எப்போதும் அருண்மொழி என்னிடம் கேட்பது ஒன்றுண்டு, ‘உனக்கு மட்டும் ரயிலில் அத்தனை கதாபாத்திரங்கள் எப்படி அமைகின்றன?’ அவளுக்கும் அண்மையில் அப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தபோது அது எப்படி என அவளுக்குப் புரிந்தது. நெறிகள் இவை. ரயிலில் அதிகம் பேசக்கூடாது, பழகக்கூடாது. நம்மை எவருக்கும் தெரியக்கூடாது. எழுதிக்கொண்டோ வாசித்துக்கொண்டோ இருக்கலாம். ஆனால் நம் செவிகளும் கண்ணும் திறந்திருக்கவேண்டும். பக்கத்து இருக்கையரை ஒரு கணம்கூட கண்ணோடு கண் சந்திக்கலாகாது. ‘அப்றம், சார் என்ன பண்றியோ?’ என ஆரம்பித்துவிடுவார்.
மனிதர்களைப் பார்ப்பது ஒரு தனிப்பழக்கம். அதற்கு கொஞ்சம் கற்பனை தேவை. “ஆமா, எடுத்து வச்சாச்சு. அவன் வந்து எடுத்துட்டுப்போகணுமே. இல்ல கேக்கேன், நாம என்ன செய்ய முடியும்? அவன்கிட்ட நான் சொல்லியாச்சு. அவன் கேக்கணும்லா? அதாக்கும் நான் சொல்லுதேன்… அவன் வரணும்லா? என்ன நான் சொலுதது? இப்ப, அவன் வந்தான்னா நாம குடுத்ததுக்கு பிரயோஜனம் உண்டு. என்ன சொல்லுதீக? அதாக்கும் நான் சொல்லுதது. நான் எடுத்து வச்சாச்சு… ஆமா, எடுத்து வச்சாச்சு. வியாளக்கிளமையே எடுத்து வச்சாச்சு பாத்துக்கிடுங்க. சொன்னேன்லா, எடுத்து வைச்சிட்டேன். அவன் வரலை பாத்துக்கிடுங்க. என்னான்னு சொல்லுதது. நாம அக்கறையாட்டு எடுத்து வைக்குதோம். அவன் வந்து கொண்டுபோவணும்லா? போன் பண்ணிட்டேன். நாலஞ்சு தடவ போன் பண்ணியாச்சு. இப்பம் வாறேன்னு சொல்லுதான். வரமாட்டான். எடுத்து வைச்சுக்கிட்டு நாம காத்துக்கெடக்கணும். நமக்கு என்ன மசிரா போச்சு. இல்ல கேக்கேன்…” என்று பேசுபவர் எதைப்பற்றி எவரிடம் பேசுகிறார்? அதை கொஞ்சம் மனக்கண்ணால்தான் பார்க்கவேண்டும். “எடுத்துட்டுத்தான் போயேண்டா நாயே” என நமக்கு அந்த எடுக்காத எடுபட்டவன் மேல் வெறி கிளம்புமென்றால் செவிகொடுக்கக்கூடாது.
பெரும்பாலானவர்கள் நம் கணக்கில் வளவளவென்றுதான் பேசுகிறார்கள். வளவளப்புதான் பொறுமை, அன்பு, மரியாதை தெரிந்த உயர்குடிப்பிறப்பு, முதிர்ச்சி, கனிவு போன்ற விஷயங்களுக்கு சான்று. சலிக்காமல் முகமன் பேசுகிறார்கள். “என்ன இளைச்சு போய்ட்டீக? பாத்து ரொம்ப நாளாச்சே. நான் எப்பவும் கேக்குதது உண்டு கேட்டிகளா? என்ன இருந்தாலும் நம்ம ஆளாச்சே. மறக்க முடியுமா? நாம இருந்த இருப்பென்ன? அந்தகாலம்லாம் இனிமே வருமா? அண்ணனை நினைச்சா எப்பமும் மனசுக்கு ஒரு சுகமாக்கும் கேட்டுக்கிடுங்க. அண்ணன் நம்மள சில சமயம் மறந்திருப்பீக. நாம அப்டி இல்ல. நம்ம நினைப்பிலே அண்ணன் எப்பமும் உண்டு… பின்ன என்ன செய்தீகோ? சொவமா இருக்கேளா? புள்ளைங்க எப்டி இருக்காக? மூத்தவன் என்ன செய்யுதான்? ஆமா, அவன் கல்யாணத்துக்கு வந்தேம்லா… செரியாப்போச்சு போங்க… புள்ளைக உண்டுமா அவனுக்கு? சாப்பிட்டீகளா? மருதை வாறப்ப டிபன் கொண்டாருவான். ஆனா நல்லாருக்காது. திருநெல்வேலியிலே விக்கிற இட்டிலி சுமாராட்டு இருக்கும் பாத்துக்கிடுங்க”
என்றிப்படி ரயிலில் சந்தித்தவரிடம் பேசிக்கொண்டே இருக்கிறார் ஒருவர். முந்தைய செல்பேசிப் பேச்சில் ஒரு வரி தெறித்து விழுகிறது. “நாம எடுத்து பரிமாறி வைக்க முடியும்? ஊட்டி விடவா முடியும்? சொல்லுங்க… சரி, ஊட்டியே விடுதோம். இவன் என்னன்னா அவன நாம மறுநா உக்காத்திப் பேளவும் வைக்கணும்னுல்லா சொல்லுதான்…” அந்த ஒருவரிக்காக அந்த வளவளவரை செவிகொடுக்கலாம். முகமன்களின் பிரச்சினை என்னவென்றால் அது ஆடிப்பிம்பம். எல்லாவற்றையும் இரண்டு முறை கேட்கவேண்டியிருக்கும். ஆடியில் ஆடி என்றால் முடிவின்மை. “நல்லா இல்லாம என்ன? தம்பி இருக்கிறப்ப நமக்கென்ன கொறை? நான் எப்பவுமே மத்தவன் கிட்ட கேப்பேன். தம்பி எப்டி இருக்காரு, நல்லா இருக்காரான்னு. உங்க மச்சான், கமிசன் ஏவாரம். நாராயணசாமி… நமக்கு எப்பமுமே தம்பிக்குமேலே ஒரு பச்சம் உண்டு… செரி, இப்ப நாம பாத்தாச்சுல்லா? இது ஒரு நிமித்தமாக்கும். இப்டியே போய்ட்டிருக்கு… நெல்லையப்பன் அருளாலே எல்லாம் ஒரு மாதிரி இருந்திட்டிருக்கு… நீ என்ன செய்யுதே? அங்கதான இப்பமும்…?”
ஆகஸ்ட் 24 ஆம் தேதி கன்யாகுமரி ரயில். அருகே ஒரு குடும்பம். ஒரு கணவர், மனைவி, கணவனின் விதவைத்ச்தங்கை மூன்றுபேர். மூவருக்கும் எழுபதுக்கும் மேல் வயது. மதுரைக்குச் செல்கிறார்கள். திருச்செந்தூர் தரிசனம் முடிந்து திரும்பும் பயணம். திருநெல்வேலியிலேயே இட்லி, பிளாஸ்கில் காபி, நேந்திரங்காய் சிப்ஸ் எல்லாம் வாங்கி கொண்டு ஏறியிருக்கிறார்கள். “என்னா ஒரு தேஜஸுங்கறேள்? அப்டியே பாத்துண்டே இருக்கலாம்போல… என்ன ஒரு ப்யூட்டி… அப்டியே தகதகன்னு…நேக்கு கண்ணு நெறைஞ்சு போச்சு” என்னும் வகையில் முருகன் அழகுதரிசனத்தை மாறி மாறி விதந்தோதிக்கொண்டே இருந்தனர். ஒருவர் பார்த்த முருகன் அழகை இன்னொருவர் பார்க்கவில்லை என்னும் வகையில். “பச்சை அலங்காரம்னு ஒண்ணு செய்றான். பாத்தா அப்டியே கண்ணு நெறைஞ்சுபோயிடும்… காலம்பற அஞ்சுமணிக்குள்ள பாத்தா அதிவிசேசம்னு அம்முலு சொன்னா. அதான் அப்ப புடிச்சு சொல்லிண்டே இருந்தேன். பாத்தேளோ?”
திருச்செந்தூர் பக்திப்பேச்சு பேச்சு அப்படியே பழனி பக்கமாகச் சென்றது. பழனி முருகனின் நவபாஷாணச் சிலையை அர்ச்சகர்கள் சுரண்டிச் சுரண்டி விற்றுவிட்டமையால் சிலையின் பின்பக்கம் பள்ளமாகிவிட்டது என்பது ஒரு செவிவழிக் கதை. பழனி முருகன் கிருபானந்தவாரியாரின் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டாராம் . “முருகா உன் பின்பக்கம் எங்கே முருகா?” என்று அவர் கேட்டாராம். இது தீப்பொறி ஆறுமுகம் ஜோக். நான் நாகரீக வார்த்தை போட்டிருக்கிறேன். அந்த ஜோக்கை அந்த ஆண் சொல்ல இரு பெண்களும் வெடித்துச் சிரித்தனர். “…முருகா உன்னோட ….த்து எங்க முருகா?” மீண்டும் சிரிப்பு. கண்களில் நீர் தளும்ப, மூச்சுத்திணறச் சிரிப்பு. சிரிப்பை நிறுத்துவது, மூச்சுத்திணறுவது. மீண்டும் வெடிச்சிரிப்பு… எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. அவர்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவழியாக சிரிப்பு ஓய்ந்து நான் மடிக்கணினியில் ஒரு வரி தட்டச்சிடுவதற்குள் மீண்டும் பர்ர்ர்… “போதும்டீ நேக்கு மூச்சுத்தெணறறது… செத்திடுவேன்”. மதுரை நெருங்கும்போது சமனமாகிவிட்டனர். மீண்டும் திருச்செந்தூர் பக்திப்பரவசம்….
‘சாமானியர்’களை புரிந்துகொள்வது எழுத்தாளனின் பெரிய சவால். உடனே எழுத்தாளன் சாமானியன் இல்லையா என்று சாமானியன் கேட்பான். அவன் போட்டிருக்கும் துணியில் தானும் சட்டைபோட்டு அவன் தின்னும் இட்லியை தானும் தின்பதனால் எழுத்தாளன் சாமானியனாகிவிடமாட்டான். உண்மையிலேயே சாமானியன் என்றால் அவன் நல்ல எழுத்தாளன் அல்ல என்பதே என் பதில். சாமானியனை சாமானியனாக நின்று அணுகி எழுதுபவர்கள் இலக்கியம் படைக்க முடியாது. பதிவுகூட செய்யமுடியாது. பிலாக்காணம்தான் வைக்கமுடியும். சாமானியர்களை விலகி நின்று பார்க்க, அறுவைச்சிகிச்சை கத்தியின் இரக்கமின்மையுடன் ஊடுருவிச்செல்ல, வரலாற்றின் ஒட்டுமொத்தத்தில் வைத்து மதிப்பிட அவ்வெழுத்தாளன் சாமானியனல்லாதவனாகத்தான் இருக்கவேண்டும். அறிஞனாகவும் கலைஞனாகவும் இருந்தாகவேண்டும். அந்த விலக்கத்தால் சாமானியன் எழுத்தாளனை எப்போதும் திகைக்கச் செய்துகொண்டும் இருக்கிறான். சாமானியனைக் கவனிப்பதுபோல எழுத்தாளனுக்கு இருக்கும் கொண்டாட்டமான கேளிக்கை வேறொன்றில்லை.
கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் மாரீஸ் ஓட்டலில் அன்று தங்கியிருந்தேன். அந்த விடுதிக்கு நான் செல்வது அதுவே முதல்முறை. தொன்மையான விடுதி. நட்சத்திர விடுதிதான். ஆனால் எங்கு பார்த்தாலும் கொங்குநாட்டு சிறுதொழிலதிபர்கள். ‘ஏனுங்’ ஒலிகள். மாலையில் நண்பர் ஷாஜியின் மகளின் 18 ஆவது அகவை நிறைவு விழாவுக்குச் சென்றிருந்தேன். அன்று பின்னிரவில் கிளம்பி விடியற்காலையில் நான் கோழிக்கோடு விமானத்தை பிடிக்கவேண்டும். காலை மூன்று மணிக்கு விடுதிக்கு முன் எனக்கான டாக்ஸிக்காகக் காத்திருந்தேன். ஒரு கார் வந்து நின்றது. குண்டான ஓர் இளம்பெண் அழுது கொண்டே பேசியபடி இறங்கினார். “ஆமாம்ண்ணீ… ஆறதையெல்லாம் பாத்தாச்சு… ஆக்சுவலி எவ்ரிதிங் வாஸ் ரெடி… டாக்டர் எப்பவேணா வைச்சுக்கலாம்னு கூட சொல்லிட்டார். இப்ப ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு சீனியர் டாக்டர் சொல்றார்… என்ன பண்றதுன்னே தெரியலை…”
சொற்கள் நடுவே விசும்பலோசை எழுந்துகொண்டே இருந்தது. “எமர்ஜென்ஸியிலே வைச்சிருக்கா… மூச்சுபேச்சில்லை. பாக்கறச்ச அடிவயத்திலே அய்யோன்னு இருக்கு. என்ன சொல்ல…எப்டி இருந்த மனுசன்..எனக்கு ஆறலை” பேசியபடி இறங்கி செல்பேசியை அணைத்தபின் “பேரர், டேக் திஸ் டு ரிஸப்ஷன்… ரூம் சிக்ஸ் டூ ஒன்… யா” என ஆணைக்குரலில் பெட்டிகளை உள்ளே கொண்டு போகச்சொல்லி விட்டு அடுத்த அழைப்பை எடுத்தார். ஆனால் இம்முறை உற்சாகமாக “ஹாய், ஏண்டி, இப்ப கூப்பிடறே… நான் அப்பல்ல கூப்பிட்டிருந்தேன். யா… மெட்ராஸ்தான்… ஆமாம்டீ… யெப் , ஒன் மந்த்… எங்க ஒழியறது…நீ எப்டி இருக்கே?” மீண்டும் இன்னொரு செல்பேசி அழைப்பு. இம்முறை வரவேற்பறையின் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். லிப்ஸ்டிக் உதடுகள், செம்பட்டைக்கூந்தல், தடித்த வெண்ணிற உடல். விசும்பல் கலந்த உரையாடல். “அக்கா, உன்னைத்தான் கூப்பிடணும்னு நினைச்சேன்… இன்னிக்கு தாங்காதுன்னு சொல்லிட்டாங்க… சுயநினைவே இல்லை… ஐசியூலே வெச்சிருக்கா… நான் என்ன செய்யப்போறேன்னே புரியலைக்கா”
அப்போதுதான் கவனித்தேன். அந்த விசும்பல் ஓரு கச்சிதமான ஒலி மட்டுமே. மூக்கால் அதை உருவாக்கி, சரியாக சொற்கள் நடுவே இணைக்கிறார். கூடவே சிரித்த முகத்துடன் உள்ளிருந்து அரை டிரவுஸர் போட்டுக்கொண்டு நடந்து வந்த கடுக்கன்போட்ட மொட்டையரை வரவேற்கிறார். கண்களால் பொறு என அவரிடம் சொல்கிறார். அவர் பெட்டிகளை கொண்டு வைக்க ஆணையிட நடுவே புகுந்து பொறு பொறு என சைகை காட்டி நிறுத்துகிறார். ஆனால் அறுபடாமல் “…ஆமாக்கா, அம்மா கிட்டே எப்டி சொல்றதுன்னே தெரியலை. ஷி வாஸ் காலிங் மி… தூங்குன்னு சொல்லிட்டேன். இப்ப விடிஞ்சதும்தான் கூப்பிடணும்” அவரை பார்க்கப் பார்க்க அற்புதம், பரவசம் போன்ற உணர்வுகள் எனக்கு ஏற்பட்டன. அந்தக் கதாபாத்திரத்தை நடிக்க தமிழ் சினிமாவில் ஆளில்லை. மலையாளத்தில் பிந்து பணிக்கர் நடிக்கக்கூடும். என்ன ஒரு ஜாலம். மல்டி டாஸ்கிங் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் உச்சம்.
சாமானியர்களுக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் தொடர்ச்சி, ஒத்திசைவு, பொறுப்பேற்பு போன்ற பல நிபந்தனைகளில் இருந்து அற்புதமாக தங்களை விடுவித்துக்கொண்டிருக்கிறார்கள். The virtue of inconsistency என்று ஓர் உரையாடலில் இந்திரா பார்த்தசாரதி சொன்னார். அரசியல்வாதிகளை விட சாமானியர் மும்மடங்கு சுதந்திரமானவர்கள். அவர்களுக்கு நேற்றே இல்லை. ஆனால் “அதான் நான் அப்பவே சொன்னேனே” என்ற சொல்லை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லாவற்றையும் அப்பவே சொல்லிவிடும் மெய்ஞானிகள் அல்லாத ஒருசிலர்தான் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்கள் நாவல்களும் இம்மாதிரி கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
முகமனிலேயே நாற்பது நிமிடம் பேசியவர் அந்த பெரியவர் இறங்கிப் போனபின் போனில் பேசுவதை கேட்டேன். “ஏட்டி, சம்முகம் வந்தானா? அவன்கிட்ட ரசீத குடுத்தனுப்பு… நான் திங்கக்கிளமை காலம்பற வந்திருவேன்னு சொல்லு… ஆமா, இப்பதான் மருதை தாண்டியிருக்கு. படுக்கணும். நம்ம முருகேசண்ணாச்சிய இப்பதான் பாத்தேன். ஆமா, அவருதான். சல்லிப்பய. அவன் மூஞ்சியிலே முளிக்கக்கூடாதுன்னு நினைச்சது. செரி. பாத்தாச்சு. கொலகாரப்பாவியில்லா… பத்து பைசாவுக்கு நம்பமுடியாது. சவத்தெளவுப்பய… இங்க மருதையிலே அவன் பொண்ணு இருக்காள்லா… ஆமாட்டி, அந்த அறுதலி சந்திரா. அவ வீட்டுக்குப்போறான் போல… போக்கத்தபய. விடு. அவனப்பத்திப் பேசி நம்ம நாக்க நாம ஏன் அளுக்காக்கிக்கிடணும்…?”