அன்புள்ள ஜெ.
உங்கள் குறிப்புகளில் நீங்கள் நட்சத்திர விடுதிகளில் தங்குவதைப் பற்றிய குறிப்புகள் அடிக்கடி, இயல்பாக, வந்துசெல்கின்றன. உங்களுக்கு அதில் ஓர் ‘அப்செஷன்’ இருக்கிறதா? அந்த விடுதிகளில் தங்குவதில் மகிழ்ச்சி அடைகிறீர்களா?
ஆர்.ராஜாமணி
அன்புள்ள ராஜாமணி,
நான் நட்சத்திரவிடுதிகளில் தொடர்ச்சியாகப் பலநாட்கள் தங்கத் தொடங்கியது சினிமாவுக்குள் நுழைந்தபின், 2005 முதல். முதலில் தங்கியிருந்த விடுதி விஜய் பார்க். அதன் பில் பல விடுதிகள். இந்த பதினெட்டாண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக நூறுநாட்கள் என்ற கணக்கில் பற்பல ஆண்டுகள் நட்சத்திரவிடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆகவே இன்று அவை ஆடம்பரங்கள் அல்ல, வாழ்க்கைமுறை. ஆகவே இன்று கிளர்ச்சி ஏதுமில்லை. வசதிதான்.
நான் அடிப்படையில் ஆடம்பரங்களுக்கு எதிரானவன். சொந்தச் செலவில் எந்த ஆடம்பரங்களையும் செய்வதில்லை. உயர்தர ஆடைகள் கூட என்னிடமில்லை. எந்த ஆடம்பரப் பொருட்களுமில்லை. நடுத்தரவர்க்க வாழ்க்கைமுறையே எனக்கு இயல்பானது. அதில் பெரிய பொறுப்புகளில்லை, ஆகவே அதைப்பற்றி யோசிக்காமல் வாழலாம். அந்த வாழ்க்கையை வாழும்பொருட்டே டிவி நிகழ்ச்சிகளைக் கூட தவிர்த்து வந்தேன். இன்றும் அப்படியே.
ஆனால் அழகு என்பது எப்படியோ இந்தியச் சூழலில் ஓர் ஆடம்பரமாகவே உள்ளது.ஓர் அழகான வீடு என்றால் அதை நேரம் செலவழித்துப் பராமரிக்கவேண்டும், அதற்கு வேலைக்காரர்கள் வேண்டும். என் சொந்த எழுத்து அறை ஒரு புத்தகக்குவியல். ஆனால் அழகான எழுத்துமேஜை எனக்கு மிகுந்த பரவசத்தை அளிக்கிறது. ஒரு நட்சத்திரவிடுதியில் அது சாத்தியம். வீட்டில் iநான் புத்தகங்களை புரட்டி குவிப்பேன். டீக்கோப்பைகள் கழுவாமலிருக்கும். விடுதிகளிலென்றால் நாளில் நான்குமுறை ஊழியர்கள் அதை தூய்மைசெய்து அழகு படுத்துவார்கள்.
எனக்கு பிடித்த சுகசௌகரியங்கள் என ஏதுமில்லை. அறை அழகாக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் எழுதும் ஊக்கத்துக்கு அந்த அழகு தேவையில்லை. வழக்கமான இடமே போதும். அதற்கப்பால் நான் மகிழ்ச்சியடையக்கூடிய ‘வசதி’ என்றால் வெந்நீர் ஷவர், வெந்நீர் குளியல்தொட்டி. விடுதிகளில் ஒருநாளில் நாலைந்துமுறை வெந்நீரில் குளிப்பேன். அது என் அப்பாவிடமிருந்து வந்த ஏதோ தொடர்ச்சி. அப்பா ஆற்றில் குளிப்பதில்லை. மேமாதம்கூட வெந்நீர்தான். அதை ஊரில் கேலியாகச் சொல்வார்கள். அப்பா அவ்வாறுதான் என்னில் நீடிக்கிறார்