ஆலயக்கலை பயிற்சியும் ஹம்பியும், கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆலய கலை முகாமில் கலந்து கொண்டதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் தாராசுரம் சென்று வந்தோம், அப்பொழுதே அடுத்த பயணம் சற்று விரிவாக மூன்று நாள் பயணமாக  திட்டமிடலாம் என்று ஆசிரியர் கூறியிருந்தார். அதன் பின்பு நடந்த முகாம்களில் கலந்து கொண்ட நன்பர்களையும் சேர்த்து ஹம்பி சென்று வரலாம் என்ற அறிவிப்பு வந்த உடனேயே ரயில் முன்பதிவு செய்து விட்டேன். இந்த முறை ஆசிரியர் உட்பட எழுத்தாளர்களும் கவிஞர்களும் நுன்ணுனர்வுள்ள வாசகர்களுமாகிய 44 பேர் கொண்ட பெருங் குழுவுடன் பயணிக்க போகிறேன் என்பதே பெரும் மகிழ்வுக்குரியதாக இருந்தது.

வாட்ஸ் அப் குழுவில் ஆசிரியர் ஜெ.கே ஹம்பி  என்பது நான்கு நிலைகளில் நாம் காண வேண்டிய இடம் என்று கூறியிருந்தார். அதன்படியே இந்த நான்கு நிலைகளையும் தொடும் வகையில் இந்த பயணத்தை அவர் வடிவமைத்திருந்தார்.

  1. 1.முதலில் அதன் நிலவியல் தனித்துவம், 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டு தோன்றிய பாறைக் குவியல்கள் போன்ற அதன் தோற்றம். இது குறித்த நிலவியல் கட்டுரைகளை அவர் குழுவில் பகிர்ந்திருந்தார்.
  2. இரண்டாவதாக இராமாயணத்தில் வரும் சுக்ரீவன் ஆண்ட கிஷ்கிந்தையக அடையாளப்படுத்தப்படும் தொன்மையான ஹம்பி. இந்த தொல் ஹம்பியை நினைவுறுத்தும் வகையில் கம்பராமாயணத்தின் கிஷ்கிந்தை காண்டத்தின் தேர்ந்தெடுத்த பாடல்களை நண்பர்கள் வாசிக்க ஜெ.கே அவர்கள் தனது அழகான குரலில் பாடினார், அது தந்த உணர்வெழுச்சி வார்த்தையில் விவரிக்க முடியாதவை. இந்த அற்புத அனுபவத்தை சாத்தியமாக்கிய நண்பர்கள் பார்கவி, ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜெ.கேவிற்கு மிகுந்த நன்றிகள்.
  3. 3.மூன்றாவதாக 4,000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த கற்கால மக்களின் பாறை ஓவியங்கள். நீங்கள் சமீபத்தில் ஒரு உரையில் பாறை ஓவியங்களுக்கு பயன் சார்ந்த அர்த்தங்களை வழங்குவதை விட அதை அந்த தொல் மானிடனின் கனவுகளாய் காண வேண்டும் என குறிப்பிட்டு இருந்தீர்கள்.ஹம்பியின் பாறை ஓவியங்களுக்கு முன்னால் நிற்கையில் நான் அதையே நினைத்துக் கொண்டேன்.
  4. நான்காவதாக நாம் இன்று காணும் விஜயநகர அரசுடன் தொடர்புடைய வரலாற்றுக் ஹம்பி. ஹம்பியின் மிக முக்கியமான கோயில்களையும் பண்பாட்டு இடங்களையும் ஜெ.கே வின் சொல் கொண்டும் நண்பர்களிடம் கூடி விவாதித்தும் இன்னும் விரிவாய் புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர் அவர்கள் இதை மேலும் புரிந்து கொள்வதற்கான நூல் பட்டியலை அளித்தார்.

மொத்தத்தில் இந்த மூன்று நாள் பயணத்தில் நான் முதன்மையாக அடைந்த மூன்று விஷயங்கள்,முதலாவதாக அறிதல் ஆலய கலையைப் பற்றியும் சிற்பக் கலை பற்றியும் இன்னும் ஆழமான புரிதல் எனக்கு கிடைத்தது.இரண்டாவதாக நண்பர்கள் இணை மனம் கொண்ட நண்பர்களுடன் கூடி பயணிப்பதின் களியாட்டத்தை இங்கு நான் உணர்ந்து கொண்டேன்.இனிவரும் காலங்களில் அந்த நட்பை மேலும் தொடர வேண்டும் ஏனெனில் ஒரு வாசகனுக்கு நட்பு வட்டத்தின் முக்கியத்துவத்தை குறித்து நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். மூன்றாவதாக அனுபவங்கள் அந்தி சாயும் வேளையில் மாதங்க மலையின் உச்சியில் அமர்ந்தும் ஆழோழிந்த கோயில் மண்டபத்தில் அமர்ந்தும் கம்பராமாயணம் வாசிக்க கேட்பது, நதிக்கரையோரம் உள்ள புரந்தரதாசர் மண்டபத்தில் அமர்ந்து வண்ணதாசனின் கவிதைகளை இன்னொரு சமகால கவிஞர் (சாம்ராஜ்) வாசிக்க கேட்பது, இரவில் கூடிய அமர்ந்து இலக்கியம் விவாதிப்பது போன்றவை இங்க இன்றி ஒரு சராசரி தமிழ் இளைங்கனுக்கு வேறு எங்கும் வாய்க்காத அனுபவங்கள். இவை அனைத்தையும் நல்கிய ஆசிரியருக்கும் நண்பர் குழுவினருக்கும் என் அன்பு கலந்த முத்தங்களை உரித்தாக்குகிறேன்.

பின்குறிப்பு: அங்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் பொது அச்சாக இருப்பது நீங்களும் உங்களது எழுத்துக்களும் தான். நண்பர்களுடன் விவாதித்ததிலிருந்து உங்களது எழுத்துக்கள் வழியாகத்தான் பலருக்கு  இந்த ஆர்வமே ஏற்பட்டுள்ளது எனவே உங்களுடனான ஒரு  பயணமேன்பது இவை அனைத்தையும் ஒரு முழுமை நோக்கி கொண்டு செல்லும் என பேசிக்கொண்டோம். விரிவாக இல்லாவிடினும் சம்பிரதாயமான ஒரு நாள் பயணமே போதும். அதிக பிரசங்கித்தனமாய் இருந்தால் மன்னிக்கவும் சார்.

நன்றியுடன்,

தினேஷ் ரவிராஜன்.

முந்தைய கட்டுரைகி.ரா- இசையினூடாக
அடுத்த கட்டுரைமேலாங்கோடு சிவாலயம்