண்டும்” என்பான்.  அது போல  புத்தகக்கண்காட்சிகளுக்குச் செல்லும்போதெல்லாம், அங்குள்ள பெரும்பாலான நூல்களை ஏதோ ஒரு மாயம் செய்து வாசித்துத் தள்ளிவிடவேண்டும் எனும் வேட்கை தோன்றும்.

எப்படியோ நல்ல நண்பர்களின் உதவியால் உருண்டு, பிரண்டு இதற்கு ஒரு தீர்வைத் தொட்டு, எங்களுக்கான வாசிப்புத் தளங்களை நோக்கிச் செல்லும்போது அதன் சல்லி வேறாக கீழ்காணும் சிற்சில சவால்கள் எங்களிடையே முளைவிட்டது.  அவையாவன…

* ஒரு நூலனுபவத்திற்கும், எங்களுடைய அன்றாடத்திற்கும் இடையே ஒரு வலிமையான குறுக்குக் கோட்டைக் கிழித்துக் கொள்வது. அதாவது நூற்றுக்கணக்கான பக்கங்கள் வாசித்துத் தள்ளினாலும் அதில் வடிந்தொழுகும் தரிசனங்களை அன்றாட நடைமுறை வாழ்வினூடே, தவறியும் நுழைந்து விடாதவாறு ஒரு இரும்புத்திரை அமைத்துக் கொள்வது.

* ஏதோ ஒரு ஒற்றைச் சித்தாந்தத்தில் வேரூன்றிகொண்டு அதன் பின் எதைக் கண்டாலும், வாசித்தாலும், செவிமடுத்தாலும்,  நெடுங்காலமாக உறைந்து போயிருக்கும் அந்த உருப்பெருக்கி மூலமாகவே விஷயங்களை அவதானித்துக் கொள்வது.  எந்த ஒன்றைத் தீவிரமாக நம்பினாலும் அதற்கு பக்க வலிமை அல்லது ஆதரவு தரும் விஷயங்கள் தொடர்ந்து நம்மை வந்தடைவது இயல்பானது என்பதால் அதன் மூலம் அவ்வொற்றைச் சித்தாந்தப் பார்வையை மென் மேலும் வலுவாக்கிக் கொள்வது. .

* ஒரு சிறிய அழகியல் அல்லது யதார்த்த விஷயத்தைக் கூட சாமான்யமாக பார்க்க இயலாமல் உறைந்து போன மூளைப் படிமங்களிளிருந்தே பிடிவாதமாக காண முற்படுவது. அதற்கான வியாக்யானங்களை பெருக்கிக் கொள்வது.

இது போன்ற சுருள் புழைக்குள் சிக்கி மீண்ட பல நூறு நண்பர்களைக் கண்ட பின் நெடுங்காலமாக இச்சிக்கல்களை உள்ளடக்கி ஒரு பயிலரங்கம் நடத்த வேண்டும் என்று எண்ணியிருந்தோம். சிறியதாக துவங்கிய முயற்சிகள் கொரோனா காலங்களில் முடிவுற்றது.

அன்பின் ஜெ,

புறத்திலிருந்து அவ்வாறு தோற்றமளித்தாலும், சத்தர்ஷன் எனும் இக்கற்றல் மையம் வெறுமனே யோகம், தியானம் போன்ற ஆன்மிக மற்றும் மீப்பொருண்மை (Meta Physics) விஷயங்களுக்குள் அடங்கிவிடுவதில்லை என்பதை நண்பர்கள் அறிவர்.  என் ஆசிரியருள் ஒருவர் சொல்வார்.  நாவிற்கு அறுசுவையையும் பிரித்து ருசிக்கும் திறனிப்பினும் புசிக்கின்ற எச்சுவையையும் பிடித்துக் கொள்வதில்லை. சுவைத்தபின் சில கணங்களில் அது மீண்டும் வெறுமையாகவே நிற்கின்றது.  எனவேதான் அது முடிவின்றி சுவைக்க இயலுகிறது. ஏதாவது ஒரு ஒற்றைச் சுவையில் அது அளவுகடந்த பற்று கொண்டுவிட்டால் இதர சுவைகள் அனைத்தையும் துறக்க நேரிடும்.

அவ்வாறே இக்கற்றல் மையத்தில் ஒரு யோகி அவனுடைய அனைத்து விதப் பயிற்சிகளையும் முடித்து விட்ட பின் தன்னுடைய யோகப் பாயை சுருட்டி எடுத்துக் கொண்டு சென்றுவிடுவதைப் போல எல்லா சாதனை முறைகளும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இட்டு நிரப்பப்படுவதற்கு பதிலாக இவ்விடம் மீண்டும் மீண்டும் வெற்று வெளியாக்கப்படுகிறது.  இந்த வெளியை மேலும் மேலும் விரித்துச் செல்லும் கலைகளும், நூல்களும், பயிற்சிகளும், சாதனா முறைகளும் அனைத்தும் இங்கு வந்து போய்க் கொண்டிருக்கின்றன.  எனவேதான் இங்கே நம்மையுமறியாமல் காலம் நழுவிக் கரைந்துகொண்டே இருப்பதாக நண்பர்கள் கூறுவார்கள்.

இச்சூழலில் உங்கள் வருகையும் வழிகாட்டலும்  இங்கு நிகழும் பயிலரங்கத்தின் தீவிர வாசகர்களையும், துவக்க நிலை எழுத்தாளர்களையும் வேறொரு புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லும் என உறுதியாக நம்புகிறோம்.

வாசித்தல் வெறுமனே மூளையின் மற்றுமொரு நினைவுப் படிமமாகி உறைந்து போய்விடாமல், அதன் தாதுவை, ரசத்தை உயிரோட்டத்துடன் கிரஹித்துக் கொள்வதற்கும், அது சுட்டிக் காட்டும் குறுக்குவெட்டுத் தோற்றங்களை நேரிட்டு துணிவுடன் தரிசிப்பதற்கும், ஒரு நூல் தரும் அக வளர்சிதை மாற்றத்திற்கு எங்களை ஒப்புக் கொடுப்பதற்கும், உங்கள் இருப்பு சொல்லித் தரும்.

உங்களின் உடனிருத்தலோடு இங்குள்ள குறுவனச் சூழலும் , நதியும், மரங்களும், மின்மினிகளும், காலையும், மாலையும் இங்கு கடைபிடிக்கப்படும் மௌனமும் ஒருவரின் வாசிப்பை, படைப்பை அதன் அனுபவ தளத்திலிருந்து இரண்டற்ற அனுபூதி தரிசனத்திற்கு இட்டுச் செல்லும் வாய்ப்புக்கள் உண்டு.

குறிப்பாக மற்ற அமர்வுகளோடு இங்கே அரைமணி நேர மௌன அமர்வும் தவறாமல் கடைபிடிக்கப் படுகிறது. அது வாசகனுக்கும், எழுத்தாளனுக்கும் ஒரு பரந்த அடியாதாரத்தை அமைத்துத் தருகிறது.

எம்முயற்சியுமற்ற சொற்ப சமய மௌனத்தில் இழுத்து குறிபார்க்கப்படும் வில்லின் நாண், வாசிப்பு அல்லது படைப்பை நோக்கி விடுவிக்கப்படும்போது அது மிகத் துல்லியமான குறியை அடைகிறது என்பதை இத்தளத்தில் நெடுங்காலமாக பரீட்சித்துக் கொண்டிருக்கிறாம்.

ஒரு அனுபவத்தை ‘எனது’ என்கின்ற கட்டுக்குள் அடக்கிவிடலாம். ஆனால் அது தரிசனமாக விரியும்போது மமகார எல்லைக் கோடுகள் அறுந்துவிடுகிறது.              ஒரு தீவிர வாசிப்பாளன் அவனையுமறியாமல் அவ்வனுபூதியை நோக்கியே நகர முற்படுவதைப் போல ஒரு தீவிர படைப்பாளியும் அறிந்தோ அறியாமலோ ஓயாமல் தன்னுடைய எல்லைகளை உடைக்கவோ, விஸ்தரிக்கவோ முற்படுகிறான்.  ஏனெனில் இப்போது எதுவாக தன்னை வரித்திருக்கிறானோ, எந்தக் கட்டமைப்பில் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறானோ  அது அவனில்லை, அல்லது அதற்குள் மட்டும் அவனில்லை, அல்லது அது மாத்திரம் அவனில்லை என்பது உள்ளீடாக ஒரு சாமானியனைவிட படைப்பாளிக்கு நன்கு தெரியும்.

எனவே தன்னுடைய அசலிருப்பைப் புரிந்து கொள்ளவும், அதை மென்மேலும் உறுதிப் படுத்திக் கொள்ளவும், சுயத்தை ஒளிரச் செய்யவுமே தன் படைப்பின் மூலம் தீவிரமாக விழைகிறான்.  சில சமயம் அவன் தன் சுயமறிதலுக்கு நேரெதிராகப் படைப்பது போன்று தோன்றினாலும், அது கடல் மீன் குஞ்சுகள், சமுத்திரத்தின் இருப்பிற்கு எதிராக சில சமயம் ஐயப்பட்டு பேசுவது போலவேதான். அவ்வெதிர்ப்பின்  மூலமும் அவன் சுயதரிசனத்தை நோக்கியே செல்கிறான்.

(ஆனால் எவ்வித தரிசனமாயினும் அச்சொல் அதன் உச்சப் பரிணாமத்தில் ஆன்ம தரிசனத்தையே காத்திரமாக சுட்டுகிறது என்பதை அழுத்தி நிறுவ முற்படாமல் மிகுந்த தயக்கத்துடன் விடுகிறேன்.  ஏனெனில் மீப்பொருண்மையின் அர்த்தத்தைத் தரும் ஒற்றைச் சொல்லைக் குறித்து ஒரு படைப்பாளி வைத்திருக்கும் முன் தீர்மானம் அவனை இவ்விடத்திற்கு, நம்மிடையே அணுக விடாமல் தடுத்து விடக் கூடும் என்று ஊகிக்கிறேன்.)

நெடுங்காலம் உறுதியாகத் தொடப்படாத இப்பாகங்கள் தங்களின் வருகையினால் எங்களுக்கும், இங்கு தொடர்ந்து வந்து போகும் படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் ஒரு புதிய துலக்கம் தரும் என்று நம்புகிறேம்.

“விரிதழல்” என்று பெயரிட்டு நாம் இங்கே திட்டமிட்டிருக்கும் இப்பயிலரங்கம் துவக்க கட்டத்தில் அடிப்படையாக மூன்று எளிய நோக்கங்களைக் கொண்டதாக மட்டும் அமைகிறது.

1) கேட்பவர்களுக்கு அயர்ச்சியின்றி ஒரு நூலைக் குறித்து, இயன்ற அளவு சுவராஸ்யமாகப் பகிர்ந்து கொள்வது,  அந்நூலின் மறை பொதிவுகள் சேதாரம் அடைந்துவிடாமல் வாசகன் அந்நூலைத் தேடித் படிக்கத் தூண்டுவது.

2) அல்லது ஒரு வாசகன் அந்நூலைப் படித்தே ஆகவேண்டும் என்றல்லாமல் மிகச் சரியாக அதன் உயிர்க் கூறுகளைத் தொட்டுக் காண்பித்துவிட்டு . அவசியப்பட்டால் மட்டும் அவன் தேடிச் சென்று வாசித்துக் கொள்ள ஏதுவாக விடுதல்.

3) ஒரு நூலின் வாசிப்பு அனுபவத்தையும் அதன் மூலம் வாசிப்பாளன் தானடைந்த தரிசனத்தையும் சுட்டிக் காண்பிப்பது.

இப்பயிலரங்கத்தில் கலந்து கொள்பவர்கள் மாதம் சுமார் இருபதிலிருந்து, இருபத்தைந்து நூல்களை துய்த்தறியவும் அவற்றின் அக மடிப்புக்களில் பொதிந்து கிடக்கும் அனுபவங்களையும், தரிசனங்களையும் தொட்டுணரவும் உதவக்கூடும்.

இங்கு இரு சாரரும் கூட இருப்பதால்,  ஒரு வாசிப்பாளன் தனக்கான வாசிப்பை இயல்பாகத் தேர்ந்து கொள்ளவும், அதனை நொதித்துச் செரித்துத் தன்வயமாக்கிக் கொள்ளவும்,  ஒரு படைப்பாளி அவனுடைய எல்லைகளை உடைத்து விஸ்தரித்துப் பிரவிகிக்கவும்,  இடையிடையே தோன்றும் ஆக்க முடங்கலிலிருந்து விடுபடவும் எங்களை வழிநடத்துக.

இரு கைகளின் இடையே உறைந்திருக்கும் மௌனத்திலிருந்து பிறக்கும் கைதட்டல் ஓசையைப் போல உங்களின் பேச்சிற்கும், இயக்கத்திற்கும் இடையே பொதிந்திருக்கும் மௌனத்தை, அசலத்தை அறிகிறோம். அதிலிருந்து  இப்பயிலரங்கத்தை நாங்கள் சரிவர இட்டுச் செல்ல ஆசியளித்து எங்கள் முதுகில் கை வைத்துத் தள்ளித் துவக்கி வைத்தீர்களானால் அவ்விசையில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ இயன்ற வரை செல்வோம்.

நன்றி.

இரா. ஆனந்தக் குமார்.

சத் தர்ஷன்.

முந்தைய கட்டுரைஎம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்க உரைகள்
அடுத்த கட்டுரைபோர்க் ரோஸ்ட், அஜிதன்