மனமல்லவா? கடிதம்

வணக்கம் ஜெ,

கோவை புத்தகத் திருவிழாவில் நீங்கள் நிகழ்த்திய உரையைக் கேட்டேன், பார்த்தேன்.

சோலை வாழைச் சுரிநுகும் பினைய

அணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்து

மயங்குதுயர் உற்ற மையல் வேழம்

உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர

ஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும்

மாமலை நாடன் கேண்மை

காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே.

என்ற சங்கப் பாடலைக் கிட்டத்தட்ட உரையின் இறுதியில் குறிப்பிட்டீர்கள். இதன் பொருள்விளக்கத்தை நீங்கள் கூறக் கேட்டபின், மனம் வேறு சில கிளைகளுக்குத் தாவிற்று. ‘எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்’ என்பதை கண்ணகியின் பொருட்டு உங்கள் நண்பர் சொன்னதைக் குறிப்பிட்டீர்கள், இப்போது ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ என்ற பாடலில் நா.முத்துக்குமார் எழுதிய ஒரு சொல்லை இங்கே சொல்லலாம் என்று தோன்றுகிறது: ‘மனமல்லவா’. அப்படிப் பாடல்பெற்ற மனம் தாவுவதில் என்ன வியப்பு.

‘பெருந்தேன் நட்பு’க்கு பெருந்தேவி எழுதிய முன்னுரையை வாசித்தபின், புத்தகத்தையும் வாசித்தபின் நிகழ்ந்த ‘இரவுப் புயல்’ பற்றி எழுதியிருந்தீர்கள். இறை குடியிருக்கும் யானையின் மத்தகத்தை நீவிய பச்சிளம் குருத்து அந்தப் புத்தகம்தான் என்று மனம் சொல்லத் தொடங்கிற்று. காட்டைக் கலக்கிய வேழம் களைத்து, ஓய்வது வரையில் பெருந்தோட் குறுஞ்சாத்தனாரின் அந்தப் பாடலில் உள்ளது. அதற்கு மேல் யானையைப் பின் தொடரும் அவசியம் அவருக்கில்லை.

ஆனால், மனமல்லவா. அது, சற்றே ஓய்வெடுத்தபின் யானை மீண்டும் தன் காட்டை ஆளப் புறப்படுவதன் தொடக்கம்தான் இந்த உரை என்கிறது. எனக்குப் பிடித்த கிரிக்கெட் சொற்களால் சொல்வதென்றால் ஒரு வலைப் பயிற்சி. அந்த உரையை நிகழ்த்தினீர்கள் என்று சொல்லவும், பார்த்தேன் என்று சொல்லவும் அடிப்படையில் ஒரு வலைப்பயிற்சியின் காட்சியே அமைகிறது. ஒரு யானையின் கிரிக்கெட். ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.

நன்றியும் அன்பும்,

தென்றல்.

முந்தைய கட்டுரைபூமியின் விழிகள்
அடுத்த கட்டுரையுவன், கடிதம்