ஒரு சிறு வட்டம்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு

வளவ. துரையன் வணக்கம். நலம்தானே? பொதிகை நேர்காணல் (சுட்டி இணைப்பு)  பார்த்துவிட்டு உடனே எழுதுகிறேன். வெண்முரசு எனும் சொல் உச்சரிக்கப்படாமல் ஜெயமோகன் நேர்காணல் வந்திருப்பது கவலை யும் வேதனையும் தந்தது. தினேஷ் உங்களை எழுத்தாளராகப் பார்த்ததைவிட ஒரு சினிமாக்காரராகத்தான் பார்த்திருக்கிறார். அவர் மீது குற்றம் இல்லை. ஊடகங்களில் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

குறிப்பாக இளம் எழுத்தாளர்கள் பொருளாதாரத்திற்கு ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பின் எழுதுங்கள் என்பது நல்ல ஆலோசனை. நானும் சிற்றிதழ் தொடங்க வேண்டும் எனும் தீவிர ஆர்வத்துடன் வரும் இளையோருக்கு அதைத்தான் சொல்கிறேன். இதனால் பலர் என் மீது கோபப்பட்டதும் உண்டு. தமிழில் பரவலாக வாசிப்பு உணர்வு இல்லை என்பதைச் சற்று அழுத்தமாகவே சொல்லி இருக்கிறீர்கள். அதுதானே உண்மை. 12 கோடி மக்கள் உள்ள நாட்டில் உங்களுக்கே ஒரு லட்சம் வாசகர்கள்தம் என்றால் இங்கே. வாசிப்பைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது.

நீங்கள் அடிக்கடிச் சொல்லும் சினிமா என்பது இயக்குனரின் சினிமா.அதன் வெற்றி தோல்விக்கு அவரே பொறுப்பு .அவர் கேட்பதைத் தருவதே அங்கு செல்லும் எழுத்தாளரின் கடமை என்பதையும் வலியுறுத்தினீர்கள். நாவலை அப்படியே adopt செய்யமுடியாது என்பது நூற்றுக்கு நூறு சரி. அப்படியே நாவலை எடுக்க முனைந்த பாவைவிளக்கு தோற்றது. இதே கதிதான் அகிலனின் கயல்விழிக்கும் ஏற்பட்டது. நீங்கள் சொன்னதுபோல வெட்டவேண்டியவற்றை வெட்டியதால் தில்லானா மோகனாம்பாள் மற்றும் பொன்னியின் செல்வம் வெற்றி பெற்றன.

இறுதியாகச் சொன்னது முக்கியமானது. இலக்கியம் ஒரு தெய்வம். அது நம்பிச் செயல்படுங்கள் கைவிடாது என்பது இளம் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிக முக்கியமான அறிவுரை.

வளவ. துரையன் கடலூர்

வணக்கம் ஜெ,

பொதிகை நேர்காணலோடு சேர்த்து இன்னும் சில தொலைக்காட்சி நேர்காணல்களை பார்த்தேன். பெரும்பாலான கேள்விகள் சினிமா சார்ந்து மட்டும் இருந்தது ஆச்சர்யமாகவும் சிறிது ஏமாற்றமாகவும் இருந்தது. அதுவும் பொதிகையில் இலக்கிய எழுத்தாளர்/விமர்சகர் என்றும் அறிமுகம் செய்து விட்டு அவர் எழுதிய பெரும் படைப்புகளை பற்றி (குறிப்பாக வெண்முரசு) கேள்விகள் இல்லாதது வெறுமையே. ஆனாலும் நீங்கள் சில கேள்விகளுக்கு இலக்கியத்தோடு தொடர்புறுத்தி விஷ்ணுபுரம் வரை பேசியது இலக்கியம் அறியாத சிலரை சென்றடையட்டும்.
முதலிலேயே எந்த தளம் சார்ந்த கேள்விகள் என்று வரையறுக்கப்பட்டு நேர்காணல்கள் நடத்தப்படுகின்றதா? அந்த எல்லைக்குட்பட்டே தாங்கள் பதில் அளிக்கிறீர்களா? என்று வினவ தோன்றியது.
செல்வேந்திரன்
ஓசூர்

அன்புள்ள வளவதுரையன்

அந்தப்பேட்டி உட்பட பெரும்பாலான காணொளி ஊடகப்பேட்டிகள் நான் சினிமாக்காரன் என்பதனால் எடுக்கப்படுவனதான். என்ன தான் மறுத்தாலும் பொதுமக்களின் பார்வையில் என் அடையாளம் அதுதான். முன்பெல்லாம் பிஎஸ்என்எல் ஊழியன் என்பதுபோல. ஒன்றும் சொல்லமுடியாது.

ஓர் ஊடகத்தைச் சேர்ந்தவரே அவருடைய பார்வையாளர்கள் எவர் என சொல்லமுடியும். நான் என்னை அவர் எண்ணியபடியே அளிக்கவும் வேண்டும். ஆகவேதான் அந்தப் பேட்டி. பொதிகை டிவி போன்றவற்றின் பார்வையாளர்களுக்கு சினிமா தவிர எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை அவர்கள் நன்கறிவார்கள்.

பொதுவாக சினிமா வழியாக என்னை அறிபவர்களில் லட்சத்தில் ஒருவர் கூட என் நூல்களை வாசிப்பதில்லை. என்னை மேற்கொண்டு இணையத்தில் தேடுவதும் இல்லை. தேடி தற்செயலாக வந்தால்கூட என் தளத்தை தொடர்ச்சியாக வாசிப்பதில்லை. ஏன், என்னைப்பற்றிய கடும் விமர்சனங்கள் கொண்ட இணையக் காணொளிகளில் இருந்துகூட எவரும் இங்கே வருவதில்லை.

அவ்வாறு வாசிப்பதென்றால் என் இணையதளத்தின் வாசகர்கள் பொன்னியின் செல்வனுக்குப்பின் பல்லாயிரமாக ஆகியிருக்கவேண்டும். என் யூடியூப் பேட்டிகளே பல்லாயிரமாகப் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதெல்லாம் மக்கள் தெளிவாகவே உள்ளனர். அவர்களின் அறிவு -ரசனை தரத்துக்கு ஒரு அணுவளவு மேலே உள்ளதைக்கூட படிக்க மாட்டார்கள், பார்க்க மாட்டார்கள். எனக்கு அதில் எந்த மயக்கமும் இல்லை. ஆகவே ஏமாற்றமும் இல்லை. ஒவ்வொரு காணொளிக்குக் கீழும் கடமையாகச் சென்று அசட்டுத்தனமாக வெறுப்பைக் கக்கிவிட்டுப்போகும் பெருங்கூட்டம் உள்ளது. அவர்களை அந்தக் காணொளிகள்  எதையாவது படிக்க வைக்குமா என்ன?

இக்காரணத்தால்தான் காணொளிப் பேட்டிகளை நான் பொருட்படுத்துவதில்லை. விதிவிலக்கு பாரதி பாஸ்கர், பரிசல் கிருஷ்ணா,  பர்வீன் சுல்தானா, மலையாளத்தில் கே.சி.நாராயணன்  போன்றவர்கள் நிகழ்த்திய உரையாடல். அவற்றை தொடர்ந்து பார்ப்பவர்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம். அவ்வாறு சிலரைச் சந்தித்திருக்கிறேன்.

அதேதான் அரசியல் விவாதங்கள் வழியாக என்னை அறிந்துகொள்பவர்கள் பற்றியும் சொல்வேன். பல்லாயிரம்பேருக்கு என் பெயர் தெரியும். என்னைப்பற்றி உதிரிவரிகள் வழியாக ஓர் உளப்பதிவையும் அடைந்திருப்பார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் கருத்துச்சொல்ல, முடிந்தால் வசைபாட முந்துவார்கள். ஆனால் இங்கே வந்து எதையுமே வாசிக்க மாட்டார்கள். வாட்ஸப் அல்லது முகநூலில் வெட்டிப் பகிரப்படும் கட்டுரைகளில்கூட ஓரிரு வரிகளை மட்டுமே வாசிப்பார்கள். விதிவிலக்குகளை நான் கண்டதே இல்லை. கேள்விப்பட்டதுகூட இல்லை. மிகச் சத்தம்போடுபவர்களால் எதையுமே ஓரிரு வரிகளுக்கு அப்பால் படிக்கமுடியாது.

அப்படியென்றால் இந்தக் காணொளிகளால் என்ன லாபம்? அனேகமாக ஒன்றுமில்லை. ஆனால் இது சிலசமயம் நட்பு சார்ந்த ஒரு சமூகக்கடமையாக ஆகிவிடுகிறது. சினிமாப்பேட்டிகள் தொழில்சார்ந்து இன்று தேவையாகின்றன. அவ்வளவுதான்.

வாசிப்பு, சிந்தனை என்பது முற்றிலும் வேறொரு உலகம். இதற்கு ‘தகவல் தெரிந்து’ ஒருவர் வந்துசேர முடியாது. வருபவருக்கு அவருக்கான அறிவுத்தகுதி – நுண்ணுணர்வு ஆகியவை ஏற்கனவே இருக்கவேண்டும். அவை இல்லாத மற்றவர்களுக்குத் தெரியவரும் தகவல்களால் எப்பயனும் இல்லை. ஆகவே ‘தகவல் தெரியாமல்’ எவரும் இங்கே வராமலுமில்லை. ஆகவே ‘சென்றுசேர்வது’ பற்றி நான் கவலை கொள்வதுமில்லை.

என் கட்டுரைகளை தொடர்ச்சியாக தங்கள் நண்பர்களுக்கு இணைப்பு அனுப்பும் பலர் இதைச் சொல்வதுண்டு. பல ஆண்டுகளாக இணைப்புகள் அனுப்பப்பட்ட எவருமே இணையதளத்தை படித்ததில்லை. பதிவுகளைக்கூட முழுக்கப் படித்ததில்லை. அவ்வாறு உளக்குறைப்படுபவர்களிடம் நான் சொல்வது இதுதான். அது விழியில்லாதவருக்கு ஓவியம் அனுப்புவதுபோல. இவற்றை வாசிக்கும் பொறி அவர் மூளைக்குள் இல்லை. அவர்களால் வாசிக்கமுடியாது.

வாசிப்பதென்பது ஒரு பயிற்சி. எழுத்துக்களில் இருந்து நேரடிகாக எண்ணங்களும் காட்சிகளுமாக மாறும் ஒரு செயல்பாடு வாசிப்பு. அது தமிழகத்திலும் தமிழ்பேசும் உலகிலுமாக ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் பேருக்கு இருக்கலாம், குறைவாக இருக்கவே வாய்ப்பு. நாம் உரையாடுவது அவர்களுடன்தான். அந்த உரையாடல் தீவிரமாக நிகழ, அதன் தொடர்பு அறாமலிருக்க நாம் முயலவேண்டும்

மற்றவர்கள் எல்லாவற்றையும் வம்புகளாக மட்டுமே பார்ப்பவர்கள். வம்புகளுக்கு தேவையான அளவு மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களில் முக்கால்வாசிப் பேர் சினிமா மட்டும் தெரிந்தவர்கள். எஞ்சியோர் அரசியல் கொஞ்சம் தெரிந்தவர்கள். அதிலும் அவரவர் சாதி- மதம் சார்ந்த அர்சியல், அதைச்சார்ந்த விருப்பு வெறுப்புகள்.

எழுதும் ,சிந்திக்கும் நாம் இந்நூற்றாண்டின் ஒரு சிறு வட்டம். இந்த எல்லைகளை நாம் எப்போதுமே உணர்ந்திருக்கவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைகௌரி கிருபானந்தன்
அடுத்த கட்டுரைவெண்முரசின் நிலம்