ஆசிரியர் சௌந்தரின் யோக முகாம், மீண்டும்
ஜெ மற்றும் சௌந்தர்ஜி அவர்களுக்கு
விடுமுறையில் குடும்பத்துடன் ஜெர்மனியில் இருந்து கோவை வந்திருந்தோம். இதற்கு முன்பே சில முறைகளில் யோகாசனங்களை பயின்று இருந்தாலும், அது ஒரு மாதிரி கை கூடவில்லை. சரி நமக்கு யோகம் இல்லை என்று விட்டு விட்டேன். நீங்களும் சாருவும் சௌந்தர்ஜி பற்றி எழுதியிருந்ததால், யோகா மேல் திரும்பவும் ஆர்வம் வந்திருந்தது, ஈரோட்டில் யோகமுகாம் என்றதும், இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று என்னையும், எனது மகன் சாஹித்தியனையும் (வயது 11) பதிவு செய்துவிட்டேன்.
யோகமுகாம் செல்லும்போதும் எங்களுடன் மீனாம்பிகையும் காரில் சேர்ந்து கொண்டார்கள். ஜெ என்ற புள்ளி எங்களை இணைப்பதால் பெரிய தடைகளின்றி பேச ஆரம்பித்து விட்டோம். மீனா அவர்கள் சந்தித்த சவால்கள், உங்களை முதலில் பார்த்தது, உங்களின் கூட்டத்தில் இணைந்தது, அவர்கள் விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் செய்துவரும் வேலைகள், அருணா அக்கா, அஜிதன், பாலகுமாரன், வக்கீல் செந்தில் மற்றும் கிருஷ்ணன் என பேசித்தீரவில்லை. கோபியில் சாப்பிட்டுவிட்டு, திரும்பவும் பேசிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம்.
அந்தியூர் தாண்டி மலை ஏற ஆரம்பித்தோம், அப்போது செல்போன் சிக்னலும் கட் ஆகி, நம் மனதில் யோகா பற்றிய எண்ணங்களையும் மட்டுமே நிரப்பியது. மலை ஏற, ஏற, பாதையும் கரடு முரடாக இருந்தது, வழியில் ஒரு இடத்தில், யானை நின்று இருப்பதால் வண்டியை நிறுத்தி அனுப்பினார்கள், வண்டியில் இருந்த அனைவரும் யானையை பார்க்க உற்சாகமாகி விட்டோம். ஒரு யானை தந்தத்துடன், “சீக்கிரம் போங்கள்” என்று ஒரு உந்து உந்தியது. மீனாம்பிகை இத்தனை முறை வந்ததில் இதுதான் முதல் முறையாக யானையைப் பார்த்தது என்று சொன்னார்கள்.
நிகழ்விடத்தைப் பார்த்ததுமே, இது வழக்கமான மலைவாழிடம் இல்லை என்று தெரிந்தது, குடில்கள், உணவகம் மற்றும் உணவு அனைத்தும் எளிமையாகவும் அதே சமயம் நன்றாகவும் இருந்தது. அந்தியூர் மணிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். அந்தியூர் மணியை பார்த்தவுடன் எனக்கு மலையாள நடிகர் Joju George (ஜோசப் படம்) ஞாபகம் வந்தது.
குருஜி சௌந்தர் அவர்கள் 11 மணி அளவில் புத்தர் மற்றும் சரஸ்வதி சிலைகளுக்கு சிறிய பூஜையுடன் யோகா வகுப்புகளை தொடங்கினார். குருஜி அவர்கள் யோகாவிற்கு ஒரு சிறப்பான அறிமுகத்தை (ஆசனம், பிராணாயாமம் மற்றும் தியானம்) வழங்கினார். ஒளி தெரிவது, குண்டலினி எடுப்பது, காற்றில் பார்ப்பது எல்லாம் யோகத்தில் உண்டு ஆனால் அது எல்லாம் நமக்கு தேவை இல்லை என்றும் நம் நோக்கம் ஒரு யோகசாதகன் (பஞ்ச கோசத்தையும் ஒருங்கிணைத்து செயல்புரிய பயிற்சி அளிப்பது) ஆவதே முதல் படி என்று விளக்கினார். மதிய உணவிற்கு பிறகு நான்கு மணிக்கு சந்திப்போம் என்றார். இந்த பயிற்சியில் முக்கிய அம்சமே, அவசரப்படாமல், போதிய இடைவெளிகளில், நிதானமாக கற்றுக்கொள்வது மற்றும் பயிற்சிகளில் ஈடுபடுவதும். குருஜி அவர்கள் நவீன மருத்துவம், ஆயுர்வேதம், தாந்திரீகம், ஆழ்மனம், உளவியல் என பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் விளக்கங்கள் அளித்தார்.
மூன்று நாட்களும், யோகா பயிற்சி, விளக்கங்கள், சிறு உரையாடல்கள், மற்றும் குருஜி அவர்களின் மகன் சத்யனுடனான லைட் மொமெண்ட்ஸ் (இரண்டாம் நாள் நடந்த அந்தாக்ஷரி அதன் உச்சம்) என சென்றது. மனைவியையும் 6 வயது மகனையும் (அவன் பயிற்சிக்கு தொந்தரவாக இருப்பானோ) என்று கூட்டி வரவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக அழைத்து வரவேண்டும். கூட வந்திருந்த பெரியவனுக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது,
உமா மகேஸ்வரி அவர்கள் சென்னையில் இருந்து முதல் நாள் இரவு கிடைத்த பஸ்ஸை பிடித்து, சேலம், ஈரோடு, அந்தியூர் என மாறி மாறி வந்திருந்தார். மற்றவர்களும் பெங்களூர் மற்றும் பல இடங்களில் இருந்து வந்து இருந்தனர், புதியவர்களை சந்தித்தது மகிழ்ச்சி.
ஞாயிறு மதியம் பயிற்சி முடிந்து உணவருந்திவிட்டு கிளம்பினோம். மூன்று நாள் கழித்து தொலைபேசிக்கு தொடர்பு கிடைத்தது. நான் இல்லாமல் பெரிதாக ஒன்றும் நின்றுவிடவில்லை. அதுபாட்டுக்கு எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
இவ்வளவு பொருள் முதலீட்டையும், உழைப்பையும் செலவு செய்து இந்த அனுபவத்தை எங்களுக்கு வழங்கும் உங்களுக்கும், குருஜி சௌந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல.
வடிவேல் கோவை/ஜெர்மனி