இன்று வணிக எழுத்தும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ

தொடர்ச்சியாக வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையேயான வேறுபாட்டைப்பற்றிப் பேசி வந்திருக்கிறீர்கள். இன்று தமிழில் வணிக எழுத்து என்று அனேகமாக ஏதுமில்லை. கதைபடிப்பவர்களில் பொழுதுபோக்குக்காகப் படிப்பவர்கள் இல்லாமலாகிவிட்டனர். பயனுறுநூல்கள், தன்முன்னேற்ற நூல்கள் ஆகியவையே காணக்கிடைக்கின்றன

உலக இலக்கியச் சூழலை பார்த்தால் வணிக இலக்கியம் மட்டுமே உள்ளது என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. சென்ற ஐந்தாண்டுகளில் நான் அமெரிக்காவில் பார்த்த எல்லா புகழ்பெற்ற நூல்களும் வணிக எழுத்து வகையைச் சேர்ந்தவை மட்டும்தான். வணிக எழுத்திலேயே அறிவியல் எழுத்து, பயனுறு எழுத்து என சில வகைமைகள் இருப்பதுபோல கதைகளிலும் சிக்கலான கதைகள், எளிமையான கதைகள், அறிவார்ந்த கதைகள், உணர்ச்சிகரமான கதைகள் என்று பேதங்கள் உள்ளன. ஆனால் விற்காத கதையை யாராவது பொருட்படுத்தி நான் பார்த்ததே இல்லை. ஒரு நூல் பேசப்படவேண்டும் என்றால் அது விற்கப்பட்டாக வேண்டும். விற்பனையே அளவுகோல்.

கல்வியாளர்களும் தீவிர இலக்கியம், வணிக எழுத்து என்ற பிரிவினையெல்லாம் காலாவதியாகிவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இருமைகள் (பைனரி) எல்லாமே தேவையற்றவை என்கிறார்கள்.

இன்றும் நீங்கள் அதே எண்ணத்துடன் இருக்கிறீர்களா ?

ராஜ் அருண்

வணிக இலக்கியம் நூல் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

அன்புள்ள ராஜ்,

இந்த பிரிவினை பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். இணைப்புகள் கீழே. ஒரு நூலும் எழுதியிருக்கிறேன்.  (வணிக இலக்கியம் )

வணிக எழுத்து- இலக்கியம் என்னும் பிரிவினைதான் உங்களுக்கான குழப்பம். இலக்கியமும் வணிகப்பொருள் ஆகலாம். ஆனால் அது இலக்கியம் அல்லாமலாகிவிடாது. அறம் அல்லது குமரித்துறைவி தமிழில் தொடர்ந்து மிகுதியாக விற்கும் நூல்கள். அதனால் அவற்றின் இலக்கியத்தகுதி குறையுமா என்ன? கேளிக்கை எழுத்து- இலக்கியம் என்று பிரித்துக்கொள்வதே பொருத்தமானது. அப்பிரிவினை என்றும் இருக்கும்.

கேளிக்கை எழுத்தின் நோக்கம் வாசகனை மகிழ்விப்பது, அம்மகிழ்வை ஒரு நுகர்பொருளாக அளித்து விலைபெற்றுக்கொண்டு லாபம் அடைவது. ஆகவே அது ஒரு தொழில். இலக்கியத்தின் நோக்கம் வாசகனுடன் அறிவார்ந்த, உணர்வுசார்ந்த, உள்ளுணர்வு சார்ந்த ஒரு பகிர்வை நிகழ்த்துவது. அது தொழிலுக்குரிய கச்சாப்பொருள் ஆகலாம். எந்நிலையிலும் அது ஒரு தொழில் மட்டும் அல்ல. அது மானுடம் தோன்றிய நாள் முதல் இக்கணம் வரை நிகழ்ந்துகொண்டிருக்கும் அறுபடாத அறிவியக்கம் ஒன்றின் ஒரு பகுதி. அதன் இயங்குதளம் முற்றிலும் வேறு. மொழியில் எழுதப்படுகிறது, அச்சிடப்படுகிறதும் வாசிக்கப்படுகிறது என்பதனால் அதற்கும் கேளிக்கை எழுத்துக்கும் பொதுத்தளம் என ஏதுமில்லை.

கேளிக்கை எழுத்தும் என்றுமிருக்கும். இரண்டு வகையில் அதற்கான தேவை உள்ளது. ஒன்று அது ஓர் அறிவார்ந்த பொழுதுபோக்கு. நான் இன்றும் அமெரிக்க குற்ற – திகில் நாவல்களின் வாசகனே. எனக்கு அது இளைப்பாறலை அளிக்கிறது. புனைவு உத்திகள் பற்றிய ஒரு அறிதலையும் அளிக்கிறது. இரண்டு, முதிரா அகவையில் பகற்கனவுகளை பெருக்கிக் கொள்ள கேளிக்கை எழுத்து தேவையாகிறது. மில்ஸ் ஆன் பூன் வகையறாக்கள். காணொலி ஊடகங்கள் பெருகினாலும் இத்தளத்தில் நூல்களை மாற்றீடு செய்ய முடியாது. ஏனென்றால் நூல்கள் அந்தரங்கமானவை. உலகம் முழுக்க பாலியல்தளங்கள் பெருகிவிட்டபோதிலும்கூட பாலியல்நூல்களை வாசிப்பவர்கள் குறையவில்லை. ஏனென்றால் புத்தகம் உங்களை கற்பனைச் செய்ய வைக்கிறது . நூல்களிலிருந்து அடைவது நீங்கள் உருவாக்கும் உலகம், உங்கள் உலகம். ஆகவே மிக அந்தரங்கமானது.

இன்றைய சூழலில் எளிமையான இருமைகளை நாம் ஐயப்படவே வேண்டும். அதை நான் எழுதவந்த காலம் முதலே சொல்லிவந்துள்ளேன். எண்பதுகள் வரை தமிழில் அத்தகைய இருமைகள் வலுவாக இருந்தன. குமுதம் விகடனில் எழுதினால் அது வணிக எழுத்து, துப்பறியும் கதையோ திகில்கதையோ இலக்கியமாகாது, சிக்கலான மொழியே இலக்கியம் என்றெல்லாம் பல நம்பிக்கைகள் இருந்தன. ஜெயகாந்தனை கேளிக்கை எழுத்தாளர் என வகைமைப்படுத்தியவர்கள்கூட இருந்தனர். அந்த இருமைகள் இன்று பொருளிழந்துவிட்டன. இன்று நாம் அளவுகளை நுட்பமாக அமைத்தாகவேண்டும்.

ஓர் எழுத்தை, அல்லது ஓர் எழுத்தாளரை அடையாளங்களின் அடிப்படையில் வகைப்படுத்தலாகாது. ஒவ்வொரு படைப்பையும் அதனதன் அழகியலைக்கொண்டே அவ்வாறு வகைப்படுத்தவேண்டும். பாலகுமாரன் எழுதிய கணிசமான நாவல்கள் கேளிக்கை எழுத்துக்களே. ஆனால் உடையார் போன்ற நாவல்கள் அப்படி அல்ல. சுஜாதா எழுதியவை கேளிக்கை படைப்புகளே. ஆனால் ஸ்ரீரங்கம் கதைகளும், நாடகங்களும் இலக்கியப்படைப்புகள். இலக்கியமென வகைமைப்படுத்தப்பட்ட எழுத்திலேயே பல படைப்புகள் திறனின்மையால் வாசக ஈர்ப்பை உருவாக்கமுடியாத வரண்ட நாள்பதிவுகள். பல படைப்புகள் மொழித்திறன் இன்மையால் உருவாக்கப்பட்ட சொற்றொடர்ச்சிடுக்குகள், சொற்குப்பைகள். அவை இலக்கியமல்ல என்றும் நாம் பிரித்தறியவேண்டும்

ஜெ


இருவகை எழுத்து

பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

விற்பனையும் இலக்கியமும்

எல்லாமே இலக்கியம்தானே சார்?

வணிக எழுத்து தேவையா?


இலக்கியமும் அல்லாததும்


கேளிக்கை எழுத்தாளர்- சீரிய எழுத்தாளர்

பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

முந்தைய கட்டுரைசீ.வி.குப்புசாமி
அடுத்த கட்டுரைஇசையும் தத்துவமும்