சமீப காலமாக ‘தி எகானாமிஸ்ட் ‘ பத்திரிக்கையை விரும்பி படிக்கிறேன். அரசியல், பொருளியல் சார்ந்து… ஒரு உலகளாவிய பார்வையை முன்வைக்கிறார்கள். முதலாளித்துவத்துக்கும், சந்தை மயமாக்குதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும் பல விஷயங்களில் புதிய கருத்துக்களை ஆவண படுத்துகிறார்கள். நான் இன்று படித்த இந்த செய்தி கட்டுரை முக்கியமானதாக தோன்றியது. நீங்கள் நீள் நாட்களாக சொல்லிக்கொண்டு இருக்கும் கருத்துக்களுக்கு நெருக்கமாக உள்ளதால் இதை பகிர்கிறேன். இதை வைத்து உங்களுக்கு புதிய தலைவலிகளை தருவது என்னுடைய உத்தேசமல்ல.
அரேபிய நாடுகளின் ஆதரவோடு இன்று உலகெங்கிலும் வளர்ந்துள்ள வஹாபி இஸ்லாமுக்கு மாற்றாக இந்தோனேசியா-வின் ‘நஹாதுலாத்துல் உலமா'(என்.யு) என்கிற மத நிறுவனம் முன்வைக்கும் கண்ணோட்டம் இது. சற்றே நெகிழ்வான, எல்லா மதங்களையும் அரவணைத்து செல்லும் இஸ்லாமை இவர்கள் முன்மொழிகிறார்கள்… இந்தோனேசியாவில் இன்று வஹாபியர்களுக்கு ஆதரவு பெருகிக்கொண்டு இருந்தாலும் கூட. இவர்களால்… கிழக்கு ஜாவா-வில் இருக்கும் ஒரு தொல்மதத்துடன் இஸ்லாமை இணைக்க முடிகிறது. நம் நேரு கனவுகண்ட ‘பஞ்ச சீல’த்தை பறைசாற்ற முடிகிறது.
அந்த சுட்டி இது .
Indonesia wants to export moderate Islam
மிக்க அன்புடன்,
ராஜு
அன்புள்ள ராஜு
இந்தியச் சூழலில் மேலும் மேலும் தெளிவாகி வரும் ஒன்றுண்டு, அதை தொடக்ககாலத்தில் சொன்னவர்கள் அனைவருமே இங்குள்ள இடதுசாரிகளால் வசைபாடப்பட்டனர். ஆனால் காலம் அந்த உண்மையை தெளிவாக்கிக் கொண்டே செல்கிறது. அதை காணக் கண் கொண்டால் நன்று நிகழலாம்.
இந்தியாவில் 1986ல் வாக்கில் ஷபானு வழக்கின் தீர்ப்பை ஒட்டி இஸ்லாமியர் நேரடிக் கிளர்ச்சி அரசியலுக்கு வந்தனர். ஷாஅபானு வழக்கில் அவ்வழக்கை ஒட்டி சட்டத்தில் உச்சநீதிமன்றம் கொண்டுவந்த திருத்தத்தை இஸ்லாமியர்களில் ஒரு சாரார் எதிர்த்தனர். அது இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்தை அழிக்கும் முயற்சி என வர்ணித்தனர்இந்திய வரலாற்றிலேயே சமநிலையும் நல்லெண்ணமும் கொண்டவரும் ,நேருவுக்குப்பின் சிறந்த இந்தியப் பிரதமருமான ராஜீவ் காந்தி அத்தீர்ப்பை ஆதரித்தார் என குற்றம் சாட்டினர்.
அப்போது இஸ்லாமியச் சமூகம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு சாரார் தீவிர நிலைபாடு எடுக்க இன்னொரு சாரார் சமரச நிலைபாடு எடுத்தனர்.தீவிரநிலைபாடு எடுத்தவர்கள் ராஜீவ் காந்தியை வகுப்புவாதி என முத்திரையடித்தனர். ராஜீவ் காந்தி ஒரு சட்டத்திருத்தம் வழியாக நீதிமன்றத்தீர்ப்பை ரத்து செய்யநேர்ந்தது. அதை தீவிரவாத நோக்கு கொண்ட இஸ்லாமியர் தங்கள் வெற்றியாகக் கொண்டாடினர். அன்று இளைஞர்கள் தீவிரநிலைபாடு கொண்டவர்களை இஸ்லாமியச் சட்டத்தின் காவலர்கள், இஸ்லாமியர்களின் ரட்சகர்கள் என கொண்டாடினர். இன்று திரும்பிப் பார்த்தால் அது எத்தனை பெரிய தற்கொலைத்தனமான முயற்சி என்பது தெளிவாகக்கூடும். அந்தப்புள்ளியில் இருந்தே இந்தியாவில் பாரதிய ஜனதா அரசியல் ஆற்றல் பெறத்தொடங்கியது. இன்று ராஜீவின் அந்தச் சட்டம் இன்னும் வலுவான அம்சங்களுடன் நிறைவேறும்போது எந்தக்குரலும் எங்கும் எழமுடியவில்லை.
துரதிருஷ்டவசமாக அன்று தீவிரநிலைபாடு கொண்டவர்களை இங்குள்ள இடதுசாரிகள் ஆதரித்தனர். விளைவாக சையது சகாபுதீன் போன்றவர்கள் மேலெழுந்து வந்தனர். மிதவாதிகள் தோற்று அழிந்து மறைந்தனர். (இடதுசாரிகளிலேயே இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு மட்டுமே மிதவாத இஸ்லாமியர்களை ஆதரித்தார். ராஜீவ்காந்தியின் திருத்தத்தையும் ஆதரித்தார். அதற்காக கேரள தீவிர இஸ்லாமியர்களாலும் அவர்களுடன் கைகோத்த தீவிர கம்யூனிஸ்டுகளாலும் வசைபாடப்பட்டார்)
அன்று முதல் இந்திய அரசியலில் இஸ்லாமியத் தரப்பென்பதே தீவிரப்போக்கு கொண்டதாகவே உள்ளது. அந்த இஸ்லாமியத் தீவிரப்போக்கு இந்தியாவில் வலுவடைந்து வரும் இந்து தீவிரப்போக்குக்கு எல்லாவகையிலும் ஊக்கமளிப்பது. எல்லாவகையிலும் நேரடி எதிர்விளைவுகளை உருவாக்குவது. இந்துத்துவத் தரப்பு இஸ்லாமியர்களை தீவிரப்போக்குள்ளவர்கள் மட்டுமே எனக் காட்ட முயலும். அதற்கு இவர்கள் சான்றாகிறார்கள். அது ஓர் அரசியல் தற்கொலை.
அதை அஸ்கர் அலி எஞ்சீனியர் முதல் மௌலானா வாகீது கான் உட்பட முக்கியமான இஸ்லாமிய மிதவாத அறிஞர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தனர். அவர்களின் எழுத்துக்களை சொல்புதிதில் வெளியிட்டுள்ளோம். வாகீது கானின் எழுத்துக்களை வெளியிட்ட முதல் பொது அறிவியக்க இதழ் சொல் புதிது தான் (அப்போது என் நண்பர் சதக்கத்துல்லாஹ் ஹஸநீ ஆசிரியராக இருந்தார்.
எந்த ஒரு சமூகக்குழுவுக்கும் அனுபவமும் நிதானமும் கொண்ட மூத்தவர்கள்தான் அதன் முடிவுகளை எடுப்பவர்களாக அமையவேண்டும். அனுபவமில்லாத, முதிர்ச்சியில்லாத இளைஞர்களிடம் அப்பொறுப்பு இருக்கலாகாது. அவர்கள் மூத்தாரின் சொற்களை கேட்டாகவேண்டும். அச்சூழலிலேயே எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். அதுவே இணக்கமான வாழ்க்கைக்கு உரிய வழி.
ஆனால் நவீன ஜனநாயகத்தில் அந்த தொன்மையான அடிப்படை இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இன்று எண்ணிக்கையே அதிகாரம். ஆகவே எந்த அறிவுத்திறனுமில்லாத பெருந்திரள் அனைத்தையும் தீர்மானிப்பதாக ஆகிறது. அந்தப்பெருந்திரளை தூண்டிவிடுபவர்கள் அதிகாரத்தை அடைந்து எல்லாவற்றையும் முடிவெடுப்பவர்களாக ஆகிறார்கள். பெருந்திரளை தூண்டிவிடுபவர்கள் மிகையுணர்ச்சிப் பேச்சாளர்கள் மட்டுமே. எதிர்மறை உணர்வுகளை உருவாக்குபவர்கள் மட்டுமே. கனிந்த முதியோர் தோற்கடிக்கப்படுகிறார்கள். வெறிக்கூச்சலிடும் இளைஞர்கள் ஆதிக்கம் பெறுகிறார்கள்.
விளைவாக மிதப்போக்கு என்பதே கோழைத்தனமாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. கண்மூடித்தனமான வெறியே புரட்சிமனநிலை என்று ஆகிவிட்டது. அந்த வெறியால் அழிவு விளைந்தால் அதை தியாகம் என சித்தரிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்தியாவில் இன்று இஸ்லாமியர் சந்திக்கும் முதன்மையான சிக்கலென்பதே இதுதான்.
மதம் அரசியலின் அடையாளமாக ஆகக்கூடாது. ஆனால் இஸ்லாமியர் சிறுபான்மையினர் என்னும் நிலையில் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ள விரும்பினால் அதற்கு மிதப்போக்கும் சமநிலையும் கொண்ட தலைமை அமைந்தே ஆகவேண்டும். அது ஒன்றே அச்சமூகம் வெல்ல ஒரே வழி. அவர்கள் தங்கள் முடிவுகளை அந்த மிதவாதப் பார்வையைக்கொண்டு தாங்களே எடுக்கவேண்டும்.
இந்தியச் சூழலில் ‘முற்போக்கு’ தரப்பு அல்லது ‘திராவிடத்’ தரப்பு தன் குறுகிய அதிகார அரசியலுக்கு, தன் தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு இஸ்லாமியர்களைப் பயன்படுத்தவே எப்போதும் முயல்கிறது. அதன் விளைவுகளே இஸ்லாமிய தீவிரப்போக்குக்கு அவர்கள் அளித்த ஏற்பு. இந்திய அரசியலில் தங்களை முற்போக்கு என பாவலா செயபவர்களின் சமநிலையற்ற காழ்ப்புக்கூச்சல்களுக்கு மிகப்பெரிய அழிவுப்பங்களிப்பு உண்டு.
சிறந்த உதாரணம் என் விஷயத்திலேயே உண்டு. நான் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரையில் ஒன்றை குறிப்பிட்டேன். நான் கலந்துகொண்டு பேசிய ஓர் அமெரிக்க அமைப்பின் மேடையில் அடுத்த ஆண்டு அர்ஜுன் சம்பத்தை விருந்தினராக அழைத்தனர். காந்தி கொலையை ஆதரிக்கும் ஒரு இந்து தீவிரப்போக்கு கொண்டவர் ஒருவரை அவர்கள் அழைத்தது எனக்கு அவமதிப்பு என்று வெளிப்படையாகக் கூறி அவர்களிடமுள்ள என் தொடர்புகள் அனைத்தையும் முறித்துக்கொண்டேன்- இன்றுவரை அதை திரும்பத் தொடரவுமில்லை. எனக்கான நட்புவட்டத்தை முற்றிலும் புதியதாக அங்கே உருவாக்கிக்கொண்டேன்.
அந்த நிகழ்வின் மீதான கண்டனத்தின்போது நான் சொன்னேன் “எந்த அடிப்படைவாதத்துடனும் என்னால் இணைய முடியாது. மேடையை பகிர முடியாது. அர்ஜுன் சம்பத்து நான் பேசிய மேடையை பயன்படுத்துவது எப்படி எனக்கு ஒவ்வாமையை உருவாக்குகிறதோ, அதைப்போலவே ஜவஹருல்லாவுடன் ஒரு மேடையை பகிர வாய்ப்பமைந்தபோதும் ஒவ்வாமையை அடைந்தேன்”
இது பேசப்பட்ட வரி அல்ல, எழுதப்பட்ட வரி. அவ்வாறே இன்றும் வாசிக்கக்கிடைக்கும் வரி. ஆனால் இதை ‘இஸ்லாமியர்கள் அருகே இருந்தால் அருவருப்படைகிறேன்’ என நான் சொன்னதாக இங்குள்ள இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர் திரித்தனர். இணையத்தில் பலநூறு இடங்களில் திரும்பத் திரும்ப இப்படியே பதிவுசெய்து நிலைபெறச் செய்தனர். இங்கே இடதுசாரிகளுடன் அனுதாபமுள்ள நடுநிலையாளர் எவரும் மூலத்தைச் சுட்டிக்காட்டி அத்திரிபை கண்டிக்கவுமில்லை.
என் குடும்பவட்டத்திலேயே இஸ்லாமியர் உண்டு. என் குடும்ப நண்பர்களாக இஸ்லாமியர் பலர் உண்டு. இஸ்லாமியரின் பொறுப்புகளிலேயே விஷ்ணுபுரம் அமைப்பே ஓடுகிறது. இது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். ஆயினும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள். இதை எங்கும் செய்கிறார்கள். இடதுசாரிகள் , திராவிட இயக்கத்தவர் தங்களுடைய தனிப்பட்ட காழ்ப்புகளுக்குச் சாதகமாக இஸ்லாமியரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் சொந்தப் பகைக்கு இஸ்லாமியரை தூண்டிவிடுகிறார்கள். மிக நேரடியான வினா இது. ஒருவர் தன் சொந்தக் காழ்ப்புகளுக்காக, சொந்த அரசியலுக்காக இஸ்லாமியர்களை தன் எதிரிகளை நோக்கி பொய்யாகத் தூண்டிவிடுகிறார் என்றால் அவர் இஸ்லாமியரின் நண்பரா? இல்லை, அவர் மோசமான சுரண்டல்காரர்.
இந்தக் கட்டுரையையே கவனியுங்கள், மிக வெளிப்படையான இக்கட்டுரையிலுள்ள ஒவ்வொரு வரியையும் நேர் தலைகீழாகத் திரிப்பார்கள். இது ஒரு மாபெரும் வன்முறை. அச்சமும் ஒடுக்கமும் கொண்டுள்ள இஸ்லாமியர் மிக எளிதாக அந்த வலையில் வீழ்கிறார்கள். இதுவே இஸ்லாமியரைச் சிக்கவைத்துள்ள முதன்மை அரசியல் பொறி.
இந்தியாவில் இரு சாரார் இஸ்லாமியரை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒருபக்கம் இந்துத்துவர் இஸ்லாமியர் தீவிரப்போக்கை கொள்ளவேண்டுமென விரும்புகிறார்கள். அது இந்துத்துவர்களுக்கு நல்லது. தீவிர இஸ்லாமியக் குரல்களைச் சுட்டிக்காட்டி தங்கள் அரசியலை நடத்தலாம். இன்னொருபக்கம் இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தவரும் தங்கள் காழ்ப்புகளுக்கான ஆயுதமாக ஆக்கிக்கொள்ளும்பொருட்டு இஸ்லாமிய தீவிரப்போக்குகளை வளர்க்கிறார்கள்.
இஸ்லாமியச் சமூகம் ‘இஸ்லாம் மீதான தாக்குதல்’ என்னும் அச்சத்தை அடைந்து தீவிரப்போக்குடையவர்களையே ஆதரிக்க ஆரம்பித்தது. மெல்லமெல்ல அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, இந்து வகுப்புவாதம் கூர்மையடைந்து, அதிகாரத்தை அடைந்தது. இன்று காங்கிரஸ் கூட இஸ்லாமியர்களுக்கு சாதகமாக வெளிப்படையாக ஏதும் பேசமுடியாத நிலையும் உருவாகியுள்ளது.
இந்த பொறியிலிருந்து இஸ்லாமியர் விடுபடுவதற்கான முதன்மையான வழி மிதவாத இஸ்லாமிய அரசியலே. அரசியலில் தங்களை எவ்வகையிலும் தனிமைப்படுத்திக் கொள்ளாமலிருத்தலே. இங்குள்ள பிறருடைய காழ்ப்புகளை தாங்கள் ஏற்றுக்கொள்ளாமலிருத்தலே. இந்தோனேசியா அதற்கு வழிகாட்டட்டும்.
ஜெ