இருபதாண்டுகள், எட்டு நூல்கள்.

இருபதாண்டுகளுக்கு முன்பு. இதே நாளில், என்னுடைய எட்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நிகழ்ந்தது. தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசை ஏழு தொகுதிகள். காடு நாவல் ஆகியவை. சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஏழு நூல்கள், ஏழாம் உலகம் உட்பட வெளியிடப்பட்டன.

பலவகையிலும் நினைவு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு அது. அன்று அந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் இலக்கிய முன்னோடிகள். ஜெயகாந்தன், அசோகமித்திரன், கந்தர்வன் போன்றவர்கள். என் நண்பர்களான ராஜமார்த்தாண்டன், சோதிப்பிரகாசம் ஆகியோர். எவரும் இன்றில்லை.

அன்றெல்லாம் நூல்வெளியீட்டு நிகழ்வென்பது இலக்கியப்படைப்பாளிக்கு மிக அரிது. வணிக எழுத்தாள நட்சத்திரங்களுக்கும் குறைவு. அரசியல்வாதிகளின் நூல்களுக்கே வெளியீட்டுவிழா நிகழும், அவர்களின் சொந்தச்செலவில். அதற்கு வரும் கூட்டம் வேறு

விஷ்ணுபுரம் நாவலுக்கு வெளியீட்டுவிழா நடைபெற்றது. சொந்தச்செலவில். ஆனால் தேவநேயப்பாவாணர் சிற்றரங்கில் , 100 ரூபாய் மொத்தச் செலவில். (ஐம்பது ரூபாய் அறைவாடகை, ஐம்பது ரூபாய் போஸ்ட்கார்டுகள்) இருபதுபேர் வருவது வழக்கம். ஆனால் நூறுபேர் வந்து பாதிப்பேர் நின்றுகொண்டே கலந்துகொண்ட நிகழ்வு அது.

ஒரே ஆசிரியரின் எட்டுநூல்களை ஒருசேர வெளியிடுவது அன்று நினைத்தே பார்க்க முடியாதது. நிகழ்வு குளிரூட்டப்பட்ட கூடத்தில். இலக்கிய முன்னோடிகளின் வரிசை அரங்கிலும் அவையிலும். இருநூற்றைம்பது பேர் வந்திருந்தனர். அன்று அது ஒரு திடுக்கிடவைக்கும் நிகழ்வு.

அன்று நான் மு.கருணாநிதி அவர்களின் இலக்கியத் தகுதி குறித்து பேசிய குறிப்பு விவாதமாகியது. அவர் எழுத்துக்களை வ.ரா எழுதியது போன்ற பிரச்சார இலக்கியமாகவே கொள்ள முடியும், இலக்கியமாக அல்ல என்று சொன்னேன். அதற்கான தூண்டுதல் முந்தையநாளில் மூத்த இலக்கியவாதிகள் சிலர் மு.கருணாநிதி அவர்கள் கலந்துகொண்ட மேடையில் அவரை துதிபாடியது. அதில் ஒருவர் அசோகமித்திரன். அவரும் இம்மேடையில் இருந்ததே அதைச்சொல்ல காரணம்.

மு.கருணாநிதி அவர்கள் அதற்கொரு கடுமையான கண்டனக்கவிதை எழுதினார். முரசொலி கட்டுரைகள் வெளியிட்டது. ஒரு மாதக்காலம் பதற்றமான சூழல் நிலவியது. அன்றும் வசைபாடும் அல்லக்கைக்கூட்டம் இருந்தது, ஆனால் இன்றுபோல் அவர்களுக்கு ஊடகபலம் இல்லை. வேதசகாயகுமார், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் என்னை ஆதரித்து எழுதினார்கள். பல திமுகவினர் கண்டித்தனர். ஆனால் வைரமுத்து, கனிமொழி கருணாநிதி போன்றோர் கருத்து சொல்லவில்லை. மு.கருணாநிதியே கூட ஆரம்ப கோபத்திற்குப் பின் என் கருத்தை ஒரு தரப்பாக, அதாவது சுந்தர ராமசாமியின் குரலாக, மட்டுமே எடுத்துக்கொண்டார். பின்னர் கொற்றவை, அறம்  உட்பட நூல்கள் அவர் கவனத்துக்குச் சென்றன.

இன்னொரு விவாதம் அவ்விழாவில் ஜெயகாந்தன் என்னை அவருடைய தொடர்ச்சி என்றது மட்டுமன்றி அவருக்கே உரிய வகையில் “ஒரு வகையில் அவர் எனக்கு ஆசான்” என்று உரையில் குறிப்பிட்டது. ஜெயகாந்தனின் தீவிர வாசகர்களுக்கு அது கொந்தளிப்பை உருவாக்கியது. அதையொட்டி ஒரு விவாதம் வந்தது. ஜெயகாந்தனிடமே அதை பேட்டிகளில் கேட்டனர். “எனக்குப் பின் வருபவர்களிடமே நான் கூடுதலாகக் கற்றுக்கொள்கிறேன். ஆகவேதான் அப்படிச் சொன்னேன்” என அவர் பதில் சொன்னார்.

கந்தர்வன் அந்த மேடையில் அவருடைய ஆதர்ச எழுத்தாளர் நான் என்று சொன்னதும் விவாதமாகியது. (ஆனால் ஏழு நூல்களிலுள்ள இலக்கிய முன்னோடிகளின் வரிசையில் முற்போக்கு எழுத்தாளர்கள் போதிய அளவில் இல்லை என்று விமர்சனமாகவே பேசினார்) அந்த விவாதத்திற்கும் கந்தர்வன் பதிலளித்தார்.

இருபதாண்டுகள். ஒரு தலைமுறைக்காலம் கடந்துவிட்டிருக்கிறது. இணையத்தில் இருப்பதனால் இப்பதிவுகள் கண்ணுக்குப் படுகின்றன. (நிகழ்வு நடந்த மறுநாளே உரைகளும் பதிவும் அன்று புகழ்பெற்றிருந்த திண்ணை இணையதளத்தில் வெளிவந்துவிட்டன). இன்று நினைவுகளை திரும்பிப் பார்க்கையில் அன்று எனக்கு உருவான அந்த ஏற்பு தமிழில் எப்போதும் எந்த தீவிர இலக்கியவாதிக்கும் கிடைத்ததில்லை என தோன்றுகிறது. எனக்குப் பின்னர் அடுத்த தலைமுறையில்கூட அவ்வாறு ஒன்று நிகழவில்லை

ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு

கடவுள் எழுக! ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 29- ஜெயகாந்தனின் ஆசான் ஜெயமோகன்!

மாறுதலின் இக்காலகட்டத்தில் – ஜெயமோகன் உரை

முந்தைய கட்டுரைந.பெரியசாமி
அடுத்த கட்டுரைஅகழ் நாள்தோறும்