வரும் நாளை

Power of optimism . by Kavita Joshi

மதிப்பிற்குரிய ஐயா.

நான் சென்னையிலிருந்து அரவிந்த், தங்களின் வாசகன்.சுய முன்னேற்றம் தொடர்பாக தங்களின் சமீபத்திய தெளிவாக்கக் கட்டுறைகளைப் படிக்கும்போது, என்னுடைய இந்த நீண்டகால சந்தேகத்தை நிபர்த்தி செய்யும் பொருட்டே இவ்வஞ்சலை எழுதுகிறேன்.

நம்முள் பலர், முந்தைய காலமே சிறந்தது எனவும், உலகின் நிலை நொடிக்கு நொடி மோசமடைந்து வருவது போலவும் தொடர்ந்து புலம்புவதை காண முடிகிறது.கொடிய அணுவாயுதங்கள், கலாச்சார மற்றும் சூழியல் சீர்கேடுகள், இயந்திரமயமான சமூக ஊடகத்தால் தனித்தீவுகளாக்கப்பட்ட மனிதர்கள்,கவனச்சிதைவு உள்ளிட்ட காரணிகள், இவர்களின் வாதத்தை வலுவாக்குபவை.

இன்னொரு புரத்தில், சிலர், இப்புடவி தன்னைத் தொடர்ந்துமேம்படுத்திக்கொண்டே வருவதாக நேர்மறையாக நம்புவதையும், தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துபதையும், நம்முள் எழும்பெரும் பிரச்சனைகளே, முழு உலகையும் இணைக்கும் பாலங்களாக திகழ்பவை என நம்புபவர்களாகவும் இருப்பதை காண முடிகிறது. உதாரணமாக, மின்னணு தொழில்நுட்பத்தால் வாசிப்புப் பழக்கம் குறைவதாக ஒருசாரார் சொல்ல, அதன் இணைய வடிவத்தை உத்தேசித்தே, வென்முரசு போன்ர மாபெரும் படைப்புகள் எழுதப்பட்டதாக தாங்கள் சொல்வதையும், அதை பலர் வாசித்துவிவாதிப்பதையும் கண்டு திகைக்கிறோம்.

இத்தகைய தொழில்நுட்பத்தாலேயே, என் போன்ற விழிச்சவால் கொண்டோராலும், தன்னார்வலர்களின் நேரத்தை நம்பியிராமல், இது போன்ற பெரிய நூல்களை விரைவில் படித்து, எங்கள் சிந்தையை செப்பனிட முடிகிறது என்பதும் உண்மைதான். முன்னேற்றம் என்ற பெயரில், மனிதன் செய்தவற்றாலேயே பெரும் நோய்த் தொற்றுகள் தோன்றுவதாக ஒரு சாராரும், இம்முன்னேற்றங்களாலேயே, 2020 இல் உருவான பெரும் நோய்த் தொற்றுச் சவால், குறைந்த இழப்புடன் கையாளப்பட்டதாக இன்னொரு சாராரும் சொல்வதுண்டு.

இத்தகைய வாதங்களால், என் போன்றோருக்கு நிகழும் மாற்றங்களில் எவற்றை ஏற்பது மற்றும் எவற்றை தவிர்ப்பது என முடிவு செய்வதில் பெரும் குழப்பங்கள் உருவாகிக்கொண்டே இருப்பதால், கால மாற்றங்களில், நல்லனவற்றை அடையாளம் காணும் சிந்தனையை வளர்த்துக்கொள்ளும் வழிவகைகளை அரிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றியுடன்.

இரா அரவிந்த்.

அன்புள்ள அரவிந்த்,

இதெல்லாம் நானே பலமுறை எழுதியவை. ஆனால் புதிய வாசகர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்காக மீண்டும் மீண்டும் எழுதவேண்டியுள்ளது.

முதலில் ஒரு கேள்வி. இந்தக் காலத்தை விட எந்தக் காலம் சிறந்தது? சென்ற தலைமுறையினர் வாழ்ந்த  1950 முதல் 1980 வரையிலான ஆண்டுகளா? இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இரண்டு சதவீதமாக இருந்த காலகட்டம். வேலையில்லா திண்டாட்டம் அதியுச்சத்தில் இருந்த காலகட்டம்அன்றைய சினிமாக்களையே பாருங்கள் வேலையில்லாமல் தவிப்பதுதான் பெரும்பாலும் மையக்கரு. 

இந்தியா முழுக்க உணவுப்பஞ்சம் இருந்தது. நடுத்தரக்குடும்பங்களே சோளம், ராகி என சாப்பிட்டனர். மூன்றுவேளை உணவு என்பதே உயர்நடுத்தர வர்க்கத்திற்குரியதாக இருந்தது.  ஆண்டுக்கொருமுறை கோழியிறைச்சி சாப்பிட்டால், மாதமொரு முட்டை சாப்பிட்டால் அது ஆடம்பரம். அழுக்கில்லாத உடைகளுடன் ஒருவரை தெருவில் பார்ப்பதே அரிதாக இருந்தது. நாட்டில் உயர்கல்வி மிகக்குறைவு. ஊர்களில் ஒழுகாத வீடுகளே மிக அரிது.  நீரிழிவு உட்பட பல நோய்களுக்கு மருந்தே இல்லை. ஒருவர் அறுபதாண்டு தாண்டினாலே அது ஒரு சாதனை என்று கருதப்பட்டது. 

அரசியல் களத்தில் நக்சலைட் கிளர்ச்சிகள், அவற்றின் மீதான ஒடுக்குமுறைகள். அதன் பின் நெருக்கடி நிலை. இரண்டு போர்கள். அதன் விளைவான பொருளியல் இழப்பு. காஷ்மீர் , பஞ்சாப், அஸாம் கிளர்ச்சிகள் வழியாக அன்றாடம் சாவுச்செய்திகள். உலக அளவில் நசுக்கப்பட்ட ஏராளமான அரசியல் புரட்சிகள்.  அமெரிக்க இளம் தலைமுறையே நம்பிக்கை இழந்து ஹிப்பிகளாக அலைந்தது.  இன்றை விட அன்று எது மேலானதாக இருந்தது? 

சரி, அதற்கு முந்தைய தலைமுறையா? 1915 முதல் 1950 வரையா? இரு உலகப்போர்கள். உலகமெங்கும் கடும் பொருளியல் நெருக்கடி. இந்தியா முழுக்க கிளர்ச்சிகள். வங்கப்பஞ்சம், பிகார் பஞ்சம். நான்கு  முறை மாபெரும்  தொற்றுநோய்கள். கோவிட் போல எல்லாம் இல்லை. மக்கள் லட்சக்கணக்கில் செத்தொழிந்த ஸ்பானிஷ் காய்ச்சல். இரண்டு காலரா. ஒரு பிளேக். இன்றுள்ள கல்வியமைப்புகள் இல்லை. போக்குவரத்து வசதி இல்லை. தனிமனித சுதந்திரமே இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் சாதி வகுத்தளித்த வாழ்க்கையை வாழ்ந்தாகவேண்டும். 

இளமையிலேயே பெண்களுக்கு மணம் செய்து வைப்பார்கள். நோயில் கணவர்கள் சாவது மிகச்சாதாரணம். ஆகவே தெருவுக்குத் தெரு இளம் விதவைகள். மறுமணம் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் பத்து முதல் பதினாறுவரை குழந்தைகள் பிறந்து இரண்டுமூன்றுதான் தங்கும் எஞ்சியவை நோயில் சாகும். குழந்தைச்சாவு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் மிகப்பெரிய தொடர்சோகமாக இருந்தது

அதற்கு முந்தைய 1870 முதலான முப்பதாண்டுகளா? உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய பஞ்சம் இந்தியாவை ஆட்கொண்டது. ஏழுகோடி பேர் பட்டினியால் செத்து அழிந்தனர். அதற்கிணையானவர்கள் அனாதைகளாகி தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டு அன்னிய நிலங்களுக்குச் சென்றனர். அங்கே மலேரியாவால் கூட்டம் கூட்டமாக செத்துக் குவிந்தனர். அதற்கு முன்? அப்போது இன்னொரு மாபெரும் பஞ்சம். இந்தியா முழுக்க போர்கள். நம்பவே முடியாத அளவுக்குச் சாதிக்கொடுமைகள். மனிதர்களை அடிமைகளாகப் பிடித்து விற்ற காலகட்டம். 

சென்றகாலம் சிறந்தது என்றால் எவருக்கு? எந்த வகையில்? ஏன் அதைச் சொல்கிறார்கள்? ஒன்று, ஒன்றும் தெரியாத மண்ணாந்தைகள் வாய்போன போக்கில் சொல்கின்றன. இரண்டு, சாதி, இனம், மதம் என பழம்பெருமை பேசும் கும்பல் சென்றகாலத்தை துதிக்கும் மனநிலை கொண்டது. நவீன காலம் என்பது அவ்வகையான குறுகிய எண்ணங்கள் அர்த்தமிழந்துகொண்டிருக்கும் சூழல் கொண்டது. ஆகவே அவர்கள் காலத்தில் திரும்பி அமர நினைக்கிறார்கள். பழமைவாதிகள் அனைவருக்குமே பழைய காலமே பொற்காலம். 

மதங்கள் எல்லாமே பொற்காலத்தை நேற்றைய காலம் என்று கற்பிக்கின்றன. ஏதேன் தோட்டம் மகிழ்ச்சியானது, மனிதன் அதிலிருந்து வெளியேறிவிட்டவன் என்று கிறிஸ்தவம் சொல்கிறது. கிருத யுகமே உயர்ந்தது, இன்றைய காலம் கலியுகம் என்கிறது இந்து மதம். மத நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளத்தில் இச்சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன. இந்த சிந்தனைகளை முன்வைப்பவர்கள் சான்றோர்களின் பங்களிப்பினால் எந்த பயனுமில்லை என்று மறைமுகமாகச் சொல்கிறார்கள். ரிஷிகள், புனிதர்கள், புத்தர், காந்தி என அனைவருமே மனிதவாழ்க்கையை எவ்வகையிலும் மேம்படுத்தவில்லை என்கிறார்கள். அதாவது தங்கள் மதஞானிகளையே முட்டாள்கள், வீணர்கள் என்கிறார்கள்.  

புதிய சிந்தனைகளை உருவாக்குபவர்களின் ஆழுள்ளத்தில் மதம் உருவாக்கிய நம்பிக்கைகள் உறைந்து புதிய சிந்தனைகளை தீர்மானிக்கக்கூடும். உதாரணமாக, மனிதன் கள்ளம்கபடமற்று வாழ்ந்த ஏதேன் தோட்டத்தில் இருந்து எப்போதைக்குமாக வெளியேறிவிட்டான் என்ற யூதகிறிஸ்தவ நம்பிக்கையைத்தான் சிக்மண்ட் ஃப்ராய்ட் வேறுவகையில் உளவியல் சார்ந்து சொல்கிறார். இவையெல்லாமே வெறும் நம்பிக்கைகள், அதற்குமேல் எந்த மதிப்பும் அற்றவை. 

அத்துடன் ஓர் உளவியல் பிரச்சினையும் உண்டு. மனித வாழ்க்கையின் வரைபடம் என்பதே குறைந்து தேய்ந்து மறையும்தன்மை கொண்டதுதான்.  குழந்தைப்பருவத்தில் உடல்நிலை நன்றாக உள்ளது. புலன்கள் கூர்மையாக உள்ளன. ஆகவே எல்லாமே இனிதாக உள்ளது. மெல்ல மெல்ல ஒவ்வொன்றும் அணைகின்றது. உடல் சோர்ந்து, உள்ளம் சலிக்கிறது. ஆகவே இளமையைக் கடந்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இறந்தகாலமே இனிது. அதையே அவர்கள் சொல்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்திற்கு இதற்குரிய சிக்கல்கள் உண்டு. நேற்று கொடும் பட்டினி இருந்தது. இன்று மிதமிஞ்சிய உணவு, பொருத்தமற்ற உணவு என்னும் சிக்கல் உள்ளது. தன் பேரப்பிள்ளைகள் தின்ற உணவு செரிப்பதற்காகச் சாலைகளில் ஓடுவார்கள் என தெரிந்திருந்தால் நம் பாட்டாக்கள் நம்பாமல் திகைத்து பின்னர் வெடித்துச் சிரித்திருப்பார்கள். இன்று சூழலியல் சீர்கேடுகள் மிகுதி. ஏனென்றால் இன்று நுகர்வு அதிகம். ஆடைகள், வசதிக்குரிய பொருட்கள், ஊர்திகள் எல்லாமே மிகுதி. உலக வரலாற்றில் என்றுமே இத்தனை வீடுகள் இருந்ததில்லை. இவ்வளவு வசிப்பிடம் மனிதனுக்கு அமைந்ததில்லை. இன்று கவனம் நிலைப்பதில்லை. ஏனென்றால் நமக்குக் கிடைக்கும் உலகத்தொடர்பு மிகமிக அதிகம். நேற்று கிடைத்தவை கொஞ்சம், ஆகவே கவனக்குவிப்பு மிகுதி.

ஆனால் இச்சிக்கல்கள் எல்லாம் இப்போதுதான் தோன்றியுள்ளன. சிக்கல் உருவானபின்னரே தீர்வை நோக்கி மானுடம் செல்லும். சென்ற இருபதாண்டுகளிலேயே உணவு பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு உருவாகியிருக்கிறதென பாருங்கள். ஒவ்வொருவரும் சரியான உணவு பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். சூழியல் பற்றி பேசுகின்றனர். கவனக்குவிப்புக்கான பல்வேறு உளவியல் பயிற்சிகள் கண்டடையப்படுகின்றன. அச்சிக்கல்களை மானுடம் எதிர்கொள்ளும். 

மிகையுணவால் இன்று கொழுப்பு சேர்ந்து இதயநோய், ரத்த அழுத்தம் ஆகியவை மிகுந்துள்ளன என்றும் அதனால் பட்டினிகிடந்து மக்கள் செத்த பஞ்சகாலமே சிறப்பானது என்றும் ஒருவர் சொன்னால் அவரை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? வரலாற்றை சற்றேனும் கவனிக்கும் ஒருவர் நாம் வாழும் இந்தக்காலமே இதுவரை இந்தப் பூமிமேல் மானுடம் அடைந்த மிகச்சிறந்த வாழ்க்கை கொண்டது என்று எளிதில் உணரமுடியும். இன்னும் மேலான காலமே வரவுள்ளது என்றும் சொல்லமுடியும். இந்த முன்னகர்வுக்காக நாம் இதுவரை மானுடத்தை முன்னெடுத்த சிந்தனையாளர், அறிவியலாளர், இலக்கியவாதிகள், கலைஞர்கள், தலைவர்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளோம். 

மானுடம் இதுவரை பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துள்ளது. பஞ்சம், இயற்கைப்பேரழிவுகள், தொற்றுநோய்கள், போர்கள்…. ஒவ்வொன்றையும் அது வென்று கடந்துள்ளது. இனியும் கடந்து செல்லும். இதுவரை மனிதனை கொண்டுவந்து சேர்த்த சக்திகள் என்ன? நம்பிக்கை, போராட்ட உணர்வு, ஒற்றுமை, கருணை ஆகியவற்றுடன் அனைத்துக்கும் மேலாக கற்றுக்கொண்டே இருத்தல்.  இந்தச் சக்திகளையே கலையிலக்கியங்கள் வளர்த்து மானுடனில் நிறுவியுள்ளன. அந்த சக்திகள்  இனியும் மனிதனை கைவிடா.. .

ஜெ

முந்தைய கட்டுரைகலைச்செல்வி
அடுத்த கட்டுரைஆலம் – இசை- கடிதம்