விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாகக் கடந்த 8, 9, 10 ஆகிய நாட்களில் ஊட்டியில் நடைபெற்ற காவிய முகாமில் கலந்து கொண்டேன். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. திருப்பூரில் இருந்து நண்பர் சிவக்குமார் அவர்களுடன் சென்றிருந்தேன். நான் ஊட்டி சென்று இரவில் தங்குவது இதுதான் முதல்முறை.அதுதான் சற்று சிரமாக இருந்தது. ஒருவாரத்திற்குமுன் ஜெயமோகன் டாட் இன்னில் அவரிடம் நான் கேட்ட கேள்விக்கு ஜெ.மோ. அவர்களின் பதில் பதிவு வந்திருந்தது. என் பெயரைச் சொன்னவுடன் நீங்களா என்று சிலர் ஆர்வமாகப் பேசினார்கள். சில நண்பர்கள் மற்றவர்களிடம் அந்தப்பதிவைச் சொல்லி அறிமுகப்படுத்தினார்கள். நான் பொதுவாக யாரிடமும் நானாகச் சென்று உரையாடுவதில்லை. அக்கேள்வி சின்னத்தனமாக இருப்பதாக என்னிடம் சிலர் ஈமெயில் அனுப்பித் திட்டியிருந்தனர். ஆனால்அக்கேள்விதான் சில நண்பர்களை அறிமுகப்படுத்தியது.
ஜெயமோகனின் நவீன தமிழிலக்கிய அறிமுகம் புத்தகம்தான் சாதாரணமாக வாசித்துக்கொண்டிருந்த என்னைப் புரியவைத்து இன்னும் கூர்மையாக வாசிக்கத் தூண்டியது. அதன்பின்னர் முன்னர் படித்த நூல்கள், மறுவாசிப்பில் வேறுவிதமான அனுபவத்தைக் கொடுத்தன. இந்த நிகழ்ச்சி இன்னும் கூர்மையாக வாசிப்பதற்குரிய புரிதலை எனக்கு அளித்தது.
இந்தக் காவிய முகாமில் ஜெயமோகனின் ஆளுமை வியக்கவைத்தது. கோகுலத்தில் கிருஷ்ணரைச் சுற்றிக் கோபியர்கள் சுற்றிச் சுற்றி வந்ததாகக் கதைபடித்திருக்கிறேன். அதே போல் இங்கு வாசகர்கள் அவரை மொய்த்தபடியே இருந்தனர். அவருடம் சிறிது நேரம் கூட சலிக்காமல் உரையாடியபடியே இருந்தார். வாசகர்கள் கேட்ட சின்னச்சின்னக் கேள்விக்குக்கூட விரிவாக எளிமையாகப் புரியும் விதத்தில் இலக்கியம், தத்துவம், சமயம் உள்ளிட்ட எந்ததுறையைக் கேட்டாலும் விவரித்தபடியே எல்லா விசயங்களையும் வாசகர்க்குக் கடத்தியபடியே இருந்தார்.
முதல்நாள் முன்னாடி அமர்ந்து இருந்தேன். ஒரு அமர்வு இடைவேளையில் திடீரென ஜெயமோகன் அவர்கள் பின்னாடி இருந்து தோளில் கைபோட்டு ’என்ன சோர்வாகவே இருக்கிறீர்கள். ரொம்ப போரடிக்கிறதா’என்று வினவினார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் ஏதோ உளறிக்கொட்டினேன்.
திரு. நாஞ்சில்நாடன் அவர்களும் திரு. ஜடாயு அவர்களும் கம்பராமாயணத்தையும், ரகுவம்சத்தையும் விவரித்து அதன் சுவையை விளக்கிய விதம் அவற்றைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. நான் இந்த நிகழ்ச்சிக்காகக் கிழக்குப் பதிப்பகத்தின் இலியட் என்ற நூலை வாங்கிப் படித்தேன். அதன் கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒன்றுக்கொன்று குழப்பி ஒன்றுமே மண்டையில் ஏறாமல் அப்படியே வைத்துவிட்டேன். ஜெயமோகன் அவர்கள் விளக்கி விவரித்த விதத்தில் இனி சுலபமாகப் படித்துவிடுவேன் என்று எண்ணுகிறேன்
என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு முக்கிய நிகழ்ச்சி குருகுலத்தைச் சேர்ந்த ராஜீவ் கிருஷ்ணா அவர்களின் கதகளி நிகழ்ச்சி. கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் பார்த்திருக்க முடியாது. அதுவும் ஒவ்வொரு பாவத்தையும் எளிமையாக விளக்கிய முறை. அவரின் மலையாளத் தமிழ் அழகு.
த.முத்துக்கிருஷ்ணன்