அன்புள்ள ஜெயமோகன் ,
தமிழ் மொழி ஆங்கில எழுத்துரு வடிவில் தொடரும் என்றும், தமிழ் எழுத்துரு மெல்ல வழக்கொழியும் என்று நீங்கள் சில ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தீர்கள். அது போலவே, இப்போது வாட்ஸாப் போன்ற கருத்துப் பரிமாற்ற மென்பொருட்களில் தமிழில் எழுதும் வசதி இருந்தாலும், ஆங்கில எழுத்துக்களாலேயே தமிழ் எழுதப்படுகிறது. குழுக்களில் தங்கிலீஷே எழுத்து மொழியாக இருக்கிறது. தமிழில் யாரும் கடிதங்கள் எழுதுவது இல்லை. தமிழில் செய்திகள் படிக்கும் வழக்கமும் தேய்ந்து, காணொளியாக மட்டுமே தமிழுலகத்துக்குத் தேவையான வம்பு தும்புகள் பகிறப்படுகின்றன. உலகெங்கிலும் மாறிவரும் செய்தி பரவும் முறைகளையும், தனிப்பட்ட தவல் பரிமாற்ற வழிகளையும் அடியொட்டியே இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன எனலாம்.
ஆனால் அந்தக் காரணங்களையும் தாண்டி, தமிழ் என்ற மொழியைக் கற்பதால் பொருளாதார ரீதியாக என்ன பயன் என்று வரையறுக்க முடியாத நிலையில், தமிழர்களுக்கே தமிழ் தேவையில்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. சராசரி வாழ்க்கையை நிகழ்த்த, தமிழ் பேச்சளவில் இருக்கிறது. ஆனால் அது தவிர்க்க முடியாத ஒன்று அல்ல. சட்டம் கற்பதற்கும், நம் மாநிலத்திற்கு உள் நடக்கும் தொழில் பரிவர்த்தனைகளுக்கும் தமிழ் போதும். ஆனால் அறிவியலும், பொருளாதாரமும், மருத்துவமும், பொறியியலும் ஆங்கிலம் தெரிந்தால்தான் கை வரும்.
இதில் தமிழால் பொருளீட்டக் கூடிய வழி உள்ள ஒரே துறை சினிமாதான் என்று தோன்றுகிறது. (அரசியல் பொருளீட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல. அது சேவை என்று வைத்துக் கொள்கிறேன்). இங்கு வசனம், பாடல்கள் எழுதும் திறமை உள்ளவர்கள் தமிழறிவிற்காக மட்டுமே பெரும் சம்பளம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. தமிழ் இலக்கிய விற்பன்னர்களையும் சினிமாத் துறை இதற்குப் பயன்படுத்திக் கொண்டு பதிலுக்குப் பொருளாதார நிழல் கொடுத்து இருக்கிறது.
அந்த நிலையிலும் மாற்றங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. சமீபத்தில் ஒரு வலைத் தொடருக்கு வசனம் எழுதும் பணியை மேற்கொண்டபோது ஆங்கில எழுத்துருவிலேயே வசனத்தை எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டனர். எனக்கு நான் எழுதியதையே தமிழில் படித்துப் பார்த்தால்தான் சரியாக வந்திருக்கிறதா என்று கூடச் சொல்ல முடியும். ஆனால் தொடரின் இயக்குனர், நடிகர்கள் அனைவரும் தமிழை பேச மட்டுமே தெரிந்தவர்கள். அவர்களுக்குத் தங்கிலீஷில்தான் வசனம் வேண்டும். தொழில் நுட்பக் கலைஞர்களுக்கோ ஆங்கில மொழிமாற்றம் செய்தால்தான் புரிந்து கொள்ள முடியும். எனவே, தமிழ், ஆங்கிலம், தங்கிலீஷ் என்று மூன்று வடிவிலும் வசனப் பிரதிகள் தயாராகின. தமிழ்ப் பிரதியைப் படித்தது நானும், என்னைப் போலவே சிறிய ஊர் ஒன்றில் வளர்ந்த ஒரு உதவி இயக்குனரும் மட்டுமே.
வரும் காலத்தில் தமிழில் எழுதும் திறமைக்கு தொழில் சார்ந்த எந்த ஒரு தேவையும் இல்லாது போகலாம். கேள்வி: 21ஆம் நூற்றாண்டில், தொழில் ரீதியாகக் தமிழால் மட்டுமே வளர்வதற்கு, தமிழ் எழுத்தால் மட்டுமே வாழ வழி அமைத்துக் கொடுத்து, உலகத் தமிழர்களை மொழியால் இணைப்பது தமிழ் சினிமாவும், தமிழ் சினிமா இசையும்தான்; பேச்சுத் தமிழ் மாற மாற, வெகு ஜனக் கலையான சினிமா மூலம் அந்த மாற்றம் வேகமடைய, தமிழ் சினிமாவுக்குத் தனித் தமிழே தேவைப் படாத காலம் ஒன்று வரும் போது, தமிழின் வீச்சு இன்னும் மங்கும் – என்று நினைக்கிறேன். திரைமொழி ஆதரிக்காவிட்டால், 2075-ஆம் ஆண்டில் 98% பள்ளிகளில் “தொட்டனைத்தூறும் மணற்கேணி…” படிக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ் மொழிக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து உங்கள் எண்ணம் என்ன என்று சொல்ல முடியுமா?
அன்புடன்
சிவா அனந்த்
அன்புள்ள சிவா
உண்மையில் இன்னும் நூறாண்டுகளில் தமிழ் மொழி, தமிழிலக்கியம் எப்படி இருக்கும் என நம்மால் ஊகிக்கவே முடியாது. 1923ல் பாரதியார் தமிழ் மொழி மின்னூடகத்தில் இருக்கும் என்றோ, தமிழுக்கு தானியங்கி மொழிபெயர்ப்பு முறைகள் வருமென்றோ கற்பனை செய்திருக்க முடியுமா? இவ்வளவுக்கும் அவர் ஒரு தீர்க்கதரிசி, எப்போதுமே எதிர்காலத்தை எண்ணி வாழ்ந்தவர். ஆகவே நாளை என்னாகும் என்னும் கவலை தேவையற்றது என்பதே என் எண்ணம். என்னவானாலும் ஆகட்டும், அதுவே ஊழ் என்றால் நாம் கவலைப்பட்டும் ஒன்றும் ஆகப்போவதில்லை.
ஆனால் நாம் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும். அவை செய்யப்படவில்லை என்று ஆகக்கூடாது. இந்த மொழியை வாழ வைக்க, இவ்விலக்கியத்தை தொடரச்செய்ய நம்மால் ஆற்றவேண்டிய கடமைகள் சில உள்ளன. அவற்றை ஆற்றவே இங்கே வந்திருக்கிறோம். ஆற்றிவிட்டுச் செல்லவேண்டியதுதான். இந்த விடுபட்ட நிலை கொண்டவர்களே எதையேனும் உருப்படியாகச் செய்கிறார்கள். எஞ்சியோர் மிதமிஞ்சிய கொந்தளிப்பை, கவலையை வெளிப்படுத்துவார்கள். ஆனால் ஒன்றும் செய்யவும் மாட்டார்கள்
நான் தனிப்பட்ட முறையில் சில அருவமான கருத்துருவங்களை நம்புபவன். அவற்றை ஊழ் என்று சொல்லலாம். இங்கே மானுட இனம் வாழுமா? வாழும், இதுவரை மானுட இனத்தை வாழவைத்த ஒரு benevolence, ஒரு நற்கருணை எங்கோ உள்ளது. அது மானுட இனத்தின் உள்ளத்திலும் இயல்பிலும் உறைந்துள்ளது. அன்பு, கருணை, நீதி என பல வடிவங்களில் அது வெளிப்படுகிறது. அது உள்ளவரை எநதச் சவாலையும் எதிர்கொண்டு மானுடம் வாழும். அந்த நற்கருணை நம்மை கைவிட்டதென்றால் நாம் அழிவோம். அந்நிலையில் நாம் செய்யக்கூடுவதென ஏதுமில்லை. ஆகவே நான் பொதுவாக எதிர்மனநிலை கொண்டவர்களின் எச்சரிக்கைகள் , பதற்றங்களை பெரிதாகக் கவனிப்பதில்லை.
அதேதான் மொழிக்கும். தமிழ்மொழி இதுவரை வாழ்ந்தமைக்கான சில காரணங்கள் தமிழ் மொழியிலேயே உண்டு. அவை உள்ளவரை தமிழ் எப்படியோ வாழும். இனி ஒருவேளை அக்காரணங்கள் இல்லாமலாகி தமிழ் அழியவேண்டும் என்பதே ஊழ் என்றால் நாம் தடுக்க முடியாது. அவ்வளவு பெரிய பொறுப்பை நாம் சுமக்க முடியாது. தமிழின் இடத்தில் இன்னும் மேலான ஒன்று வந்தமையும் என நம்பவேண்டியதுதான்.
இந்த களத்தில் நாம் அறவே தவிர்க்கவேண்டிய சில மனநிலைகள் உண்டு. ஒன்று தமிழுக்கு ‘எதிரிகள்’ நிறைய இருக்கிறார்கள் என்றும், அந்த எதிரிகளிடமிருந்து தமிழைக் காக்க ‘களமாட’வேண்டும் என்றும் கற்பனை செய்துகொள்வது. இது முழுக்க முழுக்க எதிர்மறை மனநிலைகளை கட்டமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியலே ஒழிய, இதில் எந்த தமிழ்சார்ந்த அக்கறையும் இல்லை. அவர்கள் தமிழுக்கு எதுவுமே செய்ததில்லை, செய்யப்போவதுமில்லை, செய்யவும் இயலாது.
நேர்மாறாக அவர்களால் தமிழுக்கு அழிவே உருவாகும். அவர்கள் தமிழைப் பற்றிக்கொண்டிருக்கும் தொற்றுக்கிருமிகள் என்றே எண்ணுகிறேன். சற்றுக் கவனியுங்கள், அவர்கள் ஓர் அதீதநிலை எடுக்கிறார்கள். வெற்றுப்பாசாங்கு அது. ஆனால் அந்த அதீதநிலையை பயன்படுத்தி தமிழுக்குப் பணிசெய்த அனைவரையுமே வசைபாடி, அவமதிக்கிறார்கள். தங்கள் அரசியலை அவர்கள் ஏற்கவில்லை என்றால் அவர்களை ஒழிக்க முயல்கிறார்கள். எஸ்.வையாபுரிப் பிள்ளை முதல் அ.கா.பெருமாள் வரை அவர்களால் அனைவருமே வசைபாடப்பட்டிருக்கிறார்கள். இன்று தமிழுக்கு எவர் எந்தப்பணி செய்தாலும் இந்த கிருமிகளின் வசைகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பது எவ்வளவுபெரிய இடர்!
மெய்யான பணி செய்த பலர் முழுமையாக மறக்கப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் , மு.அருணாசலம் முதல் புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம் வரை. அவர்களுக்கு ஒரு நினைவுச்சின்னம்கூட இல்லாத மண் இது. இவர்களின் அதிகார அரசியலுக்கு உடன்படுவார்கள் என்றால் போலிகளை கொண்டாடி முன்வைத்து அவர்களை முன்னுதாரணங்களாக முன்னிறுத்தவும் செய்வார்கள். இது மெய்யான அறிஞர்கள் அவர்களுக்குரிய வாசகர்களையும் மாணவர்களையும் அடைவதை தவிர்க்கிறது. மெய்யான அறிஞர்களுக்கு ஆழமான உளச்சோர்வையும் அளிக்கிறது.
அனைத்தையும்விட மோசமானது, இந்த அதிகார அரசியல் உருவாக்கும் போலித்தமிழ்வெறியின் இயக்கமுறை. அது முழுக்க முழுக்க எதிர்மறையானது. காழ்ப்பே உருவானது. வசைபாட மட்டுமே தெரிந்தது. ஆகவே செயலூக்கத்துக்கு நேர் எதிரானது. அதன் விளைவான தற்காலிகக் கொந்தளிப்பு மட்டுமே கொண்டது. அக்கொந்தளிப்பை இளைய தலைமுறைக்கு அளித்து, அவர்கள் எதையும் செய்யாதவர்களாக ஆக்கிவிடுகிறது இக்காழ்ப்பு. ஆனால் தாங்கள் ‘களமாடிக்’ கொண்டிருப்பதாகவும் நினைத்துக்கொள்ள செய்கிறது. செயலூக்கம் என்பது நேர்நிலை உளஅமைப்பு கொண்டதாகவே இருக்க முடியும். நம்பிக்கையுடன் பொறுமையாக நீண்டநாள் உழைத்துப் பணிசெய்வதாகவே அது அமைய முடியும். நீடித்த உழைப்புக்கு மட்டுமே ஏதேனும் செயல்மதிப்பு உண்டு.
இரண்டாவதாக, நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றுண்டு. தமிழ்மொழியோ தமிழ்ப்பண்பாடோ ஓர் ‘அமைப்பு’ அல்ல. எனவே அந்த அமைப்பை தக்கவைக்கவோ வளர்ச்சியடையச் செய்யவோ எவரும் எதையும் செய்ய முடியாது. மொழி, பண்பாடு ,வாழ்க்கைமுறை என அனைத்தும் இணைந்து ஒற்றை நிகழ்வு. தமிழ் எழுத்துக்களை மாற்றுவது, தமிழை கணினிமயமாக்குவது போன்ற செயல்பாடுகள் தேவைதான். ஆனால் அடிப்படையில் தமிழர்கள் தமிழ் கற்று, தமிழில் வாசித்து, தமிழில் எழுதி, தமிழில் சிந்தனை செய்தால் மட்டுமே தமிழ் வாழும். தமிழில் வாசிப்பவர்கள் குறைவார்கள் என்றால் தமிழ் அழியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழ் ஒரு நடைமுறைத்தேவைக்கான பேச்சுமொழியாக நீடிக்கும். தமிழிலுள்ள இலக்கியங்களும் சிந்தனைகளும் மறையும்
இன்றைய போக்கு தமிழின் அழிவையே காட்டுகிறது என்பதில் ஐயமே இல்லை. சென்னையில் தி ஹிண்டு இலக்கிய விழா நிகழ்கிறது. முழுக்கமுழுக்க ஆங்கிலம். அதற்கு ஆயிரம் பேர் செல்கிறார்கள். அதில் ஐந்துபேர் கூட அதே சென்னையில் நிகழும் தமிழ் இலக்கிய விழாக்களுக்கு வருவதில்லை. ஏனென்றால் சென்னையின் உயர்குடி, உயர்நடுத்தரக்குடி மக்களுக்கு சுத்தமாகத் தமிழே தெரியாது. சினிமாவில் தமிழ் எழுதப்படிக்க தெரிந்தவர்களே குறைவு. தமிழில் திரைக்கதைகளை அளித்தால் வாசிப்பவர்கள் அரிது. தமிழில் நூல்களை வாசிப்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். வசனங்கள் ‘தங்கிலீஷில்’தான் இளைய தலைமுறையினரால் வாசிக்கப்படுகின்றன. தமிழில் வெளிப்பாடு கொண்ட விளம்பரம் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் அவ்வாறுதான் சூழல் உள்ளது.
இன்று பேச்சுமொழியாக தமிழை நீட்டிக்கச் செய்வதே கடினமாகியுள்ளது. நான் ரயிலில் தங்கள் சிறு குழந்தைகளிடம் தமிழில் பேசும் உயர்நடுத்தர வர்க்கத்து அன்னையரை கண்டதே இல்லை. “ராகுல் கம் ஹியர்’தான் மொழி. அந்த தலைமுறை என் நாவலை வாசிக்குமென நான் நினைக்கவுமில்லை.மிகமிக வேகமாக தமிழில் வாசிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள். முன்பு நகரங்களில் இருந்த சூழல் இன்று கிராமங்களிலும் உள்ளது. தமிழில் தேர்ச்சி இல்லை. ஆங்கிலம் தரமானது அல்ல. ஆகவே எந்த மொழியிலும் வாசிப்பது அருகியுள்ளது.
தமிழ் பேச்சுமொழியாக நீடிப்பதில் முதல்பெரும் பங்களிப்பு சினிமாவுக்கே உள்ளது. உலகமெங்கும் தமிழ்க்குழந்தைகள் தமிழ் பேசுவது சினிமா பார்த்துத்தான். அதற்கே தடைபோடும் குடும்பங்கள் உள்ளன. தமிழ் நாவில் வந்துவிட்டால் ஆங்கில உச்சரிப்பு போய்விடும் என்று என்னிடம் பல பெற்றோர் கவலையுடன் சொன்னதுண்டு. தமிழ்ப்பெருமை பேசுபவர்கள், தமிழ்க்கல்வி பற்றி கொப்பளிப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் வழி கல்விகற்க வைத்தவர்களே.
ஆனால் இது தமிழில் மட்டுமுள்ள சூழல் அல்ல. இந்திய மொழிகள் அனைத்திலும் இதுவே நிலைமை. வங்க மக்கள் வங்க மொழி பற்றிய பெருமிதம் நிறைந்தவர்கள். இன்று வங்க மொழியில் வாசிக்கும் இளைஞர்கள் கல்கத்தாவில் மிக அரிதாகிவிட்டனர். பெருமைமிக்க வங்க இலக்கியமே தேங்கிவிட்டது. ஆங்கிலத்தில் எழுதும் வங்காளிகளே புகழுடனிருக்கிறார்கள். மலையாளத்திலும் கன்னடத்திலும் அதுவே நிலைமை. அங்கெல்லாம் ஆங்கிலத்தில் எழுதினாலொழிய அடுத்த தலைமுறையினரைச் சென்றடைய முடியாத சூழல் உருவாகி வருகிறது. இன்னும் ஒரு தலைமுறைக்காலம் கடந்தால் இந்திய மொழி இலக்கியங்கள் வாசிக்கப்படுமா என்பதே சிக்கலான வினாவாக உள்ளது.
நான் திரும்பத் திரும்பச் சொல்வது ஒன்றே. ஆங்கிலம் கற்பதை தடுக்கவே முடியாது. அது இன்னும் பெருகும். ஐரோப்பாவிலேயே ஆங்கிலக் கல்வி பல மடங்கு பெருகியுள்ளது. அதுவே அறிவியலின் மொழி, தொழிலின் மொழி, சர்வதேச மொழி. பிறமொழிகள் எளிய பேச்சுமொழியாகச் சுருங்கிவிடவே வாய்ப்பதிகம். ஏனென்றால் ஒரு குழந்தை இரு மொழிகளை பேச கற்றுக்கொள்ளலாம். இரண்டு எழுத்துவடிவங்களை கற்பது பெரும் சுமை.
காரணம் இன்று கல்வி மேலும் மேலும் சிக்கலாக, சவாலாக ஆகிக்கொண்டே இருக்கிறது. இன்று ஆங்கிலத்திற்குள்ளேயே பல தனிமொழிகளை (meta language) கற்கவேண்டியுள்ளது. கணிதம், வேதியியல், உயிரியல் அனைத்துக்கும் அவ்வாறு தனிமொழிகள் உள்ளன. அவற்றைக் கற்கும் சவாலே மிகப்பெரியது. அச்சூழலில் இருமொழி கற்பது மும்மொழி கற்பது எல்லாம் இயல்வதே அல்ல.
ஆகவே ஒரே எழுத்துரு பல மொழிகள் என்பதே மிக எளிய வழி. இந்திய மொழிகளெல்லாம் ஆங்கில எழுத்துருவில் இருந்தால் அச்சிக்கலை மிக எளிதில் சமாளிக்கலாம். எவர் என்ன சொன்னாலும் அது நிகழத்தான் போகிறது, நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தங்கிலீஷில் தமிழை வாசிப்பது தவறல்ல. ஆனால் தமிழில் எதுவுமே வாசிக்காமலிருப்பதே தவறு. ஆங்கில எழுத்துருவிலேயே ஒருவர் தமிழிலக்கியங்களை வாசிக்கும் சூழல் இருந்தால், வாசித்திருந்தால் ஒன்றும் பிழையில்லை.
எந்த மொழியும் அதன் இலக்கியங்கள், சிந்தனைகளால்தான் வாழும். அதன் மரபுசார் இலக்கியமும் தத்துவமும் வாசிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கைமாறப்பட்டு தொடர்ச்சி உருவானால்தான் வாழும். அதுவே மொழியை வாழச்செய்யும் முறையே ஒழிய எழுத்துரு போன்ற அடையாளங்களைப் பேணிக்கொள்ளுவதோ பெருமைபேசி மெய்சிலிர்ப்பதோ அல்ல.
உண்மையில் எங்கே மிகையான மெய்சிலிர்ப்பு இருக்கிறதோ அங்கே அந்த மெய்சிலிர்க்கப்படும் விஷயம் அழிகிறது என்றே பொருள். அது அனைவருக்கும் தெரியும். அந்தக் குற்றவுணர்ச்சியை மறைக்கவே அந்த மெய்சிலிர்ப்பும் கண்ணீரும். எதிரிகளுக்கு எதிராக போர்க்குரலெழுப்புபவர்களுக்கு நன்றாகவே தெரியும், அவர்களின் அறிவுசார்ந்த அக்கறையின்மையே மெய்யான எதிரி என.
ஜெ