ரோம், கடிதம்

ரோம்,கிரேக்கம், உலகம் – ஒரு விவாதம்- சுசித்ரா

ரோம்,கிரேக்கம், உலகம் – ஒரு விவாதம்-2

அன்புள்ள ஜெ,

நலமா? இந்தக் கடிதம் பிரசுரம் கண்டதில் மகிழ்ச்சி. நண்பர்கள் வாசித்து எழுதினார்கள்.

இதைப் பற்றி மேலும் ஒரு வரி உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

இதை எழுதிய போது இதன் வடிவம் சரியாக அமைந்திருந்ததா என்ற சந்தேகம் இருந்தது. பயண அனுபவங்களை சொல்லாமல் சாராம்சமான கேள்விகளை மட்டும் சொன்னால் வாசகருக்கு புரியுமா என்று எண்ணினேன். மேலும் நான் எனக்குள்ளே எழுப்பிக்கொண்ட கேள்விகள் முக்கியமானவையா? அல்லது நானே அளவுகடந்து குழப்பிக்கொண்டவையா? என்ற கேள்வியும் என்னிடத்தில் இருந்தது. இந்த ஐயத்தை தெளிவுபடுத்துமளவு தத்துவ வாசிப்பு என்னிடம் இல்லாததை உணர்ந்தேன். எழுதுவதற்கு முன்னால் இருந்த தெளிவின்மையிலிருந்து எழுதியதால் ஒரு படி முன்னால் வந்தேன் என்றாலும் சாராம்சமாக இப்படி ஒரு கேள்விக்கு பொருளுண்டா? அதை சீரியசாக ஆராயவேண்டுமா? அல்லது இப்படி ஆராய்ந்து எழுதுவதே கலை உலகத்துள் இருப்போரை எரிச்சலூட்டுமா? என்றெல்லாம் எண்ணினேன். ஆகவே தான் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

அறிவியக்கவாதி இப்படி ஒரு கேள்வியை விரல் முனையால் தட்டிவிட்டுப் போகவேண்டுமோ என்று கூட நினைத்தேன். ஆனால் அதை என்னால் செய்ய முடியவில்லை என்பதே என்னை எழுத வைத்தது. அந்த விவாதம் எனக்குள் தெளிவாக தீர்வு கண்டது என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நானே எழுதி கண்டடைந்த அந்த புள்ளி – நடித்து நடித்து அறியமுடியும் என்று கண்டுகொண்ட இடம் – ஒரு வகையில் கலை சார்ந்து என் மனம் அடைந்த மறுகண்டுபிடிப்பு, ஒரு புனர்பிறப்பு தான் என்று இப்போது உணர்கிறேன். அந்த இடத்தில் என் அறிவும் உணர்வும் அழகுணர்ச்சியும் – நான் என்று உணரும் அனைத்தும் – முழுமை கண்டது.

நான் என் கடிதத்தில் எழுப்பிய மையக் கேள்வி ஐரோப்பிய தத்துவவாதிகளால் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று அறிந்துகொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை மிக யதேச்சையாகக் கண்டு கொண்டேன். இந்த கடிதத்தை எழுதிய அதே சமயம் ஐசக் தினேசனின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அவர் வாழ்க்கையை வடிவமைத்த மைய மோதல்களில் ஒன்று இதுவே என்று படித்தபோது ஒரே சமயம் ஆச்சரியமும் ஆச்சரியமின்மையும் ஏற்பட்டது. அது அவருடைய அம்மா-அப்பாவின் ஆளுமைகளுக்குள் இருந்த மோதல். அந்த காலகட்ட ஐரோப்பாவின் கலாச்சார மோதலின் ஒரு துளி அது. அவர் எழுத்தில் பலவாராக ஆராயப்பட்டது.

தினேசனை பாதித்த ஷோப்பனவரும் கீர்க்கேகார்டும் நீட்ஷேவும் இந்தக் கேள்வி மேல் விரிவாக எழுதியதாக அறிந்தேன். அதை வாசிக்க வேண்டும். ஆனால் வாசிக்க வேண்டும் என்னும் போதே எந்த அளவுக்கு என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது. இதை நான் சோம்பலினால் கேட்கவில்லை. கலைஞனுக்கு தத்துவார்த்தமான அடித்தளம் பெருமளவில் பலம் கூட்டக்கூடிய விஷயம் என்பதை நம்புகிறேன். நீங்கள் அதற்கு வாழும் சாட்சி. அஜிதன் அறிமுகப்படுத்திய ரிச்சர்ட் வாக்னரின் உதாரணத்தையும் அறிவேன். ஆகவே ஐயமோ சோம்பலோ இல்லை. மாறாக இப்படியான வாசிப்பை நிகழ்த்த ஏதும் உகந்த வழிமுறை உள்ளதா என்று அறியவே கேட்கிறேன். கலைஞர் நாவலாசிரியர் எந்த அளவுக்கு தத்துவ வாசிப்புக்குள் சென்று தன் கேள்விகளை விளக்கிக்கொள்ள வேண்டும் என்பது முதல் கேள்வி. ஓர் இந்தியச்சூழலில் வளர்ந்த, ஐரோப்பிய கலை-தத்துவ மரபுகள் அளவுக்கே இந்திய கலை-தத்துவ மரபுகளின் தாக்கத்தை தன்னில் உணரும் ஒரு தேடலுள்ளவர் இந்த தத்துவங்களை எந்த அளவுக்கு தன் கேள்விகளை விளக்க பின் தொடர வேண்டும் என்பது இரண்டாவது கேள்வி. ஐரோப்பிய் தத்துவத்தையும் இந்திய தத்துவத்தையும் இணைத்து புரிந்துகொள்ளலாமா? அதற்கான வழிகள் என்ன? என்பது மூன்றாவது கேள்வி.

இந்தக் கடிதங்கள் சார்ந்து உங்கள் எண்ணங்களை அறிய எப்போதும் போல் ஆவல் உள்ளது. ஆனால் உங்கள் பதில் பெறாத போதும் எனக்கு நிறைவு தான் ஒரு படி கூடுதல் நிறைவும் கூட. ஏனென்றால் நான் தேடுவது தற்காலிகமான பதில் மட்டும் அல்ல மெய்யான வளர்ச்சியை. இந்நாட்களில் நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் கனவுகண்டு கொண்டிருக்கிறேன். எனக்கு நானே மெல்ல மெல்ல துலங்கிக்கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் நான் வளர்ந்துகொண்டும் இருக்கிறேன் அல்லவா. அந்த நம்பிக்கையே எல்லா தடைகளையும் மீறி என்னை உற்சாகமாக முன்னேர வைக்கிறது. இங்கொன்றும் அங்கொன்றும் என்று ஓரிரு சமயமறிந்த வார்த்தைகள் வழியாக நயமாக செதுக்கி அதற்கான சரியான களத்தையும் நீங்கள் அமைத்து அளிக்கிறீர்கள் என்பது என்னை எப்போதும் பெரிவியப்பில் ஆழ்த்தும் விஷயமாக உள்ளது.

இருந்தாலும் என் சிந்தனைப் போக்கில் எங்கே தவறு செய்கிறோம் எங்கே அசட்டுத்தனமான எளிய குழப்பங்களை பிடித்துக்கொண்டு வெகுதூரம் அல்லாடுகிறோம் என்று அறிய வேண்டுகிறேன். ஏற்கணமே கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரத்தை புதிதாக கண்டுபிடித்துக் கொண்டு வந்து காட்டுகிறேனோ என்ற ஐயம் உள்ளது. ஆகவே என் சிந்தனைகளை முழுமையாக உங்களுக்கு எழுதுகிறேன். தக்க சமயத்தில் ஒரு வார்த்தை தேவையென்றால் பெறக்கூடும் என்று.

மற்றபடி இந்தக் கடிதம் பிரசுரம் கண்டதில் மகிழ்ச்சி. இதன் இறுதிப்பகுதியில் சிறுகதை போல அமைந்த தத்துவ கனமில்லாத இடத்தைப் பற்றி சில நண்பர்கள் அதன் ஆழமும் உணர்வுநிலையின் தீவிரமும் புரிந்து உரையாடினார்கள். அந்தக் கடிதத்தில் நிறைய புனைவு சேர்த்திருந்தேன். ஆனால் அந்தப் பகுதியை எழுதுகையில் புனைவில் மட்டுமே துலங்கும் பேருண்மை ஒன்றை நான் உணர்ந்தேன். அதை வாசகரும் உணர்ந்ததை கண்டேன். எழுத்தாளருக்கு இதை விட பெரிய கொண்டாட்டம் இருக்க முடியுமா?

அன்புடன்

சுசித்ரா

முந்தைய கட்டுரைஇந்தியப் பொருளாதாரத்தில் பெண்கள்
அடுத்த கட்டுரைபாகன் – ஜா.தீபா