வாழ்க்கையை வாழ்வது -கடிதம்

அன்புள்ள ஜெ,

சற்று முன்புதான் ஓலைச் சிலுவை படித்து முடித்தேன்.  மனதில் ஏதோ ஒரு சஞ்சலம். மேற்கொண்டு வேறு எதுவும் படிக்க முடியவில்லை. இதே நிலையை யானை டாக்டர் படித்து முடித்தபிறகு அடைந்தேன். முதலில், டாக்டர் சாமர்வெல் ஏன் மதம் மாற்றுகிறார் என கோபம் வந்தது. மதம் மாற்றாமலே சேவை செய்யலாமே என தோன்றியது. மதம் மாற்றதான்  சேவை என்ற முகமுடியோ என தோன்றியது. கதை முன்னகர்ந்து செல்ல செல்ல என் மன எண்ணம் மாறியது. உண்மையிலேயே டாக்டர் மேல் தேவன் குடியேறினான் என தோன்றியது. ஏசு ஒரு அன்பன் அல்லவா, டேனியல் முதலில் டாக்டரை தேவனாக எண்ணினானே தவிர அவர் எந்தவிதத்திலும் அவன் மனதினுள் செல்லவில்லை. டாக்டரின் தன்னறம், தான் எளிய மக்களுக்கு செய்யும் சேவை. அதையே தன் வாழ்க்கையாகவும், கடமையாகவும் ஏற்றுள்ளார். இயேசு போல தன்னை மக்களுக்காக அர்ப்பணித்தார். டேனியல் தன்னறத்தையும், கருணையையும் அவன் தேவனாக என்னும் டாக்டர் தன்னில் குடியேறிய கணமே கதையில் இறுதி கட்டம் என நான் நினைத்துக் கொண்டேன்.

அறத்தில் வரும் ஒவ்வொரு கதையும் என்னைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது. என்னுள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. தன்னறத்தை கண்டடையாமல் போய்விடுவேனோ என்ற பயம். சமூகத்தின் அழுத்தத்தால் கருணை அற்று சராசரி வாழ்க்கையை வாழ்ந்து விடுவேனோ, நிறைவற்ற வாழ்க்கை வாழ்ந்து விடுவேனோ போன்ற பயங்கள் மனதை அலைக்கழிக்கிறது. ஓலைச் சிலுவையும் சரி யானை டாக்டரும் சரி கண்ணீரை வரவழைக்கிறது. ஏதாவது செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தை தூண்டி விடுகிறது, மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ எதையாவது செய்து என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க வேண்டும் என.  இலக்கியத்தை உங்கள் மூலமே கண்டேன் தன்னறம் என்ற ஒன்றையும், அறம் கொண்ட மனிதர்களையும் உங்கள் மூலமே கண்டுள்ளேன். சில கதைகளையும் கட்டுரைகளையும் படிக்கும் பொழுது உங்களை கட்டியணைத்து அழ வேண்டும் என தோன்றும். இது எதையுமே செய்ய தைரியம் இல்லை நான் எப்பொழுதுமே ஒரு கோழை என தோன்றும். இப்பொழுதெல்லாம் கோழைத்தனத்தை மீட்டு எடுத்துக் கொண்டிருக்கிறேன். அறிவியலே எனக்கான செயல் என அவ்வப்பொழுது தோன்றுவதுண்டு எப்போதெல்லாம் அறிவியல் கற்கும் பொழுது என்னை மறந்து சிலிர்ப்படைகிறேனோ அப்பொழுது எல்லாம் தோன்றும். அதை அடைய உங்கள் அன்பும் ஆசிர்வாதமும்  எனக்கும் ஒரு நாள் ஓலைச்சிலுவை கிடைக்கும் என எண்ணுகிறேன்.

நன்றி!

ஸ்ரீபாக்யலஷ்மி தி

அறம் ஆங்கில மொழியாக்கம்- அமேசான்

அறம் வாங்க  

அறம் மின்னூல் வாங்க

அன்புள்ள பாக்யா

நலம்தானே?

அறத்தின் கதைகள் அளிக்கும் குற்றவுணர்ச்சி எதனாலென யோசிக்கலாம். வீணாக வாழ்கிறோமா என்னும் குற்றவுணர்ச்சி அது. அந்தக் குற்றவுணர்ச்சி மெய்யாகவே நமக்குத் தேவை. நம்முடையது வெறும் இருத்தல் என்றால், வெறும் நுகர்வு என்றால் அது வீண் என்னும் உணர்விலிருந்தும் நம்மால் தப்பமுடியாது. அந்த உணர்வு கலாச்சாரத்தால் கட்டமைக்கப்பட்டதா? பொய்யானதா? அல்ல. அது என்ன காரணத்தாலோ மனிதனுள் இயல்பாகவே குடிகொண்ட ஆதியுணர்வு. அவனுக்கு காலப்பிரக்ஞை இருப்பதன் விளைவு. அவ்வுணர்வால் தான் அரைக்குரங்கு மனிதன் குகையோவியங்களை வரைந்தான். நெடுங்கற்களை நாட்டி எல்லையில்லா எதிர்காலம் பற்றி கனவுகண்டான். அந்த உணர்வை நம்முள் நிரப்பிக்கொள்ள, நம் வாழ்க்கையைச் செறிவும் பொருளும் உள்ளதாக ஆக்கிக்கொள்ள நமக்கு அறம் கதைகள் அறைகூவல் விடுக்கின்றன

ஜெ

சாமர்வெல்

முந்தைய கட்டுரைநீள்விழிப் பீலியில்…
அடுத்த கட்டுரைகிருஷ்ணன் நம்பி