ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியது. ரசாயன உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்திய அரசாங்கம் பாரம்பரிய முறைகளில் ஊறிப்போன இந்திய விவசாயிகளுக்கு புதிய ‘விஞ்ஞான பூர்வமான’ விவசாயத்தை அறிமுகம் செய்தது. அதன் பின் நாற்பதுவருடங்கள் கழித்து ரசாயன உரம் போட்டு பழகி நிலத்தை கெடுத்துக்கொண்ட மக்களிடையே ரசாயன உரம் போடவேண்டாம் உயிரியல் உரங்களை போடுங்கள் என்று அதைவிட பலமடங்கு பணத்தைச் செலவுசெய்து அரசே பிரச்சாரம் செய்கிறது

முப்பதுகளில் அவுரி ,சணல் விவசாயிகள் வரிச்சுமை தாங்காமல் அவுரிக்கு விலை கிடைக்காமல் போராடினர். பலர் தற்கொலை செய்து கொண்டனர். காந்தி அவர்களுக்காக போராடினார். பட்டேல் போராடினார். ஐம்பதுகளில் கடுமையான உணவுப்பஞ்சத்தால் மக்கள் இறந்தனர். எழுபதுகளில் தோட்டப்பயிர்கள் விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் செத்தனர். தொண்ணுறுகளில் பருத்தி முதலிய பணப்பயிர்களின் விலைவீழ்ச்சியினால் விவசாயிகள் சாகிறார்கள். ஒவ்வொரு பஞ்சம் சாவுகளுக்குப் பின்னரும் அரசு நிபுணர்களைக் கூட்டுகிறது. வெளிநாட்டு உரக்கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொழுத்த அவர்கள் புதிய திட்டங்கள் தீட்டுகிறார்கள். பணம் அள்ளி இறைக்கப்படுகிறது. ஒரு பகுதி விவசாயிகள் தப்புகிறார்கள் அதற்கு வேறு ஒரு பகுதி விவசாயிகள் அழிகிறார்கள்.

அரசை மாற்றும் வல்லமை மக்களுக்கு உள்ளது. ஒரு அரசை மாற்றினால் அதே போன்ற இன்னொரு அரசுதான் வரும். ஒரிசாவில் பலியபால் என்ற தீபகர்ப்ப முனையில் ஒரு ராக்கெட் தளம் அமைக்க அரசு முடிவுசெய்தது. ஏற்கனவே முப்பதுவருடம் முன்பு ஹிராகுட் அணைக்காக நிலம் காலிசெய்யப்பட்ட மக்களுக்கே இன்னமும் நஷ்ட ஈடு வழங்கப்படாத நிலையில் வெற்றிலைக் கொடிகளுக்குப் பெயர்போன தங்கள் வளமான நிலங்களை இழக்க மக்கள் தயாராகவில்லை. மக்கள் உள்ளூர் அரசியல் தலைவர்கள் தலைமையில் போராடினார்கள். போராட்டம் கடுமையாக இருந்தது. மெல்ல அதற்கு ஜனதாக்கட்சி தலைமை வகித்தது. அதன் தேசியதலைவரான சந்திரசேகர் அவரே வந்து போராட்டத்தை நடத்தினார். ஆட்சி மாறி சந்திரசேகரே பிரதமர் அனார். பலியபால் ராக்கெட் தளத்துக்கு அவரே ஆணை விடுத்து நிலங்களைக் கையகப்படுத்தினார்.

அம்மக்களுக்கு இருபதுவருடம் கழிந்தும் இன்னும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. ஹிராகுட் அணைநிலங்களுக்கு கொடுத்த பின்னர்தானே இதற்குக் கொடுக்க முடியும்? உள்ளூர் போராட்டதலைவருக்கு பலியபாலில் சிலை எடுக்கப்பட்டது. அதற்கு சந்திரசேகரே வந்து மாலை அணிவித்து வீரவணக்கம் செய்தார். மக்களுக்கு கிடைத்தது மேலும் சில தியாகிகளின் சிலைகள். அவ்வளவுதான் .

ஆம், வேடிக்கைகளுக்கு ஜனநாயகத்தில் பஞ்சமேயில்லை. கேரளச் சித்தரான ‘நாறாணத்துப் பைத்தியம்’ பற்றி ஒரு கதை உண்டு. ஒரு யானைக்கால் நோயாளி அவரை அணுகி தன் நோயை மாற்றித் [அகற்றி] தரும்படி கோரினார். நோய் மாறியது, வலதுகாலில் இருந்து இடதுகாலுக்கு. அதைப்போன்றதுதான் ஜனநாயகத்தின் ஆட்சி. ‘கடவுளும் கவர்மெண்டும் ஒன்று அதை தூற்றாதே பழி சேரும் உனக்கு’ என்று தொடங்கும் கி.கஸ்தூரிரங்கனின் புகழ்பெற்ற கவிதை ‘ கவர்மெண்டைப் பழிக்காதே மேலும் கவர்மெண்ட்தான் வந்துசேரும் ‘ என்று முடியும்.

சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் என்ன வேறுபாடு. இரண்டிலும் அநீதிகள் உண்டு. ஜனநாயகத்தில் அநீதி கேலிக்கூத்தின் வடிவில் நடக்கும். அதைப்பார்த்து சிரிக்கும் உரிமையும் நமக்கு உண்டு. அப்படிச்சிரிக்கும் படைப்புகள் இந்தியா ‘நேருயுகக்’ கனவுகள் கலைந்து யதார்த்தத்துக்கு திரும்பிய சோர்வுக்காலகட்டத்தில் எல்லா மொழிகளிலும் உருவாயின. சிறந்த அங்கதப்படைப்புகள் இந்தியமொழிகளில் அறுபதுகள் முதல் எண்பதுகள் முடிய வந்தன. அதன் பின் நமக்கு ஜனநாயகத்தின் மீதான மாயக்கவற்சி விலகி இது இப்படித்தான் என்ற தெளிவு வந்தது. முதலாளித்துவம் சுரண்டல் ஊழல் மற்றும் பாரபட்சம் மூலமே இயங்கக்கூடியது என்ற விழிப்புணர்வு வந்தது. இந்தச் சுரண்டலுக்கும் ஊழலுக்கும் பாரபட்சத்துக்கும் எதிராக இயங்கக்கூடிய அமைப்புகள் ஜனநாயகத்தை இழந்து நேரடி வன்முறைக்குச் செல்லும் என்றும் அவ்வன்முறையை விட இந்த ஊழலே மேலென்றும் நாம் நினைக்கத் தொடங்கினோம். அங்கதம் குறைந்தது

தமிழில் கிருத்திகா ‘ தர்மஷேத்ரே’ ‘ சத்யமேவ’ ‘நேற்றிருந்தோம்’ ‘புகைநடுவினில்’ போன்ற நாவல்கள் வழியாக அதிகார அமைப்பு சார்ந்த உயர் ரக அங்கதத்தை தொடங்கிவைத்தார். இந்திரா பார்த்தசாரதி ‘சுதந்திர பூமி ‘ ‘தந்திரபூமி ‘ முதலிய நாவல்கள் வழியாக அதை அபத்தத் தளம் நோக்கி எடுத்துச்சென்றார். ஆதவன் ‘காகிதமலர்கள்’ மூலம் அதை நவீனகாலம் வரை கொண்டுவந்தார். ஐராவதம் பல சிறுகதைகளை நுண்ணிய அங்கதமாக அமைத்துள்ளார். சு.சமுத்திரத்தின் கதைகளும் இதற்கு உதாரணமாகச் சொல்லத்தக்கவை.

இந்த மூன்று தலைமுறை எழுத்தாளர்கள்தான் அதிகாரவர்க்கம் சார்ந்த அங்கதத்துக்கு தமிழில் உதாரணங்கள். இவ்வரிசையைச்சேர்ந்த படைப்பாளி ஸ்ரீலால் சுக்லா. அவரது ‘ராக் தர்பாரி ‘ அங்கதத்தை ஒரு விரிவான நாவலாக வளர்த்தெடுத்து இவ்வகைசார்ந்த இந்தியநாவல்களில் ஒரு பேரிலக்கியமாக அதை நிறுவியது.

*
தர்பாரி ராகம் நாவலை வாசிக்கும் எளிய வாசகனுக்கு சில குழப்பங்கள் நிகழலாம். இதில் உள்ள எல்லா நிகழ்ச்சிகளும் செயற்கையானவை. நம்பகத்தன்மை ஆசிரியரின் குறிக்கோளாகவே இல்லை. நக்கல்செய்வதும் வேடிக்கையாக்குவதும் மட்டுமே அவரது நோக்கமாக உள்ளது. ஆகவே எல்லா இடங்களிலும் ஆசிரியரின் இருப்பு தெரிந்தாப்டியே உள்ளது. ஓரு யதார்த்த நாவலைப்படிக்கும் அதே மனநிலையுடன் தர்பாரி ராகத்தைப் படித்து மதிப்பிட்டால் ஏமாற்றம் ஏற்படலாம். இது ஓர் அபத்த நாவல். உண்மையைச் சொல்வதல்ல அவலத்தை மிகைப்படுத்தி கிண்டல்செய்வதே இதன் நோக்கம். அந்தக்கோணத்தில் இதைப்படிக்க வேண்டும்.

அங்கதம். அபத்தம் இரண்டுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. அங்கதம் என்பது ஒரு உறுதியான தார்மீக நிலையில் நின்றபடி அதன் அடிப்படையில் பிறவற்றை நகையாடும் நோக்கு ஆகும். சிறந்த உதாரணம் ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி ‘ தமிழ் பண்பாட்டை போரை எல்லாம் எள்ளி நகையாடும் சிங்காரம் வீரம் என்ற விழுமியத்தின் அடிப்படையிலேயே அதைச் செய்கிறார். ஆனால் அபத்தம் என்பது எந்த அடிப்படையும் இல்லாதது. வாழ்க்கையே ஒரு கேலிக்கூத்து என்ற தரிசனமே அதன் அடிப்படை. அந்த வகையான அபத்தம் ஒரு ஆழ்ந்த மனக்கசப்பின் விளைவு. தர்பாரி ராகம் அத்தகையது.

நம் இலக்கிய மரபில் அங்கதம் அபத்தம் இரண்டுக்குமே முக்கியமான இடம் இருந்துள்ளது. தமிழில் அங்கதத்தையே அடிப்படையாகக் கொண்ட பெருநூல்களோ அதற்குரிய வடிவங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நம்முடைய நாட்டுப்புறக்கலைகளில் அங்கதமும் அபத்தமும் மையமான சுவைகளுள் ஒன்றாகவே இருந்துள்ளன. கேலிக்கூத்து என்ற சொல்லே நம்மிடம் உள்ளது. ஆகவே பண்டைய கலைகளிலும் அது வலுவாகவே இருந்திருக்கலாம். நம்முடைய செவ்வியல் பிரக்ஞை அவற்றை பொருட்படுத்தி பதிவு செய்யவில்லை என்று கொள்வதே சிறப்பாகும்.

சம்ஸ்கிருதத்தில் ஐந்தாம் நூற்றாண்டு முதலே அங்கதம் அபத்தம் இரண்டுக்கும் உரிய பொதுவடிவமாக நாடகத்தில் பிரஹசனம் என்ற வடிவம் உருவாகி மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. செவ்வியல் நாடகங்களில் கூட சூத்ரதாரன் பிரஹசனத்தின் இயல்புடன் இருப்பது அனுமதிக்கப்பட்டிருந்தது.

பிரஹசனம் என்றால் சரியான மொழியாக்கம் கேலிக்கூத்துதான். நாட்டுப்புறக் கேலிக்கூத்து வடிவத்தையே சம்ஸ்கிருத நாடகம் பிரஹசனமாக மாற்றி உள்வாங்கிக் கொண்டது என்றும் சொல்லலாம். ஏனெனில் கேரளச் செவ்வியல் கலைகளான சாக்கியார் கூத்து, ஓட்டன் துள்ளல் போன்றவை சம்ஸ்கிருத பிரஹசனத்தைப் போன்றவை. ஆனால் அவற்றில் நாட்டார் தன்மைகள் அதிகம். அவை நாட்டார் கலைகளுக்கும் பிரஹசனத்துக்கும் நடுவே உள்ளவை. பிரஹசனம் கேலிக்கூத்தை உருவாக்க மந்தபுத்தியினர் குடிகாரர்கள் ஆகியவர்களை பெரிதும் பயன்படுத்தியது. தமிழ்நாட்டில் புகழ்பெற்றிருந்த பிரஹசனமாகிய மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய ‘மத்தவிலாச பிரஹசனம்’ அதன் பெயர் சொல்வது போலவே குடிகாரர்களைக் கொண்டு பௌத்தர்களை கிண்டல்செய்வதாகும். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கிறது இப்பிரதி.

தர்பாரி ராகத்தை நம் செவ்வியல் வடிவங்களுள் ஒன்றான பிரஹசனத்தின் நவீன விரிவாக்கம் என்று கொண்டால் அதை ரசிக்கக்கூடிய முறையும் மதிப்பிடவேண்டிய அளவுகோலும் நமக்குக் கிடைக்கிறது. முதன்மையான ஒரு கேலிக்கூத்து என இதை தயங்காமல் சொல்லலாம்.

*

தர்பாரி ராகம் நேரடியான அங்கதத்துடன் தொடங்குகிறது. கிட்டத்தட்ட எல்லா வரிகளிலும் ஆசிரியரின் கசப்பின் விஷம் நிறைந்துள்ளது. போலீஸ் பார்த்தால் சாலையில் நிற்கிறது என்றும் டிரைவர் சாலையோரமாக நிற்கிறதென்றும் ஒரேசமயம் வாதிடத்தக்கபடி நிற்கும் டிரக், யார் அடிபட்டாலும் கவலையே படாத டிரைவர்கள், கைக்குகிடைத்த உள்ளூர் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் கடைகள் அங்கே உப்புநீர், டீத்தூள்குப்பை நாட்டுசர்க்கரை ஆகிய கழிவுப்பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட உயர் ரக பானகமான டீ என தொடங்குகிறது நாவல்.

வழக்கம்போல இரண்டுமணிநேரம் தாமதமாக வரும் என்று எண்ணி ரயில் நிலையத்துக்கு வந்த ரங்கநாத் ரயில் ஒன்றரை மணிநேரம் மட்டுமே தாமதமாகப் போனதை அறிந்து கொதித்து புகா ர்புத்தகத்தில் எழுதியபின்னர் டிரக் பிடிக்க வந்து சேர்கிறான். டிரக் டிரைவர் மகிழ்வுடன் ஏற்றிக் கொள்கிறான். காரணம் ரங்கநாத் அணிந்திருக்கும் கதர். ஆகவே அவனை சிஐடி போலீஸ் என்று நினைத்துவிட்டான். அவன் சிஐடி அல்ல என்று ரங்கநாத் சொல்லும்போது டிரைவர் கோபத்துடன் பின்னே எதற்கு கதர் அணிந்திருக்கிறாய்? என்கிறான்.

வழியில் போலீஸ் வழிமறிக்கிறது. டிரக்கில் எல்லா உறுப்புகளும் உடனடியாக களையப்படவேண்டியவை. ஆகவே நடவடிக்கை எடுக்க முடியாது. மேல்நடவடிக்கை பற்றிய கடுமையான ஆலோசனைகள். கடைசியில் பேரம் படிகிறது. டிரக் கிளம்புகிறது. சாலையோரம் கூட்டம்கூட்டமாகப் பெண்கள் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். சும்மா காற்று வாங்க வேண்டாமே என்று மலம் கழிப்பதும் நடக்கிறது. கிராமம் வந்துவிட்டது.

உடலைத்தேற்றிக்கொள்ளும் பொருட்டு சிவ்பால் கஞ்ச் கிராமத்துக்கு வரும் ரங்கநாத் இதன் கதாநாயகன். அவனது மாமா வைத்தியர் சாகேப் அங்கே கிராமத்தலைவர், பஞ்சாயத்து போடு தலைவர், கல்லூரி தாளாளர், கோ ஆபரேட்டிவ் பாங்க் சேர்மேன் இன்னபிற மக்கள் சேவைகள். அவர் வெள்ளையன் காலத்தில் அவனுக்கு சேவை செய்து மக்கள் சேவையில் பழுத்த அனுபவம் கொண்டவர். பஞ்சயத்து போர்டு கட்டிடம், குதிரை லாயம் போன்ற பலவகை கட்டிடங்களை ஆக்ரமித்து உருவாக்கபட்ட காலேஜ் என்னும் நிறுவனம் . அங்கே சார்பியல் அடர்த்தி கோட்பாட்டை தன்னுடைய சொந்த மாவரைக்கும் தொழிலை சேர்த்து போதனைசெய்யும் ஆசிரியர்கள். அந்நேரத்தில் நடிகைகளின் மார்பகங்களை ஆராயும் மாணவர்கள். உள்ளுர் மாணவர் தலைவரும் வைத்தியரின் மகனுமாகிய ரூப்பன். முந்நூறு கிராமங்களுக்கு மொத்தப்பொறுப்பாக உள்ள நான்குபேர் அடங்கிய போலீஸ் ஸ்டேஷன். அதன் முன் அவர்களின் அனைத்து வழக்குகளுக்கும் நீதிமன்றத்தில் நிரந்தர சாட்சியாக விளங்கியருளும் கோவணாண்டி மனிதர். சாக்கடைகள் அபிவிருத்தியடைந்த கிராமம். அதன் நடுவே நம்பர் பத்து ஜன்பத் சாலை போல அதிகாரத்தின் குறியீடாக ஆன வைத்தியரின் ‘தாழ்வாரம்’ அவருக்கு இரவுபகலாக பாங் அரைக்கும் சனீஸ்வரன். நாவலின் எல்லா கூறுகளும் அங்கதமாகவே விரிகின்றன.

வைத்தியர் தனக்கே உரிய மருத்துவக் கோட்பாடு உடையவர். விந்துதான் அனைத்து வலிமைகளுக்கும் காரணம். அதை சிந்தாமல் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஆயிரம் எதிரிகள். விந்துவை பாதுகாத்தால் நாடே பாதுகாப்பாக இருக்கும். அறம் செழித்த அப்பழையகாலத்தில் நாடெங்கும் உயர்தர விந்து சேமிக்கப்பட்டிருந்தது. அதை மையமாக்கியே அவரது வைத்தியம். இதைத்தவிர ‘மூலம்!’ என்று ஆளுயர கரிய தார் எழுத்துக்களால் கூவிச்சொல்லப்படும் ‘ஆபரேஷன் தேவையில்லாத’ கொடியநோய். விவசாயிகள் உற்பத்தியை பெருக்க மறுப்பது போலவும் இந்தியா விவசாய நாடு என்பது அவர்களுக்கு இன்னும் தெரியாது என்பதுபோலவும் எண்ணிக்கொண்டு சுவரில் வேறு விளம்பரங்கள் முழக்கமிட்டன. அவ்வப்போது அரசியல்வாதிகளும் பேருரையாற்றினர்.

நாட்டில் எல்லாம் முறைப்படி நடக்கிறது. கபீர் பக்தரான ‘நொண்டி’. நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு ஒன்றுக்காக தாசில்தார் ஆபீஸில் ஒரு நகல் கேட்டிருந்தார். லஞ்ச விஷயமாக சண்டை முற்றி நான் சட்டபூர்வமாகவே நடப்பேன் என்று குமாஸ்தா வஞ்சினம் உரைத்து விட்டான். நொண்டியும் சரி சட்டப்படி பார்க்கலாம் என்று பதில் சூளுரை விடுத்தார். சட்டத்துக்கும் சட்டத்துக்குமான தர்ம யுத்தம் பல ஆண்டுகளாக நடக்கிறது. விண்ணப்பங்கள் தொடர்ந்து முறைப்படி பலபடிகள் மேலேறி கீழே இறங்கி கடைசியில் நிராகரிக்கப்படுகின்றன. மீண்டும் புதிய விண்ணப்பம். நொண்டி சோர்ந்துவிடவில்லை. ஊரை காலிசெய்து தாலுகா ஆபீஸின் வராந்தாவிலேயே தங்கிவிட்டான்.

நொண்டி நம்பிக்கை இழப்பதேயில்லை. ”அதிகாரிகளைக் குற்றம்சொல்லாதீர்கள் சார், அவர்களின் கடமைதானே இது. இது ஒரு தர்ம யுத்தம்” என்கிறான். மகிழ்ச்சியுடன் ” நகல் கிடைத்துவிடும் சார். எல்லாம் சரியாகி வந்திருக்கிறது. வழக்கமாக விண்ணப்பம் மேல் அலுவலகத்தில் தொலைந்துபோகும். இப்போது திரும்பிவந்திருக்கிறது. நல்ல அடையாளம். எல்லாம் உங்கள் ஆசி ”என்கிறான். நொண்டியை காந்திக்காக கட்டப்பட்ட சதுக்கத்தில் அமரவைக்கும் ஆசிரியர் அளிக்கும் குறியீட்டர்த்தம் மிக வெளிப்படையானது.

கிராமத்திற்கு அதற்கே உரிய நம்பிக்கைகள் உள்ளன. யுகயுகாந்தரங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக நம்பப்படும் கோயில் ஒரு சிறிய சுதைமாடம். ஏதோ ஜமீந்தார் கட்டியது. உள்ளே உள்ள மகிஷாசுர மர்த்தனி சிலை உண்மையில் தொன்மையான ஏதோ கிரேக்கப் போர்வீரனின் மார்பளவுச்சிலை. இது துர்க்கை அல்ல, துர்க்கைக்கு குறைந்தபட்சம் மார்பகங்களாவது இருக்கும் என்று சொல்லப்போகும் ரங்கநாத் வசைகளை வாங்கிக் கட்டிக்கொள்கிறான். ஆங்கிலக் கல்வி பயின்று தொன்மையான இந்து நாகரீகத்தை அவமானப்படுத்தத் துணிந்த மிலேச்சன் என்று.

வைத்தியரின் கல்லூரிதான் கதையின் முக்கியமான மையம். அங்கே அவர் ஜனநாயகமுறைப்படி தேர்வுசெய்யப்பட்ட தலைவர். பிரின்சிபால் அவருடன் மதியவேளைகளில் ·பாங்க் அருந்தும் ஆசாமி. அவருக்கு சவாலாக துணைபிரின்சிபாலாக ஆக விரும்பும் கன்னா. வைத்தியரின் உள்ளுர் எதிரியான அபின் வியாபாரம் செய்யும் ராமாதீன் கல்லூரியை கைப்பற்ற நினைக்கிறார். அதற்கு கன்னாவை அவர் பயன்படுத்துகிறார். வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டதுமே வாக்களர்களை மிரட்டி ஓடவிட்டு — அதற்கு ஹாக்கிமட்டைகள் பயன்படுகின்றன– நடத்தப்பட்ட தேர்தலில் வைத்தியர் மாபெரும் வெற்றி அடைகிறார். ரமாதீன் தளரவில்லை. சமர் தொடர்கிறது

நடுவே வைத்தியரின் கஞ்சா அரைப்பாளரான சனீஸ்வரன் என்ற மங்கள் அவரால் பஞ்சாயத்து தேர்தலுக்கு நிறுத்தப்பட்டு வெல்கிறார். வைத்தியர் அவரை தன்பிடிக்குள் வைத்திருக்கிறார். வைத்தியரை அகற்ற பலவிதமான முயற்சிகள் நடக்கின்றன. கடைசியில் கன்னா வெளியேற்றப்படுகிறார். அந்த ஊரையே வெறுத்து ஓடநினைக்கும் ரங்கநாத் அந்த இந்தியாவே அந்த ஊர்தான் என உணர்ந்துகொள்கிறான். இதுதான் சுருக்கமாகச் சொன்னால் தர்பாரி ராகத்தின் கதை

*
இந்தக் கதையின் எல்லா அம்சங்களும் கேலிக்கூத்தாகவே நிகழும்படி நாவலை ஆக்கியிருக்கிறார் ஸ்ரீலால் சுக்லா. நமது மக்களாட்சியின் எல்லா அமைப்புகளும் நாவலில் வெளிவந்து கேலி நடனமிட்டு மறைகின்றன. நீதிமன்றம் போலீஸ் அரசியல்வாதிகள் கோட்பாடுகள் கொள்கைகள் எதுவுமே மிச்சமில்லை. சிவ்பால் கஞ்ச் உண்மையில் ஜனநாயகமெனும் கேலிக்கூத்து நடக்கும் ஒரு குட்டி இந்தியா.

இந்திய பேரிலக்கியங்களின் வரிசையில் ஐயத்துக்கிடமில்லாமல் இந்நாவலை நிலைநாட்டுவது இதன் அங்கத விஷம் நிறைந்த மொழியே. சம்ஸ்கிருத இலக்கணம் அங்கதத்தை நிலைநாட்டும் முக்கியமான அம்சமாக வக்ரோக்தியைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொன்றைப்பற்றியும் சொல்ல வழக்கத்துக்கு மாறான கோணத்தை எடுத்துக்கொள்வதே வக்ரோக்தி. சொல்லும் மொழியின் திரிபிலும் வக்ரோக்தி வெளிப்படுகிறது. வக்ரோக்தி என்பது உண்மையில் ஒரு விகடம் அல்ல. சிரிப்போ வேடிக்கையோ அதன் நோக்கம் அல்ல. வழக்கமான கோணத்தில் நாம் பார்க்கும்போது கண்ணில் படாத சாராம்சம் ஒன்றை கோணல் மூலம் நமக்குக் காட்டித்தருவது அது. ஆகவேதான் சம்ஸ்கிருதச் செவ்வியல் அங்கதத்துக்கு உயர் கவித்துவமளவுக்கே முக்கியத்துவம் அளித்தது

தர்பாரி ராகம் பெரும்பாலும் எல்லா சொற்றொடர்களிலும் வக்ரோக்தியையே கொண்டுள்ளது. இதை மிக ஆர்வமூட்டும் ஒரு வாசிப்பனுபவமாக ஆக்குவது இதுவே. விளக்குவதைவிட உதாரணங்கள் மூலம் காட்டுவதே சிறந்ததாகும்.

‘இந்திய அரசியல் சாசனத்தில் மூலாதார உரிமைகளைப்பற்றி கூறியிருக்கும் அத்தியாயத்தைப் படிக்கும்போது ஏற்படும் தூய்மையான பவித்திரமான உணர்வுகளே பளபளவென ஆரஞ்சுத்தாளில் அச்சிடப்பட்டிருக்கும் கல்லூரிச் சட்டதிட்டங்களைப் படிக்கும் போதும் ஏற்படும். யதார்த்தமெனும் அழுக்கிலே புரண்டு கொண்டிருக்கும் மனமும் அதைப்படிக்கும்போது சற்றே தூய்மையுற்றது எனலாம்.’

‘வேதாந்தம் நமது பாரம்பரியம். கோஷ்டி மனப்பான்மையையும் நாம் வேதாந்தத்தில் கண்டுவிடமுடியும். ஆகவே கோஷ்டி பிரிதலும் நம் பாரம்பரியம்தான்.நாடு சுதந்திரம் பெற்றபின் நாம் நம் கலாச்சாரப் பாரம்பரியத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறோம். அதனால்தான் ஐரோப்பாவுக்கு விமானப்பயணம் மேற்கொள்ளும் முன் சோதிடர் மூலம் பிரயாணத் திட்டத்தை வரைகிறோம். அயல்நாட்டுச்செலவாணி முதலிய சிக்கல்களை விலக்க பாபாக்கள் சாதுக்களின் ஆசியைக் கோருகிறோம். ஸ்காட்ச் விஸ்கி குடித்து ஆசனவாயில் சிரங்கை வரவழைத்துக் கொண்டு யோகாசனமும் பிராணயாமமும் பழகுகிறோம்’.

‘சக்கிலியர் என்பது ஒரு சாதி. தீண்டத்தகாத இனம் என்று அதற்குபெயர். தீண்டத்காதது என்பது இரண்டுகாலுள்ள ஒர் உயிர்ப்பிராணி. அரசியல் சாசனம் ஏற்படும் முன் அதை யாரும் தீண்டியதில்லை. அரசியல் சாசனம் என்பது ஒரு காவியம். அதன் 17 ஆம் அத்தியாயத்தில் தீண்டாமை அழிக்கப்பட்டுவிட்டது. அதாவது வதம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் நாடும் மக்களும் காவியத்தால் வாழ்பவர்கள் அல்ல. அவர்களுக்கு தர்மமே உயிர்நாடி. தீண்டாமை என்பது இந்நாட்டின் தொன்மையான தர்மம்’

‘இன்னும்கூட சிலருக்கு நினைவிருக்கலாம் காந்தி என்பவர் பாரத நாட்டில் பிறந்த ஒருவர். அவரது அஸ்திகளை ஒருவழியாக திரிவேணி சங்கமத்தில் கரைத்தபின்னர் இனி பெரிய சதுக்கங்களும் கட்டிடங்களும் அவர் பெயரால் எழுப்பட்டால் போதும் என்ற முடிவெடுத்தபிறகு சிவ்பால்கஞ்சில் காந்தி சதுக்கம் அமைக்கப்பட்டது.’

‘கோர்ட்டுக்கு போவது நல்லது. அங்கே போனால் ஒரு திருடன் இன்னொரு திருடனை நடத்துவது போலவே அதிகாரிகளும் பிறரும் நம்மிடம் நடந்துகொள்வார்கள்’

‘மறுபிறவி என்ற சித்தாந்தம் சிவில் கோர்ட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் தங்கள் வழக்குகள் முடிவுறாமலேயே போகிறோமே என்ற ஏக்கம் வாதி பிரதிவாதி இருவருக்குமே ஏற்படாது போகும்.’

‘கிராமத்துக்கு வெளியே நீண்டகன்ற மைதானம் ஒன்று நாளுக்குநாள் தரிசாக மாறிக்கொண்டிருந்தது. புல்பூண்டுகள்கூட முளைப்பதில்லை. அதைப் பார்த்ததுமே ஆச்சாரிய வினோபா பாவேயிடம் தானமாகக் கொடுப்பதற்கேற்ற லட்சிய நிலப்பரப்பு என்று தோன்றும்’

‘இந்தியாவில் படித்தவர்களுக்கு சிற்சில சமயம் ஒரு வியாதி வந்துவிடும். அதன் பெயர் மனசாட்சியின் நெருக்கடி. இந்த நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளி மன இறுக்கம் மற்றும் நிராசையால் உந்தப்பட்டு நீண்ட பிரசங்கங்கள் புரிகிறான். பலத்த சர்ச்சையும் விவாதமும் நடத்துகிறான். அறிவுஜீவியாக இருப்பதனால் தன்னை நோயாளியாகவும் நோயாளியாக இருப்பதனால் தன்னை அறிவுஜீவியாகவும் நிரூபித்துக் கொள்கிறான்’

‘அறிவுக்கு மதிப்பு உள்ளதுபோலவே முட்டாள்தனத்துக்கும் ஒரு மதிப்பு உண்டு’

*

தர்பாரி ராகம் அதன் அங்கதம் மூலம் நம் வாழ்க்கையை பீடித்திருக்கும் உதாசீனத்தை ஊழலை அதன் விளைவான விரக்தியை படம்பிடித்துக் காட்டுகிறது. இன்னொரு விஷயம் என்னவெனில் இந்நாவலில் ஸ்ரீலால் சுக்லா வேடிக்கையாகவும் கசப்புடனும் எழுதிய அதீதமான அபத்தச் சித்திரங்கள் அதன் பின் வந்த வருடங்களில் பிகாரில் தொடர்ந்து யதார்த்தமாக நடந்தன. தேவிலால் துணைப்பிரதமாராக இருந்தபோது ஓம்பிரகாஷ் சௌதாலா நடத்திய மேகெம் தேர்தல் வன்முறையின்போது இந்தி இதழ்கள் ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரிராகம் சொல்லும் முன்றுவகை தேர்தல் முறைகளில் ஒன்று உண்மையாகிவிட்டது என்று மீண்டும் மீண்டும் எழுதினார்கள்.

[ தர்பாரி ராகம் .ஸ்ரீலால் சுக்லா. தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத். நேஷனல் புக் டிரஸ்ட்]

முந்தைய கட்டுரைமூதாதையரைத்தேடி
அடுத்த கட்டுரைவிவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்