அன்புள்ள ஜெயமோகன் அங்கிளுக்கு,
நான் நிவேதிதா. நீங்கள் நலமா? நான் நன்றாக இருக்கிறேன். இப்பொழுது ஏழாம் வகுப்பு படிக்கிறேன். எங்களுக்கு மே மாத கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. ஏப்ரல் 29 நான், என் அப்பா, அம்மா மற்றும் என் பாட்டி தஞ்சாவூருக்கு கிளம்பினோம். நான் என் “Travel Notebook”க்கை எடுத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் நாட்களுக்கு முன் நான் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் படித்து முடித்தேன். அதனால் தஞ்சாவூர் செல்வதற்கு ஆர்வமாக இருந்தது.
Travel Notebook, பொதுவாக நான் ஏதாவது ஊருக்கு செல்லும்போது இந்த புத்தகத்தை எடுத்துக் கொள்வேன். போனமுறை என் அக்காவுடன் என் பாட்டி வீட்டுக்கு சென்றது, ஊட்டி பயணம் எல்லாம் எழுதியுள்ளேன்.
சமயபுரம் மாரியம்மன்
தஞ்சாவூர் செல்வதற்கு முன் நாங்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றோம். ஒரே கூட்டம் எல்லோரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டே வந்தார்கள். நாங்கள் நூறு ரூபாய் தரிசனத்தில் கூட்டம் இருக்காது என்று நினைத்து சென்றால் அங்கு தான் கூட்டம் அதிகமாக இருந்தது. வழியில் தண்ணீரும் மோரும் கொடுத்தார்கள். வரிசையில் பெப்சி ஐஸ் என்று ஒரு அக்கா விற்று கொண்டிருந்தாள். எல்லோரும் அதை சாப்பிட்டு நெகிழியை கீழே போட்டு விட்டார்கள், நான் வாங்கவில்லை. எல்லோரும் இப்படி கோயில்லை அழுக்காக்கிறார்கள் என்று நினைக்கும் போது கோபம் வந்தது ஆனால் என்ன பிரயோஜனம்? நாம் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அம்மனை தரிசித்து வந்தோம். என் அம்மா சொன்னாள், “நான் சிறுமியாய் இருக்கும் போது எனக்கு அம்மை வந்தது என் அப்பா வீட்டில் இருந்த மாரியம்மன் படத்தை எடுத்து என்னை தூக்கி அழுதார் அடுத்த நாள் காலை ஒரு அம்மையும் இல்லை, நான் ஓடி போய் ‘அம்மா பசிக்கிறது, பால் வேண்டும் என்று கேட்டேன்” என்று முடித்தாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பிரசாதம் சாப்பிட்டு கிளம்பினோம். ( புளியோதரையும், மிளகு சாதம் )
பெப்சி ஐஸ், ஒரு நீண்ட பாக்கெட்டில் துருவிய ஐஸ் போட்டு ஏதேனும் ரசத்தை (Flavour) போட்டு தரப்படும் ஒரு மிட்டாய் என்று சொல்லலாம். நான் என் அம்மாவிடம் அதை கேட்டேன் என் அம்மா கோவிலுக்குள் செல்லும் போது சாப்பிடாதே அம்மனை தரிசித்த பின் வாங்கி தரேன் என்றாள், நானும் சரி என்றேன். வெளியே வந்தால் அந்த அக்காவையும் காணோம். பிறகு எந்த கடையில் கேட்டாலும்,” தீர்ந்து போச்சு மா” என்று தான் பதில் கிடைத்தது. கடைசி வரையிலும் நான் அதை சாப்பிடவே இல்லை!.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி
சமயபுரம் அம்மனை தரிசித்த பின் நாங்கள் ஸ்ரீரங்கம் சென்றோம். சுமாரான கூட்டம் இருந்தது. வரிசையின் ஓரம் எல்லாம் உட்கார பெஞ்ச் இருந்தது உட்கார்ந்து உட்கார்ந்து சென்றோம். டிக்கெட் வாங்கினோம். சுவாமியை தரிசித்து வந்த பிறகு கண்ணாடி அறைக்குள் சென்று ரங்கநாயகியையும் ஆண்டாளையும் தரிசித்தோம். பிரசாதம் சாப்பிட்டு ( சர்க்கரை பொங்கல் ) கிளம்பும்போது இரவு ஆகிவிட்டது. அப்பாவும் அம்மாவும் திருச்சியில் இரவு தங்க முடிவு செய்தார்கள். பிறகு “ஹோட்டல் கஜாப்ரியா”இல் பெட்டியை எல்லாம் வைத்து விட்டு சங்கீதாவில் சாப்பிட்டோம். ஹோட்டல் அறைகள் மிகவும் மோசமாக இருந்தது. எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை ஆனாலும் ஒரு இரவு தானே என்று தூங்கிவிட்டோம். இது என் அப்பா கல்லூரியில் படிக்கும் போது தங்கிய ஹோட்டல் என்று சொன்னார்.
கரிகாலன் கட்டிய கல்லணை
அடுத்த நாள் காலை ஏப்ரல் 30, ஐந்து மணிக்கு எழுந்து கல்லணைக்கு சென்றோம். தண்ணீர் அவ்வளவாக இல்லை. ஆனாலும் நாங்கள் கீழே சென்றோம். மற்றொரு பக்கம் ஏதோ கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது. கீழே ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில் இருந்தது அங்கே பூசாரி ஒருவர் நாங்கள் வந்த பிறகு தீபாராதனை செய்தார். பிறகு நானும் அம்மாவும் மணல் இருந்த இடத்தில் கூழாங்கல் மற்றும் சிறிய சங்குகள் சேகரித்தோம். பாறை முழுவதும் பாசி, அதனால் விளையாட முடியவில்லை சோகமாய் இருந்தது, பின் மேலே வந்து அங்குள்ள ஒரு பூங்காவில் விளையாடினேன். திரும்பவும் சந்தோசமாகி விட்டேன். பிறகு கல்லணையிலிருந்து விடைபெற்று சென்றோம்.
அருள்மிகு ஐயாறப்பர் கோவில்
அடுத்ததாக, திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவிலுக்கு வந்து சேர்த்தோம். ஐயாறப்பரை தரிசித்து வந்துவிட்டு தேவியை செல்லும் முன் கதவை மூடி விட்டார்கள் பிறகு வெளியே வந்து பார்த்தால் ஒரு சிறு கூட்டம் அங்கு இருந்தது, நாங்கள் அங்கே சென்று என்னவென்று விசாரித்தபோது அங்கிருந்த ஒரு பாட்டி ,“இப்பொழுது ஏழு ஊர்களிலிருந்து வந்த தேர் இழுக்குறாங்க பா” என்றார். ஒவ்வொரு தேரிலும் ஒவ்வொரு தெய்வங்கள் இருந்தன. ஒன்றில் சிவன்,பார்வதி மற்றொன்றில் முருகன், வள்ளி,தெய்வானை மற்றும் விநாயகர் என ஏழு ரதங்கள் வந்தன. அவற்றையெல்லாம் பார்த்து மகிழ்த்துவிட்டு கிளம்பினோம்.
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை அம்மன்
எனக்கு மிகவும் பிடித்த இரண்டாம் கோயில் இது. கர்ப்பிணி பெண்களுக்கு இக்கோவிலில் தரப்படும் எண்ணையை வயிற்றில் தேய்த்தால் குழந்தைகள் நல்லபடியாக பிறப்பார்கள் என்று ஒரு ஐதீகம். என் அம்மாவும், பாட்டியும் கூட அதை நம்பினார்கள். ஆகையால் என் அம்மா கர்ப்பமாக இருக்கும் போது அந்த எண்ணையை தேய்த்துக் கொண்டாள். கோவிலுக்குள் அவ்வளவு கூட்டம் இல்லை ஆனால் உள்ளே செல்வதற்கு அரை மணி நேரம் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் அந்த அம்மன் படம் இருந்தது. இப்பொழுது தான் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன். அங்கு குழந்தைகளை தொட்டிலில் வைத்து அம்மனை ஒரு முறை பிரதக்ஷணம் செய்தார்கள். அதற்கே அவ்வளவு கூட்டம்!. என் அம்மா சொல்லுவதுண்டு, “கர்ப்பரக்ஷாம்பிகை உன்னுடைய இன்னொரு தாய்” என. நான் பிறந்து பன்னிரண்டு வருஷத்துக்கு பின்பு தான் அவளை பார்க்க முடிந்தது. ஆரத்தி எடுக்கும் போது கண் கலங்கிவிட்டேன். என் அம்மா பட்டு சேலை கட்டிக்கொண்டு மிகவும் அழகாக இருந்தாள். எனக்கு அவளை விட்டு வர மனசு இல்லை. ஆனாலும் தஞ்சாவூர் செல்லவேண்டும் என்ற ஆசை இருந்ததால் வெளியேறினேன். வெளியே வரும்போது மழை துளிகள் ஆங்காங்கே வானத்திலிருந்து விழுந்து கொண்டிருந்தன. மழை பெய்வதற்குள் காருக்குள் சென்றுவிட்டோம் உள்ளே உட்கார்ந்தவுடன் கனமழை பெய்தது. நான் என் அம்மாவிடமும், அப்பாவிடமும், “ என் அம்மாவாள் என்னை விட்டு பிரிய மனதில்லை என்று நினைக்கிறேன், அதனால் தான் இவ்வளவு மழை”!. என்றேன். அவர்களோ சிரித்தார்கள். நான் கண்டுகொள்ளவில்லை. வெளியே என்ன இருக்கிறதென்று பார்க்கவே முடியவில்லை. ஆனால் மிகவும் பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் மட்டும் காணப்பட்டன… அப்படித்தான் நான், என் இன்னொரு அம்மாவையும் சந்தித்த அனுபவம் நிகழ்ந்தது.
தஞ்சை பெரிய கோவில்
முதலில் தஞ்சை செல்கிறோம் என்று ஏமாந்த நான் 30 ஏப்ரல் தான் சென்றேன். அங்கு ஒரு ஹோட்டலில் பைகளை எல்லாம் வைத்து கோவிலுக்கு டாக்ஸியில் கிளம்பினோம். ஒரே டிராபிக் ஜாம்!. வண்டி ஓட்டிய அங்கிள் சற்று பின்னே வண்டியை நிறுத்திவிட்டார். நாங்கள் உள்ளே சென்றோம். மிகவும் பிரமாண்டமாக இருந்தது. காலணிகளை கழற்றி வைத்து, ஒரு பாட்டில் ஜூஸ் வாங்கினோம். கொஞ்சம் நடந்து சென்றோம், அவ்வளவு பெரிய நந்தி சிலை ஐயோ! மிகவும் பெரிதாய் இருந்தது!. என் அப்பா ‘குடவாயில் பாலசுப்ரமணியன்’ அவர்கள் எழுதிய “தஞ்சாவூர்” என்ற புத்தகத்தை படித்ததால் தெரிந்த விவரத்தை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தமான சிலை பிரகதீஸ்வரர் துவாரபாலகர்கள் தான்.. என் மனதில் தோன்றியது யானையே பெரியது, ஒரு யானையை விழுங்கும் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும், அந்த பாம்பை தன் காலின் அடியில் சுற்றி வைத்திருக்கும் துவாரபாலகன் எவ்வளவு பெரிதாக இருப்பான்.. நந்தியை விட பலமடங்கு பெரியவன்.. ஒரு கையில் மானும் மற்றொரு கையில் மழுவும் இருந்தன, இது இரண்டும் கைகளில் இருந்தால் அது சிவனை குறிக்கும் என்று அப்பா சொன்னார். பிரகதீஸ்வரரை தரிசிக்க உள்ளே சென்றால் அவ்வளவு கூட்டம்!!! பாதி தூரம் கூட செல்லவில்லை என்னை ஒரு பழத்தை போல் பிழிந்து விட்டார்கள். பின்னாடி இருந்த ஓர் பாட்டி என்னை நசுக்கி கொண்டே இருந்தார் பதிலுக்கு நானும் நன்றாக நசுக்கி விட்டேன். முன்னே ஏதோ சண்டை, யார் யாரையோ அறைந்து விட்டார்களாம் அதனால் நாங்கள் எல்லோரும் பயந்து வெளியே வந்து விட்டோம். வெளியே வரும் போது நான் அந்த பாட்டியை என் கடைக்கண்ணால் பார்த்தேன். மிகவும் கோபமாக இருந்தது. மனதிற்குள் இந்த பெரியவர்கள் இப்படித்தானா? என்று எண்ணினேன் ஆனால் அவரை எவ்வளவு பேர் தள்ளி இருப்பார்களோ!. பிறகு வேறொரு யோசனையில் ஆழ்ந்தேன், தஞ்சைக்கு வந்ததே அவ்வளவு பெரிய, அற்புதமான, ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய சிவலிங்கத்தை பார்க்கத்தான் அதை பார்க்காமல் போயிற்றே என்று நினைக்கும் போது கஷ்டமாக தான் இருந்தது.. பிறகு ஒரு guide அங்கிளை அப்பா போனில் அழைத்தார். அவர் வந்த பின் மறுபடியும் நந்தி சிலையை சுற்றி காட்டினார் பிறகு முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து உடைந்து போன ஒரு விநாயகர் சிலையை காட்டினார். தஞ்சாவூர் வரைபடங்களை காட்டினார் பிறகு பல புது விவரங்களை சொன்னார்,
ஒரு கோவிலின் அமைப்பு நம் உடம்பு போல் தான் இருக்கும் அதாவது
கோபுரம் – பாதம்
கொடிமரம் – ஆண்/ பெண் உறுப்பு
மண்டபம் – மார்பு
விமானம் – தலை
சோழர்களால் கட்டப்பட்ட கோவில்களின் கோபுரம் சிறியதாகவும், விமானம் பெரியதாகவும் இருக்கும். மற்ற கோவில்களின் கோபுரம் பெரியதாகவும் விமானம் சிறியதாகவும் இருக்கும்.
நந்தியின் பின் எப்பொழுது பார்த்தாலும் ஒரு பலி பீடம் இருக்கும் அதை உற்று பார்த்தால் ஒரு தலை கீழான பூ போல் இருக்கும். அது நமக்கு ஒரு செய்தி தருவதாக அவர் சொன்னார், நம்மிடம் இருக்கும் பல யோசனைகளை அந்த பூப்போல் கீழே போட்டு விட்டு, கோவிலுக்கு வரும்போது புனிதமான மனதுடன் வரவேண்டும்.
நம்முள் இருக்கும் ஆத்மாவும் கடவுளாகிய பரமாத்மாவும் சேரும் புனிதமான இடம் தான் கோவில்.
இப்படியே சொல்லி நடந்து நடந்து என் கால் வலிக்க தொடங்கின பிறகு கொஞ்சம் ஜூஸ் குடித்தேன் சரியாக போயிற்று ஒரு மணி நேரம் ஆன பின் guide அங்கிள் விடைபெற்றுச் சென்றார் நாங்கள் கொஞ்சம் நேரம் கொடி மரத்தின் கீழ் உட்கார்ந்து பிறகு ஹோட்டல் சென்றோம்.
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தாராசுரம் சென்றோம். எனக்கு இந்த பயணத்தில் மிகவும் பிடித்த கோவில் இது, நான் அடுத்து எழுத போகும் கங்கை கொண்ட சோழபுரத்தையும் , தஞ்சை பெரிய கோவிலையும் விட சிறியது. இது இரண்டாம் ராஜராஜ சோழன் கட்டிய அற்புத கோவில். இதில் கிட்டத்தட்ட ஒரு கோடி சிற்பங்கள் உள்ளன. அதனால் தான் எனக்கு இந்த கோவில் மிகவும் பிடித்தது. இங்கேயும் நாங்கள் ஒரு guide அங்கிளை கூப்பிட்டு விவரங்களை கேட்டோம்.
கங்கை- கங்கைக்கு ஒரு மனித உடல் கொடுத்து, கருங்கல்லில் செதுக்கிய சிற்பம் இது. பழங்காலத்தில் பெண்கள் தாலியை கழுத்து ஒட்டி போடுவது வழக்கம். கங்கைக்கு திருமணம் ஆன படி அந்த சிற்பம் அமைந்திருந்தது. காலின் கட்டை விரலிலும் அவள் மெட்டி அணிந்திருந்தாள். guide அங்கிள் கங்கையின் உடம்பில் டார்ச் லைட் அடித்தார், பளபளப்பு அதிகமாக இல்லை.. ஆனால் அவள் நகத்தில் டார்ச் அடித்தால் பளபளவென்று இருந்தது. ஒரு கையில் கமண்டலம் இருந்தது.
கண்ணப்பர்- ககைக்கு சற்று பக்கத்தில் கண்ணப்பர் சிலை இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் அவர் காலணிகள் அணிந்திருந்தார். கையில் ருத்திராட்ச மாலையும், கழுத்தில் பூ மாலையும் இருந்தது. இக்கோவிலில் இவர் ஒருவருக்கு மட்டும்தான் காலணி அணிய அனுமதி உண்டு வேறு யாருக்கும் இல்லை. அவர் அணிந்திருந்த காலணி, வாரால் கட்டப்பட்டிருந்தது.
யாளி- ஏழு மிருகங்கள் கலந்த எட்டு யாளிகள் இக்கோவிலில் காணப்பட்டன அதில், 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள். யாளியின் அமைப்பு,
*யானையின் முக வடிவமும் தும்பிக்கையும்
*ஆட்டு கிடாவின் கொம்பு
*சீனாவில் காணப்படும் டிராகனின் வாய் மற்றும் கண்கள்
*சிங்கத்தின் உடம்பு மற்றும் பிடரி
*கழுகின் விரல்கள்
*பன்றியின் காதுகள்
*மாட்டின் வால்
ஆண்களையும் பெண்களையும் பிரிப்பதற்கு ஆண் யாளிகளுக்கு ஒரு அடையாளம் இருந்தது அதன் பெயர் எனக்கு தெரியவில்லை. இது எல்லாம் எட்டு தூணில் 3d சிற்பமாக அமைக்கப்பட்டிருந்தது . இந்த எட்டு தூணும் நூத்தியெட்டு தூண்கள் உள்ள ஒரு மண்டபத்தின் முன் இருந்தது. 7 யாளிகளின் வால்கள் சுழன்றியிருந்தன, மீதி ஒரு யாளியின் வால் மட்டும் சற்று வழி விட்டு இருந்தது. இதற்கு என்ன அர்த்தம் என்றால், வால் சுழன்று இருக்கும் யாளியின் பக்கம் ஏறி, வால் சற்று வழி விடும் யாளியின் பக்கம் இறங்கவேண்டும்.
நர்த்தக விநாயகர்- பழங்காலத்தில் செய்யப்பட்ட அரை அங்குலத்தில் ஒரு அழகான, குட்டியான நடனமாடும் விநாயகர் செதுக்கப்பட்டது. அவருடைய தொப்புளும் பூணுலும் கூட அழகாக செதுக்கப்பட்டிருந்தது.
கீசக வதம்- என் அப்பாவுக்கு பிடித்த ஒரு சிலை அது. தாராசுரம் பற்றிய பேச்சு வந்தாலே அவருக்கு இந்த சிலையின் நினைவு வந்திடும். இது பீமன் கீசகனை வதம் செய்யும் நிகழ்ச்சியை சிற்பமாக கொண்டுள்ளது. பீமன் தன் பலத்தால் கீசகனின் கையை இழுத்து, தன காலால் அவனை நசுக்கினான். நசுக்கும் போது கீசகனுடைய உடல் நசுங்குவதை கூட அற்புதமாக செதுக்கியிருக்கிறார்கள். பக்கத்தில் திரௌபதி சந்தோஷமாக நின்றிருந்தாள்.
மாயை- ஒரு தூணில் ஓர் பெண் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள், அவளுக்கு ஒரு தலை தான் இருந்தது, ஆனால், மூன்று உடல்கள். ஒன்று வலது பக்கத்துக்கு காலை மடித்து இடது பக்க காலைத் தூக்கிக் கொண்டிருந்தது (இது இடது பக்கத்தில்). மற்றொன்று இடது பக்க காலை மடித்து, வலது காலை தூக்கி கொண்டிருந்தது (இது வலது பக்கத்தில்). மூன்றாவது உடல் நடுவில் தன் கால்களை பின்புறம் தூக்கி கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை ஒவ்வொரு உடலை மறைத்தால் அப்பெண் ஒவ்வொரு உடற்பயிற்சி செய்வது போல் இருக்கும்.
இதை போல நிறைய அற்புத சிலைகள் அங்கு காணப்பட்டன. சொல்ல வேண்டும் என்றால் சொல்லி கொண்டே போகலாம்!. தாராசுரத்திலிருந்து புறப்பட்டோம்.
கங்கை கொண்ட சோழபுரம்
அப்பா கட்டிய கோயிலை பார்த்துவிட்டோம், பேரன் கட்டிய கோயிலையும் பார்த்துவிட்டோம், நடுவில் மகன் கட்டிய கோவிலையும் பார்த்துவிடலாமே என்று கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சென்றோம். தஞ்சாவூரை போலவே இதுவும் பிரம்மாண்டமாக இருந்தது. நாங்கள் கொஞ்சம் தாமதமாக சென்றதால் கோவில்நடையை சாத்தி விட்டார்கள். வெயில் பயங்கரமாக இருந்தது, guide யாரும் இல்லை. சிவன் ராஜேந்திர சோழனுக்கு பட்டம் கட்டும் சிற்பத்தை பார்த்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டோம். இவ்வாறாக மூன்று நாள் பயணம் கோவில் கோவிலாக சுற்றினாலும் போரடிக்காமல் இனிதே முடிந்தது.
நாங்கள் சென்ற எந்த கோவிலிலும் புகைப்படம் எடுக்கவே இல்லை ஆனாலும் நான் பார்த்த எல்லா சிற்பங்களும் மனதில் இருக்கின்றன. வழியில் எடுத்த ஒரே புகைப்படத்தை கீழே இணைத்துள்ளேன்.
பயணத்திலிருந்து திரும்பியபிறகு அப்பா குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய ‘இராஜராஜேச்சரம்’ மாற்றும் ‘தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்’ புத்தகங்களை வாங்கியுள்ளார். இந்த இரண்டு புத்தகங்களை படித்தபின் இந்த புத்தகங்களுடன் மீண்டும் இக்கோயில்களுக்கு சென்று சிற்பங்களை ரசிக்க வேண்டும்…
அன்புள்ள மாணவி,
வீ . நிவேதிதா