நலம்தானே?
தங்கள் கீதை உரையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கர்மயோகம் 30வது செய்யுளின் கடைசி சொற்றொடரை, “துயரமறுத்து போர் புரிக” என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். மூலத்தில் “யுத்யஸ்வ விகத ஜ்வர” என்றும், ஆங்கில மொழிபெயர்ப்புகளில் fight without fever/grief என்றும் வருகிறது. இப்போதெல்லாம் விடாமல் என்னுள் ஓடும் சொல் இது.
கீதை ஓர் தொடர் உரையாடல்தான். இந்த செய்யுளில்கூட அச்சொல் ஒரு சிறு இடத்தையே வகிக்கிறது. எனினும் வாய்விட்டு வாசிக்கயில் இதன் ஒலி, பொருள் இரண்டும் சேர்ந்து ஓர் மந்திரமாக பதிந்து விட்டது. இசைமேதை பாலமுரளிகிருஷ்ணாவின் அளவான மெட்டில், உரையாடல் போல் அமைந்த கீதை தொகுப்பும் ஓர் காரணம்.
கம்பன் பற்றிய ஓர் உரையில் நீங்கள் கூறியதுபோல், பெறும் படைப்புகளில் சில சொற்கள் தனியே நின்று நம்முடன் பேசுகின்றன. இந்தச் செய்யுள் பல செயல்களில் நான்கொண்ட உள் மனநிலையை கண்ணாடிபோல் காட்டியது. பெரும் வெறுப்பு கொண்ட தருணங்கள் நினைவில் ஓடின – “எப்ப முடியும் இந்த கழுத்தறுப்பு”, “நாசமா போச்சு போ.” நண்பர் ஒருமுறை “நீ அந்த ப்ராஜக்ட்ட நல்லாத்தான் பண்ண, ஆனா எப்பவும் ஏன் மொகத்துல அப்பிடி ஒரு கடுப்பு?” என்று சிரித்தபடி சுட்டி இருக்கிறார். அண்மையில் ஒரு மைல்க்கல் பிறந்த நாளை கடந்தேன் – 50. உலகியல் அளவுகோலின்படி என் பயணம் நிறைவானதே. எனினும் நினைத்த அளவு தொடங்காத பணிகள் பல என அறிவேன். ஓர் செயலை தெரிவு செய்து ஏற்கலாம் மறுக்கலாம். ஏற்றால் அச்செயலின் களிப்பு, இடர் இரண்டிலும் சமநிலை வேண்டும். எண்ணங்கள் உயர நான் கடைபிடிக்க நினைக்கும் நெறிகளில் ஒன்று – “துயரமறுத்து செயல் புரிய வேண்டும்”, ஆம் “युध्यस्व विगतज्वरः”.
நன்றி,
கணேஷ்
அன்புள்ள ஜெ
கீதையுரையை பலமுறை கேட்டேன். தொடர்ச்சியாக கீதையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதை பக்தி நூல் முக்திநூல் என்றெல்லாம்தான் பெரியவர்கள் உபன்யாசம் செய்கிறார்கள் .அதை ஓர் உபதேசமஞ்சரியாகத்தான் சொல்கிறார்கள். அதை அன்றாட வாழ்க்கையில் செயலை சிறப்புறச் செய்வதற்கும், செயல்வழியாக நிறைவை அடைவதற்கும் உரிய் நூலாகவும் இளைஞர்கள் அணுகலாம் என்பது மிக வியப்பான ஒரு புரிதலாக இருந்தது. கீதையின் சொற்களுடன் கோவிட் காலத்து பெரும் அழிவில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டேன். உங்கள் சொற்கள் இல்லையேல் கீதையை இப்படி நான் கண்டடைந்திருக்க மாட்டேன். நன்றி
மகேந்திரகுமார் கிரி