ஒளி, ஒரு நினைவு

2020 கோவிட் தொற்றுக்காலம் அனைவரையும் ஆக்ரமித்திருந்தபோது, அதன் தொடக்கப் பரபரப்பு உச்சத்தில் இருந்தபோது, நான் விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

2020 மார் 17ல் அம்முடிவை எடுத்தேன். கோவிட் பற்றி தேவையான எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுவிட்டோம். என்ன செய்யக்கூடாது, என்ன செய்யவேண்டும் என அனைவருக்கும் தெரியும். இனி ஒவ்வொருநாளும் எங்கே எவ்வளவு சாவு என்னும் கணக்கெடுப்புகள் தேவையில்லை. அதனால் உளச்சோர்வே எஞ்சும். ஆகவே இனி அதைப்பற்றி எண்ணப்போவதில்லை. அதைப்பற்றிய எந்த செய்தியையும் கேட்கவோ, விவாதிக்கவோ போவதில்லை. இனிமுதல் நாட்களை இனிமையாக மட்டுமே கழிப்பதாக முடிவெடுத்துள்ளேன்.

அதனடிப்படையில் நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் நான்கு நெறிகளைச் சொல்லியிருந்தேன். கலையிலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுவது, குடும்பத்துடன் ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட பொழுதைச் செலவழிப்பது, ஆனால் குடும்பத்தினரின் தனிப்பட்ட நேரத்தை அனுமதிப்பது, குடும்பத்தினர் உட்பட எவரையும் எவ்வகையிலும் திருத்தவோ கண்டிக்கவோ விமர்சிக்கவோ முயலாமலிருப்பது, கூடுமானவரை நண்பர்களுடன் தொடர்பிலிருப்பது.

அவற்றின் அடிப்படையில் நான் நாளுமொரு கதை எழுதலானேன். ஒவ்வொருநாளும் ஸூம் வழியாகச் சந்தித்து பேசினோம். ஸூமிமேலேயே கலையிலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டோம். தொற்றுக்காலத்தை மாபெரும் களியாட்டாக ஆக்கிக்கொண்டோம். இன்று எண்ணினால் ஏக்கம் எழுமளவுக்கு அழகான காலம் அது

அவ்வாறு ஸூமில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் இது. ஒவ்வொருவரும் உலகின் ஒரு பகுதியில் வாழ்ந்தனர். இயக்கியவர் மணிரத்னத்தின் உதவியாளரும் படைவீரன், வானம் கொட்டட்டும் படங்களின் இயக்குநருமான தனா. ஸூம் செயலி தானாகவே செய்த எடிட்டிங் நல்ல சினிமா போலவே ஆகிவிட்டிருக்கிறது. குறிப்பாக ஸூம் ஒரு கணம் தாமதிக்கும். அது காட்சியின்மேல் வசனம் ஒலிக்க திரைப்படமாகவே ஆகிவிட்டிருக்கிறது.

இந்த நாடகத்தை தமிழ் சினிமாவின் முதன்மை இயக்குநர்கள் எல்லாருமே பார்த்திருக்கிறார்கள். கமல் உட்பட பெரிய நடிகர்கள் ’நாங்கள் பங்குகொண்டிருக்கலாம், வெட்டியாகவே இருந்தோம்’ என சொல்லியிருக்கிறார்கள். இன்று ஓர் அழகிய நினைவு

முந்தைய கட்டுரையுவன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாபி, கடிதங்கள்