அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
பிரியதர்ஷினி குமரவேல். தற்போது ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறேன். கோவை PSG பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். அனல்காற்று நான் படித்த முதல் புத்தகம். எனது வாழ்க்கைத் துணைவன் அரவிந்த் அளித்த முதல் காதல் பரிசு. அதில் வருகின்ற அருண் கதாப்பாத்திரமாக அரவிந்தை கற்பனை செய்து பலமாதங்கள் எனக்கு நானே சிரித்துக் கொண்டிருப்பேன்.
திருநெல்வேலி பூர்வீகம். அப்பா குமரவேல் அவர்கள் தீவிரமான பெரியார் சிந்தனையாளர். சிறுவயது முதல் அவரது இறுக்கமான முகமும் உரத்த குரலும் ஒருவித பயத்தை வீட்டில் உருவாக்கும். இப்போதும் கூட அவரால் சொல்லவந்த செய்திகளைத் தாண்டி ஒரு வார்த்தை கூட அதிகம் பேச மாட்டார். ஆனால், தீவிர உழைப்பாளி. எங்களை நல்ல கல்லூரிகளில் கல்வி கற்கச் செய்தார்.
இந்த பத்து நாட்களாக தொடர்ந்து தங்கள் தளத்தில் வருகிற தன்மீட்சி, தன்னைக் கடத்தல், ஒளிரும் பாதை கட்டுரைகள் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதத் தூண்டியது. சில கேள்விகளுக்கு உங்களிடம் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
இயக்குனர் சரத் சூர்யா எடுத்த மக்கள் சினிமா தோற்றுப் போன நிலையில் அவரால் மீண்டும் இந்த வாழ்க்கையை இந்த மக்களை குற்றம் சொல்லாமல் நேசிப்பது இயங்குவது, கட்டிடக்கலை படித்த மது கிராமங்களில் கேணிகளை உருவாக்குவது, சைக்கிளிலேயே விதைகளுக்காக இந்தியா முழுதும் பயணிக்கத் துணியும் அந்த இளைஞர் இவ்வாறு உங்கள் தளத்தில் கண்டுகொண்ட இந்த மனிதர்களுக்கு எதிர்காலம் குறித்தும் சொந்தங்களின் வசவுகள் குறித்தும் தங்களது உடல்நிலை குறித்தும் உருவாகும் பயத்தை எப்படி எதிர்கொள்வார்கள்?. அப்பாவிடம் இவர்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கையில் ‘அவர்கள் பரவசத்தில் இந்த முடிவை எடுக்கிறார்கள். இது ஒரு வகையான போதை’ என்றார். ஆனால், தொடர்ந்து இவர்களை படிக்கும்போது அப்பா சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.
அப்போது, தங்களது தளத்தில் சிவகுருநாதனை குறித்த செய்தியை படித்தபின் அம்மாவுக்காக கைத்தறி சேலைகளை வாங்க அவரை நான்கு மாதங்களுக்கு முன்பு தொடர்புகொண்டேன். கைத்தறி சேலைக்கும் மில் சேலைக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் பேச பேச அவரிடம் சிவகுருநாதன் அனுபவங்களை கேட்டறிந்தேன். இப்போது வரை நம்பிக்கையை அளிக்கிறது.
தங்களது காந்தியக் கட்டுரைகளில் இருந்து யாரோ நண்பர் அனுப்பிய ஒரு மேற்கோள் தான் அவர் நெசவு செய்வதற்கு திருப்பியதாகச் சொன்னார். என்னால் நம்ப முடியாமல் பேசிக் கொண்டிருந்தேன். கை நிறைய குவியும் செல்வத்தை தூக்கி எறிந்துவிட்டு எப்படி இவ்வளவு கடினமான வேலையை விருப்பத்தோடு தேர்ந்தெடுப்பது? ஒரு மேற்கோள் அப்படி ஒரு அதீத நம்பிக்கையைத் தருமா?.
அவரது தொழிற்கூடம் பெரிய நெருக்கடியில் இருப்பதாகவும், ஆனாலும் குழந்தைகளுக்கு இந்த நெசவு என்னும் கலையை கற்றுத் தரும் பாடத்திட்டத்தை உருவாக்குவது தந்து எதிர்காலக் கனவு என்றார். ஏன் இந்த பொறுப்பினை சுமக்கிறார்கள்?. அவரிடம் கவலையில்லை, எப்படி?.
அடிக்கடி திருவண்ணாமலை காட்டுப்பள்ளி செல்வதாகவும் அங்கு தனது ஆசிரியராக ஒருவரை குறிப்பிட்டார். எப்படி ஒருவரின் சொல்லை நம்பி ஒட்டுமொத்த வாழ்க்கையையும் செலுத்துவது?. ஒருவகையில் ஆசிரியர் என்று நாம் ஒருவரை ஏற்றுக் கொள்வது நமது சுய அறிவை அழித்துவிடாதா?
சிவகுருநாதன் அவர்களிடம் உரையாடும்போது அவரது வார்த்தைகளுக்கு இடையில் ஒரு புன்னகை இருந்தது. அது எனது அப்பாவிடம் இல்லாதது. அவர் அம்மாவுக்கு அனுப்பிய சேலைகளோடு நலமறிதல் என்னும் தங்களது நூலினையும் அன்பளிப்பாக அனுப்பி இருந்தார். அம்மாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த முறை இந்தியா வரும்போது எனது அவிந்தனுடன் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.
அன்புடன்,
பிரியதர்ஷினி குமரவேல்
அன்புள்ள பிரியதர்சினி,
பலபடிகளாக அமைந்த கேள்விகள், பலவகை குழப்பங்கள். ஒவ்வொன்றாக நீவி எடுத்துப் பதில் சொல்ல முயல்கிறேன்.
இலட்சியவாதம் என்பது ஓர் அதீதநிலையாக மட்டுமே கொள்ளத்தக்க ஒன்று அல்ல. பெரும்பாலானவர்களுக்கு உலகியல் வாழ்க்கையே முக்கியம், அதுவே மையமானது. உலகியல் இன்பங்களை அவர்களால் துறக்க முடியாது. உலகியலில் மதிப்பு, அடையாளம், வெற்றி ஆகியவை தேவையாக இருக்கும். உலகியல் கடமைகளும் அவர்களுக்கு இருக்கலாம்.
இலட்சியவாழ்க்கையை மேற்கொள்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். அவர்கள் சாமானியர்களுக்கு எவ்வகையிலும் முன்னுதாரணங்கள் அல்ல. இலட்சியவாழ்க்கையை மேற்கொள்பவர்களின் மனநிலையை சாமானியர்களால் புரிந்துகொள்ள முடியாது.
இலட்சியவாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்கு இன்பம் என்பது அவர்களின் அந்த இலட்சியவாழ்க்கை சார்ந்தது மட்டுமாகவே இருக்கும். அவர்கள் வெற்றி என நினைப்பது, கௌரவம் என நினைப்பது முழுக்க முழுக்க அங்குதான். ஆகவே அவர்களுக்கு உலகியலை இழந்ததில் எந்த இழப்புணர்வும் இருக்காது.
சாமானியர்கள் உலகியலை விரும்புபவர்கள். அவர்கள் உலகியலை இழந்தால் காலப்போக்கில் அவர்களுக்கு கடும் இழப்புணர்வு உருவாகும். தொடக்கத்தில் இருந்த உற்சாகமெல்லாம் வடிந்து, இழந்தவை பெரியதாகத் தெரியும். அவர்கள் இழப்புகளைப் பற்றி புலம்பிக்கொண்டே இருப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
ஆகவே இலட்சியவாதிகளைப் பார்த்து இதெல்லாம் சாத்தியமா என சாமானியன் பிரமிக்கிறான். ஏதோ சூழ்ச்சி இருக்கும் என சாமானியர்களில் கீழோன் ஐயப்படுகிறான். இலட்சியவாதிகள் உலகியளான பார்வையில் பித்துக்குளிகளாக, பிழைக்கத்தெரியாதவர்களாக, பரிதாபத்துக்குரியவர்களாகத் தோன்றுகிறார்கள்.
ஆனால் உலகியலாளன் மெல்லமெல்ல வாழ்க்கையின் அர்த்தமின்மை நோக்கிச் செல்கிறான். உலகியலில் எவ்வளவு வென்றாலும், எவ்வளவு நுகர்ந்தாலும் அந்த அர்த்தமின்மையை அடையாமலிருக்கவே முடியாது. அது அப்படித்தான். ஆகவேதான் உலகியலாளர்கள் முதுமையில் அனத்திக்கொண்டே இருக்கிறார்கள். யாரும் மதிப்பதில்லை, எவருக்கும் நன்றியில்லை, எதற்கும் அர்த்தமில்லை, அப்படி இருந்திருக்கலாம் தவறவிட்டுவிட்டேன், இப்படிச் செய்திருக்கலாம் என்றெல்லாம் பேசிப்பேசி மாய்கிறார்கள். கடந்தகால ஏக்கங்களில் தோய்ந்திருக்கிறார்கள். விதிவிலக்குகளே இருக்க முடியாது.
இலட்சியவாழ்க்கை கொண்டவர்களின் பாதை நேர் எதிரானது. அது பெருகிப்பெருகிச் செல்கிறது. அவர்களில் பலர் காலப்போக்கில் பெரிதும் மதிக்கப்படும் ஆளுமைகளாக, சரித்திரத்தில் இடம்பெறுபவர்களாக ஆவதை சாமானியன் பார்க்கிறான். தான் குனிந்து பார்த்து பரிதாபப்பட்ட ஒருவர் அப்படி மாறிவிட்டதை அவனால் புரிந்துகொள்ள முடியாது.புகழ்பெற்ற பேராளுமைகளைப் பற்றி “அவரையெல்லாம் சின்ன வயசிலேயே தெரியும்சார். ஒரு பழைய சட்டையப் போட்டுட்டு வருவாரு அப்பல்லாம்…” என்றெல்லாம் சொல்லும் பலரை பார்த்திருக்கிறேன். ஆச்சரியம் ஒன்றுண்டு, நாராயணகுருவைப் பற்றியே ஒருவர் அப்படி எழுதிய குறிப்பை அண்மையில் வாசித்தேன்.
இலட்சியவாதமே வாழ்க்கை எனக்கொள்வது மிகமிகமிக கடுமையானது. நம் வாழ்க்கையின் எல்லா எல்லைகளையும் மீறிச்செல்வது. அது மிகமிக அரிதானவர்களால் மட்டுமே இயல்வது. ஆகவேதான் இலட்சியவாதமே வாழ்க்கை எனக்கொண்டவர்கள் போற்றப்படத்தக்கவர்களாகிறார்கள். வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். (நான் ஆச்சரியமாகப் பார்ப்பதொன்றுண்டு. இந்தியப்பெண்கள் மிகச்சாதாரனமாக கணவர்களின் இலட்சியவாத வாழ்க்கையை தாங்களும் தொடர்கிறார்கள். மிக எளிய சூழலில் இருந்து வந்த பெண்கள் கூட. இலட்சியவாதிகள்ள் அம்மனைவியரில் செலுத்தும் செல்வாக்கு அத்தகையது என கொள்வதா? அல்லது இயல்பாகவே பெண்களின் இலட்சியவாத அம்சம் ஆற்றல்மிக்கது என்று கொள்வதா எனத் தெரியவில்லை)
இலட்சியவாத வாழ்வை தேர்வுசெய்துகொண்டவர்களைப் பற்றி இரு சாரார் மழுங்கின பார்வை கொண்டிருப்பார்கள். உலகியல் வெறி மிக்க சாமானியர் ஒரு தரப்பு. ஆழ்ந்த அறிவோ கற்பனையோ ஆன்மபலமோ இல்லாமல் எளிய வாசிப்பைக்கொண்டு தங்களை அறிவுஜீவிகள் என எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இரண்டாம் தரப்பு. இவர்களில் கணிசமானவர்கள் அதிகார அரசியலில் மூழ்கிக் கிடப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அனைவரும் இலட்சியவாதத்தையே வாழ்வெனக் கொள்ளவேண்டியதில்லை என்று சொல்லவந்தேன். அது அனைவருக்குமுரிய பாதை அல்ல. இலட்சியவாதத்தின் பொருட்டு முழுமையாக உலகியலைத் துறப்பவர்கள் மட்டும் இலட்சியவாதிகள் அல்ல. அன்றாட உலகியல் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஓர் இலட்சியவாத அம்சத்தை மேற்கொள்பவர்களும் இலட்சியவாதிகளே.
இலட்சியவாதம் என்றால் அது சேவை மட்டுமல்ல. தன்னலம் கடந்த, மானுடம் நோக்கிய பணிகள் எல்லாமே இலட்சியவாதங்கள்தான். அவற்றின் களங்கள் ஏராளமானவை. கலையிலக்கியங்களும் இலட்சியவாத அம்சம் கொண்டவை ஆகலாம். முழுவாழ்க்கையையும் செலவிட்டு கலைக்களஞ்சியம் உருவாக்கிய தூரன் மாபெரும் இலட்சியவாதிதான்.
இலட்சியவாதம் ஒருபோதும் வெறுப்பு, காழ்ப்பு, எதிர்மறைத்தன்மை கொண்டதாக இருக்காது. அதிகாரம் அதன் உள்ளடக்கமாகவும் இருக்காது. இனம், மொழி, மதம், சாதி என குறுகிய குழுநலன்களுக்காக செயல்படுபவர்களும் தங்களை இலட்சியவாதிகளென எண்ணிக்கொள்வதுண்டு. அவை தன்னல நடவடிக்கைகள்தான். தான் என்பதை ஒரு கூட்டு அடையாளமாக வரையறுத்துக் கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.
அப்படி ஒரு இலட்சியவாத அம்சத்தை பொதுவான உலகியல் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டு, அதை ஓர் அந்தரங்கத் தவமாக வாழ்நாளெல்லாம் செய்துகொண்டே இருப்பதென்பதும் ஒரு சிறந்த வாழ்க்கைதான். அதுவும் நம்மை நிறைவுறச் செய்வதுதான். பெரும்பாலானவர்களுக்கு அதுவே இயல்வது. அதில் நாம் எதையும் முழுமையாக இழப்பதில்லை. நம் உலகியல் வாழ்க்கை ஒரு வீடு என்றால் அதில் ஓர் அறையை மட்டுமே இலட்சியவாதச் செயல்பாட்டுக்காக ஒதுக்கிக் கொண்டுள்ளோம். எதையும் இழக்காததனால் பின்னர் தன்னிரக்கம் தோன்றுவதுமில்லை.
இலட்சியவாதம் என பெரிதாக ஏதும் இல்லாமல், சின்னச்சின்ன ஆர்வங்களில் சிலகாலம் செலவிட்டபின் ‘நான்லாம் இதுக்குச் செலவாக்கின நேரத்தை செலவிட்டிருந்தா எப்டியெல்லாம் இருந்திருக்கலாம்.…’ என பிலாக்காணம் வைப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் தங்கஓ உலகியல் சாமர்த்தியமின்மைக்கு சாக்காக இலட்சியவாதத்தைச் சொல்லும் திறனற்ற மடையர்கள் மட்டுமே. மெய்யாகவே இலட்சியவாதத்தின் சுவை அறிந்தவர்கள் புலம்ப மாட்டார்கள்.
*
கடைசியாக உங்கள் ஒரு கேள்வி, ஆசிரியரை கவனித்தால் நம் சுயசிந்தனை போய்விடுமல்லவா என்கிறீர்கள் இல்லையா? இத்தகைய சிந்தனைகளெல்லாம் நம் நாட்டில் மட்டும் எப்படி முளைக்கின்றன என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
சரி, சுயசிந்தனை வேறு எப்படியெல்லாம் உருவாகும்? கல்விநிலையங்களில் படித்தால் அந்தக் கல்விநிலையத்தின் பாதிப்பு உண்டு. புத்தகங்களைப் படித்தால் அவை நம் சுயசிந்தனையை பாதிக்கும். ஆசிரியர்களை கவனித்தால் நம் தனித்தன்மை இல்லாமலாகும்.
அதாவது, வெளியில் இருந்து எதை தெரிந்துகொண்டாலும் அது நம் சிந்தனையின் தனித்தன்மையை பாதிக்கும் இல்லையா? அப்படியென்றால் சிந்தனை என்பது என்ன? சுத்தசுயம்புவாக மண்டைக்குள் உருவாவதா? அதெப்படி உருவாக முடியும்? பிறந்ததுமே மொழி தெரியவருகிறதே. சுற்றிலுமுள்ளவர்கள் பேசுகிறார்களே. பள்ளிக்கூடம் போய்விட்டீர்கள். வேலைக்குப் போகவேண்டியிருக்கிறது, சினிமா பார்க்க வேண்டியிருக்கிறது, டிவி பார்க்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் பாதிக்காதா?
அல்லது இப்படி வரும் சில்லறைப் பாதிப்புகள் மட்டும் போதும், தீவிரமான எந்த பாதிப்பும் வேண்டாம் என்று நினைக்கிறீர்களா? இந்தியாவில் பலர் சோபாவோ காரோ வாங்கினால் பாலிதீன் கவர் பிரிக்காமல் வைத்திருப்பதுபோல மூளையை புதுக்கருக்கு அழியாமல் வைத்திருக்கவேண்டுமா?
உலகம் முழுக்க மாபெரும் சிந்தனையாளர்களும் படைப்பாளிகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களில் எவராவது அப்படி உறையிடப்பட்ட மூளையுடன் இருந்ததாக அறிந்திருக்கிறீர்களா?
ஒருவனின் தனித்தன்மை என்பது அவன் எவருடனும் உறவாடாமல் இருக்கையில் உருவாவது அல்ல. அவ்வாறு உறவாடாமலிருக்கையில் உருவாவது அறியாமையும் அதன் விளைவான ஆணவமும்தான். அவை இணைகையில் அவன் எந்த அறிவாலும் தீண்டப்படாதவனும் ஆகிவிடுகிறான்.
அறிவு, கற்பனை இரண்டிலுமுள்ள தனித்தன்மை என்பது ஒருவன் முடிந்தவரை முழுவீச்சுடன் தன் சூழலுடன் உரையாடுவது வழியாக உருவாவது. தன்னை உடைத்து திறந்து உள்ளே வரும் விசைகளுக்கு அவன் தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டும். தன்னை மூழ்கடிக்கும் அலைகளுக்குள் நுழையவேண்டும். ஆக்ரமிக்கும் ஆளுமைகளை தேடித்தேடிச் செல்லவேண்டும்.
ஏனென்றால் சிந்தனை என்பது ஒருபோதும் ஒரு மனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. குகைக்குள் அமர்ந்து தவம் செய்பவனின் சிந்தனைகூட கூட்டான மானுடச் சிந்தனையின் ஒரு பகுதிதான். அக்காலகட்டச் சிந்தனையின் ஒரு கூறாகவே எச்சிந்தனையும் அமைய முடியும். அதுவரையிலான மானுடசிந்தனைக்கு மேலுமொரு துளியாவது சேர்த்தால்தான் அச்சிந்தனைக்கு மதிப்பு.
ஆகவே சிந்தனை என்பது ஒருவன் அதுவரைக்குமான மானுட சிந்தனையில் இருந்து பெற்றுக்கொண்டு திரும்ப மானுடசிந்தனைக்கு அளிப்பதுதான். எண்ணிப்பாருங்கள். நீங்கள் பிறர் சிந்தனைகளை கவனிக்க மாட்டீர்கள், சுயசிந்தனை போய்விடுமென நினைக்கிறீர்கள். பிறரும் அப்படி நினைத்தால் சிந்தனைதான் என்ன செய்யும்? அவரவர் மூளைக்குள் அவரவர் சிந்தனை சிமிழுக்குள் கற்பூரம் போல இருக்கவேண்டுமா என்ன?
தன்னை முழுமையாக ஆக்ரமிக்கும் ஆளுமைகளையும் சிந்தனைகளையுமே ஒருவன் தேடிச்செல்லவேண்டும். வாழ்நாள் முழுக்க. நான் அப்படித்தான் இருந்தேன். அதன் வழியாக என்ன நிகழும்? ஒன்று அவன் எங்கும் தேங்கிவிடாமலிருப்பான். தொடர்ந்து வளர்ந்தும் கொண்டிருப்பான். ஆளுமையிலும் சிந்தனையிலும் வளர்ச்சி என்பதே அப்படி மட்டும்தான் நிகழமுடியும்.
அதேசமயம் அந்த புறச்செல்வாக்கால் எவருடைய தனித்தன்மையும் அழியாது. அந்த தனித்தன்மை மேலும் மேலும் கூர்மை அடையும். தனித்தன்மை என நினைத்துக்கொண்டிருக்கும் அசட்டுத்தனங்களும் மேலோட்டமான விஷயங்களும் உடைந்து மறையும். எது உண்மையிலேயே மதிப்புள்ளதோ அது மட்டுமே எஞ்சும். அப்படித்தான் இதுவரை உலகில் சிந்தனை செய்த அனைவரும் சிந்தனையாளர் ஆகியிருக்கிறார்கள்.
மாபெரும் ஆசிரியர்களிடமிருந்தே மாபெரும் சிந்தனையாளர்கள் உருவாகிறார்கள். மாபெரும் ஆளுமைகளே மாபெரும் ஆளுமைகளை உருவாக்க முடியும். அவர்கள் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள். நெருப்பில் இருந்தே நெருப்பை கொளுத்திக்கொள்ள முடியும். நெருப்பின் இயல்பென்பது அணுகிய அனைத்தையும் கொளுத்துவதுதான். இவ்வுலகையே நெருப்பாக்க விழைந்து துடிப்பதுதான் தழல் என்பது.
ஜெ