மொஹப்பத் – கடிதம்

அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.

https://twitter.com/AjithanJey5925

  டியர் அஜி,

மொஹப்பத்என்ன ஒரு தீவிரமான சொல். ஆழமான பிணைப்பு அவர்தம் மகிழ்வு அதன்பொருட்டு தியாகம் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சுட்டும் முழுமையான சொல். (நாம் அதிகம் கேள்விப்படும் மெஹபூபா என்ற பெயரை இத்துடன் இணைத்துகொண்டேன். பிரியமானவள் என்று பொருளில்.) நாவல் வாசிக்க துவங்கும் முன்னரே இறையாணையின் சொற்களாக இச்சொல் வாசகர்களுக்கு அறிமுகமாகிவிடுகிறது. அல்கிசா கையில் கிடைத்து இரண்டு வாரம் ஆகியிருந்தது. இச்சொல்லை அறிந்துகொண்டவுடன் நாவலை சாதரணமாக வீட்டிலிருந்து வாசிக்க மனம் ஒப்பவில்லை. எனவே வார இறுதியில் கையில் அல்கிசாவுடன் கோவையிலிருந்து கன்னூர் பாசஞ்சரில் ரயில் ஏறினேன். கேரளத்தின் பன்முக சூழல் ஏற்கனவே பெட்டியில் வியாபித்திருந்தது. நாவலில் ஹைதர், சுஹாராவின் குடுப்பத்தினர் ஒவ்வொருவராக அறிமுகமாகிக் கொண்டிருக்க பெட்டியில் இருந்த இஸ்லாமிய குடும்பத்தினர் அனைவரும் வரலாற்று கதாப்பாத்திரங்களாக தோன்ற தொடங்கிவிட்டிருந்தனர். ஹைதரும் குலாமும் கூட்டத்தில் கலந்து அஜ்மீர் தர்க்காவின் வாசலை நோக்கி அந்த பாதையற்ற பாதையில் முன்னகரும் போதே மனம் ஏதோ பரவசமான அனுபவத்தை எதிர்நோக்கியிருந்தது. சிறுவயது முதல் ஆங்காங்கே எப்போதோ கேட்ட பாங்கொலிகள் உருமாறி தெளிவான உச்சரிப்புடன் மனதில் ஒலிக்க தொடங்கியிருந்தன.

குலாம் மாமா நமாஸ் செய்ய வேகமாக உள்சென்று காத்திருக்க ஹைதர் பொறுமையாக அங்கிருக்கும் புனித நீரில் உளு செய்துகொண்டபோது புன்னகைத்துக் கொண்டேன். நான் மிகச்சில முறையே ஒரு மசூதிக்கோ தர்க்காவிற்கோ சென்றிருந்தாலும் அதில் எனக்கு பரிச்சயமானதும் பிடித்தமானதும் இந்த உளு செய்யும் இடம் தான். முதன்முறை ஒரு மசூதிக்கு சென்றிருந்த போது நீர் நிரம்பிய அகலமான தொட்டியையும் அதன் அமைப்பையும் பார்த்ததும் திகைத்துவிட்டேன். கூட வந்திருந்த இஸ்லாமிய நண்பன் உளு செய்வதன் நடைமுறையை விளக்கி அதன் முக்கியத்துவத்தையும் சொல்லிக் கொடுத்தான். சூழ இருப்பவர்கள் பொறுமையாக கை முகம் கால்களை சுத்தம் செய்வதை காணும்பொழுது ஒரு புனித செயலை செய்வதான கவனம் நமக்குள்ளும் வந்துவிடும். அப்போது நீரின் மகத்துவத்தை அறிவோம். நாவலின் பிற்பகுதியில் ஹுசைனின் படையினர் கர்பலா களத்தில் பாலை மணலில் உளு செய்யும் காட்சி இப்படைப்பிற்கு பிறகு மனதில் பதிந்துவிட்ட ஒன்று.

குலாம் மாமா அணுகுவதற்கு எளிமையாகவும் எதையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ப்ரியத்துக்குறியவராய் வருகிறார். எளிய மனங்கள் எப்போதும் எளிதில் சில உயரங்களை எட்டிவிடுவதுண்டு. அவர் அஜ்மீர் வந்தது முதலே அப்படித்தான் இருக்கிறார். இறைவனை விளித்து நமாஸ் முடிக்கும்போதே அவர் உச்சத்தில்தான் இருக்கிறார். மறுபுறம் சுஹாரா, அமீனா, கதீஜாத்தையுடன் கிளம்பி வரும்போதே அன்றிரவே உஸ்தாதின் பாடல் பின்னனியில் ஒரு மகத்தான காதல் நாடகத்திற்கான களம் தயாராகிவிடுகிறது.

நான் இருந்த ரயில் அதற்குள் பாலக்காடு தாண்டி சென்றுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே பாரதப்புழா உடன்வந்து மறைய நான் இறங்கவேண்டிய இடத்தை தீர்மானித்துக் கொண்டேன். பட்டம்பி அருகே திருமிட்டக்கோடு எனும் சிற்றூரில் பாரதப்புழையின் கரையில் அமைந்த தொன்மையான பெருமாள் கோவில் செல்வதாக திட்டம். அருகிலேயே ஏதேனும் தர்க்கா இருந்தாலும் தேடிப் பார்க்கலாம் என்றொரு எண்ணம். பட்டம்பியில் விசாரித்தபோது திருமிட்டக்கோட்டுக்கு ஒரு பேருந்தை சுட்டிக் காட்டினர். பின்சீட்டில் சுமார் ஐந்து பேர் அமர்ந்திருக்க நான் படியேறுகையில் அதிலிருக்கும் ஒருவர் குலாம் மாமாவேதான் என்பதை கண்டுகொண்டேன். மேலும் ஒருவர் அமர இடம் இருக்கிறது எனச் சொல்லி அவரே அழைத்து என்னை அவர் அருகில் அமர்த்திக் கொண்டார். அவருக்கு அப்பேருந்தில் இருந்த அனைவரிடமும் பரிச்சயம் இருந்தது. எல்லோரிடமும் சில சொற்கள் பேசியபடி நான் செல்ல வேண்டிய இடம் எங்கிருந்து வருகிறேன் என்பதையெல்லாம் மெல்லிய புன்னகையுடன் விசாரித்து அறிந்து கொண்டார். என்னை சரியான நிறுத்ததில் இறக்கிவிட்டதோடு அந்த ஊரில் உள்ள மசூதி ஒன்றை பற்றியும் சொல்லியிருந்தார். நான் அப்போது நாவலை தொடரவும் பாரதப்புழையை அருகில் காணவும் ஆவல் கொண்டிருந்ததால் நேராக கோயில் நோக்கி நடந்தேன். கோயிலின் பக்கவாட்டிலேயே அமைந்த படித்துறை வழியாக ஆற்றின் மணற்கரையை அடைந்து நாவலை மீண்டும் தொடங்கலானேன்.

நாவலின் இன்னொரு மைய இழையான கர்பலா உயிர்த்தியாகத்தின் பின்னனி சொல்லப்படும்போதே அதன் தீவிரம் நம்மை நிலைகுலைய வைக்கிறது. இந்த சம்பவமே உஸ்தாதின் குரலில் கவிப்பாடல்களாக நாவல் முழுக்க விரிகிறது. அந்த பாடல்கள் அனைத்தும் உணர்ச்சிகரமும் கவித்துவமும் இணைந்தவையாக உள்ளன. இறைவனை விளிக்கும் பக்தி கவிஞனின் வரிகள் போல சில சமயம். காவிய மரபில் வரும் சன்னதம் கொண்ட ஒரு பாணனின் பாடல் வரிகள் போல சில சமயம். படே சாஹேப்பின் குரலில் அக்காட்சிகளை காணத் துவங்குகிறோம்

சொற்களின் வழியே பாடலின் வழியே மகத்தான துக்கத்தின் கதை நீதியின் கதை தியாகத்தின் கதை சொல்லப்படும் போதே ஒரு காதலின் கதையும் அதனூடே சீண்டலும் அதன் இன்றியமையாத தனிமையின் கதையும் வெறும் பார்வைகளின் வழியே சொல்லப்படுகிறது. பார்வைகளின் வழியே பரஸ்பரம் நடக்கும் உரையாடலில் படே சாஹேப்பின் பாடல் ஒரு கட்டத்தில் தீவிரமும் துக்கமும் கொள்ளும்போது ஹைதர் தன்னுள் ஆழ்கிறான். அத்தகைய துக்கத்தை தன் மறுபாதியிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியாது என்பதுபோல. ஆழமான துக்கத்தின் போது மனிதர்கள் தனிமையையே விரும்புகிறார்கள், குறைந்தபட்சம் ஆண்களேனும். அத்துக்கத்திலிருந்து கீழிறங்கும் போதே அவர்களுக்கு துணை தேவைப்படுகிறது. பாடலின் போது முற்றிலும் வேறுலகில் இருக்கும் படே சாஹேப்பும் கூட மர்ஸியா முடித்து விடைபெறும் போது தன் மனைவியின் மடியில் தலைசாய்த்து படுக்கவே விரும்புகிறார். ஹைதர் ஒருவாறு தன்னை தொகுத்துக் கொண்டு மீள்வதற்குள் சுஹாரா சீண்டப்பட்டுவிடுகிறாள். அவளுள் இபிலீஸ் நுழைந்துவிடுவதும் அதை அவள் கடக்க இயலாமல் தவிப்பதும் காதலின் அதன் சிடுக்குகளின் நுட்பமான சித்தரிப்புகள். காதல் இணையரில் நிகழும் பெரும்பாலான பிணக்குகள் இவ்வாறு காரணமற்ற காரணங்களாகவே இருக்கும். அமீனாவும் குலாம் மாமாவும் இருப்பதால் இங்கு சிறு அற்புதத்தின் வழியே இவர்கள் மீண்டும் இணையமுடிகிறது.

தன் மகன்களும் படையின் பெரும்பகுதியும் கொல்லப்பட்டுவிட கையில் தண்ணீருக்காக ஏந்தியிருந்த பிஞ்சுக் குழந்தையும் கொல்லப்பட்டவுடன் மண்ணில் ஒரு சூரியனாய் ஹுசைன் அவர்கள் களம் புகும் தருணம். கர்பலாவை அடையும் போதே தம் இறுதியை உள்ளுணர்ந்துவிட்ட ஹுசைன் ஜனநாயகத்தின் பொருட்டும் தாம் கைகொண்ட நீதியின் பொருட்டும் மரணத்தை நோக்கி பாயும் காட்சிகள் அபாரமானவை

மரணம் கைநீட்டிய திசையை நோக்கி

பாய்ந்தது கூர்கொண்ட இருமுனை

மர்ஸியாவின் தாளம் உச்சம் கொள்ளும் இடத்தில் வந்தமைந்த வரிகள்,

சொல்லில் எழுந்தது மெளனம், மெளனத்தில் எழுந்தது கூர்சொல்

ஒட்டுமொத்தமாக இப்பகுதியை வாசிக்கும்போது ஒரு காவியத்தருணம் தனக்கான கூர்சொற்களை வந்தடைந்திருக்கிறது என்றே நினைத்துக் கொண்டேன். நாவலின் பின்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல இவ்வரிகளும் எவ்வகையிலேனும் அம்மரபில் இணைந்து கொள்ளும் என்பதை உணர முடிகிறது. மண்ணில் யாரும் இப்படி போரிடுவதில்லை என்றும் மதிய தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது என்றும் இறையின் குரல் கேட்டு ஹுசைன் வாள் தாழ்த்துகிறார். ஏற்றி வைக்கப்பட்ட அம்புகள் அவரை வந்தடைகின்றன. அனைத்திற்கும் சமாதானம் சொல்வதுபோல எல்லாம் சரியாகிவிடும் என்பதுபோல என் முன்னால் அந்த ஆழமற்ற நதி தன் சீரான ஒழுக்கில் ஓடிக் கொண்டிருந்தது.

இந்நாவலின் தலைப்பாக அமைந்ததும் நாவலின் பகுதியாகவும் பின்னர் பின்னிணைப்பாக வருவதுமான கிஸாப்பின் கதை நான் வாசித்ததிலேயே எளிய நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. அதன் விசையை இந்நாவல் சரியான வகையில் எடுத்து சென்றுள்ளது. அஜ்மீர் தர்க்காவின் அந்த மகத்தான இரவை எண்ணும்போது அன்று அங்கு கூடியிருந்த ஐயாயிரம் பேரும் படே சாஹேப்பின் குரலின் போர்வையால் போர்த்தப்பட்டு ஒற்றை குடும்பமாக ஆகிவிட்டதாகத் தோன்றியது. இறைத்தூதர் தன் போர்வையினுள் குடும்பத்தார் ஒவ்வொருவராக உள்ளிழுத்துக் கொள்ளும்போது ஏதோவோர் இடைவெளியில் நாமும் மானசீகமாக அதனுள் புகுந்து கொள்கிறோம். அந்த கிஸாப்பினுள் அனைவருக்குமே இடம் இருக்கத்தான் செய்கிறது.

நன்றி  

பாரி

முந்தைய கட்டுரைகாலம் கடந்து செல்கிறது, இதயம் அழைக்கிறது…
அடுத்த கட்டுரைபிறர் எங்கே?