ஆபரணம்- கடிதம்

அன்பின் அஜிதனுக்கு,

நீங்கள் எழுதிய எதையும் உடனுக்குடன் படித்துவிடுவேன். மைத்ரி நாவல் படித்துவிட்டு உங்களிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறேன். அல் கிஸா நாவல் வெளிவந்ததும் படித்துவிட்டேன்

தர்காவினுள் செல்லும்போது தண்ணீருக்குள் நடந்து செல்வது போன்ற அழுத்தம் உடலிலும் மூச்சிலும் இரங்கும். பல தர்காக்களில் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும். வேறு எவ்விடத்தை விடவும் தர்காவினுள் ஆழ்ந்த தியானம் நிகழும். அல் கிஸா நாவலின் தொடக்கத்தில் முய்னுத்தின் சிஷ்டி தர்கா குறித்த விவரிப்பிலேயே இந்த உணர்வைத் தோற்றுவித்துவிட்டீர்கள். அங்கிருந்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட காதல் கதை, இசை சாதகனின் மீட்சி, மாபெரும் தியாகமும் அவர்களைச் செலுத்திய அறமும் என நாவலைப் பிந்தொடர்வது எளிதாகவே இருந்தது.

இந்நாவலை குமரித்துறைவியுடன் மட்டுமே ஒப்பிடத்தோன்றியது. நபியின் போர்வைக்குள் இருந்தவரின் ரத்தம் சிந்தப்படுகிறது; ஆனால் ஒரு கணம் கூட நம்பிக்கையின்மை தோன்றவில்லை. அந்தப் போர்க்களத்தோடு இந்தக் காதல் தொடர்புறும் புள்ளிகளை எல்லாம் தேடித் தேடித் தொட முயல்கிறேன்.எத்தனை அற்புதமான அடுக்குகள்..

நேரில் சந்திக்கும்போது அல் கிஸாவிலும் உங்கள் ஆட்டோகிராப் வேண்டும். நாவலில் எனக்குத் தெரிந்த ஒரே குறை இறுதியில் இடம்பெறும்சில சொற்கள்தான். அதில் நீங்கள் விவரித்திருப்பதை விடவும் நாவல் மிகப்பெரிது.

நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் தத்துவ நூலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் வாசகன்..

பன்னீர் செல்வம்

பி.கு. : சென்னையில் இருக்கும் இரண்டு தர்காக்கள் குறித்து தமிழினியில் அமலன் ஸ்டேன்லி எழுதி இருக்கிறார். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்

முஃமின் புறாக்கள்

தகப்பன் அரூபன்

அஜிதனின் ‘அல் கிஸா’ – வாசு முருகவேல்

தமிழிலக்கியத்தின் முதல் இஸ்லாமிகேட் நாவல் – அல்கிஸா

முந்தைய கட்டுரைநவகாளி யாத்திரை – நிவேதிதா
அடுத்த கட்டுரையுவன் கடிதங்கள்