யோகப்பயிற்சி, கடிதம்

அன்புள்ள ஜெ ,

வணக்கம்.   கடந்த ஜூலை 28,29 &30 நடைபெற்ற யோகப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பினை அளித்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும், இதற்கு காரணமாக உள்ள தங்களுக்கும், யோக குரு திரு சௌந்தர், மலையிடத்தில் ஏற்பாடுகளை செய்து தந்த திரு அந்தியூர் மணி அவர்களுக்கும் நன்றி.
எல்லா ஊர்களிலும் விரவிக் கிடக்கும் பல்வேறு யோகப் பயிற்சி பள்ளிகளில் இருந்து வேறுபட்டு இருந்தது இந்த முகாம். பாடத்திட்டமும் நடத்திய விதமும் அனைத்திலும் வேறுபட்டு அடிப்படைப் பாடங்களை விளக்கி உணர்ச்சிகரமான புளகாங்கிதங்களில் ஆழ்த்தாமல் நேரடியாகவும் இயல்பாகவும் பயிற்சிகளை அளித்தார் குரு.

38 பேர் கலந்துகொண்டோம்.  எளிமையான அனைவருக்குமான அடிப்படைப் பயிற்சிகள் என்பதால் எவருக்கும் கடினமானதாக இல்லை.  யோகம் என்பது என்ன எப்பொழுது தோன்றியது, இன்றும் குரு பரம்பரையாக கற்பிக்கும் ஏழு தலைமுறை தாண்டிய யோக பயிற்சி நிறுவனங்களை விளக்கி அவற்றிலிருந்து தான் திரட்டிய பயிற்சிகளில் பன்னிரண்டினை நன்கு விளக்கி பயிற்றுவித்தார்.

யோகப் பயிற்சி அளிக்க முடிவெடுத்ததும் நீங்கள் எவ்வாறு இது எல்லாருக்குமானதாகவும், பக்க விளைவுகள் அற்றதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூர்ந்தார்.  3 முதல் 6 மாதங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் உடல் மன நலன்களில் முன்னேற்றம் கிட்டும் என்றார்.

யோக நித்திரை, அந்தர் மௌனப் பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களை விளக்கி மௌனத்தின் பயன்களைக் கூறினார். ஒரு எடுத்துக்காட்டின் மூலமாக அதை சுவையாக விளக்கினார்.  பயிற்சியாளர்களில் ஒருவரிடம் இட்லி செய்வது எப்படி என்று சுருக்கமாக விளக்க கேட்டுக்கொண்டார்.  அவர் விளக்கியதும் நீங்கள் இப்போது 46 வார்த்தைகளில் கூறினீர்கள், இதையே வீட்டில் செய்தால் எண்ணமும் பேச்சுமாக கிட்டத்தட்ட 4000 வார்த்தைகளை பயன்படுத்துவீர்கள்.  ஒவ்வொரு சொல்லும், எண்ணமும் நமது ஆற்றலை செலவிட்டுப் பெறுவது என்றும், எவ்வாறு அக, புற மௌனங்கள் நமது ஆற்றலை சேமிக்கின்றன என்றும் விளக்கினார்.  இந்தப் பயிற்சியின் மிகச் சிறந்த விளைவை இது நிச்சயம் ஏற்படுத்தும்.

மிக இறுக்கமாக இல்லாமல் தெளிந்த திட்டத்தோடும், சுவையான உணவோடும், நல்ல ஓய்வொடும் பயிற்சி நிறைவாக இருந்தது. வெள்ளிமலை மிக அழகு.  இதமான காற்றோடு சுகமாக இருந்தது.  மிகக் குறைந்த செலவில் மிகச் சிறந்த பயிற்சி.  குருவிற்கும் உங்களுக்கும் மீண்டும் நன்றி.  நீங்கள் நிச்சயம் ஒரு வேளையாவது வருவீர்கள் என அனைவரும் ஆவலாக இருந்தோம். உங்கள் சொற்கள் வழிநடத்துகின்றன என்றாலும் உங்கள் இருப்பு மேலும் உற்சாகமூட்டும்.

நன்றி ஜெ .

நாரா.  சிதம்பரம்
புதுக்கோட்டை

முந்தைய கட்டுரைஅனல்நிறுவுகை – கடிதம்
அடுத்த கட்டுரைப.சிவகாமி