பொதுப்பணம்

விதைசேகரிப்புக்காக ஓர் இந்திய மிதிவண்டிப் பயணம்…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

பணிவான வணக்கங்கள்.

தங்களது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதுமட்டுமல்ல, வாழ்வின் பல்வேறு சிக்கல்களுக்கும், சோதனைகளுக்கும் பதில் தரும் “எனது கூகிள்” தங்கள் தளமே.

“விதைசேகரிப்புக்காக ஓர் இந்திய மிதிவண்டிப் பயணம்…” எனும் கடிதம் தங்கள் தளத்தில் வெளியாகியிருந்தது. என்னால் இயன்ற சிறு தொகை அனுப்ப விழைகிறேன் எனச்சொல்லி திரு யசோக் சுப்ரமணியம் அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தேன்.

“தற்போது அடுத்த ஆறு மாதங்களுக்கான கையிருப்பு உள்ளது. தேவைப்படும் போது கேட்கிறேன்” என பதில் அனுப்பியிருந்தார்.

இது எனக்கு பதிலாகத் தெரியவில்லை. ஒரு வாழ்க்கைப் பாடமாகத் தெரிகிறது.   ஆறு தலைமுறைக்கு செல்வம் இருப்பினும், இன்னும் வேண்டும் எனும் மனிதர்களையே கண்ட கண்களுக்கு, ஒரு விஸ்வரூப தரிசனத்தையே காட்டியுள்ளார் திரு யசோக் சுப்ரமணியம்.

ஒரு நல்ல ஆன்மாவை அறிந்துகொள்ள வாய்பளித்தமைக்கு நன்றிகள்.

மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும்,

கணநாதன்

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

அன்புள்ள கணநாதன்,

ஆம், நீங்கள் குறிப்பிட்டதுபோல அது ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடம். குறிப்பாக பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, பொதுப்பணி புரிபவர்களுக்கு.

தேவையான அளவுக்கு மட்டுமே இருக்கும் நிதியே உண்மையில் செயலூக்கம் அளிப்பது. உபரிநிதி என்பது பணம் அல்ல செல்வம். செல்வத்துக்கு அதற்கே உரிய பிரச்சினைகள் உண்டு. ஒன்று அதை நிர்வாகம் செய்யவேண்டும், கண்காணிக்க வேண்டும். அதற்கு ஒரு மனநிலை வேண்டும். அந்த மனநிலை சேவை, பொதுப்பணிக்கு நேர் எதிரானது. அது ஒரு வணிக மனநிலை. அது வந்தமைந்தால் மெல்லமெல்ல சேவைமனம் மறையும்.

ஏனென்றால் சேவையில் ஒரு சாகச மனநிலையும் ஒரு துறவு மனநிலையும் உள்ளது. துறவே ஒரு சாகசம்தான். துணிந்து ஒன்றில் இறங்குவது, விட்டுவிட்டு உடனே விலகிவிடுவது இரண்டும் இருந்தாலொழிய பொதுச்சேவை செய்யவியலாது. செல்வம் அவ்விரண்டையும் தடுக்கும். ஐயம்கொள்ள, எச்சரிக்கையாக இருக்கச் செய்யும். செல்வம் எடைமிக்க கல்லுடன் நம்மை நாமே பிணைத்துக்கொள்வதுபோல.

செல்வம் மிகுதியாக இருந்தால் அது சேவைக்குச் சம்பந்தமில்லாதவர்களைக் கவரும். செல்வத்துக்கான போட்டிகள் உருவாகலாம். அவை கசப்புகளாக வளரலாம். செல்வம் அதை வைத்திருப்பவர்களிடம் ஒரு மிதப்புணர்வை உருவாக்குகிறது. மரியாதையை எதிர்பார்க்கச் செய்கிறது. பொதுச்சேவைக்கான அறக்கட்டளைப் பொறுப்பிலிருப்பவர்கள் தங்களை சக்கரவர்த்திகளாகவோ மடாதிபதிகளாகவோ எண்ணிக் கொண்டிருப்பதை காண்கிறேன்

இந்திய மனநிலை ஒன்றுண்டு, இதை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இது ஒருவேளை கீழைநாடுகள் முழுக்கவே இப்படி இருக்கலாம். நமக்கு பொதுநிதியைச் சூறையாட எந்த தயக்கமும் இல்லை. பொதுநிதியை கைப்பற்றியவர்கள்மேல் கண்டனமும் இல்லை. பொது நிதி எவருக்கும் உரியது அல்ல, ஆகவே முடிந்தவரை அள்ளலாம், அது சாமர்த்தியம் என நினைக்கிறோம்

தமிழகத்திலுள்ள பழைய அறக்கட்டளைகளில் மிகமிகச் சில தவிர பிற எல்லாமே தனிநபர்களால் கைப்பற்றப்பட்டு, அந்த அறக்கட்டளையின் நோக்கத்தையே கைவிட்டு விட்டுவிட்டிருப்பதை காணலாம். சென்னையில் நூறாண்டு பழைய அறக்கட்டளைகள் ஆயிரத்துக்குமேல் உள்ளன என்றும், பெரும்பாலும் எல்லாமே தனியார்ச் சொத்துக்களாகிவிட்டன என்றும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அரசியல்வாதிகள், வாரிசுகள், பிறர் எல்லாருமே இதில் ஒரே மனநிலை கொண்டவர்கள்.

மேலைநாடுகளில் அறக்கட்டளைகள் ஒரு வகை ‘மதப்புனிதத்தன்மை’ கொண்டவை. அறக்கட்டளையில் முறைகேடு செய்வதென்பது மாபெரும் சமூக இழிவை, புறக்கணிப்பை உருவாக்கிவிடும். இங்கே நானறிந்த ஒரு மறைந்த மடாதிபதி அவர் உருவாக்கிய பொது அறக்கட்டளைகளில் ஊழல் நடக்கக்கூடாது என பெரும் கோடீஸ்வரர்களை அறங்காவலர்களாக ஆக்கினார். ஆனால் அந்தச் சொத்துக்கள் அப்பெரும் செல்வந்தர்களின் சொந்தச் சொத்துக்களுடன் கரைந்து மறைந்தன. அவர்கள் அவற்றை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடமளிக்கும் கொடையாகவே கண்டனர்.

ஒரு பெருநிதியை உருவாக்கிக்கொண்டு பின்னர் திட்டங்களை உருவாக்கலாகாது. அந்நிதிக்காக உருவான திட்டங்களாகவே அவை இருக்கும். அவை வெற்றிபெறுவதில்லை. கனவுகள், திட்டங்களே முக்கியமானவை. அவற்றுக்கான நிதியை அதன் பின் கண்டடையவேண்டும். எவ்வளவு தேவையோ அவ்வளவு. அந்த நிதி அதற்காக சிறப்பாக பயன்படுத்தப்படவேண்டும். அதை முடித்துவிட்டு செல்வத்தின் எடையின்றி அடுத்த செயலுக்குச் செல்லவேண்டும்.

உலகமெங்கும் மாணவர்கள் கொண்ட நித்ய சைதன்ய யதி  அவருடைய குருவால் அவருக்கு அளிக்கப்பட்ட  குருகுலத்தை நிர்வாகம் செய்யக்கூட வைப்புநிதியை உருவாக்கவில்லை. அவர் ஆண்டுதோறும் பரம ஏழையாகிக்கொண்டே இருந்தார். இன்று அவருடைய மாணவர்களால் அந்த அமைப்பு முன்னெடுக்கப்படுகிறது. நிதியை அவர்கள் திரட்டுகிறார்கள். நாமும் அளிக்கிறோம். அதுவே உகந்தது. பெரும் நிதி இருந்து, அந்நிதிக்காகவே வந்தமையும் ஒருவர் கைக்கு அமைப்பு செல்வதை விட இன்று அது முட்டி மோதி முன்னகர்வதே சிறந்தது.

ஜெ

மீள்வு -கடிதம்

இரு வாழ்க்கைகள், இரு பாதைகள்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்
அடுத்த கட்டுரைநாலாயிர திவ்விய பிரபந்தம்- ஒரு பயிற்சி வகுப்பு