உண்மையும் புனைவும்

அன்புள்ள ஜெ

இந்த வார இறுதியில் பாலக்காட்டில் உள்ள ஓ.வி.விஜயனின் நினைவு இல்லம் அமைந்திருக்கும் தஸ்ரக் செல்ல திட்டமிட்டிருக்கிறேன். அருகில் என் பாட்டி ஊர் என்பதால் பக்கத்து கிராமங்களுக்குள் அலைவது என் வழக்கம்.

இந்த முறை தஸ்ரக் செல்லும்முன் ‘ஆமென்பது’ சிறுகதையை மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அறிவும் ஆணவமும் உணர்ச்சியில் சிக்கி பிணைந்திருக்கும் புள்ளிகளாக கே.வி.ஜயானனை வதைக்கிறது. முக்கியமாக, ஆழத்தில் தன் அறிவு கொடுக்கும் ஆணவத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்காக இறுதியில் எஞ்சியவை இழப்புகள் மட்டும்தான் என்கிற உண்மை வெறுமையைக் கொடுத்தது. மொத்த கதையிலும் அவர் ஒரு தந்தையின் அன்பிற்காக கண்டிப்பிற்காக காத்திருந்தார் என்பது அவர் ஆணவத்தை எங்காவது கொண்டுபோய் சேர்க்க வேண்டும் அல்லது வாழ்க்கையின் சுழலுக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

கதையில் அவருக்கும் அவர் தந்தைக்கும் இடையேயான உறவு ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலில் இடம்பெற்ற ரவிக்கும் அவன் தந்தைக்குமான உறவுகளில் மாறுபடுகிறது. அப்பா அவனை தேற்றிவிடும் மனிதராகவே இருக்கிறார். ஒருவேளை விஜயன் தேடிக்கொண்டிருந்த தந்தையை அவர் எழுதியிருக்கலாம்.

கதையின் ஒட்டுமொத்த பார்வையாக அறிவு கொடுத்த நிமிர்வால் உருவான தன்னகங்காரம் சொந்த வாழ்க்கையை மெல்ல மெல்ல வீழ்ச்சிக்குள் தள்ளியிருக்கிறது. அவர் அப்பாவுக்கு தொழில், உடல் ரீதியாக வந்தமர்ந்த ஈகோ மகனுக்கு சிந்தனை ரீதியாக வளர்ந்திருக்கிறது. ஆனால், கதையின் முழுமை நிறைவடைவது ஜயானனின் மகன் அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்காததுதான். ஒரு செண்டிமெண்ட் முடிவடையும் தருணம்.

’“அவன் ஃபோனில் அழைத்திருக்கிறான். அவனிடமிருந்து ஒரு டெலெக்சும். வந்திருக்கிறது. அவனுக்கு இந்தச் சடங்குகளில் ஆர்வமில்லை. வரமுடியாதாம். வேண்டியதை இங்கேயே செய்துவிடும்படி சொல்லியிருக்கிறான்.” என எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால், உண்மையில் ஓ.வி.விஜயன் மறைந்த மார்ச் 30, 2005 ஆம் ஆண்டு மது விஜயன் ஹைதராபாத்தில் இருந்திருக்கிறார். (செய்தி)

பாலக்காட்டில் நடந்த விஜயனின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. காரணமாக, “ நான் என் தந்தையின் இறுதிச்சடங்கை ஹைதராபாத்தில் நடத்த விருப்பப்பட்டேன். ஆனால், அவர் சொந்த ஊரான பாலக்காட்டில் சடங்குகளைச் செய்ய கேரள அரசு அழுத்தம் கொடுத்ததால் அதற்கு ஒப்புக்கொண்டேன். அந்த வகையில் அவர் தகனம் செய்யப்படுவதில் எனக்கு விருப்பிமில்லாததால் நான் அந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை” என டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். (செய்தி)

கதையின் உச்சத்தில் தளர்வு ஏற்படுவதாக உணர்ந்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்

சங்கர் சதா

புனைவுக்களியாட்டுக் கதைகள் மின்னூல்கள் வாங்க

புனைவுக்களியாட்டுக் கதைகள் நூல்கள் வாங்க

அன்புள்ள சங்கர்,

நான் சில கதைகளை வாழ்க்கைவரலாற்றில் இருந்து எடுத்து எழுதியதுண்டு. அதற்கு காரணமாக அமைந்த உணர்வு என்ன என நானே நினைத்துக்கொள்கிறேன்.

எத்தனை கற்பனை செய்தாலும் வாழ்க்கையில் மெய்யாக நிகழ்ந்தவை  ஒருபடி மேலானவை. அவை புதிய சாத்தியங்களை அளிக்கின்றன. நாம் வாசித்துச் செல்லும்போது சட்டென்று கண்ணில் தட்டுப்படும் ஒரு செய்தி அளிக்கும் தூண்டுதல். அதை ஒரு வகை அதிர்வு என்று சொல்லலாம். நாம் ஒரு நிலைகுலைவுக்கு உள்ளாகிறோம். தொடர்ந்து அதைப்பற்றி எண்ணிக்கொண்டே இருக்கிறோம்.

பெரும்பாலும் அந்த நிலைகுலைவு இரக்கம், அனுதாபம், சீற்றம் ஆகிய உணர்வுகளாலானதாக இருக்கும். அவை மேலோட்டமானவை என்பது என் எண்ணம். அவை எவ்வளவு தீவிரமானவை என்றாலும் மேலோட்டமானவைதான். ஏனென்றால் அவை ஒற்றைப்படையானவை. மிக ஆக்ரோஷமான நீதியுணர்ச்சிகூட ஒற்றைப்படையானதுதான்.

உதாரணமாக, ஓர் நிரபராதியை கொடூரமாகக் கொல்கிறார்கள். ஒரு குடும்பமே விபத்தில் இறக்கிறது. ஒரு பெண்ணுக்கு முச்சந்தியில் அநீதி இழைக்கப்படுகிறது. இவற்றில் நாம் கடும் உணர்வெழுச்சியை அடைகிறோம்.ஆனால் அந்த உணர்வெழுச்சியில் ஒரே பக்கம்தான் உள்ளது. குடிமையுணர்வு, இரக்கம், அறச்சீற்றம். அவற்றை மறுகோணத்தில் யோசிக்க ஒன்றுமில்லை. விவாதிக்க வேண்டிய ஏதுமில்லை.

ஓர் உணர்வை அதேயளவுக்கு நிகரான இன்னொரு உணர்வும் சமன்படுத்தும்போதே பன்முகத்தன்மை உருவாகிறது. இருபக்கம் நியாயங்களும் அனேகமாகச் சரிசமமாக இருக்கையில் எழுவது ஓர் அடிப்படையான வினா. ஒரு தத்துவச்சிக்கல்,. அதுதான் நம்மை தொடர்ந்து சிந்திக்கச் செய்கிறது. நாம் மேலும் மேலும் அமைதியின்மையை அடைகிறோம். கத்திக்குத்துக் காயம் ஆறிவிடும். பூமுள் தசையில் நிரந்தரமாகத் தங்கி ஆண்டுக்கணக்கான வலியை உருவாக்குவதுபோல.

இவ்வாறு உண்மை நிகழ்வுகள் உருவாக்கும் அமைதியின்மையில் இருந்து அதன் அடிப்படைச்சிக்கல், தத்துவ வினா நோக்கிச் செல்வது எல்லா எழுத்தாளர்களும் செய்வதுதான். இலக்கியத்தின் மையக்கருக்கள் பலவும் இவ்வாறு உருவாகின்றவை. இதிலுள்ள சிறப்பம்சம் இவை நாம் நேரடியாக ஈடுபடாத நிகழ்வுகள் என்பது. ஆகவே நம் சொந்தவாழ்க்கைசார்ந்த, சொந்த உணர்வுகள் சார்ந்த பார்வை ஏதும் இருப்பதில்லை. நம் தரப்பு நியாயங்கள் கலப்பதில்லை.

பொதுவாக இலக்கியத்தில் நேரடியான சொந்தவாழ்க்கை அனுபவங்கள் சரியாக அமைவதில்லை. அவை காயங்கள் குணமாகி, நெடுங்காலம் கடந்து வடுவாகி, நாம் முற்றாக விலகி, எவருடையவோ என ஆனபின்னரே அவ்வனுபவங்கள் கலையாக முடிகிறது. இவ்வாறு கிடைக்கும் புற அனுபவங்களுக்கு அச்சிக்கல் இல்லை.

இந்த ‘எடுத்தாளும்’ அனுபவங்களின் சாதக அம்சங்கள் மேலும் பல. ஒன்று, நமக்கு அந்த வாழ்க்கை பற்றி மிக விரிவாக தெரியாது. ஆகவே தெரியாதவற்றை கற்பனையால் நிரப்புகிறோம். இந்த இடைவெளி கதையாசிரியராக நமக்கு மிக உதவியானது. நமக்கு ‘புழங்க’ இடம் அமைகிறது. நாம் கற்பனைசெய்தேயாக வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

உண்மையான வாழ்க்கை நிகழ்வில் ஒன்று இன்னோடொன்றுடன் கலந்து ஒரு பெரிய வலையின் பகுதியாகவே ஓவ்வொரு தனியனுபவமும் இருக்கும். அவற்றை நம்மால் சாதாரணமாக இன்னொருவரிடம் சொல்லக்கூட முடிவதில்லை. ஒன்றையொன்று கவ்விக்கொண்டு ஏராளமான அனுபவங்களை ஒரு கொத்தாகவே சொல்வோம். நிறைய தேவையற்ற தகவல்கள் இருக்கும்.

ஆகவேதான் கற்பனை கலக்காத வாழ்க்கையனுபவம் கலையாக ஆவதில்லை. அதனால் எந்த பயனுமில்லை. அதற்கு குவிதல் இருக்காது. அது எதையும் நமக்கு அளிக்காது. வாழ்க்கைநிகழ்வுகளுக்கு அவ்வாறு ஒரு மையம் இல்லை என்பதே காரணம். கற்பனை என்பது அந்த வாழ்க்கை நிகழ்விலிருந்து ஒரு மையவினாவை- மையக்கண்டடைதலை உருவாக்குவதற்கும், அதைச் சார்ந்தே அந்நிகழ்வை ஒட்டுமொத்தமாக மறு அமைப்பு செய்வதற்கும்தான் தேவையாகிறது. வாழ்க்கைநிகழ்வு மலைகளைப்போல. கலைப்படைப்பு என்பது செதுக்கப்பட்ட மலை.

உண்மையான வாழ்வனுபவம் பிறருடையதாக இருக்கையில், நமக்குக் கொஞ்சமே தெரிகையில், எங்கே அடிப்படை வினா உள்ளதோ அதை மட்டுமே நாம் சொல்ல முடிகிறது. கற்பனை கலத்தல் எளிதாகிறது. குறிப்பாக எதைத்தவிர்ப்பதென்னும் சிக்கலே எழுவதில்லை.

மெய்யான வாழ்வனுபவங்களின் மிகப்பெரிய கலைவாய்ப்பு அவை நிகழ்ந்தவை என்பதனால் மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளவை என்பதே. உதாரணமாக, யா தேவி கதைவரிசையிலுள்ள மைய நிகழ்வு கேரளத்தில் அண்மையில்கூட மீண்டும் நிகழ்ந்தது. நூறு நாற்காலிகள் போன்ற கதைகளுக்கு நிகரான நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இது அக்கதைகளை மீண்டும் மீண்டும் புதிய கோணங்களில் கண்டடைய வழியமைக்கிறது.

அத்துடன் நான் அறிந்த ஒன்றுண்டு. மெய்யான வாழ்க்கையனுபவம் ஒரு அளவை (Scale) அளிக்கிறது. நிகழ்வுகள், உணர்வுகள், சிக்கல்கள் எல்லாமே அந்த மெய்யான அனுபவத்தை ஒட்டி எளிதாக சரியான அளவும் ஒத்திசைவும் கொண்டு வருகின்றன. முழுக்கக் கற்பனையான கதையில் அவை அமைவதற்கு கவனம் தேவை. அமையாதுபோக வாய்ப்பும் மிகுதி.

இக்காரணத்தால் நான் மெய்யான வாழ்க்கைகளை ஒட்டிய கதைகளை எழுதினேன். ஆனால் அவற்றை முழுமையாக அந்த மெய்யான வாழ்க்கையை ஒட்டி அமைப்பதில்லை. சட்டச்சிக்கல் என்பது ஒரு பிரச்சினைதான். ஆனால் அதைவிட அதில் களம், கதைமாந்தர் ஆகியவற்றை கலைசார்ந்த குவிதலுக்குரிய வகையில் எந்த அளவுக்கு மாற்றலாம் என்பதே என்னுடைய முதல் பார்வையாக இருக்கும். அடிப்படைச்சிக்கல் என என்னுள் அமைந்ததைத் தவிர பிற எல்லாவற்றையும் உகந்த முறையில் மாற்றிக்கொள்வேன். அதுவே கலையின் வழி.

அவ்வாறு மாற்றாவிட்டால் அது புனைவல்ல, இதழியல் பதிவு அல்லது வாழ்க்கைவரலாற்று ஆவணம். அவற்றுக்கு உண்மைமதிப்பு உண்டு, கலையின் பன்முகத்தன்மை இல்லை. ஆசிரியர் உருவாக்கும் உலகமே கலைமதிப்புள்ளது. வெளியே உள்ள மெய்யுலகம் அல்ல.

அக்கதை நீங்கள் எண்ணுவதுபோல ஓ.வி.விஜயனின் நேர்வாழ்க்கை அல்ல. நேர்வாழ்க்கையில் இருந்து கூடுமானவரை விலகிச்சென்று எழுதப்பட்டது. நான் அறிந்த கேள்வி நமக்கும் நம் தந்தைக்குமான உறவுக்கும் நமக்கும் நம் மகனுக்குமான உறவுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஓர் இணைப்பு உண்டா என்பதே. அதன் பல பட்டைகளே அக்கதையின் பேசுபொருள்.

ஓ.வி.விஜயனின் மகன் அவரது இறுதிச் சடங்கில் பங்கெடுக்கவில்லை என்பது மட்டுமே உண்மை. அதற்கு பல ஆண்டுகள் கழித்து அவர் சொல்லும் காரணங்களுக்கும் நான் அடைந்த உளத்தூண்டலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் என்ன மனநிலையில் இருந்தார் என நாம் சொல்லமுடியாது.ஒவ்வொரு மெய்யான நிகழ்வைப் பற்றியும் புதிய மேலதிகச் செய்தி வெளிவர முடியும். அதனால் அந்த நிகழ்வை ஒட்டி எழுதப்பட்ட கதைகளின் அடிப்படை மாறுவது இல்லை. அவ்வாறு உலகமெங்கும் பல செவ்வியல் கதைகளுக்கு நிகழ்ந்துள்ளது.

ஏனென்றால் அந்த மையச்செய்தியின் பலத்தில் கதை நிலைகொள்ளவில்லை. அது எழுப்பும் வினாக்களின் அடிப்படையிலேயே கதை நிலைகொள்கிறது. கதைக்கு ஆதாரணமான வாழ்க்கை இது என்பது ஒரு மெல்லிய extension மட்டுமே. அது கதைக்கு ஒரு கூடுதல் அழகை அளிக்கிறது. ஆகவெ செய்தி மாறினாலும் கதை மாறுவதில்லை. ஆனால் அவர் பங்கெடுத்தார் என்னும் செய்தி வந்திருந்தால் கதையின் அடிப்படை அடிவாங்குகிறது.

ஓ.வி.விஜயனின் வாழ்க்கை அல்ல.கஸாக்கின் இதிகாசம். அது அவருடைய விழைவுக் கற்பனைக்கே அணுக்கமானது. தஸராக் கூட கஸாக் அல்ல, ஒரு மெல்லிய சாயல் மட்டுமே அந்நிலத்துக்கு நாவலுடன் உள்ளது. அந்நாவலில் ரவிக்கு தந்தையுடன் உள்ள உறவில் ஆழமான ஒரு மீறலும் அதன் விளைவான குற்றவுணர்வும் உண்டு. அது கற்பனைதான்.

நான் வெவ்வேறு கதைகளிலும் குறிப்புகளிலும் விஜயன் அளித்த சித்திரங்கள், மற்றும் நான் நேரிலறிந்த விஜயனின் ஆளுமை இரண்டையுமே கதைக்கு அடிப்படையான தூண்டுதலாகக் கொண்டேன். அந்தக் கதையிலுள்ள கதைமாந்தரின் மனநிலை, அறிவுப்பார்வை இரண்டுமே ஓ.வி.விஜயனுக்கு மிக அணுக்கமானவை.

மீண்டும் சொல்கிறேன், நான் விஜயனைப் பற்றி எழுதவில்லை. விஜயன் ஒரு தூண்டுதல்காரணம் மட்டுமே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலகிச்சென்றே அக்கதையை அமைத்தேன். அது வாழ்க்கைக்குறிப்பு அல்ல.

ஆனால் இன்னொன்று தோன்றுகிறது. ஒரு மகன் ஓர் அரசியல் காரணத்துக்காக தந்தையின் இறுதிச்சடங்கை புறக்கணித்து வராமலிருப்பார் என்பதும், பல ஆண்டுகளுக்குப் பின்னரே என்ன காரணமென்று சொல்வார் என்பதும் நம்பும்படியானது அல்ல. அதிலிருந்து அவன் விடுதலைபெற முடியவில்லை, அதற்கான விளக்கங்களை அளித்துக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது என்பது இன்னொரு ஆழமான கதைக்கான கரு என தோன்றுகிறது.

ஜெ

இரு கலைஞர்கள்

முந்தைய கட்டுரைகு.சின்னப்ப பாரதி
அடுத்த கட்டுரைஉன் கண்களில் அந்த ஜாடை