நான் கடவுள் : சில கேள்விகள் 2

 நான் கடவுள் பற்றிய சில விமரிசனங்களைக் கண்டேன். அது மூன்றாம்பிறைபோல உதிரிப்பூக்கள்போல இல்லை, அவையே நல்ல படங்கள் என்று சொல்லியிருந்தார்கள். சேதுபோல இல்லை என்று இன்னொரு கருத்து. பிதாமகன் போல இல்லை என்று இன்னொரு கருத்து. அவற்றில் உள்ளவை அன்றாட மானுட உணர்ச்சிகள் நான்கடவுளில் அவை இல்லை

 

படங்களுக்கு அவற்றுக்கே உரிய அழகியல் உள்ளது. நான் கடவுளின் அழகியல் இருண்ட அழகியல். மென்மை, நெகிழ்வு, உன்னதம், கவித்துவம், காவியசோகம் எதுவுமே இங்கே சாத்தியமில்லை. அச்சம், அருவருப்பு, கசப்பான நகைச்சுவை ஆகியவை மட்டுமே சாத்தியம். நான் கடவுளைப் பார்த்தபின் நெகிழ்ந்து வெளியே வர முடியாது. சஞ்சலப்பட்டு எரிச்சல் கொண்டு சிந்தனைசெய்துகோண்டு மட்டுமே வெளியே வரமுடியும். அதாவது படத்தை கவனித்தால்.

இவ்வகை எழுத்தும் கலையும் இன்றைய பின் நவீனச்சூழலின் விளைவுகள். இதையே ஜெயகாந்தனின் காலகட்டத்தில் எடுத்திருந்தால் சமூகத்தை விமரிசனம் செய்திருப்பார்கள். மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். சமூகத்தை நல்வழிப்படுத்த முயன்றிருப்பார்கள். நான்கடவுள்மனசாட்சியை நோக்கி ஓர் உதைவிட்டுவிட்டு பேசாமல் இருந்துவிடுகிறது. இவ்வகை கலையை கொஞ்சமாவது உணர்ந்தவர்கள் இதை எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியும். அல்லது மிக எளிமையாக படைப்பாளிக்கு இரண்டரைமணிநேரம் தன் கண்ணையும் காதையும் கொடுத்துவிட்டாலும் போதும்.

 

அதாவது நான் கடவுள் ரசிக்கும்படியான படம் அல்ல. ரசிக்கமுடியவில்லை என்று ச்தைப்பற்றிச் சொல்வதே அபத்தம். அது நம்மை தாக்கக் கூடிய ஒரு படம். அதற்கான அழகியலே அதில் உள்ளது.

 

6. நான் கடவுள் படத்தின் மூலம் பாலா சொல்ல வருவது என்ன?

 

இப்படம் குறித்த பெரும்பாலான கேள்விகள் இந்தப் படத்தை முந்தையகாலத்து அழகியல் முறைகளைக் கொண்டு மதிப்பிடுவதன் மூலம் உருவாகக்கூடியவை. அதில் ஒன்றுதான் சமூகத்துக்குப் பாலா சொல்லும் சேதிஎன்ன என்ற கேள்வி. ஏழாம் உலகம் சொல்லும் சேதி என்ன? அதை யாராவது என்னிடம் சொன்னால் மகிழ்வேன். சேதி சொல்ல நான் தபால்காரர் இல்லை என்று இலக்கியவாதிகள் சொல்லி முப்பது வருடம் தாண்டிவிட்டது.

 

இந்தப் படைப்பு சமூகத்தை மேம்படுத்துமா இல்லையா என்ற கேள்வியும் அதைப்போன்றதே . இயக்குநர் மனிதாபிமானத்துடன் இந்தப்பிரச்சினையை கையாளவில்லை என்ற ஆதங்கமும் அப்படித்தான். நான் கடவுள் படத்துக்கு அப்படிப்பட்ட எந்த நோக்கமும் இல்லை. அது ஓர் உலகத்தை சில துளிகள் வழியாகக் காட்டுகிறது. சில பிரச்சினைகளை சொல்கிறது. அதில் அம்மனிதர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்று சொல்லி முடிகிறது. அதைக் காணும் பார்வையாளர் மனதில் என்ன அதிர்வுகளைக் கொண்டாலும் அதெல்லாமே அந்த படைப்பு உருவாக்கும் விளைவுகளே.

 

அனைத்தையும் விட மேலான கேள்வி ஒன்று உண்டு. இதில் உள்ள சம்பவங்களுக்கு தெளிவான நோக்கமும் அர்த்தமும் இருக்க வேண்டும் என்பது. அது சாதாரணமாக சரிதான். ஆனால் இந்த பாதாளஉலகில் அத்தகைய திட்டவட்டமான புரிதலுடன் ஒருவரால் இறங்கிச்செல்லமுடிவதில்லை. விசித்திரமான எதிர்பாராத தன்மை இருந்து கொண்டே  இருக்கிறது. ஏழாம் உலகம் வந்தபோதே சில அறிவுஜீவிகள் அதில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கேட்டார்கள். அது கர்ம வினையைப் பற்றிச் சொல்கிறது என்று அவர்களே விளக்கிக் கொண்டார்கள். என்னவோ வாழ்க்கையின் எல்லா சம்பவங்களையும் அவர்கள் விளங்கிக்கொண்டிருப்பது போல.

 

நான் கடவுளின் கதைநிகழ்வுகள் அதீத மனநிலை கொண்ட, நாமறியாத ஆழத்தில் வாழ்கிற மக்களின் இயல்பைச் சார்ந்தவை. அதைவைத்தே அவர்களை நாம் புரிந்துகொள்ள முடியும். தண்டவன் ஏன் அம்சவல்லியை கற்பழிக்கவில்லை என்று மேதாவித்தனமாக கேட்பதைவிட அதுதான் தாண்டவன் என்று புரிந்து கொள்வதே உசிதமான வழி. அவ்வாறு கதாபாத்திரங்களைப் பார்ப்பதற்கு பாலா நுட்பமான குறிப்புகளும் அளிக்கிறார். உதாரணம்,  அம்சவல்லியை கதறக் கதற தூக்கிக்கொண்டு வந்த அதே  மூருகன் குடித்ததுமே தங்கச்சீ என்று பிரியாணிப்பொட்டலத்துடன் வருகிறான். தாண்டவன் சின்ன விஷயத்தில்கூட புதிய கோணத்தில் சிந்திப்பதே இல்லை. யாராவது சொன்னாலொழிய அவனுக்கு எதுவுமே உறைப்பதில்லை.

 

ருத்ரன் வீட்டுக்குள் நுழைந்ததுமே தன் அண்ணா இயல்பாகச் செத்தானா இல்லை அப்பா கொன்றுவிட்டாரா என்று கேட்கிறான். அவனுக்கு அது தெரியாதா என்ற கூரியவினாவைக் கண்டேன். அக்காட்சியில் ஆரியாவின் உடல்மொழி கண்கள் எல்லாமே அவன் வேண்டுமென்றே கேட்கிறான் என்றே காட்டுகின்றன. குடும்பத்துடன் இணைவதை பிடிவாதமாக மறுக்க அவன் கொள்ளும் கடுமை அது என்பது தெளிவாகவே தெரியும்.  தன் குருஏன் தன்னை ஊருக்கு அனுப்பினார் என்று எண்ணியபடி வருபவன், வழியெல்லாம் பிடிவாதமாக காலபைரவ ஜெபம் ஜபித்து தன்னை வேறுபடுத்திக்கொண்டெ வருபவன் அவன்

 

அப்படி பலவகையான உதிரி நிகழ்ச்சிகள் வழியாகத்தான் இதன் கதாபாத்திரங்கள் சொல்லபப்டுகின்றன. அவை நாம் அறிந்த நம்மைப்போன்றவர்கள் அல்ல. அவர்கள் யாரென்பதை நாம் அவர்கள் செய்வதை வைத்துத்தான் புரிந்துகொள்ள முடியும்.

 

அதற்காகவே நான் கடவுள் பார்க்கப்படவேண்டும். பாலா என்ன சேதி சொல்ல வருகிறார் என்பதற்காக அல்ல. பாலா ஒன்றும் சொல்ல வரவில்லை. உங்கள் கால்கீழே ஒரு உலகம் இருக்கிறது என்று மட்டும் காட்டுகிறார்.

 

7 நான் கடவுளில் ஒரு தொடர்ச்சியின்மை உள்ளதே?

 

ஆம் உள்ளது. மூன்று காரணங்கள். ஒன்று நெடுங்காலம் எடுத்து நிறைய சேர்ந்து அவற்றில் சிறந்த பகுதிகளை மட்டுமே தொகுத்து உருவாக்கியமையால் உருவானது. அது ஒரு சரியான வழியா என்பது வேறுவிஷயம். அது பாலாவின் வழி.

 

இன்னொன்று சிலகாட்சிகள் வெட்டுபட்டுள்ளன. அம்சவல்லி மதமாற்றம் செய்யப்படுகிறாள். அடுத்த காட்சி வலுவானது. தாண்டவன் அவளை கொடுக்கும்படிக் கோர முப்பது வெள்ளிக்காசுக்கு காட்டிக்கொடுக்க நாங்கள் ஒன்றும் யூதாஸ்கூட்டம் இல்லைஎன்று கன்யாஸ்திரீ சொல்ல அப்படியானால் முப்பதாயிரம் வெள்ளிக்காசு?’ என்பான் தாண்டவன். அடுத்தகாட்சி அவன் இடத்தில் இருக்கும் அம்சவல்லி. அது படத்தில் இல்லை.

 

மூன்று, பாலாவே ரசிகர்கள் ஊகிக்கட்டும் என்று விட்டது. மையமான விஷயங்களை ஸ்பூன் ·பீடிங்செய்ய முயன்ற பாலா சண்டைக்காட்சிகள் போன்ற வழக்கமான விஷயங்களை தன் ரசிகர்கள் சாதாரணமாக ஊகித்துவிடுவார்கள் என்று எண்ணிவிட்டார். ஆகவே ஒரு சிறிய முரண் அமைப்பை உருவாக்கினார். தாண்டவன் ருத்ரனுக்காக கோர்ட் வாசலில் காத்திருக்கிறான். அடுத்த காட்சியில் ருத்ரன் தாண்டவனைக் கொன்றபின் தலைகீழாக நிற்கிறான். அதன் பின் ருத்ரன் தாண்டவனை நேருக்குநேர் சந்திக்கும் காட்சி. கொலை. அதன்பின் மீண்டும் முந்தைய காட்சி. அம்சவல்லி வருகிறாள்

 

வில்லந் கதாநாயகனைக் கொல்லவருவதும் கதாநாயகன் வில்லனை துரத்திச்சென்று கொல்வதும் எல்லாம் எல்லா படத்திலும் வருவதுதானே சீக்கிரமாக தாவிச்சென்றுவிடலாம் என்று பாலா சொன்னார். எனக்கு அப்படி எளிதாக நம் ஆட்கள் வந்துவிடமாட்டார்கள் என்றுதான் பட்டது. இல்லை இப்போது மிகவும் மாறிவிட்டார்கள் என்றார் பாலா.

 

ஆனால் இணையத்தில் எழுதியவர்கள் உட்பட கணிசமானவர்களால் தாண்டமுடியவில்லை. என்னவோ தத்துவக்குழப்பம் போல குழம்பித் தீர்த்துவிட்டார்கள். கோர்ட்டிலிருந்து ருத்ரன் வெளியே வர, தாண்டவன் அவனை காரில் பின் தொடர, இருவரும் கோயிலருகே சந்திக்கும் ஒரு ஷாட் போட்டிருந்தால் இந்தக் குழப்பம் இருந்திருக்காது. அந்த ஒரு ஷாட்டை நம்மவர்களால் ஊகிக்க முடியவில்லை

 

9. ஊனமுற்றவர்களைக் கொல்லும்படி  சேதிசொல்கிறதா நான் கடவுள்?

 

ஏற்கனவே சொன்னதுபோல கருத்துசொல்லும் படங்களைப் பார்த்த மனநிலையின் நீட்சி இது. படத்தின் மையமே முற்றிலும் வேறு. ஒரே விஷயம், ருத்ரன் எல்லா ஊனமுற்றவர்களையும் கொன்றானா என்ன? அவர்கள் சாகவேண்டியவர்கள் என்றா படம் சொல்கிறது? அவர்களின் வாழ்க்கையின் துள்ளலை அல்லவா படம் காட்டுகிறது. அதுவும் வாழ்க்கை என்றுதானே சொல்கிறது? ‘உருபப்டிகளுக்குவாழ்க்கைமேல் பிடிப்பு இருக்கிறது. ஆகவே வாழ்க்கையின் துன்பமும் இன்பமும் இருக்கிறது. அதைக் காட்டத்தான் பிச்சைக்காரர் வாழ்க்கை அவ்வளவு விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நம்மை விட அவர்களே வாழத்தகுதிகொண்டவர்கள் என்றுதான் காட்சி காட்சியாக சொல்லிச் செல்கிறது படம்.

 

ஆனால் கடைசியில் வரும் அம்சவல்லி வாழ்க்கையில் இருந்து முற்றாக விலகி விட்டவள். அவளுக்கு மேற்கொண்டு வாழ்க்கையில் நம்பிக்கையும் இல்லை ஆசையும் இல்லை. அவள் நாடுவது விடுதலையை. அந்த விடுதலையை ருத்ரன் அளிக்கிறான். அது சரியான விடுதலையா என்பது அவரவர் கருத்து. ருத்ரன் அப்படித்தான் செய்ய முடியும் என்பது மட்டுமே அதன் தர்க்கம். ஏனென்றால் அவனது கதாபாத்திரம் அப்படிப்பட்டது. மனசாட்சியை நோக்கி ஓர் அடி அடித்து நிம்மதியிழக்கவைக்கும் இத்தகைய படம் அத்தகைய முடிவையே எடுக்கும். பிரமித்து கையறுநிலையில் நிற்கும் கடவுள்கள் நடுவே ஒரு அபலை பொசுங்கி அழியும் காட்சி அளவுக்கு குரூரமாக  தன் கேள்வியை பார்வையாளர் முன்வைக்கும் முடிவு பிறிது இல்லை என பாலா எண்ணினார்.

 

10 பாலா ஊனமுற்றவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறாரா?

 

ஏதாவது ஒரு கருத்தை அதிரடியாக வாரம்தோறும் சொல்லவேண்டுமென்ற துடிப்பை புரிந்துகொள்கிறேன்.அதற்கு மேல் இந்த கருத்துக்கு எம்மதிப்பும் இல்லை. பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவர்களை பெரிய ஊதியம் கொடுத்து கொண்டுவந்து அவர்களின் மனநிலைக்கு ஏற்ப மெல்லமெல்ல பழகி அவர்களுக்குப் பிரியமானவராக ஆகி  நாட்கணக்கில் வருடக்கணக்கில் எடுக்கப்பட்ட இப்படம் அவர்களின் மனித உரிமையை எங்கே மீறியது? அப்படியானால் குழந்தைகளை வைத்து படம் எடுத்தவர்களும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தவர்கள் தானே? இவர்களைப் பற்றி படம் எடுப்பதென்றால் இப்படித்தான் எடுக்க முடியும். எடுக்கவே கூடாது என்கிறார்களா? ஏன் எடுக்க வேண்டும் என்ற கேள்வியே இப்படி வெளிப்பாடு கொள்கிறதா?

 

 

 

11. இந்தப்படத்தில் ஏழாம் உலகம் சரிவர காட்டப்பட்டிருக்கிறதா?

 

முன்னரே நான் சொல்லிக்கொண்டிருந்தேன், இது ஏழாம் உலகம் அல்ல. ஏழாம் உலகின் பின்னணியும் சூழலும் சில கதைமாந்தரும் இதில் எடுத்தாளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் வணிகக் கட்டமைப்புக்குள்  இத்தனை தூரம் இந்த உலகம் பதிவானதை ஒரு பெரிய அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.  இந்த அளவுக்கு சமரசமில்லாமல் அதை எடுக்கும் துணிச்சலை வணங்கத்தான் வேண்டும்.அது வணிகரீதியாக தப்பித்துக்கொண்டதை அதைவிட பெரிய அற்புதம் என்று சொல்லலாம்

 

ஒரு கலைப்படமாக  ஏழாம் உலகத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அதை யார் பார்த்திருப்பார்கள்? நம் கலைப்படங்கள் உருவாக்கிய பாதிப்பு என்ன? நான் கடவுள் இந்த வடிவில் வந்தததனால்தான் அது சட்டென்று கோடானுகோடி பேரைச் சென்றடைந்தது. இன்றைய அழுத்தமான விவாதங்களை உருவாக்கியது. இதுவே மிகப்பெரிய ஒரு மாற்றம்.  

 

நாவலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் திரைப்படத்தின் சாத்தியங்கள் வழியாக பலவாறாக மாறுவதும் வளர்வதும் இயல்பானதே. பலசமயம் ஒரு நல்ல காட்சித்துளி போதும், நாவல் சொல்லவந்ததை முழுக்கச் சொல்வதற்கு. உதாரணமாக தராசில் சில்லறைகளை எடைபோடும் காட்சி. எனக்கே அதைப்பார்க்க கஷ்டமாக இருந்தது.  அடுத்த காட்சியில் ஒற்றை ஒற்றைச் சில்லறைகளாக தட்டில் விழுந்துகோண்டே இருக்கின்றன. நாளெல்லாம் பல பாத்திரங்கள் ஏந்தி ஏந்தி சேகரித்த பணம் அது.

 

ஏழாம் உலகம் சொல்லும் மையம் இரண்டுதான். வாழ்க்கை என்பது எங்கும் இருக்கும். மனிதர்களின் உறவும் பிரியவும் தியாகமும் எங்கும்  எந்நிலையிலும் அவர்களை வாழவைக்கும். நாம் அவர்களை மனிதர்களாக எண்ணாமலிருப்பதனால்தான் பரிதாபப்படுகிறோம். அந்தப்பரிதாபம் மூலமே அவர்கள் வாழ்கிறார்கள், ஆனால் அதை அவர்கள் வெறுக்கிறார்கள். இந்த நுட்பமான விஷயத்தை அழுத்தமாகவே பாலா சொல்லிவிட்டார்.

 

 

12. ருத்ரன் ஒரே சிலைபோல மாற்றம் இல்லாமல் காட்டப்பட்டிருக்கிறானே…

 

ருத்ரன் பாலாவின் கதாபாத்திரம். அவர் அவனை முழுமையான விடுதலையை நெருங்கும் ஒரு முழுமையான மனிதனாகவே உருவகித்திருக்கிறார். ஆனால் அவனுக்குள் ஒரு சிறு துளி — மிகமிகமிகச் சிறிய ஒரு துளி — பற்று அம்சவல்லி மேல் இருந்திருக்கலாம். அதை அறுப்பதன் மூலம் அவனும் விடுதலை அடைகிறான். ஒரு அகோரி தனக்குள் மிக ஆழத்தில் உறையும் பெண் வடிவைக் கண்டு அதை எரித்தழித்து  அந்த விபூதியுடன் தன் முக்தி நோக்கி செல்கிறான். அது அவளுக்கும் விடுதலையாக அமைகிறது. பாலா சொல்லவந்தக் கதை அவ்வளவே. அவனால் அவளும், அவளால் அவனும் பெறும் விடுதலை. அதுதான் இந்தப்படத்தின் மையமே. 

 

இடைவேளைக்காட்சியில் அவன் அவளை முதலில் பார்க்கும்போதே அவன் கண்களில அதை உணர்ந்துகொண்டதை பாலா காட்டுகிறார். அந்த அதிர்ச்சி. அவன் தன்நை அங்கே சொல்லும் இடம். தான் அங்கே தன் குருவால் அனுப்பப்பட்டதற்கான காரணத்தை ருத்ரன் அப்போது உணர்கிறான். அந்த காட்சியில் அதை பல கோணங்களில் அவன் சொற்கள் வழியாக பாலா உணர்த்துகிறார். ஆனால் அதிகமாகச் சொல்லக்கூடாது , அது பூடகமாகவே இருக்க வேண்டும் என்றும் பாலா நினைத்தார். சொல்லிவிட்டால் பலம் குறைந்துவிடும் என்று எண்ணினார்.

 

ஆனால்  அதை மிக தெளிவாக பின்னணி இசையில் இளையராஜா சொல்கிறார். சொல்லப்போனால் பின்னனி இசை கதையையே அங்கே சொல்லி விடுகிறது. இன்னும் மேலே சென்று அடுத்த காட்சி மேலும் அதை விளக்குகிறது. ருத்ரன் அன்றிரவே சுடைலைக்குப் போய் பிணம் எரியும் சாம்பலை எடுத்துப் பூசிக்கொண்டு நர்த்தன வடிவில் — காலபைரவனாக நிற்கிறான்.

 

அதற்குக் காரணம் அம்சவல்லி மீது ருத்ரன் கொண்ட ஈர்ப்புதான். அதை அவனே கண்டு அஞ்சுகிறான். குற்றவுணர்ச்சி கொள்கிறான். அதிலிருந்து மீண்டு செல்ல நினைக்கிறான். அவன் ஏன் அன்றே சுடலைக்குச் செல்ல வேண்டுமென யோசித்தால் அவன் அகமனதை ரசிகன் காணமுடியும். அங்கே ஏன் இசை அதிர்ந்து அதிர்ந்து சோகமும் கொந்தளிப்பும் கொள்கிறது, ஏன் அப்படி மன்றாடுகிறது என்று  எண்ணினால் பிறகு எதுவுமே ரகசியம் அல்ல. ருத்ரன் அறுக்கும் பந்தம் அந்த ஈர்ப்புதான். விட்டுவிட்டு வா என்று குரு சொன்னது அவனுள் மிக ஆழத்தில் ஒரு விதைபோல இருந்த அந்த பெண் வடிவைத்தான். நான்கடவுளைபுரிந்துகொள்ள  முக்கியமான காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டாலே போதும்.

 

இந்த மையம் மிகமிகப் பூடகமாக மட்டுமே இருக்க வேண்டும் அப்போதுதான் படத்தின் முடிவு வலிமையாக இருக்கும் என்று பாலா எண்ணினார். அங்கே இடைவேளைவிடுவதனால் அது முக்கியமான இடம் என்றும் ஆகவே அந்தக் காட்சிகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ரசிகன்ப் எண்ணுவான் என்றும் நினைத்தார் உண்மையில் புரியாமல்போய்விடும் என்று அஞ்சியது நான்தான் . பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படவும் இல்லை.

 

மேலும் நான் இன்னொரு பந்தம் அறுக்கும் காட்சியையும் வைத்திருந்தேன்.  அம்சவல்லி ருத்ரனின் காலைப்பிடிக்கும்போது அவன் இரக்கம் கொண்டு மேலும் ஒரு படி இறங்குகிறான். அவன் அவளை தன் அன்னையிடம் கூட்டிச்செல்கிறான். அம்மாஎன்று கூப்பிடுகிறான். நான் தாய்ப்பாசத்துக்காக உள்ளூர  ஏங்கினேன். நீ என் முன் நின்று அழுதபோது உன்னை கடுமையாக விரட்டியபோதும் எனக்குள் அதை உணர்ந்தேன். ஆகவேதான் என் குரு என்னை இங்கே அனுப்பியிருக்கிறார், அந்த தாய்ப்பாசத்தை நம்பி இவளை உன்னிடம் ஒப்படைக்கிறேன்என்கிறான். அம்மா  அவளை ஏற்கிறாள்.

 

ஆனால் திரும்பி அவன் வரும்போது அங்கே அம்சவல்லி இல்லை. அம்மா சொல்கிறாள்தாண்டவன் வந்து அவளைக் கேட்டான்,. கொடுக்காவிட்டால் என் மகளைக் கூட்டிச்செல்வான் என்றான், எனக்கு வேறு வழி தெரியவில்லை, எனக்கு என் மகள்தான் முக்கியம், ஏனென்றால் நான் ஒரு அம்மா என்று. தாய்ப்பாசம் என்பதன் உள்ளீடற்ற தன்மை அப்போது தெரிகிறது அவனுக்கு. அப்படியே காலில் விழுகிறான். எனக்குதெரிந்துவிட்டது பாசம் என்னால் என்ன என்று  என்றபின் அவளை விலகிச் செல்கிறான்

 

தாய்-தாரம் என உறவு இரண்டையும் அவன் அறுப்பதே அவனுடைய முக்தி. அவன் குருவிடம் திரும்புகிறான். இது என் கதை. ஆனால் பாலா அவர் இடைவேளையின் காட்சியில் உத்தேசித்த அந்த மர்மமான, நுட்பமான, மனச்சிக்கல் இந்த அம்மா விஷயத்தால் மறைந்துவிடும் என்று எண்ணி அதை விட்டுவிட்டார். அம்மா உறவு சிக்கல் கதையில் வந்திருந்தால் அது வெளிப்படையாகவும் உணர்ச்சிகரமாகவும்  இருந்திருக்கும். இப்போதுள்ள நிறைவின்மையை பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். இப்போது பாலா உத்தேசித்த ருத்ரனின் மன சஞ்சலமும் மீட்பும் மிகமிகப் பூடகமாக இருக்கிறது. ஆகவே அதைப்புரியாதவர்களுக்கு படமே முழுமை இல்லாமல் இருக்கிறது.

 

அது பாலாவின் தேர்வு. அவரது படம். தன்வரையில் ஒரு சினிமாவின் சாத்தியத்துக்குள் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டோம் என அவர் நினைக்கிறார். நான் கடவுள்பாலாவின் ஆகச்சிறந்த படம் என்றுதான் நான் நினைக்கிறேன். அது சேது போல பழகிப்போன காதல் கதையோ, பிதாமகன் போல பழகிப்போன பழிவாங்கும் கதையோ அல்ல. இதன் சிக்கல் உறவு, மரணம் எல்லாவற்றையும் வேறு ஒரு நோக்கில் சொல்வது. இது காட்டும் உலகம் நாம் கொஞ்சம்கூட அறியாதது. ஆகவே இதை பேசிப்பேசித்தான் உள்வாங்கிக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட காலத்துக்குப் பின்னர் இந்தப்படத்தில் இன்றைய நிறைவின்மையோ சிக்கலோ உணரப்படாது.  

 

http://jeyamohan.in/?p=1869நான் கடவுள் சில கேள்விகள்.1

முந்தைய கட்டுரைசூஃபி மரபு:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபார்வதி குமாரமங்கலமும் கிருஷ்ணனும்:கடிதங்கள்