அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.
அன்புள்ள ஜெ,
அல் கிஸா அஜிதனின் இரண்டாவது நாவல். மொஹரம் மாதத்தின் பத்தாவது பிறை நாள் அஜ்மீர் குவாஜா மொயினுத்தீன் தர்காவில் நாவல் நிகழ்கிறது.
இமாம் ஹுசைன் கர்பலா படுகளத்தில் உயிர் நீத்த நிகழ்வை “உஸ்தாத் படே குலாம் அலி கான்” மர்ஸியா எனும் மக்டால் வகை பாடலாக மக்களுக்கு நடுவில் உணர்ச்சி பொங்க பாடும் நிகழ்வு மற்றும் அதைக் கேட்பதற்காக அங்கே குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் ஹைதர் மற்றும் சுஹரா ஆகியோருக்கு இடையே கண்களால் பேசி நிகழும் ஒரு காதல். இந்த இரண்டு நிகழ்வுகளும் தனித்தனியே பயணித்து ஏதோ ஒரு அறியாக் கணத்தில் தொட்டுக் கொள்கிறது.
மாரடைப்பு வந்து மீண்டழுந்த உஸ்தாத் குவாஜாவிடம் வேண்டிக்கொண்டதை போல மர்ஸியா பாடி மன்னத் செலுத்த அஜ்மீர் வருகிறார். தர்காவின் வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக கர்பலா பாலையில் நிகழ்ந்த, இமாம் ஹுசைன் தன் குடும்பத்துடன் செய்துகொண்ட மகத்தான தியாகத்தை உணர்வுப் பூர்வமாக பாடுகிறார்.
ஆயிரக்கான மக்கள் கூட்டம் விழிநீர் சிந்தி பாடலின் உணர்வில் திளைக்கின்றனர். சோகத்தில் உருகுகின்றனர். இமாமின் தியாகத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கிறார்கள். அத்தனை கூட்டமும் அழுது புலம்புகிறது. தங்களை தாங்களே உடல் வருத்திக் கொண்டு அந்த உயிர் தியாகத்தின் சோகத்தில் பங்கெடுகிறது. அது ஒரு துன்பியல் நிகழ்வுக்களமாக தோற்றமளிக்கிறது.
அந்த வலி மிகுந்த உணர்வுக் கொந்தளிப்பின் நடுவில் இரண்டு இளமனங்களுக்கு கண்களால் பார்த்துக் காதல் உருவாகிறது.
இரண்டு எதிர் எதிர் உணர்வு நிலைகள். ஒன்று சோகம் மற்றொன்று காதலின் இனிமை. “குவாஜா மொயினுத்தீன் தர்கா” என்ற புனித இடத்தில் இரண்டும் ஒன்று சேருகிறது. அது ஒரு தருணம். சோகமும் இனிமையும் ஒன்றாகும் அந்த தருணம். அது அந்த புனிதரின் இடத்தில் அல்லாது வேறு எங்கும் அடைய சாத்தியம் இல்லை அல்லவா.
இதை தாண்டி நாவலின் பின்னுரையில், அஜிதன் முன்வைத்த மூன்று விடயங்கள் முக்கியத்துவம் கொண்டது.
முதலாவது,
நம்பிக்கை என்பது தர்க்கமில்லாமை மட்டுமல்ல தர்க்கம் கடந்தவற்றை உள்ளடக்கியதே என்ற பார்வையும், நம்பிக்கை தனித்த அறிதல் முறை என்ற அவதானிப்பும்.
விழுமியங்களின் முடிவின்மை, அளவற்ற அன்பு, முடிவில்லா கருணை, எல்லையில்லா அழகு போன்ற அளக்க முடியாதவற்றை நம்பிக்கை கொள்வதின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை முன் வைக்கிறார்.
இரண்டாவதாக,
மத ஆன்மிகம் தன் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொள்வதன் பொருள் அவர்களுக்கு உள்ளூர அதன் மீது நம்பிக்கை இல்லை என்பதல்ல மாறாக அது அந்த நம்பிக்கையை நிகழ்த்திக் கொள்வதற்கான வழிமுறையே என்கிறார்.
காதலன் தன் காதலை மீண்டும் மீண்டும் சொல்வது அதை தனக்கு தானே தன் சந்தேகத்தின் மீது நிறுவிக்கொள்வதற்காக அல்ல, அது அந்த காதலை நிகழ்த்திக்கொள்ளும் வழிமுறை, அதனூடாகவே அவன் அக்காதலை அறிகிறான் என்று சொல்கிறார்.
இது மதங்களின் மீது இன்று நான் கொண்ட பார்வையை மாற்றி யோசிக்க வைக்கிறது.
மூன்றாவதாக,
இல்லற ஆன்மீகம் என்ற பார்வை. ஆன்மீகம் என்பது குடும்பத்தை விட்டுவிட்டு தனியே அலைவதற்கானது மட்டுமல்ல, குடும்பத்தின் சிடுக்குகளுக்குள் மிச்சமில்லாமல் வாழ்ந்துவிடவும் அவசியம் என்று சொல்கிறார்.
உண்மையில் இது இன்றய அறிவியல் யுகத்தில், உடையும் உறவுகளுக்கு தேவையாக இருக்கிறது என்று தோன்றுகிறது. பெரும் திருவிழாக்களில் கும்பலோடு கும்பலாக உணரும் நேரத்தில் மனதில் கரைந்து செல்லும் ஒன்றாக அடையும் ஆன்மீகம் என்று இதை புரிந்து கொள்கிறேன்.
நாவலில் பயன்படுத்தியிருக்கும் அரபு வார்த்தைகள் முதலில் கொஞ்சம் தடையாக இருந்தாலும் பக்கம் செல்லச் செல்ல சரியாகிவிட்டது.
அஜிதனின் இரண்டாவது நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை கொடுத்து புதிய சிந்தனைகளையும் எனக்குள் தொடங்கியது.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.