சிறுமியின் தஞ்சை, பாவண்ணன்

சிறுமியின் தஞ்சை

நிவேதிதா, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்ஒரு வாரமாக வளவனூரில் இருந்தேன். அங்கே இணைய இணைப்பு சரியாக வேலை செய்வதில்லை. அதனால் அங்கு இருக்கும்போது பொதுவாக இணையப் பக்கங்களின் பக்கம் செல்வதில்லை. நேற்று இரவு புதுச்சேரிக்கு வந்தேன். இன்று அதிகாலை எழுந்ததும் படிக்காத பக்கங்களையெல்லாம் மொத்தமாகப் படித்து முடித்தேன்.

சிறுமியின் தஞ்சை படித்தபோது மணி நாலேமுக்கால். என் களைப்பு எல்லாம் ஓட்டமாக ஓடி உற்சாகம் பிறந்துவிட்டது. இப்படி ஒரு சிறுமியைக் காண நான் எத்தனையோ ஆண்டுகளாகக் காத்திருந்தேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நான் சந்தித்த ஒவ்வொரு சிறுவர் சிறுமியிடமும் இப்படி ஒரு குறிப்பேட்டை எடுத்துச் சென்று எழுதிக்கொண்டு வரும்படி கேட்டதுண்டு. திரும்பிய பிறகு மீண்டும் சந்தித்து விசாரித்ததும் உண்டு. அசட்டுத்தனமான ஒரு புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு அந்தப் பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்நான் இத்தனை ஆண்டுகளாக பார்ப்பதற்குக் காத்திருந்த சிறுமியை நிவேதிதா வழியாக இன்று கண்டடைந்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை. எங்கோ ஒருவர் இருக்கிறார். அது போதும். அவருக்கு ஊக்கமளிக்கவும் வழிகாட்டவும் அவருடைய பெற்றோர் இருக்கின்றனர். எழுத்தென்னும் தெய்வம் அவள் நெஞ்சில் நின்று சுடர்விடட்டும். நிவேதிதாவுக்கு அன்பு வாழ்த்துகள்.

நிவேதிதாவின் விவரணைமொழி சிறப்பாக உள்ளது. பல இடங்களில் புன்னகை படர படித்தேன். என்னை ஒரு பழம்போல பிழிந்துவிட்டார்கள் என்ற வரியும் பாசி படிந்த பாறையில் விளையாட முடியாத ஏக்கத்தை பூங்காவில் விளையாடி ஈடுகட்டிக்கொண்டதைக் குறிப்பிடும் வரியும் தன்னை நசுக்கிய பாட்டியை தானும் நசுக்கி நிறைவடைந்ததைக் குறிப்பிடும் வரியும் தரிசனம் முடிந்து திரும்பிய சமயத்தில் ஐஸ் அக்காவைக் காணாமல் ஏமாற்றமடைந்ததைக் குறிப்பிடும் வரியும் மனத்தில் பதிந்துவிட்டன. இன்றைய காலையின் தொடக்கமே உற்சாகம் மிகுந்ததாக அமைந்துவிட்டது. அந்தச் சிறுமியின் கரம் பற்றி குலுக்குவதாக நினைத்துக்கொள்கிறேன். அவருக்கு என் அன்பும் ஆசியும். அவருடைய பெற்றோருக்கும் என் வாழ்த்துகள். இப்படி எழுதும் குறிப்புகள் அனைத்தையும் அவர்கள் பாதுகாத்து வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .

அன்புடன்

பாவண்ணன்

முந்தைய கட்டுரைசோர்வும் மீள்வும், கடிதம்
அடுத்த கட்டுரைமை ஸ்கில்ஸ் அறவாரியம்