மறைந்த என் தந்தை எதைப் பற்றிப் பேசினாலும் ‘சயன்டிஃபிக்கா பாத்தோம்னா…’ என்று சொல்லும் வழக்கம் கொண்டிருந்தார். அந்தத் தலைமுறையின் மனநிலையை அது பிரதிபலித்தது என நான் நினைப்பதுண்டு.
இந்தியாவின் மரபான கல்விமுறை இரண்டு. மதக்கல்வி, தொழில்கல்வி. அவை குருகுல முறைப்படி கற்றுக்கொடுக்கப்பட்டன. ஐரோப்பியக் கல்விமுறை இங்கே ஆங்காங்கே அறிமுகமாகியிருந்தது. ஆனால், 1937-ல் இந்திய தேசியக் காங்கிரஸ் மாகாண சபைகளுக்கான தேர்தலில் பங்கேற்று, நாடெங்கும் காங்கிரஸ் அரசுகள் அமைந்தபோதுதான் தேசியப் பொதுக்கல்வி பற்றிய விழிப்புணர்ச்சி உருவாகியது.
சுதேசிக் கல்வி
ஒருங்கிணைந்த கல்விக் கொள்கைகள் விவாதித்து உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் அமைப்பு இந்தியாவெங்கும் சுதேசிக் கல்வி என்ற கோஷத்தைக் கொண்டுசேர்த்தது. கிராமங்கள்தோறும் ஆரம்பப் பாடசாலைகள் அமைந்தன. இந்தியாவின் பொதுக்கல்வியின் உண்மையான தொடக்கம் அதுதான்.
என் தந்தை அந்த எழுச்சியின் விளைவாகப் பள்ளிக்குச் சென்ற தலைமுறையினரில் ஒருவர். அவரது ஊரில் தேசியவாதி ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்விக்கூடம் ஒன்று அமைந்ததுதான் அப்பா கல்வி கற்பதற்கான காரணம்.
அந்தக் காலகட்டத்தின் சில அடிப்படை மனப்பதிவுகள் அவரிடம் கடைசிவரை இருந்தன. அதில் முக்கியமானது, அறிவியல் நோக்குதான் நவீனக் கல்வியின் அடிப்படை என்ற எண்ணம். இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு ஐரோப்பாவில் வளர்ந்துவரும் நவீன அறிவியலைக் கற்றுக்கொள்வது மிக அவசியமானது என்ற சிந்தனை அன்றைய தேசியவாதிகள் அனைவரிடமும் வேரூன்றியிருந்தது; அந்தக் காலக் கல்வியில் அது பிரதிபலித்தது.
நிகழ மறுத்த கொந்தளிப்பு
நவீன அறிவியல் என்று அவர்கள் நம்பியது நிரூபணவாதத்தைத்தான் (எம்பீரிசிஸம் -empiricism). புறவயமான சோதனைகள் மூலம் கண்ணுக்கும் கருத்துக்கும் நிரூபித்துக்காட்டப்படுவதே உண்மை என நம்புவதைத்தான் அவர்கள் அறிவியல் என்று சொன்னார்கள். படித்தவர்கள் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்று அவர்கள் நம்பினர்.
எவ்வளவு விரைவாக அலோபதி மருத்துவம் இந்தியாவில் காலூன்றியது என்பதே இதற்கு ஆதாரம். நுண்கிருமிகள் மூலம் நோய்கள் பரவுகின்றன என்ற கருத்து, இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டு மருத்துவ ஞான மரபுக்கு முற்றிலும் புதியது. நோய் என்பது உடலின் சமநிலைக் குறைவின் விளைவு என்றே நாம் நம்பிவந்தோம். அவ்வாறு ஒரு புதுக் கருத்து நம்முடைய சிந்தனையை வந்து மோதும்போது எவ்வளவு பெரிய கொந்தளிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்… எவ்வளவு விவாதங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்!
ஒன்றுமே நிகழவில்லை. வெறும் 20 ஆண்டுகளில் இந்திய மருத்துவ மரபு கிட்டத்தட்ட முழுமையாகவே கைவிடப்பட்டு, அலோபதி மருத்துவம் ஒரே மருத்துவமுறையாக இங்கே நிலைகொண்டது. என் தந்தையின் தலைமுறை அலோபதி மருத்துவம் மீது பெரும் நம்பிக்கைகொண்டிருந்தது. பல்லக்கில் உலாவந்த ஆயுர்வேதிகளின் குடும்பங்கள் பட்டினியால் வாடுவதை என் சிறுவயதில் கண்டிருக்கிறேன்.
பகுத்தறிவின் பொற்காலம்
ஆடைகளில், ஆச்சாரங்களில் நிகழ்ந்த இந்த மாற்றத்தைப் பகுத்தறிவு என்ற சொல்லால் நாம் சுட்டிக்காட்டுகிறோம். 1950-1980 வரையிலான 30 ஆண்டு காலத்தை இந்தியாவின் பகுத்தறிவியக்கத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். இந்தியா எங்குமே பகுத்தறிவை முன்வைத்த இடதுசாரி இயக்கங்கள் அரசியல் செல்வாக்குபெற்றன.
பகுத்தறிவுடன் இருப்பதே அறிவுடைமை என்ற நம்பிக்கை படித்தவர்களிடையே பரவலாக இருந்தது. கடவுள் நம்பிக்கை, குலச் சடங்குகள், சாதி போன்று எளிதில் மாற்றிக்கொள்ள முடியாத விஷயங்களைக் கொஞ்சம் வெட்கத்துடன் அந்தரங்கமாக வைத்துக்கொண்டனர். ஒரு மன்னிப்புகோரும் வகையில், “என்ன இருந்தாலும் ஒரேயடியா அப்படி விட்டுர முடியாதே” என்றெல்லாம்தான் அதைப் பற்றிச் சொல்வார்கள்.
போலி அறிவியல்
80-களுக்குப் பின் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது. மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றுக்கு எளிமையான அறிவியல் விளக்கங்களை அளிக்க ஆரம்பித்தனர். குளித்த பின்னர் விபூதி பூசுவதால் சளி பிடிப்பதில்லை என்பதுபோல எழுதப்பட்ட ‘அர்த்தமுள்ள மத’விளக்கங்கள் வந்தன. (அதற்கு ஏன் விபூதி? டால்கம் பவுடர் போதாதா என்று கேட்கக் கூடாது.) கோயிலில் பூஜைக்கு வைத்த வெற்றிலையில் மின்னூட்டம் உருவாகியிருக்கிறது, அந்த மின்னூட்டம் கோபுரக் கலசங்கள் வழியாக இறங்கிவந்திருக்கிறது என்பதுபோல போலி நிரூபணச் சோதனைகள் பரப்பப்பட்டன.
சென்ற தலைமுறையில் பொதுக்கல்வி எழுச்சிபெற்றபோது, மதக் கல்வி முழுமையாகவே கைவிடப்பட்டது. இந்து மதத்தைப் பொறுத்தவரை அதன் மெய்யியல், தத்துவம், குறியீடுகள் ஆகியவற்றைப் பற்றிய மிக எளிய புரிதல்கள்கூட சராசரி இந்துவிடம் இருப்பதில்லை. அதே சமயம், அவற்றில் ஆழமான பக்தியும் உள்ளது. மறுபக்கம் இவர்கள் அறிந்தது மிகமிக எளிய நிரூபணவாத அறிவியலை மட்டுமே. அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கும் அடிப்படைத் தத்துவநோக்கு பற்றிய அறிமுகமே இவர்களுக்கு இல்லை.
ஆகவே, தாங்கள் அறிந்த எளிமையான நிரூபணவாத அறிவியலைக் கொண்டு தாங்கள் நம்பும் மதச் சடங்குகளையும் குறியீடுகளையும் விளக்குவதற்காக முயல்கிறார்கள். விளைவாக, அசட்டுத்தனமான போலி அறிவியல் ஒன்று உருவாகி, இன்று எங்கும் புழங்கிக்கொண்டிருக்கிறது. செல்லாக்காசுதான் அதிவேகமாகப் புழங்கும்.
இரண்டாவது மூடநம்பிக்கைக் காலம்
இந்தியாவின் நவீன வரலாற்றில் இதை இரண்டாவது மூடநம்பிக்கைக் காலம் என்று சொல்லலாம். இந்த மூடநம்பிக்கை கொண்டவர்களில் கணிசமானவர்கள் உயர்கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆன்மிகம், தியானம், மாற்று மருத்துவம், பல்வேறு வகையான ‘ஹீலிங்’ முறைகள், விதவிதமான சோதிடங்கள் என்று ஏராளமான வட்டங்கள் இன்றுள்ளன.
ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், அவரது குரு அவருடைய குண்டலினியைக் கையால் தொட்டுக் காட்டியதாகவும் அங்கே ஒரு பாம்பின் சலனத்தை அவர் தொட்டு உணர்ந்ததாகவும் என்னிடம் சொன்னார். நான் சொன்னேன், ‘குண்டலினி என்பது ஓர் உறுப்போ அமைப்போ அல்ல… அது ஓர் உருவகம். மனிதனின் அடிப்படை செயல்விசையான காமத்தைத்தான் அப்படி உருவகித்திருக்கிறார்கள். யோகம் என்பது நீங்கள் நினைப்பதுபோல உடற்பயிற்சி அல்ல. அது குறியீடுகள் வழியாக நிகழ்த்தப்படும் ஓர் அகப்பயணம். நீங்கள் கற்க வேண்டிய ஆதாரமான பழைய நூல்களை வேண்டுமென்றால் சொல்கிறேன். இதை மரபான முறையிலும் நவீன நோக்கிலும் 20 ஆண்டுகள் கற்றிருக்கிறேன்.’
ஆனால், அவர் என் அறியாமைக்காக இரங்கி ஒரு புன்னகையை அளித்தார். ‘நீங்க பழைய பார்வையிலே பேசிட்டிருக்கீங்க சார்… நான் சயன்டிஃபிக்கா சொல்றேன்’ என ஆரம்பித்து ‘குண்டலினி, நெற்றிக்கண் இன்ன பிறவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் சோதனைச்சாலையில் நிரூபித்துவிட்டார்கள்’ என விளக்க ஆரம்பித்தார். ‘சயன்டிஃபிக்’ என்ற சொல்லை மீண்டும் கேள்விப்படுகிறேன். முற்றிலும் வேறு சூழலில், வேறு பொருளில்!
அறிவியலும் தத்துவமும்
அறிவியல் என்பது தனக்கே உரிய தர்க்கமுறையைக் கொண்ட ஓர் அறிவியக்கம். நிரூபணவாதம் என்பது அதன் ஒரு பகுதிதான். அறிவியலின் சாரம் தத்துவத்துடன் உரையாடக் கூடியது. தத்துவம் தன்னுடைய தேடலை உருவகங்கள் மூலம் தேடிச் செல்லக்கூடிய ஒன்று. இரண்டு அறிதல் முறைகளின் அடிப்படை விதிகளையும் அறிந்தால் மட்டுமே இரண்டும் சந்திக்கும் புள்ளிகளைப் பற்றி நாம் பேச முடியும்.
இரண்டையும் புரிந்துகொள்ளாமல் குழப்பிக்கொள்ளும் இன்றைய போலி அறிவியலில் இருந்து தப்ப, இன்னொரு அறிவியக்கம் இங்கே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது பகுத்தறிவியக்கம் அது.
(தமிழ் ஹிந்து நாளிதழில் 25 நவம்பர் 2013ல் வெளியான கட்டுரை)