ஜெமோ
விஷ்ணுபுரம் அமைப்பின் செயல்பாடுகள் மீண்டும் நண்பர்கள் நடுவே பேசப்பட்டன. இதன் வழியாக நீங்கள் தமிழ்ச்சூழலில் ஒரு மறுக்கமுடியாத அதிகார சக்தியாக உங்களை கட்டமைத்துக்கொள்கிறீர்கள் என்றும், இதை அனுமதிக்கக்கூடாது என்றும் நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். நீங்கள் உருவாக்கும் இந்த அதிகாரத்தைப் பற்றி யோசித்தது உண்டா?
சிவராஜ் மோகன்
*
அன்புள்ள சிவராஜ்
ஒவ்வொரு ஆண்டும் நிகழும் விவாதம்தான் இது.
எச்செயலிலும் ஓர் அதிகாரச் செலுத்தல் உள்ளது. அதிகாரவிழைவே செயலின் ஊற்று. அது எந்தவகை அதிகாரம், என்ன விளைவை உருவாக்குகிறது என்பதே முக்கியம். சமூகவலைத்தளங்களின் உதிரி வரிகளை வாசித்துவிட்டு ‘அதில ஒரு அதிகாரம் இருக்கு’ வகை பிலாக்காணங்களைக் கடந்து கொஞ்சம் யோசித்தால் தெரியும்.
தந்தை, தாய், குடும்பம், ஆசிரியர் அனைவருமே உங்கள் மேல் அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். ஒவ்வொரு கணமும் மொழி வழியாக, ஆசாரங்கள் மற்றும் நடைமுறைநெறிகள் வழியாக பண்பாடு உங்கள் மேல் அதிகாரத்தைச் செலுத்துகிறது . மதம், சமூகம் ஆகியவற்றின் அதிகாரம் உள்ளது. சட்டத்தின் அதிகாரம் உள்ளது.
இவை தவிர மாபெரும் அதிகாரம் என்பவை இரண்டு. ஒன்று அரசியல். இரண்டு வணிகம்.
ஒவ்வொரு கணமும் அரசியல் உங்கள் மேல் கருத்துப் பிரச்சாரம் வழியாகவும், உங்களை சாதி மதம் இனம் மொழி என பிரித்து உணர்ச்சியூட்டுவதன் வழியாகவும் மிகப்பெரிய அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. அந்த அதிகாரம் வழியாக சிலர் செல்வத்தை அடைந்து துய்க்கிறார்கள். எஞ்சியோருக்கு நம்மவருக்கு அதிகாரமிருக்கிறது என்னும் போலிநிறைவு மட்டும் எஞ்சுகிறது. அந்த அதிகாரத்தை எதிர்ப்பே இன்றி விழுங்குபவர்கள் , அது உருவாக்கித் தரும் சொற்களை அப்படியே திரும்பிச் சொல்பவர்கள்தான் உங்களிடம் அதிகாரம் பற்றிப் பேசும் கும்பல்.
அவர்களைப் பாருங்கள், நாள்தோறும் சினிமா, ‘பேஷன்’, ‘டிரெண்ட்’ , நுகர்வு என முட்டிமோதிக்கொண்டிருப்பார்கள். அவை வணிகம் உருவாக்கும் அதிகாரம். விளம்பரங்கள் வழியாக செலுத்தப்படுவது. மொத்த வாழ்க்கையையே அதற்காக அளித்து இ.எம்.ஐ கட்டுவதற்காகவே வாழும் பிராய்லர் கோழிகள் தான் எந்த வகையிலும் அறிவதிகாரத்துக்கு மட்டும் தலைக்கொடுக்கக் கூடாது என்று பேசிக்கொண்டிருக்கின்றன.
அறிவு ஓர் அதிகாரம். அது அரசியலும் வணிகமும் உருவாக்கியிருக்கும் சிறைக்கூண்டிலிருந்து உங்களை விடுவிக்கிறது. பண்பாடு, சமூகம், மதம் உட்பட அனைத்து அதிகாரங்களையும் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. அதற்கு ஒரு விசையை உங்கள்மேல் செலுத்தியாகவேண்டும். அந்த விசையைத்தான் இவர்கள் அறிவதிகாரம் என்கிறோம். அறிவதிகாரம் உங்களை அறியும் ஆற்றல்கொண்டவர்களாக்குகிறது. அந்த அறிவதிகாரத்தையே பரிசீலிக்கவும் நிராகரிக்கவும் பயிற்சியளிக்கிறது. ஆட்படுத்துவதில்லை.
தமிழ்ச்சூழலில் அறிவதிகாரத்தை எதிர்க்கும்படி, அதற்கு உடன்படாதிருக்கும்படி இளைஞர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அரசியல், வணிகம் இரண்டு அதிகாரங்களிலும் அடிமைப்பட்டு அடிமாட்டுத் தொண்டர்களாக, நுகர்வு இயந்திரங்களாக இருப்பது பற்றி எந்த குற்றவுணர்ச்சியுமில்லை. கொடுமை என்னவென்றால், உங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அந்த அதிகார அரசியல் தரப்பினர்தான் அறிவதிகாரத்தை எதிர்க்கும்படி ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விடுதலைச் சக்தியை எதிர்க்கும்படி அடிமைச் சக்தி சொல்லாமலிருக்குமா என்ன?
நானோ, விஷ்ணுபுரம் அமைப்போ மிகமிகச்சிறிய ஒரு விசையையே இந்தச் சமூகம் மீது செலுத்துகிறோம். அதிகம் போனால் சில ஆயிரம் பேரிடம். அதையே இந்த அரசியலதிகார மையங்களால் தாங்கமுடியவில்லை என்றால் இவர்களின் நோக்கம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள்.
இந்தச் சிறிய அதிகாரத்தைக் கொண்டு நான் செய்வது என்ன? எனக்கு முந்தைய தலைமுறையிலும், என் தலைமுறையிலுமுள்ள இலக்கியவாதிகளை கௌரவித்து, கவனப்படுத்துகிறேன். அவர்களிடம் வாசகர்கள் உரையாட அரங்குகளை அமைக்கிறேன். அவர்களின் நூல்களை அறிமுகம் செய்கிறேன், அவற்றை வாசிக்கும் பயிற்சியை அளிக்கிறேன். எங்கள் செயல்பாடுகளை எவரும் பார்க்கலாம். எந்த அரசியல் சார்புமின்றி, கலை ஒன்றையே அளவுகோலாகக் கொண்டு இந்த அறிமுகங்களும் அரங்குகளும் விருதுகளும் நிகழ்கின்றன.
இங்கே வெறும் அரசியலுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். அதைப்பற்றி எவருக்கும் எந்த எதிர்ப்புமில்லை. ஆனால் மிகச்சிலர் இலக்கிய அழகியல் நோக்கில் முன்னிலைப்படுத்தப்பட்டால் மட்டும் சிலர் ஒவ்வாமைகொள்கிறார்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? இன்று தமிழில் இருபதாண்டுகளாக இடைவிடாமல் இலக்கியத்தை மட்டும் முன்னிறுத்தும் வேறு எவர், வேறெந்த அமைப்பு உள்ளது? இத்தனை எழுத்தாளர்களுக்கு வேறெங்காவது மேடை அமைந்துள்ளதா?
சொந்தப்பணம், உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு இதை செய்ய தொடங்கினேன். ஆர்வமுள்ள நண்பர்கள் உடன் இணைந்துகொண்டனர். இப்படி ஒரு இயல்பான இலக்கிய இயக்கம் இன்று இந்தியாவிலேயே மற்றொன்று இல்லை. இதைப்பற்றிய பெருமிதம் எந்த ஒரு இலக்கியவாசகனுக்கும் உருவாகவேண்டும். அவ்வாறு உருவானாலொழிய நீங்கள் இலக்கியவாதி அல்ல. உங்கள் உணர்வுகள் நேர்மையானவையும் அல்ல.
இந்த அதிகாரம் இங்கே ஒரு குறிப்பிட்ட அழகியல் மையத்தை உருவாக்குகிறது, அதற்கு மாற்றாக இன்னொரு கோணம் இங்கே நிறுவப்படவேண்டும் என எண்ணுபவர்கள் இன்னொரு மையத்தை உருவாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். அதுவே ஆரோக்கியமானது. அப்படி பல மையங்கள் வலுவாகச் செயல்பட்டால் அது இலக்கியத்துக்கு நல்லது.
ஜெ