ஆயுர்வேத அறிமுக முகாம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சிறு வயதில் தர்காவிற்கு அழைத்துப் போவார்கள் அங்கே மயிலிறகால் தலையத் தொட்டு ஏதோ மந்திரம் போல் முணுமுணுத்து கையில் கயிறு கட்டுவார்கள். அதர்வ வேதத்தில் உள்ள மாந்திரீக சடங்கு மருத்துவம் குறித்து வாசித்தப் போது என் நினைவிற்கு வந்தது இந்த நிகழ்வு தான். இதில் வேதகாலம் முதல் இன்று வரை அறுபடாத ஒரு தொடர் சரடு உள்ளது. திரு சுனில் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத வகுப்பிற்கு செல்வதற்கு முன்பாக நான் வாசித்த வேதமும் ஆயுர்வேதமும் கட்டுரையில் மரபு மருத்துவத்தின் பின்னணி மாந்திரீக சடங்குகள் சார்ந்து ஏற்பட்டதாக புரிந்து வைத்திருந்தேன். ஆனால் மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் மருத்துவத்திற்கு எதிர் நிலையில் இது இருந்ததும் இரு முரண்பட்ட போக்குகளுக்கும் ஒருவித உரையாடல் ஏற்பட்டு ஆயுர்வேத சம்ஹிதைகளான நூல்களில் இடம் பெற்றதையும் அறிய முடிந்தது.

 மூன்று நாள் ஆயுர்வேத வகுப்பு நித்ய வன தேவி மற்றும் புத்தரின் நீராட்டு வழிபாட்டுடன் தொடங்கியது. ஆயுர்வேதம் அல்லது பொதுவாக மாற்று மருத்துவங்கள் குறித்து என் வாழ்க்கையில் இரண்டு கட்டங்களில் மிக வேறுபட்ட தீவிரமான எதிர் நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறேன். ஆனால் என்றுமே புறவயமான அறிவியல் சார்ந்த நோக்கு மருத்துவத்தில் அவசியம் இருக்க வேண்டும் என்பதில் மாறுபாடு ஏற்பட்டதில்லை. அறிமுக அமர்வில் சுனில் ஆயுர்வேதத்திற்கு வந்த கதையும் திக்கற்று இருந்த போது தெரிசனங்கோப்பு மகாதேவன் அவர்களின் உரை அவருக்கு இருளில் ஒரு ஒளியாக அமைந்தது என்பதையும் அறிந்தபோது இந்த மருத்துவ முறை இது போன்ற ஆர்வமுள்ள தனிமனிதர்களாலேயே தற்காலத்தில் முன்னெடுத்து செல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

புத்தரை பிரார்த்தித்து ஆயுர்வேத நூல் ஒன்று தொடங்குவது மிகவும் வியப்பை அளித்தது. ஆசிரியர் இதை ஆயுர்வேதம் என்பதற்கு பதிலாக ஆயுர் பௌத்தம் என்று கூட சொல்லலாம் என்றார். அந்த அளவிற்கு பௌத்தத்தின் செல்வாக்கை ஆயுர்வேதத்தில் காண முடிகிறது. மேலும் இந்த முறை தனித்து அமைந்த ஒன்று அல்ல. கிரேக்க பாரசீக சீன முறைகளோடு இந்திய மருத்துவம் விரிவாக உரையாடி இருக்கிறது. கொண்டும் கொடுத்தும் மருத்துவ முறைகளை பெற்றிருக்கிறது. இடி மின்னல் மழை போன்றவற்றை தெய்வ ஆற்றல்களாக காணும் வேதகால போக்கு நோய்களையும் ஒரு ஆற்றல் உடலை பீடித்ததாகவே பார்த்திருக்கிறது. இது பல தொல் பழங்கால சமூகங்களின் நம்பிக்கை. இதனைத் தொடர்ந்த சம்ஹிதைகளின் காலகட்டத்தில் புறவயநோக்கு ஏற்பட்டது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல். சரகர் என்றால் நடந்தவர் சுஷ்ருத்தர் என்றால் கேட்டவர் இதில் ஒரு நாடோடி தன்மையுண்டு என்று சுனில் கூறிய போது எவ்வாறு அன்றைக்கு வழக்கில் இருந்த பலவித மூலிகை மற்றும் ரச மருந்துகளை இவர்கள் ஒன்றிணைத்து இருப்பார்கள் என்பதனை அறிய முடிகிறது. 

சுனில் எழுத்தாளராகவும் இருப்பதால் பல கதைகளை நடுவே கூறி உரையை மிக சுவாரசியமாக எடுத்துச் சென்றார். தஞ்சாவூர் பாம்பு மாத்திரையின் கதை அதில் ஒன்று. பின்னர் அவருக்கு மிக அணுக்கமான காந்தி ஆயுர்வேதம் குறித்து நல்லதொரு கருத்தை கொண்டிருக்கவில்லை என்பதையும் அதன் பின்னணியையும் கல்கத்தா ஆயுர்வேத மாநாடு நிகழ்வுகளை குறிப்பிட்டு விளக்கிக் கூறினார். காலனிய காலத்தில் ஆயுர்வேதத்திற்கு ஏற்பட்டது ஒரு பெரும் பின்னடைவு

வாத பித்த கபம் என்பதை அடிப்படையாகக் குறிப்பிட்ட போது எவ்வாறு புறவயமாக வரையறுக்க முடியாத இந்த கோட்பாடு வேலை செய்யும் என்று நினைத்தேன் ஆனால் பிந்தைய வகுப்புகளில் ஆசிரியர் அவற்றை விரிவாக விளக்கிய போது இந்த சட்டகத்திற்கு உட்பட்ட ஒரு தர்க்கம் இருப்பதையும் அது புறவயமான திட்டவட்டமான முடிவுகளை தருவதையும் காண முடிந்தது. நண்பர் ஒருவர் எவ்வாறு ஆயுர்வேத மருத்துவம் உங்கள் எழுத்தை பாதித்தது என்று கேட்ட போது அந்தக் கேள்வியை திருப்பிப் போட்டு இலக்கியவாதியாக மருத்துவத்தில் பெற்றதே அதிகம் என்றார்

இதில் நான் பெற்ற திறப்புகளை பின் வருமாறு விளங்கிக் கொள்கிறேன். சத்வ ரஜஸ் தமஸ் வாத பித்த கபம் என்பவை பிறப்பியல்பாக மூன்றில் ஒன்றோ அல்லது இரண்டோ ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும் கூட இவை வாழ்க்கையின் போக்கில் உறைந்த தன்மை உடையதாக இல்லை மாறாக பிரவாகம் போல் ஓடக் கூடியது. தாமசத்திற்கும் அதற்கான பயன் உண்டு. இதனுடன் இணைத்து ஸ்தூல சூட்சும காரண சரீரத்தையும் புரிந்து கொள்ளலாம். இதில் உள்ளார்ந்து இருக்கும் மறுபிறவி கோட்பாடு இதன் பௌத்த தாக்கத்தை தெளிவாகவே உணர்த்துகிறது. ‘குணம்என்னும் அடிப்படை விசயத்தை வைத்தே இவை முடிவு செய்யப்படுகின்றன.

அவ்யக்தம்(unmanifested) அதனில் இருந்து புருஷன் மற்றும் பிரகிருதி அதன் தொடர்ச்சியாக மஹத் அதனை தொடர்ந்து தன்மாத்திரை பிறகு அதனில் இருந்து முக்குணங்கள் என ஒரு தனிமனித உருவாக்கம் அமைந்து இருக்கிறது. இதையே உலக உருவாக்கத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம் என ஆசிரியர் கூறிய போது இதை ஏன் natural medicine என்பதற்குள் வைத்தார்கள் என்பதை தத்துவ பின்னணியில் புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் புறவயமாக முற்றிலும் இயற்கை மருத்துவம் என ஒன்று இருக்க முடியாது என்று தான் நான் இப்போதும் நம்புகிறேன்

ஆசிரியர் சுத்த ஆயுர்வேதர் அல்ல. அவ்வாறு இருப்பதன் ஆபத்தையும் அதற்கு நேர் எதிராக மரபு அடிப்படையில் அமைந்த எந்த ஒன்றையும் மூர்க்கத்தனமாக மறுக்கும் போக்கையும் ஒன்றாகவே சுட்டிக் காட்டினார். அதர்வன் முதல் பிஸ்வாஸ் வரையிலான ஒரு மருத்துவ நிறை அவர்களையும் கூட போலி மருத்துவர் என்று கூறாமல் தகுதியற்ற மருத்துவர்கள் என்று மட்டும் கூறும் அடிப்படை மருத்துவ நூல்களின் போக்கு , இன்று எவ்வாறு ஆயுர்வேதம் ஒரு சாத்விக் டயட்டின் கொடியாகப் பிடிக்கப்படுகிறது ஆனால் உண்மையில் மிக மிக விரிவாக விலங்குகளின் இறைச்சியின் உடல் நலம் சார்ந்த பயன்பாடு , உலகில் உள்ள தாவரஜங்கமங்களை எல்லாம் நோய் தீர்க்கும் மருந்தாகக் காணும் போக்கு மிகவும் நெகிழச் செய்தது. முக்குற்ற பிரகிருதி குறித்த வகுப்பு மிக கலகலப்பாகச் சென்றது. 

ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கும் மேலாக இதே சட்டகத்திற்குள் சிந்தித்து மிகப் பெரிய அளவில் இதை செறிவாக்கம் செய்து இருக்கிறார்கள். பிஷக்கின்(மருத்துவரின்) நம்பகத்தன்மை என்பது அந்த முறையின் போதாமைகளை ஒப்புக் கொண்டு பொய் உறுதிகள் அளிக்காமல் அதே சமயம் ஒரு விடுபட்ட நிலையில் நோயாளிக்கு இறுதிவரை சிகிச்சை அளிப்பது தான். அந்த வகையில் இந்த மருத்துவ முறையின் போதாமைகளையும் ஆசிரியர் தெளிவாகவே சொன்னார். இனி என் சிந்தனை போக்கின் ஒரு பகுதியாக வாத பித்த கபத்தின் அடிப்படையில் சிந்திப்பதும் ஒரு அங்கமாகி விடும். 

உண்மையில் அங்கே வந்திருந்த பலரிடம் இரண்டாம் நாளே அது ஏற்பட்டு விட்டதை காண முடிந்தது. இதில் முக்கியமானது அங்கே வந்திருந்தவர்களில் இலக்கியம் சார்ந்தசாராத ஒரு blend இருந்தது. அவர்கள் நிச்சயம் ஆயுர்வேதம் கடந்த இலக்கியத்தின் ஒரு சிறு துளியை சுனிலிடமிருந்து பெற்றிருப்பார்கள். அந்தியூர் மணியும் அஜிதனும் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தார்கள். வாழ்வில் அற்புதமான சிலவற்றை தவறவிடாத ஒரு நிறைவு கிடைத்தது.

சிவக்குமார் ஹரி

சென்னை 

முந்தைய கட்டுரைசென்னை
அடுத்த கட்டுரைநிலமும் மொழியும்-பிரபு