ஏழு வருடங்களாக உங்கள் இணையத்தளத்தின் வாசகன் நான் . எனக்கு 44 வயது ஆகிறது. நெடிசலான உருவமும் குறைவான உடல் எடையும் கொண்டவனாகிய நான் 17 வருடங்களாக ஐடி துறையில் வேலை பார்க்கிறேன். சில வருடங்களாக ஹத யோகா செய்து வருகிறேன். இதற்கு முன் எந்த வித உடற்பயிற்சிகள் செய்ததில்லை. குறைவான சதை அடர்த்தி கொண்டவன் நான். நொறுக்கு தீனி அறவே கிடையாது.
சில காலமாக ஒரு மனிதனுக்கு அதுவும் பனிரெண்டு மணி நேரம் கணினி முன்பு அமர்த்து இருப்பவனுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பாடு அவசியமற்றது என்பதில் நம்பிக்கை வருகிறது. எனவே இரு வேளை சாப்பாடு அதாவது காலை மாலை மட்டும் என்று ஒரு வாரமாக முயன்று வருகிறேன் ஆனால் கடும் சோர்வை உணர்கிறேன்.
ஆனால் நீங்கள் இரவில் உண்பதில்லை என்று படித்திருக்கிறேன். உங்கள் அன்றாட உணவு முறை என்ன என்று சொல்ல இயலுமா அது என்னை போன்ற பல பேருக்கு வழிகாட்டக்கூடும். தயவு செய்து உதவ வேண்டும் .
ஸ்ரீனிவாசன்
*
அன்புள்ள ஶ்ரீனிவாசன்,
மூன்றுவேளை உணவு என்பது கடும் உடலுழைப்பாளர்கள் தவிர பிறருக்குக் கெடுதலானது. தேவையில்லாத எடையை உருவாக்கும். நான் என்றுமே மூன்றுவேளை உணவு உண்டதில்லை. தொடக்க காலகட்டத்தில் காலையுணவை தவிர்த்துவந்தேன். இப்போது இரவுணவை.
மூன்றுவேளையும் கார்போஹைட்ரேட் உணவு (அரிசி, கோதுமை எதுவானாலும், எவ்வகையிலானாலும்) என்பது மிகையுணவே.அந்த மிகையுணவு தொப்பையாக ஆகும். அது அளிக்கும் சோர்வு நேரடியாகத் தெரியாது, எல்லாச் செயலிலும் ஒருவகையான சலிப்பான நிதானமாக அது வெளிப்படும். உடலின் அசைவுகளிலேயே சுறுசுறுப்பு இருக்காது.
நான் இன்று உண்ணும் முறை இது. இதை நானே கண்டுகொண்டேன். சென்ற ஓராண்டு முன்புவரை இரவு பழங்கள் மட்டும். அதுவும் வாழைப்பழம் அல்லாத, மாவுச்சத்து இல்லாத பழங்கள். கொய்யா, பப்பாளி இரண்டும் குறிப்பாக. கொய்யாக்காய் என்பதே என் விருப்ப உணவு. இரவில் புளிப்பான கனிகள் உண்பதில்லை.
நடுவே கொஞ்சம் காபிப் பைத்தியம் வந்தது. நிறைய சீனி போட்டுக்கொள்வேன். ஆகவே கொஞ்சம் எடை ஏறியது. எடை குறைக்க முடிவெடுத்ததும் சீனியை முழுமையாகவே விட்டுவிட்டேன். ஒருமாதகாலம் சீனியை விட்டுவிட்டால் பின் அதை வாயில் வைக்க முடியாது. அதன் பின்புளிப்பு குமட்டலை அளிக்கும். தவறுதலாக ஒருவாய் சீனி சாப்பிட்டுவிட்டால் மோர் குடிக்காமல் குமட்டல் நிற்பதில்லை. நாம் உண்ணும் ஒரு ரசாயனம் அது.
இன்றைய உணவு முறை இது. காலையில் முட்டை – வெள்ளைக்கரு மட்டும். மதியம் வழக்கமான சோறு, அசைவம் சைவம் எல்லாமே. சோறு கொஞ்சம் குறைவாக. மாலையில் ஏழு ஏழரைக்குள் கொய்யாக்காய் அல்லது அதைபோன்ற காய்கள். பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிவரை எந்த உணவும் இல்லை. நடுவே பசிக்கும்போது பால் விடாத, சீனி போடாத காபி. நல்ல காபியின் சுவையென்ன என்பதை இப்போதுதான் அறிகிறேன்.
எல்லா உணவுமுறையையும் சோதனை செய்துள்ளேன். கீட்டோ என்றும் மற்றுபெயர்களிலும் சொல்லப்படும் முழு மாமிச உணவு உட்பட. அவற்றை நீண்டநாள் கொண்டுசெல்ல முடியாதென்பது என் அனுபவம். நாச்சுவையை வெல்லவே முடியாது. சிறிதுநாட்களுக்குப்பின் திரும்பிவிடுவோம். ஆகவே உணவை குறைப்பது மட்டுமே உகந்த வழி.
பசி மானுடனுக்கு அவசியமான ஒன்று. கடுமையான பசி, எட்டு மணிநேரம் வயிற்றுக்கு முழு ஓய்வு ஆகியவை ஈரலுக்குப் புத்துணர்வு அளிப்பவை. நல்ல தூக்கத்திற்கும் அவை தேவை. ஆகவே பசியை அஞ்சவேண்டியதில்லை. பசிக்கிறது என பதறவேண்டியதுமில்லை. பசி கொஞ்சம் கடுமையாக இருந்தால் காபி சட்டென்று பசியை அணைத்து புத்துணர்வையும் அளிக்கும். சீனி, பால் இல்லாத காபி கெடுதலானது அல்ல.
சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் ஒன்று இன்னமும் குறைவான உணவுமுறைக்கு நீங்கள் பழகவில்லை என்று பொருள். அல்லது உணவில் புரதம் குறைகிறது என்று பொருள். வயிற்றைப் பற்றிய ஒரு நடைமுறை உண்மை உண்டு. எந்த வழக்கத்தையும் பல்லைக் கடித்துக்கொண்டு பதினைந்துநாள் நீடித்தால் வயிறு பழகிவிடும். மிகையுணவோ குறையுணவோ. மூளையாலுழைப்பவர்கள் கண்டிப்பாக குறைவாகவே உண்ணவேண்டும். மாவுணவை குறைத்து புரதத்தை கூட்டவேண்டும். அசைவம் நன்று. சைவம் என்றால் பாலாடைக்கட்டி நன்று. (சைவ உணவே நன்று. பாவம் சைவ உணவுக்காரர்கள் )
ஜெ