அகரமுதல்வன் தன் இணையப்பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். எம்.கோபாலகிருஷ்ணனுக்கு அவர் தன் ஆகுதி அமைப்பின் வழியாக ஒரு முழுநாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யவிருக்கிறார். அதன் காரண காரியங்களை விளக்கி அவர் எழுதியிருக்கும் இந்தக் குறிப்பு புன்னகையை உருவாக்கியது.
1986ல் நான் எழுத்தாளனாக அறிமுகமான நாட்களில் மூத்த எழுத்தாளர்களுக்கு விழாக்கள் ஒருங்கிணைத்தேன், மலர்கள் வெளியிட்டேன். இன்றுபோல அவை எளியவை அல்ல. கைப்பணம் செலவாகும். அந்த மூத்த எழுத்தாளர்களோ அன்று சிற்றிதழ் சூழலுக்கு வெளியே எவருமறியாதவர்கள் – உண்மையில் அவர்களை விட எனக்கு விரிவான அறிமுகம் அன்றிருந்தது. காரணம் நான் வருகையில் கொஞ்சம் ஊடக இடம் இலக்கியத்திற்கு அமையத் தொடங்கியிருந்தது.
ஏனென்றால் அது ஒரு கடமை. முந்தைய அனலில் இருந்து தன் அனலை கொளுத்திக்கொள்ளுதல். அது எப்போதுமே இங்கே நிகழ்ந்து வருவது. சுந்தர ராமசாமி இலக்கியத்துள் நுழைந்ததே அன்று மறக்கப்பட்டுவிட்டிருந்த புதுமைப்பித்தனுக்கு ஓர் இலக்கிய மலர் வெளியிட்டபடித்தான். சி.சு.செல்லப்பாவின் இலக்கியவிமர்சனப் பணி தொடங்கியதே அவர் பி.எஸ்.ராமையாவுக்கு எழுதிய நீண்ட ஆய்வுக்கட்டுரைகள் வழியாகத்தான்.
இத்தனை ஆண்டுகளாகின்றது. இன்றும் ஓர் இளம் இலக்கியவாதி எதனால் இதைச் செய்கிறான் என பொதுச்சூழலுக்கு விளக்க வேண்டியிருக்கிறது. பொதுச்சூழல் மொண்ணைகள் அப்படியே காலம்தொடா மலைப்பாறைகள் போல் நம்மைச் சூழ்ந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை எதாவது எப்போதாவது சென்றடையுமா?
அகரமுதல்வன் கட்டுரை