செவ்வியல் இசையும், சூஃபி இசையும்….

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

நித்திய வாழ்வின் நீராழத்துக்கு இழுக்கும் மீன் ஒன்றும், நிலத்தில் புழுதிக்கு இழுக்கும் பாம்பு ஒன்றும் மனிதனுக்குள் இருக்கின்றன. கூண்டையே மேலே தூக்க நினைக்கும் பறவை ஒன்றும், கீழே சாய்க்க நினைக்கும் எலி ஒன்றும் அவனுக்குள் இருக்கின்றன. ‘தேவ நிலைக்கு எழும் நம்பிக்கையால் வானவர்களின் இறகுகள் ஒட்டவைக்கப்பட்டஒரு கழுதையைப் போல் அவன் இருக்கிறான். மனிதன் தன் மிருக இச்சைகளை எதிர்த்துப் போராட வேண்டும். தன் ஆன்மா எந்த தெய்வீக ஒளியில் இருந்து புறப்பட்டதோ அதனுடன் மீண்டும் இணைய அவன் தன் மிருக மனத்தை அடக்கிப் பணிய வைக்க வேண்டும். மாயப் பொய்யுலகில் இருந்து புலன்களின் வழியே அவனுக்கு ஊட்டப்படும் தவறான தகவல்களை அவன் புறக்கணிக்க வேண்டும். தன் கூர்மதியைச் செம்மை ஆக்கி தர்க்கத்தைக் கடந்து அவன் ஆன்மிக உலகுக்குள் பாய்ந்துவிட வேண்டும்.

கீழைத்தேயவாத ஆசிரியர்களில் ஒருவரான வீலர் எம். தாக்ஸ்டன் ஜூனியர் அவர்களின் கூற்றை ரமீஸ் பிலாலி அவர்கள் தமிழில் இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வார்த்தைகளை வாசிக்கையில் அகமெழுந்த அதே உணர்வுப் பெருநிலைதான், கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமணியம் மற்றும் சூஃபி இசைக்கலைஞர் அரிஃபில்லா ஷா ரஃபி ஆகிய இருவரும் இணைந்துபாடும் இப்பாடலிலும் முளைத்தெழுகிறது. ‘நீயன்றி எனக்கேது உறுதிஎன ஒரு குரலும், ‘ஆணை உன்மேல் ஆணை‘. இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசைக்கோர்ப்பில் நவீன இசைவடிவத்தில் இந்த இறைப்பாடல் உருவாகியுள்ளது. இறைவனைத் துதிக்கும் இருவரின் குரலும் நமக்குள் கடத்துவது ஒலியாலான பேரதிர்வை.

நமக்குள் இறுகிக்கிடக்கும் எத்தகைய கற்கதவையும் திறக்கவல்லது இசை. நல்ல இசை நமக்கு ஞானம் பற்றிய தேடலை ஞாபகப்படுத்துகிறது. இன்னதெனக் குறிப்பிடமுடியாத ஒரு எண்ணத்தின் மீது சிந்தையைக் குவியவைத்து தன்னிலையை மறந்து சிலகணம் கடவுள்தன்மையில் கரையவைக்கிறது. வேழத்தின் முன்பு வேடன் தனது ஆயுதங்களைத் தரைவீழ்த்தி பணிவதைப்போல, நல்லிசை என்பது நம் செல்திசையில் பேருருவாக நின்றெழுகிறது. நீராழத்தில் மீனைப்போலவும் , நிலத்தல் பாம்மைப் போலவும் தன்னைச்சுற்றிய வாழ்வுச்சூழலோடு தனது பிறப்பையும் இருப்பையும் கரைத்துக்கொள்ளும் வாய்ப்பை இந்த இசைகேட்டல் மெய்யாக்குகிறது.  

செவ்வியல் தமிழிசையும், நாகூர் சூஃபி இசையும் இணைந்துருகி இறையைத் துதிக்கும் இப்பாடல் பாலைவனப் பெரும்பரப்பில் காற்றின் அதிர்வலைகளால் கும்மட்டங்களாக உயரெழுந்து அழியும் மணல்மேடுகள் போல இறைதொழும் ஆலயங்களை இருதயத்துள் எழுப்பிக் கலைத்து தடமழிக்கிறது. ‘சமத்துவம் மட்டுந்தான் சாகாத தத்துவம்என்பதன் குறியீடாகவும் இத்தகைய கலைமுயற்சிகள் நிலைபெற வேண்டும். நல்லிணக்கத்தை போதிக்கும் எல்லா நல்லிசையும் நம்மிசை. அத்தகைய இசையால் நிறைவதும்கூட ஒருவகையில் இறையருளே!

நன்றியுடன்,

சிவராஜ் 

குக்கூ காட்டுப்பள்ளி 

முந்தைய கட்டுரைடோட்டோ சான், கடிதம்
அடுத்த கட்டுரைதகடூர் கோபி