இன்றொரு நாள்!

இந்தியாவின் சந்திரயான் இன்று நிலவில் இறங்கியிருக்கிறது. இன்னமும் மானுடன் தொடாத நிலவின் மறுபக்கத்தை தொட்டு  அங்கு நீர் இருப்பதை மானுடத்திற்கு அறிவித்திருக்கிறது.

நான் இதைப்போன்றவற்றில் மிகையூக்கம் கொள்பவன் அல்ல. மாலை ஆறரை மணிக்கு இணையத்துக்குச் சென்று என்ன நிகழ்ந்தது என்று பார்த்தேன். ISRO அறிவியலாளர்களின் கொண்டாட்டத்தை கண்டேன். மகிழ்ச்சியும் நிறைவும் உருவாகியது. ஆம், ஒரு வெற்றித்திருநாள்.

வான்வெளியை வெல்லுதல் குறித்த ஐயங்களை முன்வைப்பது ’சமூக அக்கறை கொண்ட’ அறிவுஜீவித்தனம் என நம்பும் காலம் முடிந்துவிட்டது. இன்றைய இளைஞர்களிடம் அது செல்லுபடியாகாது. அவர்கள் அறிவியல் கற்றவர்கள். அவர்களுக்கு இத மதிப்பு தெரியும்.

காட்டில் புலி ஆரோக்கியமாக இருந்தால் மொத்த காடும் நலமாக உள்ளது என்று ஒரு சூழியல் கருத்து உண்டு. வெண்வெளி வெற்றி என்பது ஒரு தொழில்நுட்ப வெற்றிப் பறைசாற்றல். பிற அனைத்து துறைகளிலும் அடைந்துள்ள தொழில்நுட்ப வெற்றியின் தொகுப்பு முனை அது.

நம்பவே முடியாத மிகக்குறைந்த செலவில், பெரும்பாலும் உள்ளூர் தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்திய விண்வெளி ஆய்வுகள் செய்யப்படுகின்றன. ஆகவே அங்கு நிகழும் வெற்றிகள்தான் முதன்மையாக இந்தியத் தொழில்நுட்பத்தின் வெற்றியாகக் கருதப்படவேண்டியவை.

விண்வெளி வெற்றி என்பது படைபலத்தின் வெளிப்பாடும்கூட. படைபலமில்லாத நாடு என்னவாக இருந்தாலும் பாதுகாப்பற்றதே என உக்ரேன் முதல் நூறு நாடுகளை சமகால உதாரணமாகச் சொல்லிவிட முடியும்.

அறிவியலின் எல்லைகள், அதன் மெய்யான பயன்கள் பற்றிய விவாதம் ஒரு சூழலில் என்றும் இருந்துகொண்டே இருக்கவேண்டுமென நம்புபவன் நான். ஆனால் அறிவியலை வெல்லாமல் அந்தச் சிந்தனைகளால் பயனில்லை. அறிவியலை வெல்ல அறிவியலை கொண்டாடும் மனநிலையும் அமையவேண்டும்.

இந்நாள் இளையோர் உள்ளத்தில் அந்த மனநிலையை உருவாக்குவதாக அமைந்துள்ளதை காண்கிறேன். மகிழ்ச்சியும் நிறைவும் அதனால்தான்.

முந்தைய கட்டுரைஜெயலட்சுமி சீனிவாசன்
அடுத்த கட்டுரைஇந்திய தத்துவ அறிமுக முதல்நிலை முகாம் மீண்டும் ஏன்?