அயோத்திதாசர்-கடிதங்கள்,படங்கள்

அன்பிற்கினிய நண்பர் ஜெ

வணக்கம்.உன் வரவு எங்களுக்கு மிகவும் உற்சாகமாகவே அமைந்தது. பண்டிதர் சிந்தனையை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டாய்.

அவற்றை நாங்கள் அடித்தட்டு மக்கள் வரை கொண்டுசெல்கிறோம்

எங்கள் அழைப்பை ஏற்றுக் கருத்தரங்கத்தைச் சிறப்பித்ததற்கு

மிக்க நன்றி

தோழமையுடன்

பாரி செழியன்

***

அன்புள்ள பாரி

நலம். காலை பத்துமணிக்குத்தான் வந்துசேர்ந்தேன்

கூட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. உண்மையில் நான் உரையைத் தயாரிக்கும்போது என்னுடைய சிந்தனைகளை எல்லாம் ஒரு அமைப்புக்குள் கொண்டுவரலாமென்று நினைத்தேன். அவை சிதறிக்கிடந்தன. நான் பண்டிதரைப்பற்றி ஆங்காங்கே சொல்லியிருக்கிறேன். இரு மலையாளக் கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். அத்துடன் நண்பர்களுடன் பேசும்போது மூன்று நீன்ட உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறேன். அவற்றை அவர்கள் நினைவில் வைத்திருந்தது மகிழ்ச்சி அளித்தது

ஆனால் எழுதும்போது என் சிந்தனைகள் பல திசைகளுக்கு சிதறிச்சென்றன.  பலவற்றை வெறுமே தொட்டுத்தொட்டு மீண்டன. கட்டுரை அகலமாக ஆகிவிட்டது. ஆனால் பேசுவதைப் பேசுவோம் என முடிவெடுத்தேன். பொதுவாக இத்தனை நீண்ட ஒரு உரையை, இத்தனை காத்திரமான ஓர் உரையை, நம் சூழல் உள்வாங்குவதில்லை. மேடைப்பேச்சுக்குரிய ஒரு சுவாரசியமும் இல்லாத நேரடியான கருத்துக்கள் இவை. பலவகைப்பட்ட கேள்வியாளர்கள் அமர்ந்திருக்கும் அவையில் இவை எப்படி ஏற்கப்படுமென ஐயம் கொண்டிருந்தேன்

அதற்கேற்ப அவையும் பலதரப்பட்டதே. பலர் உரைக்குப்பின் என்னிடம் பேசியதை வைத்து நோக்கினால் அவர்களும் பண்டிதரைக் கேள்விப்பட்டதேயில்லை. திருமாவளவனின் படம் போடப்பட்ட சுவரொட்டியைக் கண்டுவந்தவர்கள் சிலர். ஆனால் ஒரு கணம்கூடக் கவனம் சிதறாது அவை உரையை கவனித்ததைக் கண்டு உண்மையிலேயே பிரமித்துப் போனேன். பலர் குறிப்புகள் எடுத்துக்கொண்டதைக் கண்டேன். நண்பர்களும் சமீபத்தில் இப்படி ஒரு கூட்டத்தைக் கண்டதில்லை என்றே சொன்னார்கள்.

பல நண்பர்கள் வந்து தங்கள் நிறைவை, மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்கள். சிந்திப்பதற்கான ஒரு தொடக்கமாகவும் சவாலாகவும் இருந்தது பேச்சு என்றார்கள். நிறைவாக உணர்ந்தேன். சில ஐயங்களும் கேட்கப்பட்டன. எல்லாரிடமும் எனக்குக் கடிதம் எழுதச்சொன்னேன். தங்கள் மொழிநடைபற்றித் தயக்கம் தெரிவித்தனர். எழுதுங்கள்,நானோ நண்பர்களோ சரிசெய்துகொள்கிறோம் என்றேன். ஒரு அறிவார்ந்த அறைகூவலைப் பண்டிதர் நிகழ்த்தியிருப்பதை அவர்களால் உணர முடிந்தது

நான் நினைத்ததும் அதுவே. புரிகிறதா என்பதல்ல முக்கியம். எவ்வளவுபெரிய ஒரு முன்னோடி வேலை நிகழ்தப்பட்டிருக்கிறது என்பதை உணர வைத்தலே போதும் என நினைத்தேன். அது வெற்றிதான்.

இரவில் விடிகாலை ஐந்துமணிவரை அந்தரங்கமான உரையாடலும் நிறைவை அளித்தது. நண்பர்களும் அத்தகைய ஓர் திறந்த உரையாடல் நிகழ்ந்ததைப்பற்றிப் பெரும் நிறைவுடன் சொல்லிக்கொன்டிருந்தார்கள். மூடிய அறைக்குள் மட்டுமே இன்று அப்படி ஓர் உரையாடல் நிகழமுடியுமென்பது ஒரு குறையே என்றாலும் அதன் நட்புணர்வு நெகிழவும் நிறைவுகொள்ளவும் செய்தது.

நண்பர்கள் இந்தக்கூட்டத்தின் தொடர்ச்சியாக நீங்கள் கோவை, ஈரோட்டில் நிகழ்ச்சி நடத்தலாமெனச் சொன்னார்கள். அலெக்ஸ் நன்றாகவே பேசுகிறார் என்பது என் எண்ணம். அல்லது வேறு எவராவது பேசலாம்.

மீன்டும் நன்றி. இங்கே வரும் திட்டம் உண்டா? பேசுவோம். சொன்னது போல அடுத்து இருமாதம் கழித்து இந்தக்கட்டுரையின் அடுத்த பகுதியைப் பேசலாம்

நிகழந்த வினாக்களை ஒட்டிக் கட்டுரையை இன்னும் கட்டுக்கோப்புள்ளதாக ஆக்கலாமென்றும் நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஒரு சிறுவனின் கடிதம்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7