என்றும் நிலைத்திருப்பது

https://twitter.com/AjithanJey5925

குர்ஆனில் அல்லாஹ் தன்னைஅல்வதூத்என இரு முறை அழைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றாகும். வதூத் என்னும் சொல் அரபு மொழியில் தீவிரம் மற்றும் தொடர்ச்சியைக் குறிக்கிறது. ‘அல்லாஹ் அல்வதூத்என்பதன் பொருள்: அல்லாஹ்வின் அன்பு தீவிரமானது, தொடர்ச்சியானது, இதுவே அவர் தன்னிடம் சரணடைபவர்களுக்கு வழங்கும் ஆசீர்வாதங்களாக, உதவிகளாக, கருணையாக, வழிகாட்டுதலாக, மன்னிப்புகளாக வெளிப்படுகிறது.

அல் கிசா நாவலின் சாராம்சமாக நான் காண்பது தீவிரமான தொடர்ச்சியான என்றும் நிலைத்திருக்கும் காதலையே. கடவுள் மானுடர்கள் மீது கொண்டுள்ள காதல், மானுடன் கடவுளின் மீது கொண்டுள்ள காதல், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள காதல், கலைஞன் கலை மேல் கொண்ட காதல், மானுடர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள காதல்.

மொஹர்ரம் மாதம் பத்தாம் பிறைநாளில், அஜ்மீரில் வழிபாட்டிற்காக ஹைதரும் சுஹராவும் தத்தம் குடும்பத்தினருடன் வந்துள்ளனர். அங்கே அவர்கள், உஸ்தாத் படே குலாம் அலி கான் கர்பலா படுகளத்தில் தன் இன்னுயிரை ஈந்த இமாம் ஹுசைனை பற்றி பாடும் மக்டாலை கேட்க விழைகிறது. இந்த ஒரு இரவு அவர்களின் வாழ்க்கையையே மாற்றுகிறது. ஆரம்பத்தில் சிறு தீண்டலாக ஆரம்பித்த அவர்களின் காதல் பரிமாற்றம் சிரிப்பு, வெட்கம், சீண்டல் என மேலும் மேலும் உணர்வெழுச்சி கொள்கிறது. உஸ்தாத் பாடிய ஹுசைனின் மக்டால் அங்குள்ள அனைவரையுமே பெரும் உணர்வெழுச்சி கொள்ள செய்கிறது. பெரும் மானுட துயரின் கனத்தை தாங்க முடியாமல் எளியோர் ஆகிய அங்கு கூடிய மக்கள் மனம் விம்மி நெஞ்சில் அறைந்து அவர்களின் துயரத்தை வெளிப்படுத்துகின்றனர். அதில் ஒரு அங்கமாக ஹைதரும் சுஹராவும் தங்களை நிறுவிக்கொள்கின்றனர். இருவரும் அவர்கள் கடவுளின் மீது கொண்டுள்ள காதலினால், பிற மானுட உயிர்கள் மீது கொண்டுள்ள காதலினால், ஒருவருக்கொருவர் மீது கொண்ட காதலினாலும், மனதால் இணையும் தருணத்தில் இது நிகழப்போவதில்லை என்ற எண்ணம் எழ, அதனால் வரும் நிராகரிப்பும், ஏக்கமும், துயரமும், கோபமும் அவர்களை ஆட்கொள்கிறது. முற்றிலும் கைவிடப்பட்டவர்களாக உணர்கிறார்கள்; தன் குடும்பத்தில் உள்ள அனைவரும் சிதைந்து வீழ்ந்த தருவாயில் ஹுசைன் உணர்ந்ததுபோல. இதன் பின்பு நிகழவே முடியாத அற்புதங்கள் நிகழ்கிறது.

‘Verse of Purification’ என்னும் குர்ஆன் வாசகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது :


“(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.” (33:33)

அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.

ஹுசைன் அனைத்தையும் இழந்த பெரும் துயரத்தின் வெறுமையிலும் தன் கடமையை செய்யும் பொருட்டு போரில் வெறிகொண்டு சண்டையிட்ட அத்தருவாயில் கடவுள் அவருக்கு மோட்சம் அளிக்கிறார். ஹைதருக்கும் சுஹராவுக்கும், ஆரம்பத்தில் அவர்களுக்குள் இருந்த சுய அகந்தை, கோபங்கள், சீண்டல்கள், அனைத்துமே, இனி என்றுமே சந்திக்க போவதில்லை என்னும் பெரும் துயரில் கறைந்துவிட்டது. மிஞ்சி இருந்தது அளவற்ற பரிசுத்தமான காதல் மட்டுமே. அந்த காதல் கடவுளின் பெருங்கருணையாலே இணைகிறது. இது கடவுளின் செய்கை இல்லையென்றால், சிறு ஆமினா தர்காவிற்கு சென்ற அதே சமையம் குலாமும் அதே இடத்தில் எவ்வாறு வந்திருக்க கூடும்? நிகழவே முடியாது என்று எண்ணிய உறவு மிக எளிதாக, கொண்டாட்டமாக, அனைவரின் ஆசியுடன் எவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும்? அதன்பின் ஹைதரும் சுஹ்ராவும் ஒருவர்மீதொருவர் கொண்டுள்ள ஒற்றுமையை, காதலை தெய்வீக காதல் என்று அல்லாமல் வேறு எவ்வாறும் குறிப்பிட இயலாது.

உஸ்தாத் படே குலாம் அலி கானின் மக்டால் வாயிலாக அன்று ஹதீத்கிஸாவை நினைவுகூர்ந்த அனைவருக்கும் இவ்வித அற்புதங்கள் நிகழ்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது. ஹைதர், சுஹரா, குலாம், ஃபாத்திமா, குட்டி ஹுசைன் போன்ற பரிசுத்தமான, தூய்மையான அன்புடன், கடவுள் பற்றுடன் வாழும் அணைத்து மானுடர்கள் மீதும், கடவுள் தன் பெருங்கருணை என்னும் போர்வைக்குள் வைத்து பாதுகாக்கிறார்.

Jhanvi’s Reviews

தமிழிலக்கியத்தின் முதல் இஸ்லாமிகேட் நாவல் – அல்கிஸா

முந்தைய கட்டுரைநிலமும் மொழியும்-பிரபு
அடுத்த கட்டுரைகௌரி கிருபானந்தன்